நாங்கள் பயண வேலைகளை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் மாலை கனடாவில் இருந்து மனைவியின் அண்ணை எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் எங்களை சந்தோசப்படுத்துகின்றேன் பேர்வழி என்று கனேடிய தபால் சேவை மூலம் ஒரு ஐ பாட் தங்கைக்கு அனுப்பிருந்தார். தான் அனுப்பி ஒருமாதத்துக்கு மேல் என்றும் அவர் எம்மை எடுக்கசொன்ன செய்தியானது எமது பயணம் நெருங்கிய வேளையில் எனது வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் அது கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொங்குபறி நிலையில் நின்று கொண்டிருந்தது. இதனால் எனக்குப் பதட்டம் கூடியதே ஒழிய குறையவில்லை. ஆனாலும் எனது பதட்டங்களை வெளிக்காட்டாது எனது வேலைகளில் மூழ்கினேன். நான் வேலை செய்கின்ற உல்லாசவிடுதி மீள்கட்டுமானப்பணி முடிவடைந்த நிலையில் அண்மையிலேயே மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டது. நான் வகிக்கின்ற பதவி காரணமாக விடுமுறையில் செல்வதற்கு முன்பே நான் பல ஆயுத்தங்களை எனது உதவியாளர்களுக்கு செய்யவேண்டியிருந்தது. அது தந்த உடல் களைப்பு எனக்கு மேலும் எப்பொழுது எனது பயண நாள் வரும் என்ற மன ஓட்டத்தினை அதிகரித்தவண்ணமே இருந்தது. ஒருவழியாக மாசி மாத இறுதிப்பகுதி எம்மை நெருங்கியது .
மாசி மாதத்துபிற்பகுதியின் அந்த அதிகாலைப் பொழுது எனக்கும் மனைவிக்கும் இடையே கயிறு இழுத்தல் போட்டியாகவே விடிந்தது. வெளியே , காதலன் காதலியை முதல் முத்தம் கொடுப்பது போல வானம் பொத்துக்கொண்டு மழை நிலத்தை அடங்கா தாகத்துடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. விமான நிலையத்துக்கு ரக்சியில் செல்வது என்று எனது பக்கமும், இல்லையில்லை காசை சேமித்து பத்துநிமிட நடைதூரத்தில் இருக்கும் தொடருந்து நிலையத்துக்குச் சென்று தொடருந்து மூலம் விமான நிலையம் செல்வது என்று மனைவியும் கயிறு இழுத்துக்கொண்டிருந்தோம். இறுதியில் தொடர் மழை எனது பக்கம் அவளை இழுத்துவந்தது . நான் விரைவாக தொலைபேசி மூலம் ரக்சி வரவேண்டிய இடத்தைச் சொன்னேன். நாங்கள் எடுக்கவேண்டிய விமானம் பதினோரு மணிக்கு என்பதால் எங்களுக்கு அதிகமாகவே நேரம் இருந்தது. காலை எட்டுமணியளவில் எம்மைச் சுமந்து கொண்டு எமது ரக்சி கொட்டும் மழையின் ஊடாக விமான நிலையத்தை நோக்கி வழுக்கிச் சென்றது.
"சார்ல்ஸ் து கோல்" சர்வதேச விமான நிலையம் தினம் தினம் பலதரப்பட்ட மனிதர்களையும் பல விநோதக் காட்சிகளை அரங்கேற்ரம் செய்கின்ற இடம். நாங்களும் அதில் ஐக்கியமாகிவிட்டோம். நாங்கள் மனிதர்களுடன் மனிதர்களாக நீந்தினோம். நாங்கள் செல்கின்ற வழி இருபுறமும் கண்ணாடி இழைகளால் வேயப்பட்டு வெளிப்புறக் காட்சிகளையும் காணக்கூடியவாறு அமைக்கப்பட்டு இருந்தது. வெளியே பலவகையான இயந்திரப் பறவைகள் இயங்கியும் இயங்காமலும் வரிசை கட்டி நின்றிருந்தன. அந்தக்காலை வேளையில் அவைகளின் அணிவகுப்பு என் மனதில் உற்சாகத்தை கிளப்பி இருந்தது. நாங்கள் ஒருவாறு எயார் சவுதியா வரவேற்பு கூடத்தில் வந்து எமது பயணப்பொதிகளை அனுப்பி விட்டு அங்கே இருந்த இருக்கைகளில் எம்மை நுளைத்துக் கொண்டோம். எனது மனைவியோ தனது தொலை பேசியில் கிடைத்த இணைய இணைப்பை இனிமையாக அனுபவிக்க, எனக்கோ இறுதி நேர எக்ஸ்பிறாசோ வை நுகர எனது நாக்குகள் நமநமத்தன. எனது முடிவை செயல் படுத்த அருகில் இருந்த கபே பாரை நோக்கி எனது கால்கள் நகர்ந்தன . அங்கே இருந்த குறசோன்ஸ் உம் "தன்னையும் எடு" என்று அதன் வாசத்தால் எனது நாசித்துவாரத்தை உசுப்பேற்றியது. அதனையும் கபேயையும் வங்கியவாறு வெளியே வந்தேன். வெளியே மழை விட்டிருந்ததனால் நல்ல ஈரலிப்பாக இருந்தது. கபேயும் குறசோன்ஸ் உம் உள்ளே இறங்கியது மனதிற்கு உயிர்ப்பாக இருந்தது. "இதனுடன் ஒரு சிகரட் அடித்தால் இன்னும் நன்றாக இருக்குமே" என்று மனம் கட்டளை இட்டது. உடனே தன்னிச்சையாகவே உதட்டுடன் சிகரட் பொருந்தி லைட்டர் அதன் முனையை சிவப்பாக்கியது. நான் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன். இந்த மனம் தான் எவ்வளவு விந்தையானது? எனது சொல் கேட்டு நடக்க வேண்டிய மனதிடம் அது சொல் கேட்டு நான் நடக்க வேண்டிய நிலயை என்வென்று சொல்ல? இதைதான் மனதை குரங்குடன் ஒப்பிட்டார்களோ ?
ஒருவழியாக எமது குடிவரவு குடியகல்வை முடிக்கும்படி அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. அங்கு எமக்கு பெரிய அளவில் பிரச்னை இருக்கவில்லை. நாங்கள் பொழுது போக்கிற்காக சுங்கத் தீர்வையற்ற கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தோம். ஏதாவது வாங்குவதானால் ஜெட்டா விமான நிலையத்தில் வாங்குவதாக முடிவு செய்திருந்தோம். காலம் தனது கடைமையை செய்து நேரம் பத்து மணியை தான் நெருங்கி விட்டதாகக் காட்டிக்கொண்டிருந்தது. எங்களை விமானத்தின் உள்ளே அனுமதிக்க ஆரம்பித்து விட்டார்கள். எயார் சவுதியாவின் பணிப்பெண்கள் ஏறத்தாழ அரேபியக் குதிரைகளைப் போலவே இருந்தார்கள். அவர்களின் இனிமையான வரவேற்பில் நான் கிறுங்கித்தான் போனேன். நாங்கள் எமது இருக்கைகளை தேடி போய் அதனுள் எம்மைத் திணித்தோம். அந்த விமானம் விசாலமாகவும் இருக்கைகளுக்கு இடையே கால்களை வைப்பதற்கு போதிய இடைவெளியும் இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அரேபியர்கள் எல்லோருமே போந்தை பொலிந்தவர்களாக இருந்தார்கள். விமானம் புறப்படுவதற்கு தயாராக தனது கதவுகளை இறுக்க மூடிக் கொண்டது. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. விமானி அரபி மொழியில் தனது வந்ததனத்தை தெரிவித்து விட்டு, மௌலவி ஒருவரின் அல்லாவின் வாழ்த்து ஓதலை தவழ விட்டார். அல்லாவின் ஓதல் முடிவடைந்ததும் அந்த இயந்திரப் பறவை மெதுவாக ஓடு தளத்தில் ஓடி தன்னை நிலை நிறுத்தி அதிவேகத்தில் ஓடி தனது கால்களை நிலத்தில் உதைத்து எக்கியவாறே மேலே எழுந்தது.
விமானத்தின் ஜன்னல்களின் ஊடாக வெளியே வயல்கள் பச்சை போர்த்தி இருந்தன. வாகனங்கள் தூரத்தே சிறு பொட்டுகளாகத் தெரிந்தன. காலை வெய்யில் கண்களைக் கூசியது. இப்பொழுது அந்த இயந்திரப் பறவை தன்னை நிலைநிறுத்தி ஜெட்டாவை நோக்கி விரைந்தது. பூமிக்கும் எமக்குமான தொப்புள் கொடி உறவு ,பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலமே இருந்தது. அந்தப் பறவை ஏறத்தாழ பதினோரு கிலோமீற்ரர் உயரத்தில் மணிக்கு தொளாயிரம் கிலோ மீற்ரர் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தது. அதில் பூட்டியிருந்த ஜீ பி எஸ் மூலமே அதன் வேகத்தை உணரக்கூடியதாக இருந்தது. நான் சவுதி அரேபியா எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கின்றேன். நான் படித்த பாடங்கள் என் கண் முன்னே விரிந்தன. அடிக்கடி மாறும் மண் மலைகளையும், பாலைவனத்தில் சோலைகளாக வளர்ந்த பேரீந்துகளையும் ,அந்த சுடுமணலில் பயணிக்கும் ஒட்டகங்களையும்,ஆங்காங்கே துள்ளித்திரியும் குதிரைகளையும் ,அரேபிய கன்னிகைகளையுமே சொல்லித்தந்தன. இப்பொழுதுதான் நான் நேரடியாக சவுதி அரேபியாவை பார்க்கப் போகின்றேன். அதுவே எனக்குப் பல கற்பனை சிறகுகளைத் தந்திருந்தது. எமது விமானம் ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்களை விழுங்கி மாலை ஏழு மணியளவில் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் தரை தட்டியது. அங்கே எனது கற்பனைகளுக்கு மாறாக பலத்த அதிர்சிகள் காத்திருந்தன.
தொடரும்
கோமகன்
03 சித்திரை 2014
Comments
Post a Comment