Skip to main content

"புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா"?- நிவேதா உதயராஜன்




ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகர் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எளிய சொல்லாடல்களும் அதிரடி கதை தலைப்புகளுக்கும் சொந்தக்காரியான இவர், தமிழ்இலக்கியப்பரப்புக்கு "நிறம்மாறும் உறவுகள் " என்ற சிறுகதைத்தொகுதியையும்," வரலாற்றைத் தொலைத்த தமிழர்கள் " என்ற வராலாற்று நூலையும் இதுவரையில் தந்துள்ளார். 

கோமகன் 

00000000000000000000000000000 

உங்களை நாங்கள் எப்படித்தெரிந்து கொள்ளமுடியும்? 

என்னைக் கட்டாயமாக எல்லோரும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா என்ன? நான் பிறந்து வளர்ந்தது கலைகளுக்குப் பெயர் போன இணுவில் கிராமத்தில். ஐந்தாம் வகுப்புவரை இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்புவரை வேம்படி மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். எண்பத்தைந்தாம் ஆண்டு யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து, இரண்டாயிரத்து மூன்றில் மீண்டும் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்து வாழ்கிறேன். திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். தந்தை நாகலிங்கம். தாயார் ஆயிலியம். கடந்த பதினாறு ஆண்டுகளாக புலம்பெயர் தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் கற்பிக்கின்றேன். அதன் மூலம் தமிழுக்கு ஏதோ என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்னும் திருப்தி எனக்குண்டு. 2012 முதல் யாழ் இணையத்தின் அறிமுகத்தின் பின் கவிதை கதை கட்டுரை என என்னை ஒரு எழுத்தாளராகவும் அடையாளம் காட்டி நிற்கிறேன். 

நீங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புலம் பெயர்ந்து வசித்து வருகின்றீர்கள். ஆரம்பகாலங்களில் ஓர் பெண் என்றவகையில் நீங்கள் சந்தித்த சவால்கள் எப்படியாக இருந்தன? 

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சவால்கள் பலவற்றைச் சந்தித்திருந்தாலும் பெண் என்பதனால் சவால்கள் ஏற்பட்டதாக எனக்கு நினைவில்லை. நான் மூத்த பிள்ளை என்பதனால் பல விடயங்கள் எனக்குக் குடும்பத்தில் சாதகமாக அமைந்தன. ஆரம்பப் பள்ளியில் கற்றபோதுதான் எம்முடன் கற்ற ஆண்களுடன் எப்போதும் முன் வரிசைக்காக எப்போதும் சண்டை போட்டு அவர்களை ஓரம்கட்டி இருக்கிறோம். அதுவும் குழுவாக. அதைவிட எதுவும் எனக்குச் சவாலாக இருந்ததாக நினைவு இல்லை. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்களாக இருந்தபடியால் எனக்கு சுதந்திரமான ஒரு வாழ்வு கிடைத்தது. போராடாமலும் எல்லாம் கிடைத்தது. அதுபோலப் புலம்பெயர்ந்து வந்தபின்னரும் நான் மட்டுமல்ல பலரும் கிணற்றுத் தவளைகளாகவே இருந்ததனால் எதிர்பார்ப்புகள், சவால்கள் என்று எனக்கு எதுவும் இருக்கவில்லை. வேலை, வீடு, குழந்தைகள், விடுமுறை என்பனவற்றுடன் யேர்மனியை விட்டு இடம்பெயரும் வரை வாழ்வு தன்பாட்டில் நகர்ந்துகொண்டு இருந்தது. இடம்பெயர்ந்து லண்டன் வந்த பின், தேவை கருதி கிணற்றை விட்டு வெளியே நானே வரவேண்டிய சூழல் அமைந்ததனால் என் திறமைகளை வெளிக்கொணரவும் என்னை நானே செதுக்கிக் கொள்ளவும் முடிந்தது. 2004 இல் ஐபிசி வானொலியில் சேர்ந்தபோதுதான் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருந்ததனாலும், அதில் சிலர் தங்களை நான் அனுசரித்துப் போகவில்லை என்ற காரணத்தினால் எனக்குத் தடையாகவும் இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் எதுவுமே எனக்குப் பெரிதில்லை என்று தூக்கி எறிந்துவிட்டு வந்தபின் சவால் என்பதும் அதை எதிர்கொள்வதும் தேவையற்ற ஒன்றாகிவிட்டது எனக்கு. 

எந்தவகையில் நீங்கள் அனுசரித்துப் போகவில்லை என்று அவர்கள் தடையாக இருந்தார்கள்? 

வானொலியில் செய்திகள் வாசிக்க வேண்டுமென்ற அவா எனக்கு இருந்தது. ஒரு பிரபலமான ஒலிபரப்பாளர் என்னை ஒலிபரப்பு நிலையத்தில் தனக்கு எதிரே உள்ள கதிரையில் அமர்ந்து தான் எப்படி வாசிக்கிறேன் என்று பார்க்கும் படி கூறினார். நானும் "இந்த கேடுகெட்டவனின் முகத்தை பார்க்கவேண்டி இருக்கே" என்று மனதுள் திட்டியபடி வேறு வழியற்று சில மணிநேரம் இருந்தேன். அடுத்த நாளும் இருந்தபோது என்னால் தொடர்ந்து அப்படி இருப்பது முடியாத காரியம் ஆகிப்போனதில், "நான் வெளியே போகிறேன், என்னால் உங்களைப் பார்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்". அது அந்த ஒலிபரப்பாளருக்கு மிகுந்த சினத்தைக் கொடுத்துவிட்டது. அவர் என்ன கூறினாரோ தெரியவில்லை. என்னை செய்தி வாசிப்பதற்கு கடைசிவரை விடவே இல்லை. வேறு நிகழ்சிகளிலும் என்னைச் சேர்த்துக்கொள்வதற்குப் பலரும் பின் நின்றனர். ரூபி குமார், சீலன் அண்ணா, ஈஸ்வரதாசன், பரா காந்தன் ஆகியோர்தான் எனக்கு உற்சாகம் தந்து என்னை நட்புடன் நடத்தியவர்கள். அதன் பின்னர் நானே சமூக நாடகங்களை எழுதித் தொகுத்து ரூபி குமாரின் நிகழ்ச்சியான கதிர்கள் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் என் நாடகங்கள் ஒலிபரப்பானது. நாடகத்தில் இவர்கள் மூவருமே அதிகம் குரல் வழங்கியும் எனக்கு உதவினார்கள். முதல் முதல் நான் கவிதை எழுதுவதற்கு என்னைத் தூண்டியவரும் சீலன் அண்ணா தான். 

அதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளாக உயிரோடைத் தமிழ் வானொலியில் வாரத்தில் ஒருதடவை செய்தி வாசித்தபின் தான் எனக்குத் திருப்தி ஏற்பட்டது. இப்பொழுது என் வாசல்கள் எங்குமாய் விரிந்து திறந்து கிடக்கின்றன. ஆனாலும் என் மனம் எதிலும் ஆசையற்று இருக்கின்றது. 

யாழ் இணையத்தினால் " மெசொப்பொத்தேமியா சுமேரியர் " என்றே ஓர் கதைசொல்லியாக அறியப்பட்டீர்கள் .இந்தப் புனைபெயர் வரவேண்டிய பின்புலங்கள்தான் என்ன? 

வரலாறு எனக்கு பிடித்த ஒரு பாடம். கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டறை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, வரலாற்றையும் ஒரு பாடமாக எடுத்து, அதை எப்படி புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாம் என்று ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குப் பட்டறை நடத்தி வந்தேன். அப்போதுதான் சிவகணேசன் அண்ணா எனக்கு அறிமுகமாகித் தமிழரின் தொன்மை பற்றி கூறி என்னையும் அதில் ஈடுபட வைத்தார். சுமேரிய இனம் பற்றியும் அவர்களுக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அறிந்தபோதுதான் இதை எப்படி மற்றவர்களுக்குக் கொண்டு போவது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அந்த வேளைதான் 2012 ல் யாழ் இணையமும் எனக்கு அறிமுகமாகி இருந்தது. என்னுடைய சொந்தப் பெயரில் சென்று ஒரு கட்டுரையைப் போடுவதையும்விட வித்தியாசமாக சுமேரியரையும் அவர்கள் வாழ்ந்த இடத்தின் பண்டைய பெயரான மெசொபொத்தேமியாவையும் இணைத்து என் புனைபெயர் ஆகிக் கொண்டேன். நான் நினைத்தது போலவே பலரும் என் பெயர் பற்றிக் கேட்டார்கள். நானும் சுமேரியர் பற்றிய தொடரை ஆரம்பித்து யாழ் இணையத்தில் உள்ளவர்களின் மனங்களில் இடம்பிடித்தேன். 

‘நீங்கள் வரலாற்றைத் தொலைத்த தமிழர்கள்’ என்ற வரலாற்று நூலினை ஆவணப்படுத்தி உள்ளீர்கள். இதில் உங்கள் அனுபவங்கள் எப்படியாக இருந்தது? 

அனுபவங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. தமிழரின் தொன்மை பற்றி நான் உணர்ந்த அளவு மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக பலரிடம் தொலைபேசியிலும் நேரிலும் மணிக்கணக்காகப் பேசியும் பயனின்றிப் போனது. விளங்கியும் விளங்காதவார்களாய் நழுவிப்போனோரும், தட்டிக்கழித்தோருமாக தமிழர்களிடையே அவர்கள் மனங்களில் பதியாத விடயத்தைக் கொண்டுபோவது மிகக் கடினமாக இருந்தது. குமரிக்கண்டத்தை விட்டு வெளிவரவே பலர் விரும்பவில்லை. ‘இப்ப உதைக் கதைத்து எமக்கு என்ன பயன்’ என்பதாகவே பலரின் கருத்து இருந்தது. முக்கியமாக நாம் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியவை அகழ்வாய்வாளர்களின் ஆங்கில நூல்கள் என்பதனால் அவர்கள் பயன்படுத்தியிருந்த கடினமான சொற்களின் விளங்காமை போன்ற இடையூறுகள் ஏற்பட்டன. நினைத்த நேரம் எல்லாம் தொலைபேசியிலும் நேரிலும் வந்து கணேசன் அண்ணா இதுபற்றிக் கதைத்தே என்னைச் சோர்வடையச் செய்ததும், பலர் சுமேரியர் பற்றி அவரிடம் கதைத்துவிட்டு, அவரிடம் பல உதவிகளைப் பெற்றுவிட்டுத் தம்பாட்டில் இருந்தனர். கணேசன் அண்ணாவின் அறிவுசார் விடயங்களை தமதாக்கி தாம் கண்டுபிடித்தது போலவும் எழுதியது போலவும் சிலர் இணையங்களில் உலவவிட்டபோது, அதைப்பார்த்து அவர்கள் பால் ஏற்பட்ட கோபமே என்நூலை ஆக்குவதற்குக் காரணமானது. அவருக்காகத்தான் அந்த அறிமுக நூலை நான் எழுதியது. இருதடவைகள் GTV இல் வெளிச்சம் நிகழ்ச்சியில் தினேசுடனான நேர்காணல் சுமேரியர் பற்றிய ஒரு அறிமுகத்தையும் எம்மைப் பற்றிய அறிமுகத்தையும் பலருக்குத் தந்தது. 

