மன்னர் மகிந்தர் தாமாகவே நகரத்துக்குத் திரும்பி விட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி மூலைமுடுக்குகள் தோறும் காற்றெனப் பரவியது. தெருக்களில் அங்கங்கே பலர் கூடி நின்று தாங்களே அந்தக் காட்சியை நேரில் கண்டவர்கள்போல் பேசிக் கொண்டனர். போரினால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பும், அதையொட்டிய நகரத்தில் நிலவிய அச்சம் கலந்த அமைதியும், இச்செய்தி கிடத்தவுடன் எங்கோ சென்று மறைந்தன. இராஜேந்திரரே நேரில் வருகை தந்து மன்னர் மகிந்தரைச் சகல மரியாதைகளுடன் வரவேற்றாராம். மாமன்னரும் மன்னரும் ஒருவரையொருவர் அன்போடு தழுவிக் கொண்டார்களாம். அவர்களுடைய சந்திப்பைக் கண்டவர்களுக்கு ‘பகை நாட்டரசர்களா இவர்கள்? என்ற வியப்பு ஏற்பட்டதாம். நெடு நாட்கள் பிரிந்திருந்த நெருங்கிய நண்பர்களென ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்களாம்! இன்னும் இவை போன்ற பற்பல நல்ல செய்திகள் நகருக்குள் உலவின. காற்றுவாக்கில் நகரத்துக்குள் பரபரப்பைப் பரப்பிய இந்தச் செய்திகளில் ஒரு பகுதி மட்டிலும் உண்மை. சக்கரவர்த்தி இராஜேந்திரைப் பற்றிய வரையில் அவர்கள் நடந்ததைத்தான் கூறினார்கள். ஆனால் மன்னர் மகிந்தர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்