Skip to main content

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-புஷ்பராணி சிதம்பரி




ஈழத்தின் வடபுலத்தில் மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும் புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TELO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப் போராட்ட வரலாறில் முதன் முதலாகச் சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில் பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் இவர் ஆயுதப் போராட்டத்தினாலேயே எமக்குத் தீர்வு உண்டு என்று அப்பொழுதே எண்ணத்தொடங்கியவர். அண்மையில் இவரால் தமிழ் எழுத்துப் பரப்புக்கு "அகாலம் " என்ற நூல் எமக்கு கிடைத்துள்ளது.

கோமகன்

000000000000000000000000000000

உங்களைப்பற்றி சிறிது சொல்லுங்கள் ......?


என்னைப்பற்றிச் சொல்லப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகச் சொல்லவேண்டுமென்றால், மற்றவர்களுக்காக எதையும் சமரசம் செய்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இது எனது பிறவிக்குணம் என்றே நினைக்கின்றேன். நான் படிக்கும் காலத்திலேயே இதை என்னால் உணரமுடிந்தது. முகத்துக்காக எதையும் செய்வதையும்,பேசுவதையும் வெறுக்கிறேன். நான் நானாக இருப்பதையே விரும்புகின்றேன்.

உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?

என் இளமைக்காலம் அதியற்புதமானது. மூன்று அண்ணன்களுக்குப்பின் மூத்த பெண் பிள்ளையாகப் பிறந்ததால் ஒரு மகாராணிபோலவே சீராட்டிவளர்க்கப்பட்டேன், வளர்ந்தேன். வீடு நிறையச் சகோதர சகோதரிகளுடன் கலகலப்பாகவே எங்கள்வீடு எப்போதுமிருக்கும். எமது இரசனைகள் ஒன்று போலவே இருந்ததால் நண்பர்கள் போலவே உல்லாசமாக வாழ்ந்தோம். அரசியல் எம்வாழ்வில் குறுக்கிடும் வரை கவலைகள் ஏதும் நெருங்கிட அஞ்சும் மகிழ்ச்சியின் வடிவமாகவே நாம் வாழ்ந்தோம்.

எனது பிறந்த ஊரான மயிலிட்டி மீன்பிடிப்போர் சமூகத்தால் நிறைந்தது. எமது அயலவர் மத்தியில் எனது குடும்பம் மட்டும் தனி நளக்குடியாக இருந்ததால் சிலரோடு போராடியே வாழவேண்டியிருந்தது. யாருக்கும் தலைவணங்காத போராட்டக் குணம் எமது இரத்தத்திலேயே உறைந்திருந்ததால் எதுவுமே எமக்குப் பெரிதாகத் தெரியவில்லை. எனது தந்தையும், இரண்டு அண்ணன்களும் புகையிரததிணைக்களத்தில் உத்தியோகம் பார்த்ததாலும், எமக்கென்று வீடுவாசல்காணியெல்லாம் இருந்ததாலும் எம்மை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. எம்மை எதிர்த்தவர்களோடு மல்லுக்கட்டுவதிலும் நாம் பின்நின்றது கிடையாது. உயிர் ஒரு முறைதான்போகும் என்பதை என்பெற்றோரிடம் இருந்து மனதில் பதித்து வளர்ந்தோம்..

எழுத்து எப்படியாக உங்களிடம் சரணடைந்தது?

மிகச்சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எங்கு யார் வீட்டுக்குப் போனாலும் என் கண்கள் புத்தகங்களையேதேடும் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடங்கள் செய்து முடித்தவுடன், புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப்புத்தகங்கள் படிப்பேன்.படிக்கிறபிள்ளை கதைப்புத்தகம் படிக்கக் கூடாது என்பது வீட்டில் எழுதாத சட்டம். மிக வேகமாகப் புத்தகங்களைப் படித்து முடித்து விடுவேன். என்வாசிப்புப் பசி அகோரமாயிருந்ததால் கிடைப்பவற்றையெல்லாம் படித்தேன். கொஞ்சம் வளர்ந்தபின் என் அண்ணன் தியாகராஜாவே நிறையப் புத்தகங்கள் கொண்டுவந்து தருவார். புத்தகங்களைப் படித்துவிட்டுப் பத்திரமாகத் திருப்பிக்கொடுப்பதால் எனக்குத் தொடர்ந்து புத்தகங்கள் இரவலாகக் கிடைத்துக்கொண்டேயிருந்தன.

வாண்டுமாமாவிலிருந்து, கல்கி, மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், அகிலன், புதுமைப்பித்தன் என்று எல்லோரின் நூல்களையும் படித்தேன். எனது சகோதரன் புஷ்பராஜா ஜெயகாந்தனின் நூல்களை அறிமுகப்படுத்தினார். அதன்பின் ஜெயகாந்தனின் எழுத்துக்களால் வசீகரிக்கப் பட்டேன். வாசிப்பு என் மூச்சாகிவிட்டது. எந்த இரைச்சலின் மத்தியிலும் என்னால் வாசிக்க முடிகின்றது. இந்த வாசிப்புத்தான் என்னையறியாமலே என்னை எழுதத்தூண்டியது.

உங்கள் ஆரம்பகாலப் புலப்பெயர்வு அனுபவங்கள் எப்படியாக இருந்தன ? அப்பொழுது ஓர் பெண்ணாக எந்தவிதமான சவால்களை சந்தித்தீர்கள்?