பபிலோனில் (Babylonie) தோன்றிய மொசொப்போதேமிய நாகரீகமும் சுமேரியரது வாழ்வியலும் தென்இந்தியாவில் வாழ்ந்த திராவிட இனக்குழுமமான தமிழரின் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களுடன் எவ்வாறு பொருந்துகிறது? 

அடிப்படையில் உங்கள் கேள்வி தவறானது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், சுமேரிய நாகரிகம் மெசொபொத்தேமியாவில் தோன்றி பாபிலோனுக்குப் பரவியதே அன்றி பாபிலோனியாவில் தோற்றம் பெறவில்லை. தற்பொழுது ஈராக், சிரியா என்று அழைக்கப்படும் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் பண்டைக்காலத்தில் மெசொபொத்தேமியா என அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் சுமேரியர் என அழைக்கப்பட்டனர். சுமேரியரின் இடப்பெயர்வின் பின்னர் அம்மண்ணில் வாழ்ந்தவர் "அக்காடியன்ஸ்" என்னும் இனத்தவர். அவர்களின் பின்னர் அங்கு வாழ்ந்தவர்களே பபிலோனிய மக்கள். ஆனால் மேற்குலகத்தினர் மற்றவர்களுக்கு உண்மையான வரலாறு போய்விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவே இருக்கின்றனர். அதனால் பண்டைய பெயர்களையும் தொன்மையையும் விடுத்து இறுதியாக அங்கு வாழ்ந்த இனமான பாபிலோனியர்களின் பெயர்களில் இருட்டடிப்புச் செய்கின்றனர். ஆனால் பழைய தொல்லியலாளர்கள் சுமேரிய நாகரிகம் என்றே இன்றும் குறிப்பிடுகின்றனர். பலருக்கு தற்பொழுது ஈராக்கிலும் சிரியாவிலும் வாழும் மக்கள் வேறு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் முன்னரே குடியேறியவர்கள் என்பது தெரியவே போவதில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையும் கூட மற்றவர்களுக்கு இல்லை. காலப்போக்கில் ஈராக்கிலும் சிரியாவிலும் வாழும் இனக்குழுவே அந்நிலைப்பரப்பில் பண்டை நாட்தொடக்கம் வாழும் இனம் என்று கூறினாலும் மறுப்பதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். 

ஒரு வரலாற்றை ஓரிரு பந்தியில் குறுக்கிவிடுவது கடினம் என்றே நான் எண்ணுகின்றேன். பல நிலக்கூறுகளின் மாற்றமும் இன்னும் பல காரணிகளாலும் இடம் பெயர்ந்த சுமேரிய இனம், ஆற்றங்கரையில் நாகரிகமடைந்து விவசாயத்தைப் பெருக்கிய இனம், நீரின் தேவைகளை நன்குணர்ந்து ஆற்றுப்படுக்கைகளை நாடி இடம்பெயர்ந்து இறுதியில் தென்னிந்தியாவுக்கு வந்தடைந்தது என்பதுதான் எமது செய்தி. அவ்வாறு வந்தடைந்த இனக்குழு வந்த இடத்திலும் தன் பண்பாட்டை தங்கவைத்துக்கொண்டது. ஆனால் காலத்துக்குக் காலம் பண்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அப்படி ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத் தமிழர் என்னும் பெயரும் காரணப்பெயராக வந்திருக்கலாம். ஆனால். சுமேரிய இனத்தவர்களே எமது மூதாதையர் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றே சொல்வேன். 

நீங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயல்பாட்டாளராக இருந்து வருகின்றீர்கள். உங்களுடைய பங்களிப்புகள் எப்படியாக இருந்தன? 

தற்பொழுது நான் முனைப்புடன் பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் செயற்படுவதில்லை. ஆனாலும் என்னை அவர்கள் விட்டுவிடுவதாகவும் இல்லை. 2008 இல் அதில் இணைந்துகொண்ட நான் முழுநேரம் அதில் பங்காற்றினேன். அங்கத்தவர்களை இணைப்பது, லண்டன் வீதிகளில் துண்டுப்பிரசுரம் கொடுப்பது எனத் தொடங்கி வணங்காமண்ணுக்காக பொருட்களைத் தயார்படுத்தியது, ஊர்வலங்கள் நடைபெறும்போது ஒழுங்குபடுத்தியது, வட்டுக்கோட்டை மீள் பிரகடன வாக்களிப்பு நிலையத்துக்குப் பொறுப்பாளராக, ஐரோப்பியப் பாராளுமன்ற தேர்தலுக்கு ஜனனி ஜனநாயகத்துக்கு உதவுவதற்கான தென்மேற்கு லண்டன் பொறுப்பாளராக, நாடுகடந்த அரசாங்கத் தேர்தலின்போது ஒரு வாக்களிப்பு நிலையப் பொறுப்பாளராகவும் பல பணிகளையும் செய்து கொண்டிருந்தேன். 

என்ன காரணத்துக்காக பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் முன்பு போல் முனைப்பாக வேலை செய்யமுடியவில்லை? 

எனக்கு மனதில் ஒருவகை சலிப்பு ஏற்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். முன்னர் நாம் ஓடியோடி வேலை செய்யவேண்டிய தேவை அவசியமாக இருந்தது. இப்பொழுதும் அவசியம் இருக்கிறதுதான் ஆனாலும் எதுவும் உடனடியாகப் பலன் கொடுக்கப் போவதில்லை என்னும் எதிர்மறையான என் மனதின் எண்ணம் தான் என் உற்சாகத்தைக் குறைத்தது எனலாம். அத்துடன் உலகத் தமிழர் பேரவையின் அமைவிடம் தூரத்தில் அமைந்திருப்பதனாலும், பேரவை விரிவுபடுத்தப்படாது ஒரு சிறு வட்டத்தினருடன் நின்று சுழன்றுகொண்டு இருப்பதனாலும், பல திறமை மிக்கவர்களைப் பயன்படுத்தாது சிலரின் ஆளுமைக்குள் இருந்துகொண்டு இருப்பதுவுங்கூட நான் உற்சாகத்துடன் ஈடுபட முடியாமல் இருப்பதற்கான காரணமாகவும் இருக்கலாம். 

வணங்காமண் விவகாரம் மற்றும் வட்டுக்கோட்டை மீள் பிரகடனம் போன்றவை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தனவே? 

தமிழர்கள் மத்தியில் விமர்சனம் இல்லாது ஒன்றைச் செய்ய முடியுமா என்ன? அந்த நேரத்தில் தாய்மண்ணின் மக்கள் எல்லோரும் இருந்த நிலையில், புலம்பெயர்ந்த நாமும் உணர்வுகளின் கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தோம். எமது மக்களுக்கு சாதகமாக ஏதாவது நடக்கவேண்டும் என்னும் அவா எல்லோர் மனதிலும் இருந்ததே தவிர எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை. அத்துடன் எமக்கான தலைமை அங்கிருந்ததனால் எதிர்க் கேள்வியும் சிந்தனையும் எமக்குள்ளே நடைபெற்று விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்தாலும் கூட எல்லோரும் ஒற்றுமையாக இரண்டிலும் பங்குகொண்டதை மறுக்க முடியாது. நாம் கேட்காமலே பலர் இந்த நேரங்களில் பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தாமாகவே இணைந்து வேலை செய்தனர். 2009 இன் பின்னர் தாமாகவே விலகியும் விட்டனர். வணங்காமண் நிகழ்வு ஒரு நல்ல அனுபவம் என்று சொல்லலாம். அதற்காக பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பொருட்கள் வந்து குவிந்தன. ஒரு பெட்டியை உடைத்தபோது யேர்மனியில் இருந்து ஒரு பள்ளி மாணவி அதற்குள் ஒரு கடிதமும் வைத்திருந்தாள். "வன்னிவாழ் தமிழீழ மக்களே. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். உங்களை நாங்கள் பசியிலிருந்து காப்பாற்றுவோம். கவலை கொள்ள வேண்டாம்" என எழுதி இருந்ததை எப்போதும் மறக்க முடியாது. அதேவேளை பிரித்தானியாவில் உள்ள பல வைத்தியர்கள் மருந்துகள், பிளாஸ்ரர்கள் போன்ற காலாவதியான பொருட்களை அனுப்பி எம் வேலையை இரட்டிப்பாக்கியதையும் மறக்க முடியாது. தமிழர்களின் செயற்பாடுகள் பலவும் காலம் தாழ்த்திய பயனற்ற செயல்கள்தான் என்பதை வணங்காமண்ணும் வட்டுக்கோட்டை மீள் பிரகடனமுமே கண்முன்னே காட்டி நிற்கின்றன. 

முள்ளிவாய்க்கால்ப் பேரவலத்தின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுவரும் மாவீரர்தினங்களையிட்டான உங்கள் பார்வை என்ன? 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முன்பு புலம்பெயர் நாடுகளில் எமக்கு பிரமாண்டமான மாவீரர் நாள் தேவையாகத்தான் இருந்தது. அதனால் தான் போராட்டத்துக்கு பணமும் சேர்ந்தது. தற்பொழுது பிரமாண்டம் என்பது தேவை இல்லை. ஆனால் கட்டாயமாக நாம் ஒவ்வொருவரும் மாவீரரை நினைந்து வணங்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளவர்கள். மாவீரருக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் பிரமாண்டத்தை எதிர்பார்த்து வருவதில்லை. பணத்தை வீணாக்காது ஒரு சிறிய மண்டபத்தில் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களைக் கௌரவிக்கலாம். அங்கு போரில் பாதிக்கப்பட்ட, அங்கவீனராகிப் போன போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நிலையான வருமானத்தையும் வாழ்வையும் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானது. 

