Skip to main content

செய்ன் மிஷேல் (SAINT MICHEL) -கோமகன்-பிரான்ஸ்



1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை நேரம் அலாரம் சிவாவினது நித்திரைக்கு உலை வைத்தது. சிவா வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு. இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் தூக்கத்தை மைதிலியின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு. அவனது கை கட்டிலின் மறுபுறம் துழாவியபோது அந்த இடம் வெறுமையாகவே இருக்க” இந்த நேரத்தில் மைதிலி எங்கே போய்விட்டாள்”? என்று நினைத்தவாறே கட்டிலில் இருந்து விசுக்கென்று எழுந்தான். வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது,மைதிலி முழுகிவிட்டு பல்கனியில்த் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் அவனுக்குத் தெரிந்தது. அந்தக்காலை வேளையில் அவளது நீண்டகருமையான கூந்தல் கருநாகம் போல அவளதுமுதுகில் பரவியிருந்தது. அவள் அவனுக்காகத் தயாரித்திருந்த கோப்பி ஆவிபறந்தபடி குசினிக்குள் காத்திருந்தது. சிவா கோப்பியை எடுத்துக் கொண்டு பல்கணியில் மைதிலிக்குப் பக்கத்தில் நின்று கொண்டான். மைதிலி முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது வேலையில் ஈடுபாட்டுடன் இருந்தாள்.

நேற்று இரவு இருவரும் வாயால் சண்டைபிடித்தது மனதில் வந்து அவனை அலைக்கழித்தது க்கொண்டிருந்தது. ஒருபோதுமே அவளைக் கண்டித்துப் பேசாத அவன் அன்று அவளுடைய சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தால் குரலை உயர்த்திப் பேசப்போக அது இறுதியில் அவளது அழுகையுடன் முடிந்தது. மைதிலி தனது தம்பியை பிரான்சுக்கு எடுப்பதற்கு அவனுடன் கதைத்தபொழுது தான் இருவருக்கும் பிரச்சனை கிளம்பியது. சிவாவிடம் அந்தவேளையில் மச்சானைக் கூப்பிடுமளவுக்கு வங்கி இருப்புகள் நேர்த்தியாக இருந்திருக்கவில்லை. அவன் சிங்கப்பூர் போய் மைதிலியைக் கலியாணம் செய்ய எடுத்த வட்டிக் கடனே இன்னும் முடியவில்லை. மைதிலி வந்து ஒருவருடத்திற்குள் பிரெஞ் மொழியைப் படித்து விட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றாள். இந்தநேரத்தில் மச்சானைக் கூப்பிடுவதென்றால் சிவாவிற்கு தற்கொலைக்குச் சமனான விடையம். அவன் மைதிலியை சமாதனப்படுத்தும் எண்ணத்தில் ” மைதீ ……….” என்று வழக்கத்தைவிட தேனைத் தடவினான். இந்த இடத்தில் சிவாவின் பருப்பு மைதிலியிடம் வேகவில்லை. அவள் நித்திரையால் எழும்பிய நான்கு வயதான சைலஜாவைப் பள்ளிக்கூடத்திற்கு விட அவசரமாக வெளிப்படுத்தினாள். சிவாவும் தான் குளிப்பதற்கு குளியல் அறைக்குள் நுழைந்தான். அவன் குளித்து வெளிக்கிட்டு வெளியில் வரும்பொழுது வீடு யாருமில்லாது அமைதியாக இருந்தது. மைத்திரியும் சைலஜாவும் இவனிற்காக காத்திராது வீட்டை விட்டு இறங்கியிருந்தனர் ஆற்றாமையும் கோபமும் அவனுக்கு தலைக்கு ஏறின. அவன் தொடரூந்து நிலையம் நோக்கி விரைவாக நடத்தான்.