ஆரம்பகாலப் புலம்பெயர் அனுபவங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரித்தான் இருந்திருக்கும் என்று நம்புகின்றேன். பிறந்துவளர்ந்து கொண்டாடிய சொந்தமண்ணை விட்டுப்பிரிந்து பிரான்சுக்கு வந்தபோது அடைந்த துயரத்தையும், இந்தமண்ணோடும் இதன்இயல்புகளோடும் உறவாடப் பின்வாங்கிய மனவுணர்வுகளை எழுத்துக்களில் வர்ணிப்பது கடினம். வந்தபுதிதில் தூக்கம்மறந்து, துயர்கொண்டு அழுத நாட்களை எப்படி மறக்கமுடியும்? ஊரைத் தொலைத்து, உறவுகளைப் பிரிந்து. இன்னும் எத்தனையை நினைத்து அழுதிருக்கின்றேன். இன்னும் அவை கனவுகளாக என்னைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

ஒருபெண்ணாக, என்கணவனாக இருந்தவனின் குரூரகுணங்களைச் சமாளிப்பதுதான், அப்போது எனக்குப் பெரும்சவாலாகவிருந்தது. புலம்பெயர்ந்த இடத்தில் பெண்ணின் இனசனத்தால், தன்னை எதுவும் செய்யமுடியாது என்ற ஆணவம் கொண்டு மனைவிமாரைக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் இன்னும் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

இளைஞர் பேரவையினுடனான தொடர்புகள் எப்படியாக ஏற்பட்டது?

தமிழ் இளைஞர்பேரவையை ஆரம்பிக்கும் ஏற்பாடுகளில் என்சகோதரன் புஷ்பராஜாவும் , அவரது தோழர்களும் முனைந்திருந்த போது, என்னிடம் எல்லா விபரங்களையும் சொல்லுவார். வரதராஜப் பெருமாள், பிரான்சிஸ் (கி.பி. அரவிந்தன்) என்று அனைத்துப் பெயர்களும் அவர்களைச் சந்திப்பதற்கு முன்னரே புஷ்பராஜா மூலம் எனக்குத்தெரிந்திருந்தது. பத்மநாபாவை எனக்கு ஏற்கனவே தெரியும். எனது அதிதீவிர ஆர்வம் இளைஞர்பேரவையுடன் என்னையும் ஒன்றாக இணைத்து, அதில் ஒருத்தியாக நானும் இயங்கினேன்.

அன்றைய காலகட்டத்தில் உங்கள் அரசியல் முன்னெடுப்புகள் எப்படியாக இருந்தன?

அரசியல் வேலைத்திட்டங்கள் மூலம் மக்களைச்சந்தித்து அவர்கள் பலத்தைத் திரட்டி அதன்பின்னர், ஆயுதப் போராட்டத்தைக் கட்டிஎழுப்புவதே இளைஞர்பேரவையின் நோக்கமாயிருந்தது. மக்களோடு உரையாடிக் கருத்தரங்குகள் வைத்து ஊரூராக அலைந்தோம், இளைஞர்களை அவர்களின் விருப்போடு எம்மோடு இணைத்தோம். யாரையும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தது கிடையாது. இளைஞர்கள் என்ற பதத்துக்குள் பெண்களும் அடங்குகின்றனர்.

அப்பொழுது உங்களுடன் யார் யார் எல்லாம் ஒன்றிணைந்தார்கள்?

இதில் பெண்களை முன்நிலைப்படுத்தவே விரும்புகின்றேன். பெண்கள் பொதுவெளியில் வந்து இயங்கப் பெரிதும் தயங்கிய காலமது. கல்யாணி, பத்மினி, டொரத்தி, திலகமணி, திலகவதி, ஊர்மிளா, ஆனந்தராணி (இவர்கள் மூவரும் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் இயங்கியவர்கள்.) சாந்த, கனகராண, தேவாஅக்கா, பகவதி, கீதாஞ்சலி, சங்கானையம்மா, நவம்அன்ரி, குலம்அக்கா, பாப்பாஅக்கா, செல்வராணி, போன்று இன்னும் பலபெண்கள்.

இனி ஆண்களைப் பார்ப்போம். புஷ்பராஜா, வரதராஜப் பெருமாள், பிரான்சிஸ், பத்மநாபா, சந்திரமோகன், திருஞானம், பீட்டர்பொன்கலன், கமிலஸ், நடேசானந்தம், உமா மகேஸ்வரன், ரகுபதி பாலசிறீதரன்,சந்திரமோகன், திருஞானம், அன்னலிங்கம் என்று பட்டியல் நீள்கின்றது. பின்நாட்களில் இவர்களில் பலர் பல்வேறு திசைகளில் பயணித்து விட்டனர்.

மறைந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனான தொடர்புகள் எப்படியாக ஏற்பட்டன?

மங்கையற்கரசியக்காவை நிறையக் கூட் டங்களில் முதலில் பார்த்திருக்கின்றேன். முதன்முதலாக யாழ் முற்றவெளியில் தமிழர் கூட் டணியினரால் நடத்தப்பட்ட உண்ணாவிரத நிகழ்வின் போதுதான் அவருடன் அருகமர்ந்து பேசும் வாய்ப்புக்கிடைத்தது. பின்னர் எங்கள் தொடர்புகள் நெருக்கமாயின. அவருடன் பல மேடைகளில் ஒன்றாகப் பேசியிருக்கிறேன். பின்நாட்களில் எமக்கும் (இளைஞர் பேரவைக்கும்) கூட்டணியினருக்குமான முரண் பாடுகள், வாக்குவாதங்கள் கசப்புநிலையை உருவாக்கினாலும் எதிரிகளாக நாம் மாறியது கிடையாது. கொலைவெறியில் யாரும் அலைந்ததுமில்லை.

புலோலி வங்கிக்கொள்ளை சம்பந்தமாக தமிழ்ஈழவிடுதலை இயக்கமாக (TLO ) அப்போதிருந்த நாம் கைது செய்யப்பட்டுச் சிறையிருந்தபோது, எமக்காக வாதாடிய சிவசிதம்பரம், கரிகாலன் ஆகியோரை ஏற்பாடு செய்தவர்கள் திரு.அமிர்தலிங்கம் அவர்களும், மங்கையர்க்கரசியக்காவுமே.