பிரித்தானியாவில் கேம்பிறிச் நகரில் பிரமாண்டமான ஒரு மாதிரிக் கிராமம் அமைத்து அதற்குள் கோவில்கள், நீச்சல் குளம்........ இன்னும் பல அமைக்கப் போவதாக வார்த்தை ஜாலம் காட்டி விளம்பரங்களோடு ஒரு குழு மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. மாவீரர்களுக்குத் துயிலும் இல்லம் கட்டத்தான் வேண்டும். ஆனால் பிரமாண்டமான மாதிரிக் கிராமம் எமக்கெதற்கு? அங்கே பல கிராமங்களே அழிந்து ஆறு ஆண்டுகளின் பின்னரும் மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பாது பிச்சைக்காரர்களாக இருக்க இங்கே அதுவும் எங்கோ தூரத்தில் ஒரு சிலர் அதனால் வரும் வருமானத்தையும் பெயரையும் அனுபவிக்க, பொதுமக்கள் உணர்வின் பாற்பட்டு பணத்தை அள்ளிக் கொடுத்தபடி இருக்கின்றனர். சிந்திக்காது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மற்றவரை மடையர்களாக்கி ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். 

உண்மையில் ஏதாவது நல்லது செய்து எம் இனம் தலை நிமிரச் செய்ய வேண்டும் எனில் எத்தனை ஆயிரம் வேலைத் திட்டங்களை உருவாக்கி எம்மக்களுக்கு வேலை வழங்கி நாட்டையும் மக்களையும் சீராக்கலாம். அதை விட்டு இப்படியான செயல்கள் மக்கள் பணத்தை வீணாக்கும் விரயச்செயலாகும். 

நீங்கள் அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கின்றீர்கள். எமது விடுதலைப்போராட்டமானது தோல்வியடைந்தமைக்கு புலம்பெயர் தமிழர்களின் தனிநபர் அல்லது அமைப்புகளின் தவறான வழிநடத்தலும் ஓர் முக்கிய காரணியாக இருந்தது என்ற குற்றச்சாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? 

அந்தக் குற்றச்சாட்டு முற்றுமுழுதாக எனக்கு ஏற்புடையதன்று. தனிநபர் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் நொண்டிச் சாட்டுக்கள்தான். அமைப்புக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தன. ஆனாலும் அவர்கள் நேரடியாக எம் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தவில்லை. அத்துடன் ஒரு குழுவோ அல்லது தனிநபரோ அங்குள்ளவர்களின் சொல் கேட்டு நடந்தனரே அன்றி இங்குள்ளவர்கள் தலையீட்டினால் அங்கு நிலைமை மாறியதோ மாற்றப்பட்டதோ என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. பணத்தினால் செல்வாக்கை தமக்கு ஏற்றபடி மாற்றியிருக்கலாமே தவிர இங்குள்ளவர்களின் திட்டங்களின் அல்லது ஆலோசனையின் அடிப்படையில் எதுவும் அங்கே நடைபெறவில்லை. எமது விடுதலைப்போர் தோல்விகண்ட நிலையில் சாட்சிகள் யாருமற்ற இடத்தில் எல்லாரும் எப்படியும் பேசலாம் என்பது மட்டும் தான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் எப்படியாக இருக்கின்றது? 

அவர்களது உணர்வுகளும் எழுச்சிகளும் எமக்கு எந்தப் பயனையும் எக்காலத்திலும் தரமுடியாது. தமிழகத்தில் தமிழ் உணர்வுள்ளவர்கள் இருக்கிறார்கள்தான். அனால் அவர்களின் உணர்வுகளும் அதனால் ஏற்படும் எழுச்சிகளும் தங்கள் அரசியல் நலன் சார்ந்தே இருக்கின்றன. சிறப்பு முகாம்களில் எம்மக்கள் பலர் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டு எப்படியெல்லாம் வதைக்கப்படுகின்றனர் என்பதைப் பாலன் தோழர் என்பவர் நூலாக்கியிருக்கிறார். உண்மையில் அங்கு உள்ளவர்களின் உணர்வுகள் உண்மையானது எனில் முதலில் சிறப்பு முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்யப்படும் எம்மவர்களை மீட்க ஏன் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை? அது அவர்களுக்கும் தெரிந்தே இருக்கின்றது. அவர்கள் எமது பிரச்சனையை தேர்தல் உத்தியாகத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் புலம் பெயர் புத்திசாலிகள் பலருக்கு அது விளங்காமல் பணத்தையும் தம் நேரத்தையும் அவர்களுக்காக விரயம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். 

இன்று புலம்பெயர் நாடுளில் பெருகிவரும் தமிழர் பாடசாலைகள் பற்றிய உங்கள் எண்ணப்பாடுகள் எப்படியாக இருக்கின்றன? 

பாடசாலைகள் பெருகுவது நன்மை தருவதுதானே. ஆரம்பகாலங்களில் யேர்மனி, நோர்வே போன்ற நாடுகளே எம் அடுத்த சந்ததிக்குத் தமிழைக் கொண்டுசெல்வதற்கான முக்கிய பங்களிப்பைச் செய்தனர். பிரித்தானியாவில் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான் பல தமிழ்ப் பெற்றோர்கள் மற்றைய நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ள பிள்ளைகளின் ஆளுமையைக் கண்டே பின்னர் தம் பிள்ளைகளையும் தமிழ் கற்க அனுப்பினர். இப்போது கூட பாடசாலைகளின் தொகை பெருகினாலும் தம் பிள்ளைகள் ஒரு மொழியில் முழுமையான ஆளுமை பெறவேண்டும் என எண்ணாது ஏதோ படித்தால் சரி என்னும் மனப்போக்குடனேயே பல தமிழ் பெற்றோர்கள் இருக்கின்றனர். அதுவும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாவதற்கான புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நோக்கம் மட்டுமே பல மாணவர் தமிழ் கற்பதன் நோக்கமாகவும் இருக்கின்றது. எனினும் எத்தனையோ சிரமங்கள் மத்தியிலும் பிள்ளைகளை தமிழ் கற்க அனுப்பும் பெற்றோர் போற்றுதற்கு உரியவர் தான். 

இங்கேயே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் இளைய சமூகமானது தங்கள் பொழுதின் மூன்றில் இரண்டு பங்கைப் பல்லினக் குழுமங்களுடன் செலவு செய்யும்பொழுது தாய்மொழிக்கல்வியானது எவ்வகையில் அவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்? 

எமது தாயகத்து உறவுகள் கூட்டமாக வாழாது பல நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர். எமது ஒன்றுவிட்ட உறவுகளோ இல்லை நெருங்கிய வேறு உறவுகளோ மற்றைய நாடுகளில் வாழும்போது எல்லோரும் ஒரே மொழியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் என்ற பொது மொழியை அனைவரும் அறிந்திருந்தாலும் கூட கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களுடனோ அவர் தம் வயது சார்ந்தோருடனோ ஆங்கிலத்தில் பேசுவதை, ஆங்கிலத்தை பேச்சு மொழியாகக் கொண்டிராத நோர்வே, யேர்மன், சுவிஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக அவர்களின் ஆங்கில உச்சரிப்புப் போல தமது உச்சரிப்பு இல்லையே என்ற ஒரு தாழ்வு மனப்போக்கே. அதைவிட தட்டுத் தடுமாறியாவது தமிழில் பேசுவதையே எமது புலம்பெயர் பிள்ளைகள் விரும்புவதை நான் இங்கு பலதடவை அவதானித்தேன். எனக்கு அது மிக்க மகிழ்வாகவும் இருந்தது. 

என்னதான் பிள்ளைகள் பல்லினக் குழுக்களுடன் தம் பொழுதைக் கழித்தாலும் ஒருநாளில் மிகுதி நேரம் தன் வீட்டில் தானே கழிக்க வேண்டும். தம் பிள்ளையுடன் தாய் மொழியில் உரையாடாது அந்நிய மொழியில் உரையாடும் ஒரு பெற்றோரை நினைக்க அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது. பாடசாலையில் இன்னொரு மொழியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழியையோ பிள்ளை கற்கும் போது ஆதரவு தரும் பெற்றோர் தம் சொந்த மொழிக்கு மதிப்புத் தராதது அவர்கள் அறிவீனமே ஒழிய வேறொன்றும் இல்லை. எந்தப் பிள்ளையும் எத்தனை மொழி தெரிந்தாலும் சொந்தத் தாய் மொழி தெரிந்த ஒரு பிள்ளையின் வளர்ச்சி மாறுபட்டுச் சிறப்புற்றுத்தான் தெரியும். அதன் சிந்தனை தாய்மொழி அறிவு அற்ற பிள்ளையின் சிந்தனையிலும் மேலோங்கியே இருக்கும் என்பது பல மொழி அறிஞர்களினாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. 

தம் மொழியின், இனத்தின் சிறப்பை உணர்ந்தவன் நிச்சயமாகத் தானும் தன் தாய்மொழியைப் பேசித் தன் சந்ததிக்கும் அதைக் கடத்துவான். தாய் மொழிப் பற்றற்றவன் எத்தனை உயர்ந்த நிலையில் இருப்பினும் அவன் எதுவுமற்றவனே. 

அண்மையில் யாழ் பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட மாணவர்கள் ஆடை அணிந்துவரவேண்டிய விதிகள் பற்றிய சுற்றறிக்கை தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியமை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது .இதுபற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது? 

ஆடை விடயத்தை எடுத்துக்கொண்டால் பல்கலைகழகத்தில் அதற்கான கட்டுப்பாடு போடுவது தேவையற்றது. அதையும் ஆண்கள் முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் ஆடைகள் ஒரு மனிதனுக்கு அழகை மட்டும் அல்ல ஒரு கண்ணியத்தையும் அவர்பால் ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை சேலை என்பது அழகான ஒரு ஆடை. முன்பு அதை எந்நாளும் உடுத்தியபோதும் அதைச் சுமையாக யாரும் கருதவில்லை. தற்காலத்தில் நாகரிகம் என்று கூறிக்கொண்டும் அடிமைத்தனத்தின் ஒரு கூறாகவும் சேலை பார்க்கப்படுவது வருந்தத்தக்கதே. பண்பாடு பழக்கவழக்கங்களுடன் ஆடையும் ஒரு இனத்தின் அடையாளம் என்பதையும் மறுக்க முடியாது. அப்படியான அடையாளங்களை நாம் நாகரிகத்தின் பெயரில் இழந்துவருகிறோம். சேலை அணிவது வசதியானது அல்ல என்றால் வெயில் காலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது மட்டும் காற்றோட்டமானதா என்ன?? பலர் மத்தியில் ஒரு பெண் உரையாற்றும்போது சேலையில் நிற்பாளானால் ஒரு கம்பீரம் தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் என்ன உள்ளதைச் சொன்னால் பட்டிக்காடு நான் என்றும் தாங்கள் பெரிய புத்திசாலிகள் போன்றும் கல்லெறிவார்கள் பல பெண்ணியவாதிகள். 