அனது கண்களுக்குத் தூரத்தே மைதிலி நடந்து போய்க்கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. அவன் தனது நடையை வேகப்படுத்தி மைதிலியை நெருங்க முயற்சித்தான். அவள் விரைவாக தொடரூந்து நிலையத்தினுள் நுழைந்தாள். அவன் மூச்சிரைக்க ஓடிவந்து படிகளில் இறங்கும்பொழுது தொடரூந்து வரும் இரைச்சல் துல்லியமாகவே அவனுக்குக் கேட்டது. அவன் இன்னும் விரைவாக இறங்கி தொடரூந்தை நோக்கி ஓடினான். மைதிலி இவனக்கு முதல் பெட்டியில் ஏறுவது தெரிந்தது. மைதிலியின் ஊமைக் கோபம் மனோவை மிகவும் படாய்படுத்தியது. கலியாணம் கட்டினநாளில் இருந்து சிவா அவளை முகம்கோண வைத்ததில்லை. தான் அவளைக் கண்ணின் இமைபோல் காத்தும் மைதிலி தன்னைப் புரிந்து கொள்ளாதது அவனை வேதனையை உச்சத்திற்கு கொண்டு வந்தது.

000000000000000000000000

றெயில் தனது சுரங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, புத்தில் இருந்து வெளியேறும் சாரைப்பாம்பு போல தன்னைத் தரைப்பகுதிக்குக் காட்டியது. கோடை காலத்து ஜூலை மாத வெய்யில் அவனது முகத்தில் மென்மையாக சுட்டது. மேலே ஏறிக்கொண்டிருந்த தொடரூந்து ஓல்னே சூ வூவா( AULNEY SOUS BOIS) தொடரூந்து நிலையத்தைத் தொட மெதுமெதுவாக முயற்சி செய்து கொண்டிருந்தது. அதனது மெதுவான ஓட்டம் மனோவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனது மனம் அதில் லயிக்காது மைதிலியையே சுற்றிச் சுற்றியே வந்தது. அவளும் தன்னைப்போல நினைத்துக்கொண்டிருப்பாளோ என்னமோ. அவனது வறண்ட மனதில் தென்றாலாய் வந்தவள் அவள். குடும்பத்தில் ஒரு தம்பியைக் கொண்ட அவளுக்குப் பெரிதாக ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. அவனது ஆறாயிரம் பிராங் சம்பளத்தில் கட்டுச்செட்டாகவே மைதிலி குடும்பம் நடத்தினாள்.

அவனோ அவளது தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்வான். பின்னேரம் வேலையால் வரும் பொழுது தனது முன்னாள் அறைக்கூட்டாளி கண்ணனிடம் காசு வாங்கி மைதிலியின் தம்பியைக் கூப்பிடவேண்டும் என்று மனதுள் உருப்போட்டுக்கொண்டான். ஓல்னே சூ வூவா (AULNEY SOUS BOIS) தொடரூந்து நிலையத்தின் நுழைவாயிலில் நின்ற தொடரூந்து மின்சாரக்கோளாறால் தனது இயக்கத்தை முற்றாகவே நிறுத்தியது. திறக்கவேண்டிய தானியங்கிக் கதவுகள் அவைகளின் மூச்சை நிறுத்தின. வெளியே தொடரூந்துமேடை சனத்தால் நிரம்பி வழிந்தது. எல்லோருக்குமே காலை நேரத்து வேலை அவசரம். அவர்கள் நின்ற தொடரூந்தின் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டினார்கள். கட்டளைகளின் படி இயங்கும் அந்த தொடரூந்து பாவம் அதனால் என்னதான் செய்ய முடியும்? பத்து நிமிட இடைவெளியின் பின்னர் அது தனது சமிக்ஞையை பெற்றுக்கொண்டு தொடரூந்து நிலையத்தினுள் ஆடிஅசைந்து நுழைந்தது. வெளியே நின்ற சனங்கள் முண்டியடித்து ஏறியதால் வாசலின் அருகே இருந்த இருக்கையில் சிவா,மற்றவர்களும் நிற்க வசதியாக இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். அளவுக்கு அதிகமான சனநெருக்கடியால் அவனுக்கு மூச்சுத்திணறியது. சமிக்ஞை கோளாறினால் தொடரூந்து நேரடியாகவே பரிஸ்சுக்கு செல்ல இருப்பதாக அதை ஓட்டியவர் அறிவித்து எல்லோரது வெறுப்பையும் குறைக்க முயன்று வெற்றிகண்டார்.

தொடரூந்து தனது தானியங்கிக் கதவுகளைப் மூடியவாறே பாரீஸுக்குத் தனது பயணத்தை மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் கடுகியது. எதிரும் புதிருமாகவும் பக்க வாட்டாகவும் தொடரூந்துகள் அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தன. இன்றும் தனது முதலாளியிடம் நேரம் தவறிப்போவற்கு பேச்சு வாங்குவதை நினைக்க சிவாவிற்கு மேலும் கடுப்பாக இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாரிஸ் கார் து நோர்ட் (GARE DU NORD) தொடரூந்து நிலையத்தில் தன்னை நிலைநிறுத்த தனது வேகத்தைக் குறைத்தது.