எனது குடும்பத்தினருடன் அவர் இறக்கும்வரை அன்பாகவே இருந்தார். எனது சகோதரன் புஷ்பராஜாவின் 10ஆவது நினைவுதினக் கூட் டத்தில் மங்கையர்க்கரசி அக்காவும் பேசுவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன் மரணம் அவரைச் சூழ்ந்துவிட் டது. இலண்டனில் நடந்த அவரின் இறுதிநிகழ்வுகளிலும் கலந்து கொண்டேன்.

எனது அறிவுக்கு எட்டியவகையில்,தமிழர் தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகர்த்தாக்களில் நீங்களும் இன்னும் பலபெண்களும் இருந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கும் முன்பே 1969 ஆம் ஆண்டில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் கைக்குண்டு வீசிய கம்யூனிஸ் புரட்சிகர அமைப்பின் பெண்போராளி செல்லக்கிளியும், சங்கானையை சேர்ந்த மகேஸ்வரியும் முதல் பெண்போராளிகளாக இருந்திருக்கின்றனர் என்று பத்திரிகைக் குறிப்பொன்றின் மூலம் அறிய முடிந்தது. இது பற்றி .........?

1969 ம் ஆண்டு மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலில் கைக்குண்டு வீசிய கம்யூனிஸ்ட் புரட்சிகர அமைப்பின் பெண்போராளிகள் செல்லக்கிளியும், மகேஸ்வரியும் சாதியத்துக்கு எதிராகப் போராடியவர்கள். நாம் தேசிய இனப்பிரச்னைக்காகவே போராடியவர்கள். அவர்களின் நோக்கமும் , எமது கொள்கைகளும் ஒன்றல்ல. அவர்களோடு எங்களை ஒன்றாகக் கலந்து குழப்பாதீர்கள். குறிப்பாகத் தேசிய இனப்பிரச்சனைதான் எம்முன்னே கூர்மையாகத் தெரிந்தது. இனவிடுதலையூடாக சாதியப் பிரச்சினை உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒழிக்கலாம் என்று கனவு கண்டோம், நம்பினோம்.

இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படுவோர் நுழைவது கடுமையாகக் கடைபிடிக்கப்பட்ட காலமது. இப்படியான கோவில்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற என்தந்தையின் கருத்தை என்வீட்டில் எல்லோரும் பின்பற்றினோம். உணவுவிடுதிகளில் வெளியில் நின்று சாப்பிடுவதையும், கிளாசில் தேநீர் அருந்துவது போன்றவற்றையும் என்குடும்பத்தார் கடுமையாக நிராகரித்தனர். இதுவே ஒருவிததீண்டாமை ஒழிப்பு இயக்கம் போன்றதுதான். சாதிவெறிபிடித்த இந்துமதக் கொள்கைகளை அடியோடு வெறுத்து வெறுத்தே கடவுள் மறுப்புக்கொள்கை என்னை முழுதாக ஆட்கொண்டு விட்டது.

உங்கள் சிறை அனுபவம் எப்படியாக இருந்தது?

என் சிறையனுபவம் மறக்கமுடியாதது. யாழ் கிங்ஸ்ஹவுசில் வைத்து நடந்த பயங்கரச் சித்திரவதைப் படலங்கள் முடிந்தபின் கொழும்பு வெலிக்கடைச்சிறைக்கு அனுப்பப்பட்டோம். பலதரப்பட்ட பெண்களோடு பழகும் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அவை இனிமையான பரவச நினைவுகள். இன,மத,மொழி கலந்த உன்னதமான சூழலை அங்குதான் கண்டேன். திருடியவர்கள், பாலியல்தொழிலாளிகள், கொலைசெய்தவர்கள், அரசாங்கமோசடிகள் செய்தவர்கள் என்று பலவிதமான பெண்கள் அங்கிருந்தார்கள். சிலர் தண்டனை பெற்றவர்கள், வேறுசிலர் விசாரணைமுடியாத விளக்கமறியல் கைதிகள். இதில் நிறையப்பேர் பிணையெடுக்க ஆளும், பணமுமின்றி வருடக்கணக்காக வாடியவர்கள். இது மிகப்பெரியசோகமாகும்.

எங்களைப் போலவே அரசியல்கைதிகளாகவிருந்த புத்தகோறளை சந்திராபெரேரா, ரோகிணி, கீதாஞ்சலி, மோனிக்கா, சுமணாநங்கி ஆகியோரும் அரசியல் தடுப்புக்காவல் கைதிகளுக்கென்று ஒதுக்கப்பட் ட நீண்ட வரிசை கொண்டஅறைகளில் (செல்) எங்களோடு பக்கமாக இருந்தனர். இவர்களோடு தான் நிறையப் பழகினோம். அப்போது என்னோடும், கல்யாணியோடும் என்தங்கை ஜீவரட்ணராணியும் இருந்தாள். அவள் மூன்று மாதங்களின்பின் விடுதலை செய்யப் பட்டாள். நானும் , கல்யாணியும் தொடர்ந்திருந்தோம். மேலே குறிப்பிட்ட சேகுவேரா இயக்கத்தைச் சேர்ந்த சிங்களத் தோழிகளின் ஆழமான அன்பை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை. இதுபற்றியெல்லாம் விரிவாக என் ''அகாலம்''நூலில் குறிப்பிட்டுள்ளேன். இவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா என்ற ஏக்கம் நெஞ்சைத் துளைக்கின்றது. இவர்கள் எல்லோருமே என் மனதிலே இன்னும் நீடிக்கின்றனர்.

சிறைச்சூழலில் வாசிப்பது, எழுதுவது போன்றவற்றுக்கு இடையூறற்ற தெளிவான இடம் இருந்தது. நிறைய வாசிக்கவும் எழுதவும் முடிந்தது. சிறைப்பிரிவின் தலைமையதிகாரி சைமன்சில்வாவின் அன்புமிகுந்த முயற்சியால் தமிழ்நூல்களும், பத்திரிகைகளும் தாராளமாகக் கிடைத்தன. சிங்கள இனத்தவரான இந்த அதிகாரியின் அன்பும், கனிவும் மனிதாபிமானமும் காலத்துக்கும் மறக்கமுடியாது. இவரைப் பற்றி அப்போது ஆண்கள்பிரிவில் சிறையிருந்த கவிஞர் காசியானந்தன் புகழ்ந்து கவிதை பாடியிருக்கின்றார். அரசியல் கைதிகளான எங்களுக்கு விசேட உணவுகளே (பால் ,பழம் உட்பட) வழங்கப்பட்டன. இந்தச் சிறைவாழ்க்கையை எனக்குக்கிடைத்த பொன்னான ஞாபகங்களோடு பொத்தி வைத்திருக்கின்றேன்.

விமர்சனங்களுக்கப்பால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

தமிழ்ஈழ விடுதலைப் புலிப் பெண்போராளிகள் மீதான என்பார்வை ஒருபுறம் இருக்கட்டும். எமது தமிழ்ச் சமூகத்தின் நோக்கு எத்தகையது என்பது எனக்குத் தெரியும். தம்மை முழுதாக அர்ப்பணித்துப் போராட முன் வந்த பெண்களை எப்படியெல்லாம் தூற்றி வசை பாடுவார்கள் என்பதும் அறிந்தவள் நான். இங்கும் எம் கேடுகெட்ட சமூகத்தின் பாலியல் கண்ணோட்டம் தான் முன்னுக்கு நிற்கும். உயிர் தப்பி இன்று வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் பழைய போராளிப் பெண்களை மதித்துக் கைகூப்புவோர் இங்கு எவருமில்லை. முன்னாள் ஆண்போராளிகளும் இதில் அடங்குவர். எந்த இயக்கத்துக்காகப் போராடியவர்கள் என்றாலும் அந்த வீராங்கனைகள் என்றும் வணக்கத்துக்கு உரியவர்களே. அவர்கள் உன்னதமானவர்கள்.

"அகாலம் " எழுதவேண்டிய அத்தியாவசியம் எப்படியாக ஏற்பட்டது?

எனது சகோதரனின் ,''ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் ''நூல் வந்தபின் பலரும் என்னிடம், எனது அரசியல் அனுபவங்களையும் எழுதும்படி தூண்டிக் கொண்டேயிருந்தனர். அதில் ஷோபாசக்தி, அசோக், விஜி, எனதுதங்கை நவரட்ணராணி, எனதுதம்பி வரதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எமது போராட்ட வரலாறுகளும், ஆரம்பப் போராளிகளும் பின்னாளில் வந்தவர்களால் மறைக்கப்பட்டதும் இன்னோர் முக்கிய காரணம். எனக்குத் தெரிந்தவற்றையும், என்னோடு இயங்கியவர்கள், என்அனுபவங்கள் என்று ஓரளவு எழுதியுள்ளேன். இன்னும் எழுத எவ்வளவோ இருக்கு.

‘அகாலத்தின்’ பின் அல்லது முன் உங்கள் எழுத்துக்கள் என்ன காரணத்துக்காக ஆவணப்படுத்தப்படவில்லை?

ஊரில் இருக்கும் போது நிறைய எழுதியிருக்கின்றேன். எழுதிய எல்லாவற்றையும் அச்சில் பதிக்கும் வாய்ப்புக்களோ, அறிமுகங்களோ அப்போது எனக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. சுதந்திரன் ஆசியர் கோவை மகேசனின் பழக்கம் கூட்டங்களில் கண்டு கிடைத்ததால் என்கட்டுரைகள் ‘மலரரசி' என்ற பெயரில் சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகின. ‘செய்தி’ , ‘லண்டன்முரசு’ போன்றவற்றிலும் இலங்கை வானொலியிலும் என்படைப்புக்கள் இடம்பெற்றன.

திருமண வாழ்க்கையில் ஏற்பட் ட மனவுளைச்சலால் என்எழுத்துக்கள் இருபது வருடங்களுக்கு மேல் நின்றுவிட்டன. இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். இந்த நாட்டின் இயந்திர ஓட்ட வாழ்க்கையில் நின்று ஆறஅமர எழுதுவது கொஞ்சம் சிரமமாயிருக்கின்றது. ஆனாலும், சிறு கதைகள், கட்டுரைகள், புத்தக மதிப்பீடுகள் என்று வெளிவந்திருக்கின்றன. இப்போது என்கதையின் ஒரு பகுதியை எழுதிக் கொண்டிருக்கின்றேன். மனதுக்குள் நிறைய எழுதுவதற்கு ஓடிக்கொண்டேயிருக்கின்றன. நேரத்தை விரட்டி எழுத வேண்டும். மேலும், பெரிய ஆய்வாளர், கட்டுரையாளர் மு. நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' மட்டும் தானே நூலாக வெளி வந்திருக்கின்றது. நிறைய நூல்கள் வெளியிடாததால் அவரது எழுத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? என் எழுத்துக்கள் மீது எப்பொழுதும் எனக்கு நம்பிக்கையுண்டு.

சமகால இலக்கியம் அல்லது எழுத்துப்பரப்பு பற்றி ...... ?

அநேகமானோர் இங்கு எழுதுபவர்களை ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்தோ, பாராட்டிடவோ மனமில்லாதோர்தான். இலக்கியக் குழுமங்களிடையே நன்றாக எழுதுவோரையும் முடங்கி மறையும்படி பொறாமையும், வெறுப்பும் கோலோச்சுகின்றது. ஒற்றுமையைப் பற்றி எடுத்துரைக்கத் தேவையில்லை. இலங்கையில் சரி, புகலிடத்தில் சரி யாருக்காவது விருதுகள் கிடைத்தால், ஆயிரத்தெட்டு நொட்டைகள் சொல்ல எப்படியெல்லாம் கிளம்புகின்றனர் என்று தெரியும்தானே.

உங்கள் காலத்திலும் சரி சமகாலத்திலும் சரி பல இலக்கியக்குழுமங்கள் இருந்தன அல்லது இருக்கின்றன. இந்தக்குழுமங்களால் எழுத்துப்பரப்பில் ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?

இலக்கியக் குழுமங்களால் எழுத்துப்பரப்பில் என்ன முன்னேற்றம் கிடைக்க வேண்டுமென்று எதிர் பார்க்கின்றீர்கள்?

இப்பொழுதெல்லாம் ஓர் நூல் வெளியாகும் முன்பே அதுபற்றிய பலத்த எதிர்பார்ப்புகளும் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இதுபற்றிய உங்கள் கண்ணோட்டம் தான் என்ன?

இப்போது வரும் புத்தகங்களில், எத்தனை புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது? இன்றைய கடுகதி யுகத்தில் கண்டதையும் அமர்ந்திருந்து படிக்க முடியாது. தொடர்ந்து படிக்குமளவுக்கு எழுத்தோட்டம் சுவையாக இருந்தால் படித்து முடித்து விடலாம். வாசிப்பது என்பது கொடும் தண்டனையாக இருக்கக் கூடாது. பலத்த விளம்பரங்களோடும், எதிர்பார்ப்புக்களோடும் வெளிவரும் நூல்கள் முதலில் கீழே வைக்க மனமின்றி மெய்மறந்து படிக்க வைக்கவேண்டும், அப்படி எம்மோடு ஒன்றிய புத்தகங்கள் குறைவு என்பதே என் எண்ணம்.

தமிழ் எழுத்துப்பரப்பில் உள்ள பிரபலங்களினால் முன்வைக்கப்படும் படைப்புகளின் தரவரிசை பற்றி ........?

சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் ஷோபாசக்தியின் Box படிக்க வித்தியாசமாயிருந்தது. அவர் எழுதும் மொழி கைவரப் பெற்றிருப்பதால் தான் காணாததையும், கண்டது போல் மிகச்சரளமாக எழுதுகின்றார். நிறைய மெனக்கெட்டு உண்மையான சம்பவங்களை உள்வாங்கி நம்பும்படி எழுதுகின்றார். இது இவருக்கு மட்டும் உரித்தானது. குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடும்" மனதுக்கு நெருக்கமாயிருந்தது. எல்லோரின் புத்தகங்களும் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை.

தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்களைத் தந்து கொண்டிருந்த ஓர் படைப்பாளி திடீரென மௌனிப்பதை எப்படியாகப் பார்கின்றீர்கள்?

சிலரால் தொடர்ச்சியாக முன்புபோல் எழுத முடிவதில்லை, ஒருவித வரட்சி நிலையிது. ஜெயகாந்தன் பின்னாளில் எழுதிய நூல்கள் எதுவும் சரியாக வரவில்லையே. அடித்தட்டு மக்களோடு , ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி , அவர்களின் வாழ்வானுபவங்களை இரத்தமும் சதையுமாக அவர் படைத்தபோது அவை உயிரோட்டம் கொண்டு நின்றன. பின்னர் அவர் வாழ்வுநிலை மாறி மேல்நிலைக்கு வந்தபின், வெறும் கற்பனையாக மட்டும் வலிந்து எழுத முற்பட்டார். 'எங்கெங்கு காணினும் ', 'ஜய ஜய சங்கர'ஆகிய பிந்தைய நூல்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். உடல் நிலை ஒத்துழைக்காத போதும், விரக்தி, வேதனை, வெறுப்பிலும் எழுத்துக்கள் மௌனிக்கின்றன.

90 வயதுக்கு மேலும் எழுதிக் கொண்டிருந்த குஷ்வந்த்சிங் மரணப்படுக்கையில் இருந்தபோது யன்னலை வெறித்துப் பார்த்துக்கொண்டு எழுத மனமின்றி மரணத்தை மட்டும் எதிர்பார்த்ததாகப் படித்திருக்கின்றேன். நிறைய நூல்கள் எழுதிச் சம்பாதித்த எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் இறுதிக்காலத்தில் உறவினர்களால் ஏமாற்றப்பட்டு ஏழ்மையின் பிடியோடு முதியோர்இல்லத்தில் வாழ்ந்து மடிந்ததையும் அறிவோம். ஒரு கட்டத்தில் விரக்தியில் தான் எழுதிய நூல்களை இவர் எரித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு படைப்பாளியின் எழுத்துக்கள் மௌனிப்பதற்கு இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம்.

ஓர் இலக்கிய சஞ்சிகைக்குரிய அறமாக எதைக் கருதுகின்றீர்கள்?

இதைப்பற்றி நான் சொல்ல என்ன இருக்கின்றது? சஞ்சிகைகள் வெளியிடுவோர் ஒவ்வொருவருக்கும் ,நோக்கங்கள் மாறுபட்டிருக்கும். அதில் தெளிவும்,நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனமும் வேண்டும். முதலில் சஞ்சிகை நடத்துவோருக்குச் செறிவான எழுத்தாற்றலும், சரியாகத் தெரிவுசெய்யும் நுண்ணிய திறமையும் இருந்தே ஆகவேண்டும். மற்றவர்களைப் புண்படுத்தவும், வசை பாடவுமென்றே சஞ்சிகை நடத்தப்படுமாயின், அது நீடித்து நிற்க முடியாது. பக்கச் சார்பற்றுப் பன்முக ஆக்கங்களுக்கும் இடமளிக்கவேண்டும். அப்போதுதான் ஒரு பத்திரிகை தரமாக மிளிரும். முகத்துக்காகக் கண்ட மலினங்களுக்கும் இடமளித்தால் அது சஞ்சிகையின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் அவதானிப்பு என்ன ? வருங்காலங்களில் அது எப்படியாக இருக்கும்?

போரியல் இலக்கியங்கள் உண்மையாகவும், அது எழுதப்படும் விதத்திலும் மனதில் பதிய வேண்டும். திரும்பத் திரும்பச் சொன்னவற்றை எழுதினால் அது எடுபடாது. குணா கவியழகனின்,''நஞ்சுண்ட காடு தந்த பாதிப்பை ஏனைய அவரின் இரண்டு புத்தகங்களும் தரவில்லையே. உண்மையாகவும்,நேர்மையாகவும் சொல்லப்படும் போரியல் இலக்கியங்கள் எதிர்காலத்தில் சிறந்த ஆவணமாகவே கருதப்படும். சார்புநிலை கருதியும் , அளவுக்கு மிஞ்சிய விளம்பரங்களாலும் இன்று குதித்துப் புகழப்படுபவை நாளை காணாமல் போக வாய்ப்புண்டு.

புலம்பெயர் இலக்கியம் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

புலம்பெயர் இலக்கியங்களில் பெரும்பாலும், வலியும், விரக்தியுமே மிகுந்து காணப்படுகின்றன. பிரிவுகளும், இழப்புக்களும் அதிகமானதால் ஏற்பட்ட மனவுளைச்சல்களும், காய்ந்து போகாமல் இன்னும் மிச்சமிருக்கும் கண்ணீர்த்துளிகளுமே கதையாகவும், கவிதையாகவும், கட்டுரையாகவும் கொப்பளிக்கின்றன. இதுமட்டுமன்றிப் புதிய கோணங்களிலும் பலர் அருமையாக எழுதுகின்றனர். ஆச்சரியப்படவும் வைக்கின்றார்கள். இங்கிருப்போருக்கு நேரமும் ஒத்துழைக்குமாயின் புலம்பெயர் இலக்கியப்பரப்பு இன்னும் விரிவாகும்.

உங்கள் காலங்களில் இருந்த இலக்கிய படைப்புகளுக்கும் சமகாலத்தில் இருக்கின்ற இலக்கியப்படைப்புகளுக்கும் அடிப்படையில் வேறுபாடுகளை உணருகின்றீர்களா?

அன்று இருந்த நல்ல இலக்கியப் படைப்புக்கள், எத்தனை பக்கங்களாயிருந்தாலும் படித்து முடிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்டிருந்தன. இன்று வெளி வருபவற்றில் பெரும்பாலானவற்றை முழுவதும் படிக்கமுடியாத ஒரு தொய்வும், ஆயாசமும் சட்டென மனத்தைக் கவ்வுகின்றன. பலர் புதிது புதிதாக நவீனமாக எழுதுகின்றார்கள்தான். சிறுவர் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் அன்றைய வாண்டுமாமா போன்றோரைப்போலப் பளிச்சென்று தெரிய இன்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய சொல்லாடல்களுடன் நல்ல கவிதைகள் இப்போது இரசிக்க வைக்கின்றன. இதில் தர்மிணி, அனார், சுகிர்தராணி ஆகியோரைத் தயங்காமல் கை காட்டுவேன். பல பத்திரிகைகளில் வரும் நல்ல கவிதைகளை மனமூன்றிப் படிக்கமுடிகின்றது. அன்றைய ஜெயகாந்தன், எஸ்.பொ, கல்கி, நா.பார்த்தசாரதி என்று ஒரு பட்டாளமே எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்தனர். இன்றைய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களில் அனோஜன் பாலகிருஷ்ணன், தர்மு பிரசாத், நெற்கொழு தாசன் என்று புதிதாக எழுதுபவர்கள் மிகச் சிறப்பான எழுத்தோட்டத்துடன் கண் முன்னே தெரிகின்றனர்.

தமிழ் எழுத்துப்பரப்பில் நவீனத்துவம் /கட்டுடைத்தல் என்ற பேரிலும் பெண்களைப் பாலியல் பண்டங்களாக சித்தரிக்கும் படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

பெண்களைப் பாலியல் பண்டங்களாகச் சித்தரிக்கும் படைப்பாளிகள் இன்று மட்டுமா இருக்கின்றார்கள். அன்று தொட்டே பெண்களைப் பாலியல் பொருள் போல் சித்தரிக்கும் படைப்பாளிகள் பழைய இலக்கியங்களிலும் சரி, கதைகள் சினிமாக்கள் என்று எல்லாவற்றிலும் இருந்திருக்கின்றார்கள். இருக்கின்றார்கள். இது காலம் காலமாகத் தொடரும் விடயம். பெண்களைப் பொத்தி வீட்டுக்குள் முடக்குவதற்கு ஆண்கள் செய்யும் தந்திரோபாயங்களில் இதுவுமொன்று. வலிந்து பெண்ணைப் பாலியல் கண்ணோட்டத்துடன் எழுதுவதாயின் அது கண்டிக்கப்பட வேண்டியதொன்றே.

பெண்விடுதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் யாது?

எங்கள் நாடுகளில் மட்டுமல்ல, உலகளாவிய எல்லா நாடுகளிலுமே, பெண்களுக்கான முழு உரிமைகளோ, அங்கீகாரங்களோ இன்னும் கிடைக்கவேயில்லை. கொஞ்ச நாட்களுக்குமுன், அமெரிக்க இராணுவப் பிரிவில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் சிலர் வெளியிட்ட,தகவல்கள் எல்லோரையும் அதிர்வடையச் செய்தன. இந்தப் பெண்களுக்கு மேலான பதவிகளில் இருக்கும் ஆண்அதிகாரிகளால் பாலியல் சீண்டுதல்களுக்கு ஆளானதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டனர்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் என்று இன்னும் என்னென்னவோ சொல்லிப் பெண் என்ற காரணத்துக்காகப் பெண்கள் பலவழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இன்னமும் பலநாடுகளில் பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு ஒரு மூலைக்குள் வைக்கப்படும் அநியாயமும் தன்பாட்டில் கேட்பாரின்றிப் நடந்துகொண்டேயிருக்கின்றது.

வெளியிலே பெண் விடுதலை, சமூக சீர்திருத்தங்கள், சாதியொழிப்பு என்று முழங்கிக்கொண்டே வீட்டில் தம் மனைவிமாரை அடக்கி அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு சிலரை எனக்கு நன்கு தெரியும். பொது வெளியில் வந்தியங்கும் பெண்கள் பற்றி இவர்களுக்கே மட்டமான அபிப்பிராயங்கள் இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.

பெரியார் போல பெண்விடுதலை பற்றி முழுதாகச் சிந்தித்து, மனம் திறந்து பேச நிறைய ஆண்கள் முன் வரவேண்டும். பெண்களின் போராட்ட வலிமை மிகப் பெரியது, ஆனால் இடறி விழுத்த ஆண்கள் பலர் மும்முரம் காட்டுவதுதான் மிகப் பெரிய இடைஞ்சல். அதையே பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு பெண்கள் அதிவேக முன்னேற்றம் அடைவதையும் நாளாந்தம் காண்கின்றோம்.

பெண்களுக்குப் பொதுஎதிரியாக யாரை அடையாளப்படுத்துகின்றீர்கள்?

பெண்களுக்குப் பொது எதிரியாக ஆண்களை மட்டும் கூறமுடியாது. பெண்கள் முன்னேறுவதை வீட்டிலுள்ள வயதான பெண்கள் தடுத்த காலம் நிறைய மாறிவிட்டது. பொறாமையின் நிமித்தம், ஒரு பெண் முன்னுக்கு வருவதைப் பலபெண்கள் விரும்புவதில்லை. இதை என்அனுபவத்தில் நிறையப் பார்த்திருக்கின்றேன். ஒரு பெண் சிறப்பாக எழுதுபவற்றைப் பாராட்டுவோர் பெரும்பாலோர் ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்கள் தலைமைக்கு வருவதைவிட ஆண்கள் வருவதையே பெண்கள் ஆர்வம் காட்டிய கதைகளும் எனக்குத் தெரியும். காரணம ,முன்பு குறிப்பிட்டதுபோலப் பொறாமைதான்.

தெற்காசிய நாடுகளிலும் சரி புலம்பெயர்நாடுகளிலும் சரி பெண்களுக்கான இருப்பு அல்லது அங்கீகாரமானது ஏற்கப்பட்டுள்ளதாக உணர்கின்றீகளா ? இல்லையென்றால் ஏன்?

பெண்களுக்கான முழு அங்கீகாரமும் உலகெங்கும் இன்னும் கிடைக்கவில்லையென்றே அடித்துச் சொல்லுவேன். அடிக்கடி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்து எம்மை அதிர வைக்கும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே இதை நிரூபிக்கின்றன. எவ்வளவோ துறைகளில் பெண்கள் முன்னேறிக் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டுப் பின் தள்ளவென்றே ஆண் திமிர் கொண்டவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தொடரவே செய்கின்றன. ஊரில் மட்டுமல்ல, இந்தப் புலம்பெயர் தேசத்திலே கூட எம்மினப் பெண்கள் எத்தனைபேர் கணவன்மார்களின் நாளாந்தச் சித்திர வதைக்கு ஆளாகி வாய் மூடி இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இங்கு பிறந்த பெண்கள் நன்கு படித்து, நல்ல வேலைகளிலும் சேர்ந்து முன்னேறி வருகின்றார்கள், ஆனாலும் , வேலை வாய்ப்புக்கள், சம்பள விகிதாசாரங்களில் இங்கும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றுதான் செய்திகள் சொல்கின்றன. பெண்களுக்கான உரிமைகள் முழுதாகக் கிடைக்க வேண்டி இந்த நாட்டுப் பெண்ணியக்கங்கள் போராடுகின்றன.

இங்கு பிறந்த பெண் பிள்ளைகள் பலர் கூட சாதிவெறி பிடித்த பெற்றோரின் ஆக்கினையால், ஊரிலுள்ள தம் சாதி மாப்பிள்ளைகளுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்டு, அந்தப் பெண்பிள்ளைகள் ஒருவர் கூடத் திருமண வாழ்க்கையில் நீடித்ததாக நான் நன்கு அறிந்தவரையில் இல்லை.காரணம் சந்தேகம். நீ ஆண் பிள்ளை என்று சொல்லிச்சொல்லி அம்மாக்களே வளர்க்கும்போது சிலஆண்களிடம் ஒருவித ஆதிக்க மனோபாவம் இரத்தத்திலேயே கலந்துவிடுகின்றது. அதன் வெளிப்பாடுதான் இவ்விதக் குரூர குணங்கள்.

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களாக குறிப்பாக பெண்கள் மீது பாலியல் சார்ந்து அவதூறுகளை காண முடிந்தது. ஆனால் ஒருசில கவிதாயினிகள் தங்களது கவிதைகளில் உடல்அரசியலைப் பாடுபொருளாக வைக்கின்றார்களே? இது முரண்நகையாக இல்லையா?

சமூக வலைத்தளங்களில் மட்டுமா....? ஒரு பொது வெளியாக இருக்கின்ற முகநூலிலேயே இது பரவலாக இருக்கின்றது. கொஞ்ச நாட்களுக்கு முன் என்னையே சாதியின் பெயராலும், கேவலமான பாலியல் அவதூறுச் சொற்களாலும் ஒரு சிலர், அதுவும் இளவயதினர் வசைபாடியதை அறிந்திருப்பீர்கள். இதற்கும் பெண் கவிதாயினிகள் தங்களது கவிதைகளில் உடல்அரசியலைப் பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?.

பண்டைய இலக்கியங்களிலும், சமய குரவர்களின் பாடல்களிலும், திரைப்படங்களிலும் பெண்களின் அந்தரங்கஉறுப்புக்கள் உட்பட வர்ணித்துப் பாடப்பட்டிருக்கின்றனவே. காளமேகப்புலவர், பட்டினத்தார் என்று நீட்டிக்கொண்டு போகலாம். நான் பண்டைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவளல்ல. ஆனாலும் ஓரளவு அறிந்திருக்கின்றேன். பெண்ணுறுப்பை மயிர், அல்குல் என்று சர்வசாதாரணமாக எடுத்து விட்டிருக்கின்றார்களே. ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால் பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது?

17ஆம் ,18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்.ராமாமிர்த அம்மாள், செ.வெள்ளைத்துரைச்சி நாச்சியார், முத்துப் பழனி போன்றோர் அந்த நாட்களிலேயே, நம்புவதற்குக் கடினமாகப் பெண்உடல் குறித்துச் சிருங்காரரசம் சொட்ட எழுதியிருக்கின்றார்கள். அப்படி எழுதிவிட்டார்கள் என்று ஆண்செருக்குக் கொண்ட கவிஞர்கள் இந்தப் பெண்கவிதாயினிகளை 'விபச்சாரிகள்’ எனப் பழித்துரைத்தார்கள். ஆனால்,அவற்றைச் செருக்குமிகு அப்பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மீண்டும் நான் உரைத்துரைப்பது இதுதான், ஆண்கள் உடல் அரசியலைப் பேசலாம் என்றால் பெண்களும் தாராளமாகப் பேசலாம். அதில் தப்பெதுவும் எனக்குத் தெரியவில்லை.

சாதியமானது உங்கள் காலத்தில் எப்படியாக இருந்தது? சமகாலத்தில் எப்படியாக இருக்கின்றது?

எங்கள் காலத்தில் இருந்ததை விடச் சாதியமானது எந்த விதத்தில் மாறியுள்ளது? சாதிய விடுதலைக்காய் போராடியவர்களின் அளப்பரிய தியாகங்களாலும், மூர்க்கமான எதிர்ப்புக்கள் நாளுக்குநாள் வலுவேறியதாலும் தான் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகள் கிடைத்தன.

ஆதிக்க சாதியினர் எந்தக்காலத்திலும் தாங்களாக எதையும் கொடுத்தது கிடையாது. ஒடுக்கப்பட்டோர் என்று சொல்வோர் கல்வி உட்படப் பல வழிகளிலும் தாங்களாகவே முன்னேறி விட்டதாலும், எதிர்ப்புக் காட்டுவதில் ஓர்மத்துடன் முன்னுக்கு நிற்பதாலும் ஆதிக்கசாதியினர் என்போரால் இப்போது எதுவும் செய்ய முடிவதில்லை. மற்றும்படி சாதிவெறி அப்படியேதான் இருக்கின்றது.

இந்த சாதிவெறியை புலம் பெயர் நாடுகளுக்குக் கூட கடத்தி வந்திருக்கின்றார்கள். இங்குள்ள பலரிடமும் சாதியுணர்வு இருப்பது வெளிப்படை. யாழ்ப்பாணத்தில் ஓர் இந்துக்கோவிலில் ஒடுக்கப்பட்டோர் வரத் தடைசெய்து முள்வேலி போட்டதும், தேர் இழுப்பதில் நடந்த இழுபறியில், சிங்கள இராணுவத்தினர் தேர் இழுத்த கேவலமும் இந்த 2016 இல் தானே நடந்தன? யுத்தத்துக்குப் பின்னான காலத்தில் முகாம்களில் கூடச் சாதிப்பிரச்சனைகள் நடந்ததை அறிந்திருக்கின்றேன.

நோர்வேயில் வசித்த எம்மவர் ஒருவர், தன் மகன் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருபெண்ணை மணம் செய்ததற்காகத் தூக்கு மாட்டித் தன்னுயிரைவிட்டார். இந்தப்பெண் என்உறவினர் என்பதால் இவ்விடயம் நன்கு தெரியும். சாதி என்றால் என்னவென்றே தெரியாத இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளுக்கே சில பெற்றோர் சாதி பற்றிச் சொல்லிச்சொல்லி வளர்க்கின்றனர். சாதியில் குறைந்த எவரையாவது காதலித்துத் தொலைக்கப் போகின்றார்களே என்ற பயம் அவர்களுக்கு. இதைத் தெனாவெட்டாக என்னிடமே சிலர் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சாதி என்பது எமது சமூகத்திலுள்ள தீர்க்கமுடியாத சீழ் பிடித்த நோய். இந்துமதக் கோட்பாடுகளின் ஆணி வேர்தான் இது. இதை நீக்குவது சிரமத்திலும் சிரமம்.

சமகால இளைய படைப்பாளிகளின் படைப்பு வீச்சுப் பற்றியும், அவர்களுக்கு ஓர் மூத்த இலக்கியவாதியாக என்ன சொல்ல விளைகின்றீர்கள்?

இப்போது எழுதும் இளைய படைப்பாளிகள் புதிதாகச் சிந்தித்து வேறுபட்டுத் தெரிகின்றார்கள். அவர்களுக்கான வாய்ப்புக்கள் தாராளமாக இருப்பதால் உடனுக்குடன் அச்சில் ஏற்றி நூலாக வெளியிடுகின்றார்கள். இது வரவேற்கத் தக்க விடயம்.அவர்களுக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதுமில்லை. வேகமாகச் சிந்தித்து அதை எழுத்திலும் வடிக்கின்றார்கள். எவ்வளவு புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள் என்று எதிர்காலத்தில் எவரும் கேள்வி கேட்க இடம் வைக்காத புத்திசாலிகள்.

தற்போது வெளிவரும் படைப்புக்கள், பெரும்பாலும் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்டவற்றை மையமாக வைத்தே எழுதப்படுகின்றன. இதில் புனைவாகவும் நிறையச் சேர்க்கப்படுவதால், மனதில் ஒட்டாத சலிப்பே உண்டாகின்றது. கேட்டவற்றையும், அறிந்தவற்றையும் வைத்து எல்லோராலும் உயிரோட்டம் ததும்ப எழுதமுடியாது. சமூகத்திலும், வெளியிலும் எவ்வளவோ நடக்கின்றன. இனி வேறு கண்ணோட்டங்களில் பார்வையைச் செலுத்தலாமே....சொல்லப்படாத விடயங்கள் நிறைய இருக்கின்றனவே.





ஜீவநதி -இலங்கை.

02 கார்த்திகை 2016.

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம