ஈழத்தில் போர்க்காலப் படைப்புகள் பல வந்தன / வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் பல சுயவிமர்சனங்களையும் சுய பரிசோதனைகளையும் மேற்கொண்டன . இந்தப்படைப்புகளை படைத்தவர்கள் எல்லோருமே மிக முக்கியமாக “உண்மைகளை எடுத்து சொல்கின்றோம்” என்று போரியலைத்தளமாகக் கொண்ட படைப்பாளிகளால் முன்நிலைப்படுத்தப்பட்டன.போரியல் படைப்பாளிகளை மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர். இதற்கு மிக முக்கிய காரணியாக அவர்களில் பலர் இறுதி போரில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வாழ்வு பெற்று வெளியே வந்தவர்கள். இந்தப் போரியற்படைப்பாளிகள் கூறிய சங்கதிகளை தமிழ்த்தீவிர தேசிய உபாசகர்களும் அவர்சார் படைப்பாளிகளும் மறுதலித்து, இல்லையில்லை அவைகள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இவைதான் உண்மை என்று தங்கள் தரப்புப் படைப்புகளின் ஊடாக வாசகர் முன்னே வைத்தனர். ஆக இங்கு “உண்மை” என்பது இரண்டு பக்கமும் அல்லாடியது எனலாம் . அந்தவகையில் நேசக்கரம் சாந்தியின் “உயிரணையும் ” உண்மைநிலையை எடுத்து சொல்வதாக சொல்லி நிற்கின்றது .
இலக்கியத்தில் உண்மை நிலை பற்றி தத்துவமேதை ஹெகல் பின்வருமாறு வரையறை செய்கின்றார் “உண்மை” என்பது அகம் சார்ந்தது .மனிதனின் அக உணர்வை மீறிய உண்மை என்று எதுவும் இல்லை. இதை இப்படியாகவும் கூறலாம், இயக்கவியல் விதிகளின் படி, ஒரு பொருள் வருகிறது. அதன் பின் வேறு ஒரு பொருள் வருகிறது. அவை இரண்டுக்கும் இடையே முரண்பாடு வருகிறது. அவ்விரு பொருட்களின் இரு கூறுகளும் ஒன்றிணைந்து மூன்றாவதாக வேறு ஒரு பொருள் புதிதாக உருவாகிறது. ஆனால் இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது . வெளிப்புற மாற்றங்களுக்கு இசைவாக்கம் பெறும் மனிதனின் அக உணர்வை எப்படி உண்மைக்கு வரைவிலக்கணம் செய்ய முடியும் ? அத்துடன் ஓர் இலக்கியப்படைப்பில் உண்மை நிலையானது மட்டும் போதுமா? யதார்த்தவாதத்தின் ஊடாக அழகியல் புனைவுகள் ஓர் படைப்பிற்கு அவசியமில்லையா? இல்லையானால் ஓர் கட்டுரையை அந்த படைப்பாளி தந்து விட்டுப்போகலாமே?
இலக்கியப் படைப்பு எனப்படுவது மானிட உணர்வுகளைத் தூண்டி விட்டு அவைகளின் ஊடாக மானுட உயிர்ப்பை மேன்மை செய்யும் அழகியல் ஆயுதமாக இருக்க வேண்டும். அதுவொரு இனிமையான படைப்புக்களமாக அமைந்திருக்க வேண்டும். மானிடரில் காணப்படும் ஆசை, ஆத்திரம், புன்னகை, கண்ணீர், நகைச்சுவை, கோமாளித்தனம் போன்ற சகல உணர்வுகளையும் அது கலை நயத்தோடு வெளிப்படுத்த வேண்டும். அதற்கு மிக முக்கியமாக யதார்த்தவாதம் மற்றும் அழகியல் புனைவு என்கின்ற வரைபு அளவுகோலாக இருக்க வேண்டும். இன்றும் புஷ்கினும், டால்ஸ்டாயும், கார்க்கியும், ஷோலகோவும் சர்வதேச இலக்கியத்தில் பேசப்படுகின்ற படைப்பாளிகளாக இருப்பதற்கு ஒரேயொரு காரணம் அவர்கள் தங்கள் படைப்புகளின் ஊடாக யதார்த்த வாதத்தையும் அழகியல் பண்புகளையும் சரியான விகிதத்தில் கலந்து சொல்லி நின்றமையாலே .
இந்த எடுகோள்களின் அடிப்படையில் அண்மையில் பூவரசி பதிப்பகத்தால் வெளியாகிய நேசக்கரம் சாந்தியின் ‘உயிரணை’ நாவலை நாம் நோக்கலாம் . ‘ மேவுதல்’ , ‘கரைதல்’ , ‘அவாவுதல் ‘என்ற மூன்று பெரும் அத்தியாயங்களில் ஓர் விடுதலைப்போராளியின் உண்மைக்கதையை உயிரணை சொல்லிச்செல்கின்றது . ‘மேவுதல்’ அத்தியாயத்தில் ஈழத்தில் நடைபெற்ற ஆனையிறவு சமரின் முக்கிய களமான ‘குடாரப்பு தரையிறக்கத்தையும்’ ‘கரைதல்’ அத்தியாயத்தில் சமாதான காலத்தில் ஏற்பட்ட சிறு சமர்களையும் முள்ளிப் பேரவலத்தின் இறுதி நாட்களையும் , ‘அவாவுதல்’ உயிர்த்திருத்தலின் அவாவையும் உயிரணை கதைக்களமாகக் கொண்டுள்ளது . இந்த நாவலில் ஒற்றைப்படையாக ‘ஆதி’ என்ற போராளியே பிரதான கதைசொல்லும் கதைமாந்தனாக வருகின்றான் . உப கதைமாந்தர்களில் கடுமையான வறட்சி நிலை காணப்படுகின்றது . இதில் கிளைக்கதையாக ‘கரைதல்’ அத்தியாயத்தில் ஓர் ஒருதலைக்காதலும், உண்மைக்காதலும் கதை சொல்லியுடன் பயணிக்கின்றன .
காதல்களையெல்லாம் புறம் தள்ளி வீரத்தை மட்டுமே நாவல் சொல்லி செல்வதாலும் அதாவது வாசகர்களுக்கு ஏலவே தெரிந்த சங்கதிகளை எடுத்து சொல்வதாலும் வாசிப்பு மனநிலையில் ஒருவித சலிப்புத்தன்மை ஏற்படுகின்றது . அத்துடன் நூலாசிரியர் இராணுவ எழுத்து , (military writings), போர் பற்றிய இலக்கியம் (The literature of war ) என்று இரண்டுவகைகளையும் போட்டுப் படைப்பில் மசாலாவாகத் தந்துள்ளார் . இதனால் வாசகன் எங்கே நிற்கின்றான் என்பதில் குழப்பம் இருக்கின்றது. நூலாசிரியர் தனிய இராணுவ எழுத்தை மட்டும் தொட்டிருப்பாரானால் இந்த நாவல் தீவிர தமிழ் தேசிய விசுவாசிகளால் கொண்டாடப்பட்டிருக்கும். யதார்த்தவாதத்துடன் அழகியல் சேர்க்கைகள் மருந்துக்கும் இந்த நாவலில் காணமுடியாததினால் நாவலில் கட்டுரைத்தன்மையே மேலோங்கி நிற்கின்றது .
தமிழ் ஈழவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் பெயரைச்சுட்டவும் நூலாசிரியர் பயபக்தியுடன் ‘புனிதம்’ கெட்டுவிடாது மரியாதைக்குரிய ‘திரு’ , ‘அவர்கள்’ போன்ற சொல்லாடல்களைப் பாவித்திருக்கின்றார். இப்படியான சொல்லாடல்களை, நாம் விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடுகளான ” ‘எரிமலை’ மற்றும் ’களத்தில்’ போன்றவைகளிலேயே பார்க்க முடியும். ஓர் இலக்கியப் படைப்பில் இத்தகைய சொல்லாடல் முறைமையானது வாசகரது வாசிப்பு மனநிலைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். உயிர்த்திருத்தலின் அவாவுதல் காரணமாக பிரதான கதைசொல்லியான ஆதி வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்வதுடன் கதை நிறைவுக்கு வருகின்றது .பல்லாயிரக்கணக்கான உயிர்களின் அணைகளினூடாக கட்டியெழுப்பப்பட்ட போராட்டமானது மெதுமெதுவாகக் கரைந்து இறுதியில் அவாவுதலின் ஊடாக கதை சொல்லி வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்வதுதான் முறை என்றால் இன்றும் தாயகத்தில் உயிர்த்தலின் உறைபொருளாக இருக்கும் பல போராளிகள் அல்லவா போற்றப்பட வேண்டியவர்கள்? அவர்கள் ஆதியைப் போல ஓர் முடிவினை எடுக்கவில்லையே? ஆதி வெளிநாட்டில் என்னவாக இருக்கப்போகின்றான் என்று நூலாசிரியர் கோடுகாட்டி இருப்பாரானால் இந்த நாவலின் உயிர்ப்பானது இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும் .
ஓர் நூலுக்கு படைப்பாளி மட்டும் பொறுப்பாக முடியுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப்படைப்பிற்குரிய அழகான அட்டைப்படத்தைப் போட்டு, முக்கியமாக சொல்லாடல்களை தேர்ச்சி பெற்ற செம்மைநோக்குனரால் செம்மைப்படுத்தி, அந்த நூலை அழகுற வடிவமைப்பு செய்து வெளியே கொண்டு வருவது அந்த நூலை வெளிக்கொண்டுவரும் பதிப்பகத்தின் பொறுப்பாகின்றது. ஓர் நூலை வாசகன் வாசிக்கத் தூண்டுகின்ற முக்கிய விடயங்கள் அதன் அட்டைப் படமும், செய்நேர்த்தியான வடிவமைப்புமாகும். இந்த இரண்டு விடயத்திலும் உயிரணையானது வறுமைக்கோட்டுக்குள்ளேயே நிற்கின்றது. தமிழகத்துக்கு இணையான பல பதிப்பகங்கள் தாயகத்தில் வந்துவிட்டன. வாய்ச்சொல்லில் மட்டும் சுதேசியத்தைப் பேசாது இனியாவது புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளிகள் தாயகத்து அச்சகங்களையும் அதுசார் தொழில் நுட்பவல்லுனர்களையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
பல காத்திரமான படைப்புகளை தந்த நூலாசிரியர் இந்த நூலைப்பொறுத்தவரையில் ஓர் சரிவினையே கண்டிருக்கின்றார். ஆனால் இதுதான் இவரின் அடுத்த கட்ட நகர்வுக்கு சுயபரிசோதனைக்களமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை இதுவரை வெளியாகிய போர்க்கால கதைகள் யாவுமே எமது வலிகளையும் துயர்களையும் பேசிநின்று வாசகர்களின் உணர்ச்சி நிலைகளை தூண்டி சென்றன. வாசகர்களுக்கும் அது தேவையான ஒன்றாக இருந்தன. ஆனால் இத்தகைய போக்குகள் எதுவரைக்கும் செல்லப்போகின்றது என்றவொரு கேள்வி எழுகின்றது. இயக்கவிதியின் மூன்றாவது படிநிலையான “இருகூறுகள் ஒண்றுணைந்து மூன்றாவது பொருள் உருவாகி இருக்க வேண்டும்” அதாவது அடுத்த கட்ட நகர்வை போரியல் கதைகள் சொல்லிச் செல்ல வேண்டும். ஆனால் இதுவரையில் அப்படி ஏதும் இதுவரையில் ஈழத்தில் இருந்து வந்த போர்காலக் கதைகளில் ஏற்படவில்லை . இதை வருங்காலங்களில் போரியலைத்தளமாக கொண்டுள்ள படைப்பாளிகள் சிந்திக்க வேண்டும்.
போர்க்காலக்கதைகளின் வரலாறு என்பது அது கொண்டுள்ள மண்ணைப் பற்றியதாக இருப்பதைவிட, அந்த வரலாறானது அந்த மண்ணில் வாழுகின்ற மானிடர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஏனெனில், மானிடர்களே வரலாற்றின் பங்குதாரர்களாக இருக்கின்றார்கள். அந்த மானிடர்களே வரலாற்றின் காவிகளாகவும் இருக்கின்றார்கள். அவர்களே தங்களது வாய்மொழி மரபின் மூலமாக நனவிடை தோய்ந்தவைகளை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். எந்த ஒரு இடத்திலும் புவியமைப்பையும், சுற்றுச்சூழலையும், விடவும் மிகமுக்கியமானவன் அந்த நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மானிடனே. அந்தவகையில் இந்த உயிரணை நாவலானது ஓர் போராளியின் அகமனத்தைத் தொட்டுச்சொல்கின்றது. அதற்காக நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டவேண்டும். அத்துடன் சிறந்த கதை சொல்லியான நேசக்கரம் சாந்தி இந்த நாவலில் விட்ட தவறுகளை தமது அடுத்த படைப்புகளில் நேர்செய்வார் என நம்புவோம்.
மலைகள் -இந்தியா.
02-புரட்டாசி-2016
Comments
Post a Comment