கார் து நோர்ட்((GARE DU NORD) தொடரூந்து நிலையம் சனவெள்ளத்தில் மிதந்தது. தொடரூந்து நின்றதும் சனங்கள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் தள்ளுமுள்ளுப்பட்டார்கள். இறுதியாக நெடுநெடுவென்ற உயரத்தைக் கொண்ட தலைக்கு முக்காடு போட்ட உருவம் ஒன்று கையில் ஒரு பையுடன் சிவாவிற்குப் பக்கத்தில் ஏறி நின்றது. அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசி அவனது குடலைப்புரட்டியது. சிவாவிற்கு அந்த உருவம் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. நாற்றம் தாங்கமுடியாமல் அவன் மூக்கைப் பொத்திக் கொண்டான். ஒரு சிலர் தங்களிடம் இருந்த பெர்பியூமை தொடரூந்து பெட்டிக்குள் ஸ்பீரே பண்ணினார்கள். சனநெரிசலில் தள்ளுப்பட்ட அந்த உருவம் மற்றய பயணிகளை அசட்டை செய்தவாறே தலையைக் கவிழ்த்து வைத்தவாறே நின்றது. தொடரூந்து தனது கதவை மூடிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தது.

சிவாவுக்கு இறங்கவேண்டிய நிலையங்கள் இரண்டே இருந்தன. மைதிலியோ இன்னும் மூன்று நிலையங்களைக் கடக்கவேண்டி இருந்தது. கடிகாரத்தின் முட்கள் ஏழு மணியைத்தொட்ட அந்தக்காலை நேரத்தில் தொடரூந்து இரண்டாவது நிலையத்தை அடைந்தவுடன், அவனிற்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த உருவம் தான் கொண்டுவந்த பையை எல்லோரும் அசந்த நேரத்தில் அவனருகில் வைத்துவிட்டுப் புகையிரத நிலைய மேடையில் இறங்கிச் சனத்தினுள் சனமாக மறைந்தது. சிவா அந்த உருவத்தைக் கூப்பிடத்தொடங்கிய பொழுது தொடரூந்தின் கதவுகள் மூடப்பட்டு அவன் இறங்கவேண்டிய தொடரூந்து நிலையத்தை நோக்கி வேகமெடுத்தது. இப்பொழுது ஓரளவு சனம் குறைந்து காற்று வரஆரம்பித்தது. அவனது மனமோ என்றுமில்லாதவாறு மைதிலியை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.

சிவா செயின் மிஷேல் தொடரூந்து நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக தொடரூந்தின் வாசல் கதவின் முன்னால் நின்று கொண்டான். அவன் விரைவாக **சோத்தி(SORTI)எடுப்பதற்காக நான்கு கதவுகள் கொண்ட ரெயில் பெட்டியில் எப்பொழுதும் அவன் சரியான கதவைத் தெரிவு செய்வதுண்டு. இன்றும் அப்படித்தான் அவன் சரியான கதவின் அருகினில் நின்று கொண்டிருந்தான். தொடரூந்து செயின் மிசேல் (SAINT MICHEL) நிலையத்தில் நுழைந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கே எழுந்த பெரும் வெடியோசையினால் தொடரூந்தும், தொடரூந்து நிலையமும் குலுங்கின. எங்கும் புகைமூட்டமும் சனங்களின் அலறல் சத்தங்களும் காதைப் பிளந்தன.

பிற்குறிப்பு :

ஜூலை மாதம் 25ம் திகதி 1995 ம் ஆண்டு பாரிசின் இதயப் பகுதியான இந்த செயின் மிஷேல் தொடரூந்து நிலையத்தில் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் இந்த தொடரூந்தில் குண்டு வைக்கப்பட்டது.உயிரிழப்பு அண்ணளவாக பத்துப்பேர். காயமடைந்தவர்கள் 100க்கும் மேல் .

** சோத்தி (EXIT)= நிலத்தடி தொடரூந்து நிலையத்தால் பயணிகள் வெளியேறும் பகுதி.

மலைகள்– 02 கார்த்திகை 2016

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...