என்னைப் பொறுத்தவரை சேலை அணிவது கவர்ச்சி என்கின்றனர். ஒழுங்காகச் சேலை அணிந்தால் ஏன் அங்கங்கள் வெளியே தெரியப் போகின்றன. ஆண்கள் எம் முகத்தைப் பார்த்துத்தான் எம்மைப் பற்றி எடைபோடுவார்கள். ஆகவே நாம் கம்பீரமாக துணிவுடன் எப்போதும் இருப்போமாக இருந்தால் எந்த ஆணும் எம் அங்கங்களைப் பார்க்க மாட்டான். மற்றைய ஆடைகளில் இல்லையா கவர்ச்சி?? 

ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் வேட்டியுடன் வந்தால் பார்க்கச் சகிக்காது. அத்தோடு அவர்கள் பலகலைக்கழகத்துக்கு அரைக் காற்சட்டையுடன் வராது எப்படியான முழுக் காற்சட்டையும் போட்டால் அதனால் எந்தப் பாதிப்பும் யாருக்கும் ஏற்படவும் போவதில்லை. அதனால் அதுபற்றி நான் மேற்கொண்டு சொல்ல விரும்பவில்லை. 

முள்ளிவாய்க்காலப் பேரவலத்தின் பின்னர் தமிழர் தாயகத்தில் கலாச்சார சீரழிவுகள் பெருகி விட்டன என்று மேற்குலகப் பாணியில் தங்கள் வாழ்க்கைய அமைத்துக்கொண்ட புலம் பெயர் தமிழர்கள் ஓர் பாரிய குற்றச்சாட்டை தாயகத்தில் இருப்போர் மீது வைக்கின்றார்கள். இது குறித்த உங்கள் பார்வைதான் என்ன? 

2003 ம் ஆண்டின் பின்னர் நான் தாயகம் செல்லவில்லை. அதனால் நேரே பார்க்காமல் ஒன்றைப்பற்றி விமர்சிப்பது தவறாகும். அங்கு நடைபெறும் விடயங்களைச் செய்திகளாகக் கேட்கும் போது கண், மூக்கு, வாய் வைத்து கதைகள் திரிபடைவதற்கு நிறைய வாய்பபுகள் இருக்கின்றன. ஆனால் மனித மனங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர்களுடன் உரையாடுவதிலிருந்து அறிய முடிகிறதுதான். பல உறவுகள் இப்போதெல்லாம் உறவுகளின் பெறுமதி தெரியாது, உறவுகளை வளர்க்கும் நோக்கம் இல்லாது எவ்வளவை புலம்பெயர் உறவுகளிடம் இருந்து கறக்க முடியுமோ கறந்துவிட்டுப் போவோம் என்னும் மனநிலையுடனேயே வாழ்கின்றனர். எப்பொழுது அவர்கள் பண்பு அவர்களை விட்டுப் போய்விடுகின்றதோ அப்போதே அவர்கள் அனைத்தையும் மீறுவதற்கும் தயங்காமாட்டார்கள். புலம்பெயர்ந்து மற்றைய சமூகங்களுடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழும் எம் இனத்தவரிடமே இன்னும் தெளிவற்ற நிலைகள் காணப்படும்போது வெளி உலகத் தொடர்புகள் அற்ற அவர்கள் எப்படி ஒரு தெளிவான சிந்தனையுடன் இருக்க முடியும்? 

உங்கள் தந்தையார் புலம்பெயர்நாடுகளில் தமிழர் பாடசாலைகளுக்கு வித்திட்டவர். ஓர் இலக்கியவாதியாக அவரை எப்படிப் பார்க்கின்றீர்கள்? 

இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது மொழி. அந்த வகையில் அப்பா பல பாடசாலைகளை உருவாக்கியதை விடவும் ஆரம்ப காலங்களில் ஐந்து நகரங்களில் தமிழ்ப்பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்குக் கற்பித்து பல தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். யேர்மனியில் பத்தாம் வகுப்புவரை படித்த மாணவர்கள் சிறந்த கட்டுரை, கவிதைகள், கதைகள் எழுதக்கூடியவர்களாக வளர்ந்திருக்கிறார்கள். அங்கு கல்விகற்றுப் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து முடித்தவர்கள் பட்டக் கல்வி கற்று அங்கு தாமும் கற்பிக்கின்றனர். அது ஒரு பாரிய வளர்ச்சி என்று தான் நான் கூறுவேன். தனிப்பட அப்பா சிறந்த நடிகன். ஓரங்க நாடகங்கள் பல செய்துள்ளார். பரிசில்களும் பெற்றுள்ளார். சாம்ராட் அசோகன் பற்றிய அப்பாவின் ஓரங்க நாடகம் அசோக மன்னன் பற்றிய வரலாற்றை வாசித்து அறியாமலேயே என்னுள் புகுத்தியது. பல கட்டுரைகளை மாணவர்களுக்காக எழுதியுமுள்ளார். 

உங்கள் தந்தை பொதுவாழ்வில் ஈடுபட்டபொழுது உங்கள் தாயார் எந்தவகையில் உறுதுணையாக இருந்தார்? 

எல்லோருக்கும் என் அப்பாவைத் தெரிந்த அளவுக்கு அம்மாவையும் தெரிந்திருந்தாலும் அம்மா ஆற்றிய பணிகள் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. எமக்கும் பெற்றோருடன் நெருங்கிப் பழகிய சிலருக்கும் மட்டுமே என் அம்மாவின் ஆளுமை பற்றி தெரியும். கவிதைகள், கட்டுரைகள், பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்கள் என அம்மா எழுதித் தள்ளியது போன்று யேர்மனியில் யாரும் எழுதியிருக்க முடியாது. அவர் தன்னை பின்னிறுத்தி அத்தனை காரியங்களுக்கும் அப்பாவுக்குத் துணையாக இருந்தது மட்டுமன்றி இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலாக தன் எண்பது வயதுவரையும் காகன் நகரில் தமிழ்ப் பாடசாலையை நிர்வகித்தவர். எத்தனையோ மாணவ மாணவிகளை முழுமையாக உருவாக்கிய பெருமை அம்மாவையே சாரும். என் பிள்ளைகளும் என்னைப் போலவே தமிழில் பேச எழுத முடிகிறதென்றால் அது அம்மாவினால்தான். 

ஒரு கதையின் வெற்றியானது எதில் தங்கியுள்ளது என்று எண்ணுகின்றீர்கள்? 

நிச்சயமாய் ஒரு கதையின் வெற்றி என்பது வீண் அலட்டல்கள் இல்லாமல் எழுதப்படும் விதத்திலும், மிகைப்படுத்தலான வர்ணணைகள் இல்லாது எழுதப்படுவதாலும், இலகுவான சாதாரணர்களுக்கும் விளங்கும்படியான எழுத்து நடையிலும் அமைந்தால் வெற்றிபெறும். ஆனாலும் இக்காலத்தில் விளம்பரங்களும் வெளியீடு செய்யப்படும் நிறுவனத்துக்கான பெயருங்கூட முக்கியம் என்பது போன்ற மாயை ஒன்று நிலவுகிறது. 

எந்த விதத்தில் மாயை என்று சொல்கின்றீர்கள்? 

சிலரின் கதைகள் சிலரால் வேண்டும் என்றே மிகைப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. சில எவராலும் கவனிக்கப்படாது ஓரங்கட்டப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சில பெயர்பெற்ற பதிப்பகங்களினால் வெளியிடப்படும் நூல்கள் பிரபலமாகிப்போவதும் பெரிதுபடுத்தப்படுவதும் நம் கண் முன்னே நடைபெற்றுக்கொண்டுதானே இருக்கின்றன. புத்திஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களின் அங்கீகாரம் இன்றி பல நூல்கள் வெளியே பேசப்படாது இருப்பதற்கும் இதுவே காரணம். 

’புத்திஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களின் அங்கீகாரம் இன்றி பல நூல்கள் வெளியே பேசப்படாது இருப்பதற்கும் இதுவே காரணம்’ என்று சொல்கின்றீர்கள். ஆனால் இவர்கள் ஓர் இடைத்தரகர்கள் தானே? வாசகர்கள்தானே ஓர் படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். இவர்கள் போன்றவர்களின் அங்கீகாரங்கள் இல்லாமலே பல படைப்புகள் வெற்றியடைந்து இருக்கின்றனவே? 

ஒரு படைப்பாளரின் கடின உழைப்புக்கு அப்பால் அதிட்டம் என்ற ஒன்றும் நிச்சயமாய் உண்டு என்பதை நான் நம்புகிறேன். அதனாலேயே சில நூல்கள் எதையும் தாண்டி வெற்றி பெறுகின்றன. அதற்குமப்பால் வியாபாரத் தந்திரம் என்பதே பல தடவைகள் ஒரு நூலை வெற்றி பெறவைத்திருக்கிறது. உதாரணமாகப் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய "மாதொருபாகன்" நூலைக் குறிப்பிடலாம். மூன்று ஆண்டுகளின் முன்னர் வெளிவந்த மாதொருபாகன் எங்களுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிலேயே பலரின் கண்களுக்குத் தெரியாமலேயே இருந்தது. புத்தகக் கண்காட்சி நடைபெற்ற பொழுது, நேரம் பார்த்து மீண்டும் இல்லாத சர்சையை உருவாக்கித்தானே அதை இத்தனை பேர் அறியச் செய்தனர். 

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை எடுத்துக்கொண்டாலுங்கூட முக நூலில் இருக்கும் பிரபலங்கள் சிலரும் ஊடகங்களில் வேலைசெய்யும் சிலரும் தமக்குப் பிடித்த நூல்களை ஆகா ஓகோ என்று மிகைப்படுத்துவதும் அவர்கள் மிகைப்படுத்துவதைப் பார்த்தே அப்ப புத்தகம் நன்றாக இருக்கும் என்று அடிபட்டு வாங்கி வாசிப்பதும் கண்முன்னே நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அப்படி என்னதான் நூலில் இருக்கிறது என்று நாமும் வாங்கிப் பார்த்தால் அரைவாசி பக்கங்களைக் கூட வாசிக்க முடியாது மூடி வைக்கவேண்டியதாயிருக்கும். 

உதாரணமாக குணாகவியழகன் எழுதிய "நஞ்சுண்ட காடு" நாவலை எடுத்துக்கொண்டால் அதற்கான மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம் தான் எல்லோரையும் வாங்க வைத்தது. ஆனால் அதன் பின்னர் வெளியாகிய அடுத்த நாவலான "விடமேறிய கனவு" மீண்டும் மீண்டும் சிறையில் தாம் பட்ட சித்திரவதைகளை அதில் கூறுவது ஒருவித சலிப்பைத்தான் ஏற்படுத்தியதே தவிர அந்த நூலை வாசித்து முடிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும் குணா கவியழகன் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதில் ஐயமில்லை. உண்மையிலேயே முகத்துக்கஞ்சி ஏதோ செய்வது போல் தான் பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களும் விமர்சனங்களும் இப்போதெல்லாம் இருக்கின்றன என்பது எனது கருத்தாகும். ஒரு சிலரே நியாயமாகத் தம் சரியான விமர்சனத்தை வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் அவர்களது விமர்சனங்கள் நான் ஏற்கனவே கூறிய மிகைப்படுத்தல்களுக்கு முன்பாக நின்று பிடிக்க முடியவில்லை என்பதே உண்மையானது. உண்மையான ஒரு விமர்சகர் ஒரு நாவலின் சரிபிழையை யாரின் முகதுத்துக்காகவும் வைக்காது எழுத்துக்காக மட்டுமே வைப்பாரானால் புலம்பெயர் எழுத்தாளர்களும் ஈழத்து எழுத்தாளர்களும் இலக்கியப் பரப்பில் எங்கோ சென்றிருக்க முடியும். அத்துடன் இன்னும்கூட இந்திய எழுத்தாளர்களின் நூல்களை மட்டுமே வாசித்து அவர்களின் எழுத்தை மட்டும் எழுத்தாகப் பார்க்கும் எம்மவர் இருக்கும்வரை ஈழத்து எழுத்தாளர்கள் வளர முடியாது. 

தமிழருக்கும் இலக்கியத்துக்குமான உறவுகளில் நீண்ட இடைவெளி இருப்பதாக ஓர் எண்ணப்பாடு இன்று உள்ளது. இதுபற்றி உங்களுடைய கருத்துத்தான் என்ன? 

இலக்கியத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் பின் நிற்கின்றனர் என்றே சொல்வேன். அதற்கான காரணம் எமது முப்பது ஆண்டுகாலப் போர்ச் சூழலும் ஆழ்ந்த இலக்கிய அறிவற்ற எமது வாசிப்புச் சூழலும் என்று கொள்ளலாம். ஈழத் தமிழரைப் பொறுத்தமட்டில் இலக்கிய ஆர்வம் அற்றவர்களாகவே பலகாலமாக இருந்து வந்துள்ளனர். அதன் பின்னரும் குறிப்பிட்ட சிலரே அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர். தமிழ் சினிமாவும், இந்திய எழுத்தாளர்களின் ஆளுமையும், சாதாரண எழுத்தாளர்களின் படைப்புக்கள் பலராலும் பல சிரமங்கள் மத்தியிலுமே பதிப்பிக்கப்பட்டதும் கூட எம்மவர்க்கு இலக்கிய ஆர்வத்தைக் குறைத்தது எனலாம். ஆனால் போராட்ட காலத்தின் பின்னரே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டு இலகுவாக பணம் கையில் புரளத் தொடங்கிய பின்னர், எழுதுவதற்குமான ஒரு வேகமும் தீவிரமும் எம்மவரிடையே ஏற்பட்டது. 

பல கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் அவைகளை ஏன் ஒரு தொகுப்பாக வெளியிடவில்லை? 

என் கவிதைகள் பலருக்குப் புரியாததாக இருப்பதாகக் கூறுவர். பலரின் கவிதைகளைப் பார்த்தால் எப்படி இவர்கள் இப்படிச் சொற்களைக் கோர்க்கின்றனர் என்று பிரமிப்பாகவே எனக்கு இருக்கும். ஒன்றைப் பற்றிக் கவிதை எழுத வேண்டும் என்று எண்ணினால் எனக்கு என்ன எழுதுவது என்று தெரிவதில்லை. என் கவிதைகளில் பலவும் நான் கோபமாக இருந்த போது என் மனதில் தோன்றிய வெளிப்பாடுகள் தான். அவற்றைத் தொகுத்து நூலாக்கத் தரம் இருக்கிறதா என்று பல நாட்கள் யோசித்துக்கொண்டு இருந்தேன். என் முக நூல் நட்புக்கள் மேரி வதனா அக்கா, ஜீவகுமாரன் அண்ணா, ஜெயப்பிரகாஸ் ஜேபி அண்ணா போன்றவர்கள் தந்த ஊக்கத்தினால் கவிதைகள் இன்னும் சில மாதங்களில் நூலாகின்றது. 

உங்கள் கவிதைகள் பெரும்பாலும் தன்முனைப்பு கவிதைகளாகவே இருக்கின்றன இதற்கு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? 

மேலே நான் குறிப்பிட்டபடி என் உணர்வுகளையே நான் கவிதையாக்கியுள்ளேன். சமூகத்தின் பால், தனிமனிதரின்பால் எனக்கு கோபம் ஏற்படும் பொழுதுகளில் கவிதைகள் எழுத வருகின்றது. உறவுகளுடன் ஏற்படும் சிறுசிறு மனக்கிலேசங்கள் கூடக் கவிதை எழுத வைக்கின்றன. அத்தோடு நான் எப்போதுமே எதிர்மறைக் கருத்துக்களை என்னகத்தே கொண்டிருப்பதனாலோ என்னவோ என்னால் மகிழ்வான அல்லது அதீத கற்பனைகளுடனான கவிதைகளை எழுத முடிவதே இல்லை. எல்லோராலும் எல்லாவற்றையும் எழுத முடியாதுதானே. எனக்கு எழுத வருவதைத்தானே நான் எழுத முடியும். சிலர் செய்வதைப்போல் மொழிபெயர்ப்புக் கவிதைகளை நானே எழுதினேன் என்று போட முடியுமா சொல்லுங்கள்??? 

எந்தவகையில் உங்களுக்கு சமூகத்தின்பால்,தனிமனிதரின்பால் கோபம் ஏற்படுகின்றது? 

இதை வகை பிரித்துக் கூற முடியாது. நீங்களே தன் முனைப்புக் கவிதைகள் என்று கூறிவிட்டீர்களே. ஆனபடியால் என் கண் முன்னால் நடைபெறும் சில செயல்களும் சிலரின் செய்கைகளும் கோபத்தை ஏற்படுத்துவது இயல்புதானே. கணவன், பிள்ளைகள், நட்புக்கள், உறவினர், முக்கியமாய் இப்போ முகநூல் நட்புக்கள் இப்படிப் பலரின் மீதும் எழும் கோபம். அதுவும் எனக்குக் கோபம் வந்தால் எதைப்பற்றியும் சிந்திக்க முடிவதில்லை. எதிர்மறையான சிந்தனைகளே உடனே எனக்கு எழுவது. கதை என்றால் மறைமுகமாக எழுதுவது கடினம். கவிதை என்னும்போது சொற்களுள் மறைந்துகொள்ளக் கூடிய வசதி இருக்கிறது. அதனால் எழுதுவதும், நான் எழுதியது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக விளங்கும் என்பதும் கவிதை எழுதுவதில் வசதியாகிவிடுகிறது. 

அப்படியானால் கவிதையென்பது பொய்யாமொழி என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

அதிலென்ன சந்தேகம் இருக்கப்போகின்றது ? கவிதைக்குப் பொய்யழகு என்று சும்மாவா சொன்னார்கள். கவிதையில் பொய்யான புனைவுகள் அதிகரிக்கும்போது கவிதையும் அழகுபெறுகிறது. சங்கத் தமிழ்ப் பாடல்கள் தொடங்கி தற்பொழுது வரும் புதுக்கவிதைகள் வரை பொய்களும் புனைவுகளும் கவிதைகளில் நிரம்பிக் கிடக்கின்றன. எதுவுமற்ற ஒன்றையே ஒன்பது மடங்காக்கிக் கற்பனையில் இல்லாததை இருப்பதாய் உருவகிக்கக் கூடியது கவிதை. 

உங்களைப் பொறுத்தவரையில் ஓர் கவிதை மொழியானது எப்படியாக இருக்கவேண்டும்? 

முன்பெல்லாம் மரபுக்கவிதைகளே அதிகம் எழுதப்பட்டன. சீரும் தளையும் சிறப்புற அமைய வேண்டும் என இலக்கண வரம்பு கட்டி ஆழ்ந்த தமிழ் அறிவு அற்றவர்கள் மரபுக்கவிதை எழுதவே முடியாது என்னும் நிலை இருந்தது. தற்போது அந்நிலை மாறி யாரும் எழுதலாம் என்னும் நிலையில் புதுக்கவிதைகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. அதற்கான காரணம் இலக்கண வரம்பின்றி எளிய தமிழில் சொற்களைக் கோர்க்க முடிந்தமையே. கவிதைகள் சிறப்பாக இருக்கவேண்டுமானால் சொற்களின் கோர்வை ஒழுங்குடன் அமைதல் வேண்டும். உவமைகள் உருவகப்படுத்தல்கள் என்ற அலங்காரங்களுடன் எழிய நடையில் எழுத்து இருந்தால் வாசிப்போரை மீண்டும் வாசிக்க வைக்கும். மழைச்சாரலில் முகம் நனைப்பதாய் உணர்வும் தோன்றும். ஆனாலும் எனக்குக் கவிதைகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. 

உங்களுக்கு ‘கவிதைகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை’ என்று சொல்கின்றீர்கள் இதை கவிதை பற்றிய புரிதலில் ஏற்பட்ட குளறுபடி அல்லது தேடல் இல்லாமை என்று எடுத்துக்கொள்ளலாமா? 

எனக்குக் கொஞ்சக் காலமாக எதையும் பெரிதாக ஆழ்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்படுவதில்லை. அதற்குக் காரணம் வயதும், பொறுமை இன்மையும், புலம் பெயர் வாழ்வின் நிலையற்ற தன்மையுமாக இருக்கலாம். அத்தோடு போட்டிகளற்ற திறந்த இணையவெளியும், மற்றவரின் அங்கீகாரம் தேவையில்லை என்று இணையத்திலும் முக நூலிலும் எமது உணர்வுகளை வெளிப்படுத்துகையும் ஆர்வத்தையும் போட்டியையும் ஏற்படுத்தவில்லை. கவிதை என்பது எனக்கு மட்டுமல்ல பலரும் விரும்பி ஆர்வத்துடன் வாசிக்காத ஒன்றுதானே. ஏனெனில் எல்லோராலும் எல்லாக் கவிதைகளையும் இலகுவில் புரிந்துகொள்ள முடிவதில்லை. அத்தோடு ஆழ்ந்த தமிழ் அறிவு இன்மையும் ஆழ்ந்த வாசிப்பு இன்மையும் எனக்கு ஆர்வத்தையும் தேடலையும் கவிதைகளின் மேல் ஏற்படாது செய்திருக்கலாம். 

ஆக இணையவெளி மற்றும் சமூக வலைத்தளங்கள் எதோ ஒருவகையில் ஓர் படைப்பாளியின் ஆக்குதிறனை நீர்த்துப்போகச் செய்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

ஒருவகையில் வலைத் தளங்கள் ஒருவரை படைப்பாளியாகவும் ஆக்குகின்றது. அதே நேரம் ஒரு படைப்பாளியின் நேரத்தை திசை திருப்பி தன ஆளுமைக்குள் வைத்துவிடுகிறது. இதனால் அந்த படைப்பாளியின் வாசிப்பு நேரங்கள் குறைவதால் படைப்பாளியின் படைப்புத்தரமும் குறைந்து கொண்டே போகின்றது. உதாரணத்துக்கு முகநூலை சொல்லலாம். முன்னர் முகநூலின் பயன்பாடு மட்டுப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது தொலைபேசிகளில் அவற்றைப் பயன்படுத்தும் நுட்பம் வந்ததன் பின்னர் அதன் கவர்ச்சியில் விழாதவர் சொற்பம் என்றே கூற வேண்டும். முன்பு யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்காக அதை உபயோகித்த என் போன்றோர் இன்று முக நூலுக்காக மட்டுமே அதை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 

மனதில் ஒரு சலிப்பு நிலை ஏற்பட்டால் உடனே முகநூலுக்கு வந்து விடுப்புப் பார்ப்பதுடன் முடிகிறது. ஒருவர் ஒரு பதிவைப் போட்டால் அதற்கு எதிர்க்கருத்து என்று தொடங்கி மற்றவர்களின் வலைப்பின்னலில் நாமே விழுந்துவிடுகிறோம். வேலை செய்யும் இடங்கள் முதற்கொண்டு நாம் தூங்கும் நேரம் தவிர எம் நிலை இழந்து அவற்றின் ஆளுமையுள் வீழ்ந்து கிடக்கிறோம். இது பலரின் ஆக்கத்தை அழிவின் நிலைக்கே கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும் நாம் எம்மை எமது கட்டுப்பாட்டில் வைக்கப் பழகிக்கொண்டால் நாம் நாமாகிவிடலாம் என்றே எண்ணுகின்றேன். 

இலக்கியவெளியில் இருக்கின்ற குழுமச்சண்டைகள் அல்லது செயற்பாடுகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது? 

உண்மையில் சிரிப்பாகத்தான் இருக்கிறது. அதாவது புகழ் என்னும் மாயையில் கிடந்தது உழல்பவர்களுக்கும் மற்றவர்மேல் பொறாமையில் உழல்பவருக்குமே இந்தச் சண்டைகள் முக்கியமாக இருக்கின்றனவே தவிர மற்றயவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனாலும் அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே. 

கவிதைக்குப் பால்வேறுபாடுகள் உண்டா? 

பால் வேறுபாடு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஆனால் ஒரு ஆண் எழுதும் கவிதைக்கும் பெண் எழுதும் கவிதைக்கும் நிச்சயமாய் வேறுபாடு உண்டு. இக்கேள்வி மிக ஆழமானது என்பதுடன் இதற்கு விடை கூறுமளவு இலக்கிய அறிவு என்னிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

புலம் பெயர் நாடுகளில் மகளிர் அமைப்புகளின் இருப்புகள் எப்படியாக இருக்கின்றன? 

முன்பு விடுதலைப்புலிகளின் " பெண்கள் அமைப்பு" அனைத்து நாடுகளிலும் இருந்தது. நிகழ்வுகளில் மக்களை ஒழுங்கமைத்தல், கலை நிகழ்வுகளை ஒழுங்கமைத்து அதனால் வரும் நிதியைக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதல் துண்டுப்பிரசுரங்கள், எமது நாட்டின் போர் பற்றிய அந்நிய மக்களுக்கான விழிப்புணர்வு,விளக்க நிகழ்வுகள் என்று செய்துகொண்டு இருந்தனர். இப்போதும் நோர்வே மற்றும் சில நாடுகளில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பிரித்தானியாவில் 2009 இன் பின்னர் மாவீரர் நாட்களில் மட்டும் மஞ்சள் சேலை அணிந்து மக்களை ஒழுங்குபடுத்துவதோடு வேறு செயற்பாடுகள் இன்றி இவர்கள் இருக்கின்றனர். 

"தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம்" என்னும் பெண்கள் அமைப்பானது பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இது தமிழ் பேசும் இலங்கைப் பெண்களுக்காக, அவர்களின் நிலையை உயர்த்துவதற்கும், அவர்களுக்கான பேசுத்தளத்தை உருவாக்குவதற்குமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. தமிழ் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்கான வழிகளை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். 

இன்னும் பெண்கள் குழந்தைகளின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து ஆளுமை விருத்தியை ஏற்படுத்தவும், அவர்களது பிரச்சனைகளுக்கெதிராகக் குரல்கொடுக்கவும், முதியவர்களின் நலவாழ்வுத் திட்டங்களோடு சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதும் மேலும் இம்மன்றம் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதும் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதுடன் மனித உரிமைகள், பாதுகாப்பு, பால்நிலைச் சமத்துவம், சமாதானம், சுகாதாரம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நீதிக்கான வேலைத்திட்டங்களையும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தி தாயகத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கான பல வேலைகளைச் செய்துகொண்டும் இருக்கின்றனர். 

இன்னுமொன்று "ஆசிய பெண்கள்வள நிலையம்" என்னும் ஒரு பெண்கள் அமைப்பு பல்வேறு இனத்தவரையும் உள்ளடக்கி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. 

இதை விட "உலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு" என்பதும் பிரித்தானியாவில் இயங்குவதே.இவர்கள் பெண்களுடனான கலந்துரையாடல்கள், பட்டறைகள் என்பனவற்றை அவ்வப்போ நடத்துகிறார்கள் என்றுகேள்வி. மேலதிக விபரம் தெரியவில்லை. 

பெண்ணியம் பற்றிய உங்கள் புரிதல்தான் என்ன? 

பெண்ணியம் என்பது உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்கான சகல உரிமைகளையும் பெறுவதற்குப் போராடுவதும் அதற்காக உழைப்பதும் என்றும் கூறலாம். பெண்ணியம் என்ற சொல்லின் அர்த்தத்தைச் சிலவற்றுள் அடக்கிவிடமுடியாது. ஆனால் உலகம் முழுதும் தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி முதலாம் உலக நாட்டுப் பெண்கள் கூட எதோ ஒருவகையில் உரிமைகள் மறுக்கப்பட்டவராய்த்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் ஈழத்துப் பெண்களுக்குமே அவர்கள் உரிமைகள் தொடர்பாக பாரிய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் வாழும் சமூகம், சூழல் என்பனவும் அவற்றைத் தீர்மானிக்கின்றன. நான் புலம்பெயர்ந்து வந்த பின்னர்தான் ‘பெண்ணியம்’ என்னும் சொல்லைக் கேள்விப்பட்டேன். 

என் குடும்பத்தில் அம்மாவுக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது, எனக்குக் கூட எமது சுதந்திரத்தின் வரையறை என்ன என்பது தொடர்பான குழப்பம் இருந்தது. நாமே எமது சுதந்திரம் பற்றி அறியாது ஆண்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். அது அன்பின் காரணமாக, குடும்ப நன்மை காரணமாக பெரிதுபடுத்தப்படாது எமது அகந்தையை ஓரத்தில் வைத்துவிட்டு நாமே நம்மை அடக்கிக்கொள்ளுதல். இதனால் தீமை இல்லை என்னும் திருப்தியுடன் அமைதிகாத்தலை நான் பல குடும்பங்களில் காண நேர்ந்திருக்கிறது. அதை மீறி சுதந்திரம் என்று மல்லுக்கட்டும் போது குடும்பங்கள் பிளவுபடவும், குழந்தைகள் குடும்பச் சூழலில் தாய் தந்தை இருவரின் முழு அரவணைப்பில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுப் போகும். இதன் காரணமாகவே பலர் தெரிந்தும் தெரியாமலும் ஆண்களின் அடக்குமுறைக்குள் அடைபட்டும் இருக்க நேர்கிறது. 

புலம்பெயர் மண்ணில் புகைப் பிடிப்பது, மதுவருந்துவது போன்றவையும் பெண்களுக்குரிய செயல்களாக சில பெண்ணிய வாதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆண் என்றாலும் பெண் என்றாலும் இவற்றைச் செய்வது அவசியமற்றது. இக்காலத்தில் பல தவறான செயல்கள் பலராலும் சரியென நியாயப்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் சுய பொருளாதார வளமும் சமூக மேம்பாட்டுச் சிந்தனை அற்ற எண்ணமுமே காரணம். 

எனக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதனால் என்னால் மற்றவரின் அடக்குமுறைகள் பற்றிப் புரிந்துகொள்ள முடியவில்லையோ எனப் பல நாட்கள் எண்ணியுள்ளேன். புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. எமது சுதந்திரத்தை நாமேதான் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர எமக்காக மற்றவர்கள் எப்படிப் பெறுத்தர முடியும்? ஒரு சமூகத்துக்குப் பொதுவானவற்றை வேண்டுமானால் குழுவாக நின்று பெற்றுக்கொள்ளலாம். தேவையான இடங்களில் பெண்ணியம் பேசாமலேயே எத்தனையோ மேம்படுத்தல்களைப் பெண்களுக்குச் செய்ய முடியும். புலம்பெயர் தேசத்தில் இதுவரை பெண்ணியம் பேசும் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக எதைச் செய்து சாதித்துள்ளனர். பெண்களுக்கான அடக்குமுறைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பங்களிலுமே இருக்கின்றது. அப்படியிருக்க இவர்களால் இவர்கள் குழுவில் அதிக பெண்களை உள்வாங்க முடியாமைக்குக் காரணம் என்ன? அதைவிடுத்து தொட்டதற்கெல்லாம் பெண்ணியம் என்று பேசிக்கொண்டு கூட்டம் போடும் பெண்ணியவாதிகளை எனக்குப் பிடிப்பதே இல்லை. 

இக்காலத்தில் பல தவறான செயல்கள் பலராலும் சரியென நியாயப்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் சுய பொருளாதார வளமும் சமூக மேம்பாட்டுச் சிந்தனை அற்ற எண்ணமுமே காரணம். என்று சொல்கின்றீர்கள். ஆனால் சுயபொருளாதார வளம் மேம்பட்டதால் தானே பெண்ணியவாதிகள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தமது சமூக அந்தஸ்தாக கருதுகின்றார்கள்? 

சுய பொருளாதார வளம் மட்டுமே ஒருவரைப் புகைப்பிடிக்கவும் மது அருந்தவும் தூண்டுவதில்லை. இவை இரண்டும் நாகரிகமானவர்கள் செய்யும் செயல் என்னும் தவறான மனநிலை அவர்களுக்கு வந்துவிடுகிறது. சிலர் கணவனின் அடக்குமுறையில் இருந்து தான் வெளியேறிவிட்டேன் என்று தனக்குத் தானே அற்ப சந்தோசத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், என்னை நீ ஒன்றும் செய்ய முடியாது என்று கணவனுக்கு உணர்த்தவுமே குடிக்கின்றனர். அதுபோல் பல அறிவற்ற கணவர்கள் தம் மனைவியும் தனக்கு ஈடாகக் குடிப்பது நாகரீகம் என்று எண்ணி ஆரம்பத்தில் தாங்களே தங்கள் மனைவிக்கு அதைப் பழக்கிவிட்டு பின்னர் நிலைமை கைமீறும் போது செய்வதறியாது தவிப்பார்கள். 

சுய பொருளாதார வளம் என்னும் போது பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்திலேயே இது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் எமது விழாக்களில் விழா முடிய மது அருந்துவது ஒரு நாகரிகமாகவே வந்துவிட்டது. உண்மையில் நாகரிகம் என்றால் என்ன என்று உணரும் ஆண்களோ பெண்களோ மதுவை ஒருபோதும் நாடாதவர்கள்தான். எத்தனையோபேர் மது, புகைத்தல் இல்லாமலேயே உயர்வான கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதனால் முதலில் பெண்ணுக்கு எது தமக்கான சுதந்திரம் என்பதில் வரையறையும் தெளிவும் வேண்டும். சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு குடும்பப் பிரிவினைக்கு வழிவகுத்து எமது அடுத்த சந்ததிக்கு குடும்ப வாழ்வியலில் வெறுப்பை ஏற்படுத்தாது பாதுகாப்பது முக்கியம். அதை செய்யத் தவறும் பட்சத்தில் ஒருவருக்குப் பல திருமணங்கள், குழந்தைகளுக்குப் மாற்றுப் பெற்றோர், நிலையற்ற வாழ்வு என்று தனித்துவம் தொலைத்து நாடோடிகளாக அலைய வேண்டியதுதான். 

புலம்பெயர் தேசத்தில் இதுவரை பெண்ணியம் பேசும் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக எதைச் செய்து சாதித்துள்ளனர்? என்றவோர் கேள்வியை இந்த நேர்காணல் மூலம் பதிவு செய்துள்ளீர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக இந்த பெண்ணியவாதிகள் எந்தவகையான முன்னெடுப்புகளை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? 

இந்தப் பெண்ணியவாதிகள் இங்கே இருந்து கொண்டு பெண்ணியம் மட்டும் பேசுவதுடன் நின்றுவிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் என்பது புலம்பெயர் சமூகத்துள் இருந்தாலும் அவர்களின் நிலையை மாற்றக்கூடிய காரணிகளும் அதற்கான வழிவகைகளும் புலம்பெயர் நாடுகளில் கொட்டிக்கிடக்கின்றன. பதியப்பட்ட ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் ஏதாவது வேலைத்திட்டத்தை முன்னேடுத்துள்ளனரா? அல்லது இதுவரை புலம்பெயர் பெண்ணிய வாதிகள் எமது பெண்களுக்கான ஆலோசனைகளையாவது வழங்கியுள்ளனரா? அதற்கு எவருமே தயாரில்லை. அதுமட்டுமன்றி எமது பெண்கள் பலரும் கூடத் தமக்கு ஒரு பிரச்சனை ஏற்படும்போது அதைவிட்டு வெளியே வரவேண்டும் என்று சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தாலும் அதைத் தீர்க்கக் கூடியவர்களிடம் மனம் விட்டு எல்லாவற்றையும் கூறாது தம்மை மட்டும் நியாயப்படுத்துவதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். அத்தோடு பெண்கள் என்பதினாலேயே பல குடும்பங்களில் பெண்கள் கூறுவதை நம்பி ஒரு தீர்ப்பைக் கூறி ஆணை ஓரங்கட்டும் நிலையும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். 

எம் நாட்டிலேயே போரின் பின்னர் சமுதாய விழிப்புணர்வு, செயற் திட்டங்கள், வழிகாட்டல்கள் தேவை இன்றி எத்தனையோ மக்கள் இன்னல்களை அனுபவித்தபடி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நாம் அந்த இடங்களில் உள்ள தளங்களுக்குச் சென்று அந்த மக்களுடன் நின்று அவர்களின் தேவை அறிந்து செய்யற்படுவதே பெண்களுக்குப் பயன் தரக்கூடியதேயன்றி இணையத்தளங்களிலும் முகநூலிலும் எழுதுவது எழுத்துடன் மாத்திரமே நின்றுவிடுகிறது. 

நாமே எமது சுதந்திரம் பற்றி அறியாது ஆண்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். என்று சொல்கின்றீர்கள் எந்தவகையில் நீங்கள் அடிமைப்பட்டு இருப்பதாக உணருகின்றீர்கள்? 

பல விடயங்களைக் கூறலாம். எமக்கு விருப்பமான உணவு சமைப்பதில் இருந்து நாம் சுதந்திரமாக விடுமுறைக்குச் செல்வது, எமது உறவுகளுக்கு உதவுவது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் இரவில் வெளியே நிற்க முடியாதது, எமக்குப் பிடித்த ஆண்களுடன் எல்லாம் கணவனுக்குப் பிடிக்காவிடில் பேச முடியாதது என நிறைய இருக்கின்றன. பல ஆண்கள் வெளியே தம் தம் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதாக மற்றவர் முன் பீற்றிக்கொள்வார்கள். ஆனால் உள்ளே அத்தனையும் அழுக்காகவே இருக்கும். என் கணவர் கூட எனக்குச் சுதந்திரம் வழங்கியுள்ளார் என்று நான் கூறினேன். ஆனால் என் சுதந்திரத்தை நானேதான் வரையறை செய்துகொண்டு எனக்குள் சில கட்டுப்பாடுகளும் விதித்தேன். 

நான் வெளியே தனியாக ஏதும் நிகழ்வுகளுக்கோ அன்றி ஏதாவது விடயங்களுக்கோ செல்லும் போதெல்லாம் இரவு ஒன்பது மணியானால் என் கணவரிடமிருந்து தொலைபேசி வரத் தவறுவதில்லை. அந்த நேரம் ஏற்படும் சினத்தை, சரி அக்கறையினால் விசாரிக்கிறார் என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன். தவறி நான் தொலைபேசிக்குப் பதில் கொடுக்க முடியாது போய்விடும் நேரங்களில் வீடுக்கு வந்தால் கணவர் விளித்திருந்தும் தூங்கியிருப்பார். 

ஆரம்பத்தில் எனக்கு அது பெரிய குற்ற உணர்வையும் மன உளைச்சலையும் தந்தாலும் போகப்போக அவற்றை ஓரங்கட்டிவிட்டு நானும் எதையும் கணக்கெடுக்காமல் இருக்கப் பழகிக் கொண்டேன். இப்படி எத்தனையோ கூறிக்கொண்டேபோகலாம். ஆனால் எல்லாவற்றையும் விபரமாகப் பொது வெளியில் சொல்லமுடியாது. 

பெண் என்பவளுக்கு எதிரி யாராக இருக்க முடியும்? 

பெண் என்பவளுக்கு எதிரி பெண்ணேயன்றி வேறுயார்? ஆண்களிலும் சிலர் சின்னப் புத்திகளுடன் இருக்கிறார்கள். ஆனாலும் பல பிரச்சனைகளுக்குப் பெண்களே காரணமாக அமைந்துவிடுகின்றனர். ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது அவள் யாரையும் பற்றி எதையும் பற்றிக் கவலை கொள்ளாது இருக்கிறாள். எந்தத் தடைகளையும் என்னால் தாண்டி வர முடியும் என்னும் நம்பிக்கை அவளிடம் இருப்பதனால் மற்றவற்றை அவள் தடைகளாக எண்ணுவதில்லை. ஆனால் தன்னம்பிக்கை குறைந்த பெண்கள் எதற்கும் மற்றவரைச் சார்ந்தே இருக்கவேண்டய சூழலில் இன்னொரு பெண் தன்னிலும் மேன்மையுடன் இருக்கிறாள் என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தன்னிலும் பார்க்கக் குறைந்த தகுதிகொண்ட பெண்ணுக்கு பல நட்புக்கள் இருப்பார்கள். தன்னம்பிக்கையுள்ள பெண்ணுக்கு மிகக் குறைவாகவே நட்புக்கள் இருக்கும். அதற்காக எல்லாப் பெண்களையும் ஒரே கயிற்றில் நான் கட்டவும் முடியாது. விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். 

வேலைத் தளங்களிலும் வீட்டிலும் மற்றும் பொதுவாகப் பெண்கள் ஒன்றாகக் கூடும் இடங்களிலும் கூட ஆளுமை உள்ளவர்கள் சேர்ந்து மகிழ்வாக இருப்பது என்பது மிகக் குறைவாகவே இருக்கும். உயர் பதவி வகிக்கும் பெண்ணாகட்டும், தனித்தன்மை கொண்ட பெண்ணாகட்டும், சுய ஆளுமை கொண்ட பெண்ணாகட்டும் மற்றவர்கள் அவளை எதோ ஒருவிதத்தில் மட்டம்தட்டவும் அவளை அவமானப்படுதவுமே முயல்கின்றனர். என்னிலும் இவளுக்கு ஆளுமை இருக்கிறது, திறமை இருக்கிறது அதனால் அவளுக்கு நாமும் கைகொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் மிகச் சில பெண்களுக்கே ஏற்படுகிறது. மற்றவர்கள் எப்போது இவள் வீழ்வாள் அல்லது அவமானப்படுவாள். பார்த்துச் சிரிக்கலாம் என்றே காத்திருக்கின்றனர். 

மற்றப்பக்கத்தில் ஆண்கள் பலரும் கூட இதே மனநிலையில் இவள் பெண். இவளுக்கு எத்தனை தலைக்கனம், என்ன அகங்காரம். இவளை வீழ்த்தவேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பர். அவர்களிடம் வழிந்து, அவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்கிறபடி ஆடினால் எம்மைத் தூக்கித் தலையில் வைப்பர். 

உங்கள் பொது வாழ்க்கையில் பெண் என்ற காரணத்துக்காக உங்கள் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் மறுதலிக்கப்பட்டிருக்கின்றவா? 

என்னைப் பொறுத்தவரை நேரடியாக என் கருத்துக்களை பெண் என்னும் காரணத்துக்காக மறுதலிக்கப்பட்டதில்லை. அதற்கான காரணம் என் துணிவும் யாருக்கும் அஞ்சாது நேராகவே அவர்கள் குற்றத்தை கூறுவதும் கூடக் காரணமாக இருக்கலாம். பிரித்தானியாவில் பல ஆண்களுடன் வேலைசெய்யும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. யாரும் நான் பெண் என்பதனால் எனக்குக் கீழே வேலை செய்ய மாட்டேன் என்றோ என் வேலை பற்றியோ எந்தக் குற்றச்சாட்டும் சொன்னதும் கிடையாது. ஆனால் பலரும் என்னைப் பொல்லாத பெண் என்று கூறியிருக்கின்றனர். அதன் பின்னர் கூட எனக்குக் கீழே பலர் வேலை செய்தனர். என் கருத்துக்கள் மதிக்கப்பட்டன. போர்க்குணம் உள்ள பெண் நீங்கள் என்று புகழாரம் தான் சூட்டினரே தவிர என் வேலையை யாரும் குறை சொன்னது கிடையாது. ஒரு பொறுப்பைக் கொடுத்தால் செய்து முடிப்பாள் என்ற அசையாத நம்பிக்கையும் எனக்குப் பின்னே இருக்கிறது. அது என் அதிஸ்டம் என்றே கூற வேண்டும். 

ஓர் திருமணத்தை நீங்கள் எப்படியாக வரையறை செய்கின்றீர்கள்? திருமணம் என்பது ஓர் அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் என்று சொல்கின்றார்களே? 

தமிழர் வாழ்வியலைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது எந்தக் காலத்திலும் ஒரு பாதுகாப்பான நிகழ்வாகவே இருந்திருப்பதாக எம்மனதில் பதிப்பிக்கப்பட்டு விட்டதனால் அதனை விட்டு வெளியில்வருவதும் சுலபமானது அல்ல. ஆனாலும் அதனால் ஒரு சிறந்த குடும்ப முறைமையும், உறவுகளிடையேயான ஒரு பிணைப்பும் பாதுகாப்பும் கூட இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது. எமது எதிர்காலச் சந்ததியை ஒரு முழுப் பரிணாமத்துடன் வளர்த்தெடுப்பதற்கும் இந்த குடும்ப முறைமை அவசியமானதுதான். 

ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் தொடர்ந்து வாழ்வது விபச்சாரமென்று அழைக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அப்படியாயின் திருமணத்தை விபச்சாரம் என்பதே அபத்தமானது. ஒருவனோ ஒருத்தியோ பலருடன் உறவுகொள்ளும் முறைமையைத் தடுப்பதற்காக உருவானதும் அதன் விளைவால் குடும்பத்திலும் இளையவர்களிடமும் ஏற்படும் மன அழுத்தத்தையும் விகாரத்தையும் தடுப்பதற்காக முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்டது எனினும் அனைத்து இனத்தவரிடையேயும் அந்த முறை இருப்பதிலிருந்து அது சமூகத்துக்கு நன்மையான விடயம் என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். வரைமுறையுடன் கூடிய ஒரு கட்டுப்பாட்டை வைத்து அதில் உறவுகளைப் பிணைத்து அதை இலகுவில் மீறாதபடி சட்டங்களையும் போட்டு வந்ததே திருமணபந்தம். அதுவும் இல்லாவிட்டால் தற்பொழுதுள்ள சூழலில் உலகமே தலைகீழாகிவிடும். 

எங்கள் சமூகத்தில் மாற்றுப்பால் இனத்தவரின் திருமணங்கள் மற்றும் அவர்களுடைய இருப்புகள் பற்றிய உங்கள் புரிதல்கள் எப்படியாக இருக்கின்றது? 

எமது சமூகத்தில் இலைமறை காயாக மாற்றுப்பால் உறவுகள் முன்பே இருந்திருக்கின்றனதான். நான் சிறுவயதாய் இருக்கும் போது என் அயலில் இரு ஆண்கள் செல்லும்போது "புருசனும் பெண்டிலும் போயினம்" என சில பெண்கள் நக்கலடித்துச் சிரிப்பார்கள். அப்போதெல்லாம் இருவரும் ஆண்கள்தானே. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று புரியாமல் பார்ப்பேன். கேட்கப் பயம். பின்னர் புலம்பெயர்ந்து வந்த பின்னால் தொலைக்காட்சிகளில், இணையங்களில் என்று வாசித்துத்தான் அவர்கள் பற்றிப் புரிந்துகொண்டது. இளந்தலைமுறையினருக்கு அதுபற்றிய தெளிவு நிறையவே இருப்பதாக என் மகளுடன் கதைத்தபோது புரிந்துகொண்டேன். ஆனாலும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏனெனில் எம் மனதில் சிறுவயதில் இதுபற்றிய தெளிவு விதைக்கப்படவில்லை என்பதும் சட்டரீதியாக்கப்படவில்லை என்பதும் கூடக் காரணமாக இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லையாயினும் சட்டம் அனுமதிப்பதனால் துணிவாகச் சேர்ந்து வாழ்வதும் திருமணம் செய்துகொள்வதும் அங்கீகரிக்கப்பட்ட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்வியலுக்கான சுதந்திரம் இருக்கின்றதுதானே. அது எம்மைப் பாதிக்காதவரை நாமும் அதுபற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை. 

இன்றுள்ள புலம்பெயர் வாழ்வியலில் சட்டப்படி திருமணம் செய்யாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக வாழ்வது சாதாரணமாகி வருகின்றது. இதுபற்றிய உங்கள் பார்வைதான் என்ன? 

இது ஒரு கவலைக்குரிய விடயம் தான் ஆயினும் எம்மால் மட்டுமல்ல யாராலும் எதுவும் செய்து தடுத்து நிறுத்திவிட முடியாத ஒரு நிலையாகும். முன்னர் கூட எமது சமுதாயதில் சட்டப்படி திருமணப் பதிவு செய்யாது கடைசிவரை சேர்ந்து வாழ்ந்து இறந்த எத்தனையோ தம்பதியர் இருந்தனர். அவர்களிடம் உண்மையான அன்பும் பரஸ்பர விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் தெளிவான சிந்தனையும் இருந்தன. ஆனால் தற்காலத்தில் எதையும் ஆழமாக நோக்காத தன்மை இருபாலாரிடமும் இருக்கிறது. சமுதாயத்தின்பால் ஒரு அலட்சியமும் மற்றவரை மதிக்காத தன்மையும் கூடவே இருப்பதனால் புலம்பெயர் தேசங்களில் இப்படிச் சேர்ந்து வாழும் முறை ஆரம்பித்துவிட்டது. ஆனால் முன்புபோல் அவர்கள் இறுதிவரை சேர்ந்திருக்கவும் போவதில்லை. பலருடன் சிற்சில காலம் சேர்ந்திருக்கும் வாழ்வோ அல்லது நிரந்தரமாகத் தனியாக இருந்துகொண்டு தேவை ஏற்படும் நேரங்களில் மட்டும் சேர்வதோ அன்றிப் பிரிவதோ என்று எங்கேயோ போய்க்கொண்டுதான் இருக்கிறது உலகம். 

ஆனால் ஒரு ஒழுங்கான வாழ்வியல் அமைப்பைக் கொண்ட குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் அவர்கள் பெற்றோரின் வாழ்வியல் முறையைப் பார்த்தே தம் வாழ்வையும் பெரும்பாலும் வகுத்துக் கொள்கின்றனர். தாயும் தந்தையும் பிரிந்து வாழும் குடும்பங்களில் யாருமே இப்படியான விடயத்தை எதிர்க்க முடிவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் அதன் நன்மை தீமைகளையும் பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் அலசும்போது நிச்சயமாக பிள்ளைகளுக்குத் தெளிவு ஏற்படும். 

ஆனாலும் இந்தக் காலத்தில் நாம் நினைப்பதோ எதிர்பார்பதோ எல்லாவற்றையும் மீறிச் சில காரியங்கள் சூழ்நிலைகளால் ஏற்பட்டுப் போகின்றன. அவற்றை யாருமே தடுக்கவும் முடிவதில்லை. 

நிவேதா உதயராஜனின் இலக்கிய அரசியல்தான் என்ன? 

எனக்கு இரண்டுமே முழுமையாகத் தெரியாது. அப்படியிருக்க இப்படிக் கேட்டால்? 




மலைகள் – இந்தியா. 

20 பங்குனி 2016

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம