Skip to main content

சர்வதேச மகளிர் தினமும் பெண்விடுதலையும் ஒரு பார்வை


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எனது மனதில் தோன்றிய சில எண்ணசிதறல்களைப் பகிரலாம் என எண்ணுகிறேன். முதலில் இந்த விடயத்தை அலச முதல் பெண் விடுதலை அல்லது பெண்ணியம் தொடர்பாக நான் நேர்காணல் செய்த புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் பதிவு செய்த கருத்துக்களைப் பார்வையிடலாம்.

000000000000000000000000000

" எங்கள் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச நாட்களுக்குமுன், அமெரிக்க இராணுவப் பிரிவில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும் அதிர்வடையச் செய்தன. இந்தப் பெண்களுக்கு மேலான பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால் பாலியல் சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டனர். 


மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண் என்ற காரணத்துக்காகப் பெண்கள் பலவழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில் பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு ஒரு மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும் தன்பாட்டில் கேட்பாரின்றிப் நடந்துகொண்டேயிருக்கின்றது. 

வெளியிலே பெண் விடுதலை, சமூக சீர்திருத்தங்கள், சாதியொழிப்பு என்று முழங்கிக்கொண்டே வீட்டில் தம் மனைவிமாரை அடக்கி அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு சிலரை எனக்கு நன்கு தெரியும். பொது வெளியில் வந்தியங்கும் பெண்கள் பற்றி இவர்களுக்கே மட்டமான அபிப்பிராயங்கள் இருப்பதை அவதானித்திருக்கின்றேன். 

பெரியார் போல பெண்விடுதலை பற்றி முழுதாகச் சிந்தித்து, மனம் திறந்து பேச நிறைய ஆண்கள் முன் வரவேண்டும். பெண்களின் போராட்ட வலிமை மிகப் பெரியது, ஆனால் இடறி விழுத்த ஆண்கள் பலர் மும்முரம் காட்டுவதுதான் மிகப் பெரிய இடைஞ்சல். அதையே பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு பெண்கள் அதிவேக முன்னேற்றம் அடைவதையும் நாளாந்தம் காண்கின்றோம்." 

புஸ்பராணி சிதம்பரி -பிரான்ஸ்


0000000000000000000000000 


"நான் எழுதத் தொடங்கிய எண்பதுகளில், அதன் தேவையும் முக்கியத்துவமும் பேசப்படுவது எவ்வளவு அவசியம் என்று கருதினேனோ, அதே பார்வையை நான் இன்றும் கொண்டிருக்கிறேன்." 


ஒளவை -கனடா 


0000000000000000000000000 


"பெண்ணியம் என்பது உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்கான சகல உரிமைகளையும் பெறுவதற்குப் போராடுவதும் அதற்காக உழைப்பதும் என்றும் கூறலாம். பெண்ணியம் என்ற சொல்லின் அர்த்தத்தைச் சிலவற்றுள் அடக்கிவிடமுடியாது. ஆனால் உலகம் முழுதும் தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி முதலாம் உலக நாட்டுப் பெண்கள் கூட எதோ ஒருவகையில் உரிமைகள் மறுக்கப்பட்டவராய்த்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் ஈழத்துப் பெண்களுக்குமே அவர்கள் உரிமைகள் தொடர்பாக பாரிய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் வாழும் சமூகம், சூழல் என்பனவும் அவற்றைத் தீர்மானிக்கின்றன. நான் புலம்பெயர்ந்து வந்த பின்னர்தான் ‘பெண்ணியம்’ என்னும் சொல்லைக் கேள்விப்பட்டேன். 


என் குடும்பத்தில் அம்மாவுக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது, எனக்குக் கூட எமது சுதந்திரத்தின் வரையறை என்ன என்பது தொடர்பான குழப்பம் இருந்தது. நாமே எமது சுதந்திரம் பற்றி அறியாது ஆண்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். அது அன்பின் காரணமாக, குடும்ப நன்மை காரணமாக பெரிதுபடுத்தப்படாது எமது அகந்தையை ஓரத்தில் வைத்துவிட்டு நாமே நம்மை அடக்கிக்கொள்ளுதல். இதனால் தீமை இல்லை என்னும் திருப்தியுடன் அமைதிகாத்தலை நான் பல குடும்பங்களில் காண நேர்ந்திருக்கிறது. அதை மீறி சுதந்திரம் என்று மல்லுக்கட்டும் போது குடும்பங்கள் பிளவுபடவும், குழந்தைகள் குடும்பச் சூழலில் தாய் தந்தை இருவரின் முழு அரவணைப்பில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுப் போகும். இதன் காரணமாகவே பலர் தெரிந்தும் தெரியாமலும் ஆண்களின் அடக்குமுறைக்குள் அடைபட்டும் இருக்க நேர்கிறது. 

