கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும், அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை. மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான், என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன். அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள். இருவரும் ஒன்றிணைந்து வருடாந்த விடுமுறையை நாம் வேலைசெய்யும் இடத்தில் கொடுக்கும் முடிவிற்கு வந்த பொழுது உடல் அலுப்பினால் தூக்கம் தானாகவே எம்மை அரவணைத்துக்கொண்டது.
நான் எமக்கான விடுமுறையை கொடுத்து விட்டு விமானப்பயணத்துக்கு வேண்டிய பதிவுகளை செய்ய கணணியை நோண்ட ஆரம்பித்தேன். எனது வீக்கத்துக்கு எயார் சவுதியா என்முன்னே என்னை எடு என்று அடம் பிடித்தது. ஆனால் நான் அதிக நேரம் சவுதிஅரேபியாவில் அடுத்த விமானத்துக்காக காத்திருக்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை சவுதி அரேபிய விமான நிறுவனம் நாசுக்காக சொன்னது. இந்த விலையில் யாருமே எனக்கு தொலை தூர விமானசீட்டை தர மாட்டார்கள் என்றபடியால் அவர்களிடமே விமானப் பயணத்தை பதிவு செய்துகொண்டேன். நாங்கள் இருவரும் எமக்கான பயண நாளை எண்ணிக்கொண்டே எமது வேலை நாட்களை கடத்திக் கொண்டிருந்தோம். வழமை போலவே 2013 ஆம் ஆண்டும் மேடு பள்ளங்களைக் கடந்து எம்மைத் தாண்டிச் சென்றது.
தாயகப் பயணம் என்றாலே எல்லாவகையிலும் கனதியானது. ஆனாலும் அதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கின்றது. அது எப்படி என்றால் நாங்கள் செய்கின்ற ஓவ்வரு சிறிய செயல்களினாலும் மற்றவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற பூரிப்பினால் நாங்கள் பட்ட கஸ்ரங்களும் துயரங்களும் பஞ்சாகின்ற பொழுது அதுகூட ஒருவகையில் எமக்கு கிடைக்கின்ற ஆத்ம திருப்தியே. இதில் உறவுகள் எதிர்பார்க்கின்றார்களா இல்லையா என்பதல்ல பிரச்னை. நாம் அவர்களை எமது உறவாக அங்கீகரிக்கின்றோமா என்பதே முக்கியமானது. எமது பயணம் மாசிமாதம் இறுதிப்பகுதியில் முடிவான நிலையில், நாங்கள் இருவரும் பயணத்துக்கு தேவையான பொருட்களை சிறிது சிறிதாக வாங்கத் தொடங்கினோம். இதே வேளையில் எனது மனைவியின் அண்ணை வடிவில் ஓர் சிறு புயல் கனடாவில் இருந்து எம்மை நோக்கி மையம் கொள்ள தொடங்கியது .
தொடரும்
கோமகன்
31 பங்குனி 2014
கோமகன்
31 பங்குனி 2014
Comments
Post a Comment