புலம்பெயர் மண்ணில் புகைப் பிடிப்பது, மதுவருந்துவது போன்றவையும் பெண்களுக்குரிய செயல்களாக சில பெண்ணிய வாதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆண் என்றாலும் பெண் என்றாலும் இவற்றைச் செய்வது அவசியமற்றது. இக்காலத்தில் பல தவறான செயல்கள் பலராலும் சரியென நியாயப்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் சுய பொருளாதார வளமும் சமூக மேம்பாட்டுச் சிந்தனை அற்ற எண்ணமுமே காரணம். 

எனக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதனால் என்னால் மற்றவரின் அடக்குமுறைகள் பற்றிப் புரிந்துகொள்ள முடியவில்லையோ எனப் பல நாட்கள் எண்ணியுள்ளேன். புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. எமது சுதந்திரத்தை நாமேதான் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர எமக்காக மற்றவர்கள் எப்படிப் பெறுத்தர முடியும்? ஒரு சமூகத்துக்குப் பொதுவானவற்றை வேண்டுமானால் குழுவாக நின்று பெற்றுக்கொள்ளலாம். தேவையான இடங்களில் பெண்ணியம் பேசாமலேயே எத்தனையோ மேம்படுத்தல்களைப் பெண்களுக்குச் செய்ய முடியும். புலம்பெயர் தேசத்தில் இதுவரை பெண்ணியம் பேசும் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக எதைச் செய்து சாதித்துள்ளனர். பெண்களுக்கான அடக்குமுறைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பங்களிலுமே இருக்கின்றது. அப்படியிருக்க இவர்களால் இவர்கள் குழுவில் அதிக பெண்களை உள்வாங்க முடியாமைக்குக் காரணம் என்ன? அதைவிடுத்து தொட்டதற்கெல்லாம் பெண்ணியம் என்று பேசிக்கொண்டு கூட்டம் போடும் பெண்ணியவாதிகளை எனக்குப் பிடிப்பதே இல்லை. " 

நிவேதா உதயராஜன் -பெரிய பிரித்தானியா 

00000000000000000000000 


" சிலகாலமாக இந்தசொல் எனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண் என்பவள் சுதந்திரமாக, ஒரு மனுசியாக அவள் அவளாக, எவ்வித குற்ற உணர்வும் இன்றி தன்னையும் தன் சார்ந்த விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையுண்டு. இது தொடர்பாக பல கவிதைகள் நான் எழுதியிருக்கிறேன். சில அரங்கப் படைப்புகளையும் கொண்டுந்திருக்கிறேன். அதிதீவிரமான போக்கு என்னுடையதில்ல என்றாலும் பெண்ணியக் கருத்துக்களைக் பேசுவதாலேயே ஒருசிலரால் தொடர்ந்தும் கேலிக்கும், சொற்தாக்குதலுக்கும் ஆளாகவேண்டியிருக்கிறது. 


ஆண் செய்வதையெல்லாம் ஒரு பெண் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் அல்ல நான். அதன் தேவையுமில்லை. ஆண் செய்ய முடியாததைப் பெண் செய்பவள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்த ஒரு இடத்திலும் சமமானவர்கள் ஆகமுடியாது. யாரும் ஒருவருக்கொருவர் மேலானவர்களோ அல்லது கீழானவர்களோ ஆகமுடியாது. நாங்கள் வேறு வேறானவர்கள். பெண்ணியம் என்பது பெண்ணானவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே அவளை முழுமனதோடு சமூகம் எற்றுகொள்ள வைப்பதே என்னைப் பொறுத்த வரையில் பெண்ணியம். 

பெண் என்பவள் உடல் சார்ந்தும், உடமை சார்ந்தும் இருக்கும் பார்வை இல்லாமற்போகாது. அதை கடந்து போக நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் துணிவு வேண்டும். சிலர் நினைப்பது போல, ஆண்களுக்கு நிகராக மது அருந்துவதோ, ஆண்களைப் போல நடை, உடை பாவனை செய்வதோ, இன்னொரு மனிதன் மீது அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதோ அல்லது பெண்கள் தம் அழகு பொருட்களை நிராகரிப்பதோ, உடைக்குறைப்போ, வாகனம் ஓட்டுவதோ, சமயல் வேலைகளை பிரித்துக்கொடுப்பதோ அல்லது வலுகட்டயமாக கவிதைகளில் உடல்சார்ந்த சொற்களை எழுதுவதோ அல்ல பெண்ணியம். 

எமது சமூகத்தில் ஆண்கள் அளவிற்கு பெண்களின் சிந்தனைப்போக்கும் ஒரே போலதான் இருக்கிறது. பலசமயம் பெண்கள்தான் தமக்குத் தாமே எதிரிகளாக இருந்துவிடுகின்றனர். பெண் குறைவானவளாகவே இருக்கவேண்டும், உடல்சார்ந்து தன்னை ஒடுக்கிக்கொள்ள வேண்டும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவள்தான் தூக்கிநிறுத்தவேண்டும் என்ற சிந்தனை இருக்கும்வரை, பெண்ணிய சிந்தனைகளையுடைய பெண்களும் சற்று கேவலமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பது எனது சொந்த அனுபவம். 

இயற்கையை தரிசிக்கக் கற்றுக்கொண்டாலே பாதி பிரச்சனைமுடிந்தது. காதலை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டால் மீதி பிரச்சனையும் முடிந்துவிடும். இருந்தாலும் எனது தங்கன்மாமா எனக்குச் சொல்வது போல இதையெல்லாம் தாண்டி சமூகத்தில் வர்க்கப்பிரச்சனை ஒழியாமல் பெண்ணியச்சிந்தனை சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது." 

கவிதா லக்ஷ்மி -

நோர்வே 


0000000000000000000000000



" என்னளவில் பெண் இன்னும் விடுதலை அடையவில்லை என்றுதான் தோன்றுகின்றது. தளங்கள் மாறுபடுகின்றனவே தவிர அடிமைப்படுத்தல்கள் தொடர்கின்றன என்றும் தோன்றுகின்றது. இதற்கு ஆணாதிக்கம் காரணம் என்று சொல்லமாட்டேன். பெண் போராட்டங்கள் தொடர்பான தவறான புரிதல்கள், பார்வைகள், ‘பெண் விடுதலை’ என்கின்ற பெயரில் ஆண்கள் செய்கின்ற தவறுகளை ஏட்டிக்கு போட்டியாக செய்தல் போன்றவையும் காரணமாகின்றன என்பது என் கருத்து. 


முன்னர் வீட்டிற்குள் பெண்ணானவள் சிசுவாக, பருவப்பெண்ணாக, மனைவியாக வன்முறைக்குட்படுத்தப்பட்டாள். பின்னர் கல்விக்காக போராடினாள். ஊதியத்திற்காக போராடினாள். ஆனால் இன்றோ பகிரங்கமான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுகின்றாள். அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்றாள். இவ்வாறாக போராட பிறந்த பாலினமாக இருக்கின்றாள். கருவறையில் கருக்கொள்ள போராடியவள் இன்று உலக அரங்கில் தன்னை நிறுத்திக்கொள்ள போராடுகின்றாள். இங்கு கருவறை, வீடு, வீதி என தளங்கள் தான் மாறுபடுகின்றனவே தவிர போராட்டமென்பது தொடர்ந்துகொண்டு தானிருக்கின்றது." 

கேஷாயினி எட்மெண்ட் -இலங்கை 

000000000000000000

தாயகத்திலும் சரி சர்வதேச அளவிலும் சரி பெண்விடுதலை அல்லது இருப்பு மேலே தரப்பட்ட எமது இலக்கிய ஆளுமைகளின் குற்றுகளின் படியே உள்ளது என்பது தெளிவாகின்றது. அதேவேளையில் சர்வதேச மகளிர் தினம் எப்படியாக உருவாக்கிற்று என்பதன் வரலாற்றை உற்று நோக்கினால் , சர்வதேச மகளிர் தினத்தின் மூலவேர் பிரான்ஸ் -ஐச் சேர்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் என்ற கோசத்துடன் பிரெஞ் புரட்சி முன்னெடுக்கப்பட்ட பொழுது பெண்களும் ஆண்களுக்குரிய அதே உரிமைகளான வேலைக்கேற்ற சம்பளம், எட்டு மணித்தியால வேலை, வாக்குரிமை, பெண்ணடிமைத்தனத்தில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தாக்கம் ஐரோப்பாவெங்கும் பரவியது. பலவருடங்களாக தொடர்போராட்டமாக நடைபெற்ற இந்த போராட்டம் அப்போதைய மன்னரான லூயிஸ் பிளாங்க் மூலம் பெண்களின் அரசவை ஆலோசனைக்குழுக்களில் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குரிமை போன்ற தீர்வுகளால் 08 மார்ச் 1848 ஆம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சமகாலத்தில் மகளிர் விடுதலை உண்மையில் மகளிருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே வலியான விடையாகின்றது. எவ்வளவுதான் அறிவிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து நின்றாலும், அவர்களை உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டல், அங்கீகார சுரண்டல் போன்றவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை அன்றாடம் வருகின்ற செய்திகழும் புள்ளி விபரங்களும் உறுதி செய்துகொண்டுதான் இருக்கின்றன. தந்தை வழி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஆசிய சமூகம் இந்த விடயங்களில் தீவிரப்போக்கை கொண்டிருக்கின்றது. என்னதான் பாரதியும் பெரியாரும் பெண் விடுதலை தொடர்பாகத் தொண்டைகிழியக்கத்தினாலும் ஆண் சமூகத்தின் உளப்பாங்கில் பெரிய மாற்றங்கள் வரவில்லை.

ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸிலும் இதே நிலை தான் தொடர்கின்றது. குடும்ப வன்முறைகளும் சிறுவர் பாலியல் வன்புணர்வுகளும் அதிகரித்த படியே இருக்கின்றன. பிரான்ஸின் குடும்ப வன்முறை பற்றி சமீபத்தைய புள்ளிவிபரங்கள் 10 நாட்களுக்கு ஒரு பெண் இறப்பதாக சொல்கின்றது. இந்தக்குடும்ப வன்முறைகள் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் அதிகரித்துள்ளதாக சொல்கின்றது. என்னைப்பொறுத்தவரை யில் வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும், மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது புலம்பெயர் தேசத்து ஆசிய சமூகத்தில் மாறுகின்றதோ அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம்.

நீண்ட பெரும் போரை சந்தித்த தாயகத்தில் கூட பெண்களின் நிலை ஆரோக்கியமானதாக இல்லை. ஒருகாலத்தில் போரை முன்னெடுத்த பெண் போராளிகளை தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமூகம்ததான் இன்று அவர்களை அனாதைகளாகத் தெருவில் விட்டு பாலியல் தொழிலார்களாகப் பார்க்கின்றது. ஆக மொத்தத்தில் இந்தப்போரானது எமது பண்பாட்டுத்தளத்தில் பாரிய மாற்றத்தினைக் கொண்டுவரவில்லை. போர் நடைபெற்ற பொழுதில் மகளிர் சகல மட்டத்திலும் விடுதலையடைந்து இருந்தார்களே என்ற கேள்விக்கு அது ஓர் சந்தர்ப்பவாத முன்னெடுப்பாகவே என்னால் கருதக் கூடியதாக இருக்கின்றது.

பெண்களின் விடுதலைக்கு உண்மையில் ஆண்கள் மட்டுமா தடையாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பங்குடன் குறிப்பிட்டளவு பெண்களும் தடைகளாக இருக்கின்றார்கள் என்பேன். நான் செய்த நேர்காணல்களில் பல பெண் இலக்கிய ஆளுமைகள் பெண்விடுதலைக்கு பெண்களே முக்கிய எதிரிகளாக இருக்கின்றார்கள் என்று பதிவு செய்துள்ளார்கள். விடுதலை அல்லது சுதந்திரம் என்பது யாசித்துப் பெறுவதல்ல மாறாக அது உளரீதியிலான மாற்றங்களுடன் எதிர்தரப்புக்கு வழங்கப்படுவது. எங்களுடன் கூட வருகின்ற பெண்ணை ஓர் சக உயிரியாக அவளுடைய உணர்வுகளை மதிக்கின்ற உளவளத்தை ஆண்தரப்பு ஏற்படுத்த வேண்டும். ஓர் குடும்பத்தில் அம்மா என்ற பெண்ணாலேயே அந்தக்குடும்ப அங்கத்தவர்கள் வளர்க்கப்படுகின்றார்கள். பாலியியல் அவமதிப்புகள் அல்லது வேறுபாடுகளை அம்மா என்ற கதாபாத்திரம் தூக்கி உடைக்குமானால் பெண்ணானவள் சுதந்திரமாக உலாவருவாள்.அவள் வருங்காலங்களில் அவளது இருப்பு அங்கீகாரம் போன்றவற்றில் விடுதலையடைந்து இருப்பாள்.






கோமகன்-பிரான்ஸ் 

29பங்குனி 2018



Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...