ஈழத்தின் வடபுலத்தின் இளவாலை மண்ணுக்குச் சொந்தக்காரரான இளவாலை விஜயேந்திரன் ஈழத்துக் கவிகளில் தனக்கென்று தனிமுத்திரையைப் பதித்தவர். எனது பதின்மவயது காலத்தில் இவரது கவிதைகள் ஈழத்தின் அனைத்து சஞ்சிகைகளிலும் இடம்பிடித்திருந்தன. இவரது கவிதைகள் போர்க் குணாம்சம் கொண்டவை. வாசகனின் நாடிநரம்புகளை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை. உதாரணமாக, தனது ” ஆண்ட பரம்பரைக்கு ” என்ற கவிதையில் இவ்வாறு
குறிப்பிடுகின்றார் …………..
எமதூரின்
மன்னவரை எங்கேனும் கண்டீரோ?
வான முகட்டில்
வழி தெரியாச் சேனைப் புலத்தில்
காடுகளில்
ஊர்ப் புறத்துத் திண்ணைகளில்
அவருலவும் அந்தப் புரங்களில்.
பாவம்,
ஊர் முழுக்கக் குலுங்கியதில்
ஒப்பாரி வைத்தழுது
பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும்
சாகாமல் உயிர் வாழ்ந்தார்.
கோடிப் புறமிருக்கும்
குதிரை லாயங்களில்
இரவுகளில் வந்து தங்குவாரோ?
பிடியும்,
சேணம் இட்டுவையும்.
தொலைநீளக் கடற்பரப்பில்
நீந்தித் தொலைத்தாரோ?
மறுகரையில்,
இன்னும் ஒருதடவை
அழுது தொலைத்தாரோ?
பொழுதின் இருட்டோடு
இராவணனின் புஷ்பகத்தில்
போய்ச் சேர்ந்து விட்டாரோ?
சிம்மாசனம் அமர்ந்த
மாபெரிய மன்னவனின் படையெடுப்பை
விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ?
பாவம்தான்.
அக்கரையின் அரண்மனையில்
வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து
வேர்வையற்று,
உண்டு களித்து வாழ்கிறாரோ?
ஓய்வுக்கு,
வில்லெடுத்து வெளிக்கிளம்பிக்
காடுகளைத் திணறடித்து
(அவர் வீரம் தொலையாதா?)
வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ?
மன்னவன் தேரோடிய
வீதிகளில் கோடையிலோ
பாளம் வெடிக்கிறது.
வெடிப்புகளில் எங்களது
பச்சை ரத்தம் உறைகிறது.
கடல் குடைந்து மீன்தேடும்
மனிதர்களே!
அக்கரையில் அவருடைய தலைதெரிந்தால்
உரத்துச் சொல்லுங்கள்,
‘உங்கள் கிரீடம் எங்களிடம் இருக்கிறது.
தின்று கொழுத்தும், சிந்தித்தும்
உம்முடைய மண்டை பெருத்திருக்கும்
வரவேண்டாம்,
அளவுள்ளவன் சூடிக்கொள்ளட்டும்.’ (1985)
ஈழத்தில் எண்பதுகளின் பிற்கூற்றில் பிரபல கவிஞர்களது கவிதைகளோடு உருவாக்கப்பட்ட “மரணத்துள் வாழ்வோம்”கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகளும் உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நோர்வே நாட்டில் வாழ்ந்துவரும் இளவாலை விஜயேந்திரனை, நடு வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது ……..!
கோமகன்
0000000000000000000000
உங்களைப் பற்றி இளையவர்களாகிய நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும் ?
நான் ஓர் சாதாரணன். இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் பனிபடர் தேசத்தில் முகவரிகளைத் தொலைத்த ஓர் ஈழத்து அகதி.கொண்டுவந்த மூட்டைகளில் இலக்கியமும் கொஞ்சம் இருந்தது.அவ்வளவே!
உங்கள் இளமைக்காலம் எப்படியாக இருந்தது?
நான் இரு ஆசிரியர்களுக்கு மகனாகப் பிறந்தமையால் தமிழ்மீது சிறு வயதிலேயே பற்று இருந்தது என்று இன்றும் நம்புகின்றேன்.சிறுவயதில் எனது தந்தையாரும் தோழர்களாகிய சொக்கன், மதுரகவி இ.நாகராஜன் ஆகியோரும் ஒன்று சேர்ந்து உரையாடல்கள் நடைபெறுவது வழக்கம் என அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். மதுரகவி இ.நாகராஜனின் சிறுகதைத் தொகுதி ஒன்று (நிறைநிலா) வீட்டில் வாசிக்கக் கிடைத்தது .அதுவே எனது முதல் வாசிப்பு என நம்புகிறேன். அவரது கதைகளைப்போலவே நானும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை அந்தச் சிறுவயதில் அது எனக்கு ஊட்டியது. அந்தச் சிறுகதைத் தொகுதியின் பாதிப்பே, பின்னர் நான் இலக்கியத்துறையில் நுழைவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தது என்று எண்ணுகின்றேன். அவரைப் போலவே எனது பெயரையும் அச்சில் பார்க்கவேண்டும் என்று அப்போது விரும்பினேன் என்பதே உண்மை!
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்விபயின்ற காலத்தில் எனக்குக் கிடைத்த தலைசிறந்த தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வேறுபாடங்களில் ஆசிரியர்களாக இருந்தாலும் தமிழையும் இலக்கியத்தையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த ஆசிரியர்கள் எனது ஆர்வத்திற்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தார்கள். மகாஜனாக் கல்லூரியில் எனக்குப் படிப்பித்த திரு.சி.அம்பலப்பிள்ளை, கவிஞர் திரு செ.கதிரேசர்பிள்ளை ஆகிய இருவரும் தமிழ் விற்பன்னர்கள். அவர்கள் இருவரும் தந்த தமிழறிவுதான் என்னை இதுவரையிலும் வழிநடாத்துகின்றது. நான் சிறுவயதிலேயே தமிழை வழுவின்றி எழுதுவதற்கும், சரியாக உச்சரிப்பதற்கும் இவர்கள் இருவரும் உறுதுணையாக இருந்தார்கள். எனது ஆற்றலை அடையாளம் காட்டி நம்பிக்கை ஊட்டியவர்களும் இவர்கள்தான்! அதேபோல் எனக்கு உயிரியல் ஆசிரியராக இருந்த திரு.பி.நடராஜன் அவர்களும் மிக்க உறுதுணையாக இருந்தார். இவர் சிறந்த கவிஞர், விமர்சகர், ஆவணப்படுத்தலில் மிக நீண்டகாலமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகாஜனாக் கல்லூரியின் நூலகத்துக்கு மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கியவர்.அத்துடன் கலை இலக்கியத்தை வளர்ப்பதில் முன்னின்றவர். இவர்களால் என்னைப் போன்றவர்களுக்கு இலக்கிய ஈடுபாடு என்பது விளையாட்டுப் போலவே உற்சாகமாக இருந்தது. மகாஜன நூலகம், தமிழில் மட்டுமன்றிப் பிறமொழிகளில் வந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த இலக்கிய நூற்களையும் கொண்டிருந்தது. படிப்பை முன்னிறுத்தாமல் இலக்கிய ஈடுபாடு காட்டுவது, எமது பாடசாலையில் ஒரு “குற்றமாகக்” கருதப்படவில்லை. அப்பொழுதே, சிறுகதைக்கும் கவிதைக்கும் தமிழ்த்திறனுக்குமாக தொடர்ச்சியான வருடாந்தப் போட்டிகள் இருந்தன. நாங்கள் க.பொ.த சாதாரண வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கல்லூரியின் அதிபராக வந்த திரு பொ.கனகசபாபதி அவர்கள், போட்டிகள் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் என்றில்லாது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று போட்டியின் கட்டுப்பாடுகளை மாற்றியமைத்தார். அதுவே எனது முதல் வாய்ப்பாக (சரியாக நாற்பது வருடங்கள் முன்பு), முதற்தடவை நான் பங்குபற்றியபோது சிறுகதை, தமிழ்த்திறன் இரண்டிலும் மூன்றாம் இடம் கிடைத்தன. கவிதையில் இடமே கிடக்கவில்லை. (மூன்றிலும் முதலிடம் பெற்றவர் சேரன், மூன்றிலும் முதலிடம் பெற இன்னும் மூன்று வருடங்கள் தேவைப்பட்டன எனக்கு. இடையில் எவரும் அவ்வாறு வெற்றிபெற முடியவில்லை. சேரனுக்கு முன்பும் யாரும் பெற்ற நினைவில்லை!) சிறுகதை, கவிதைப் போட்டி என்றால் குறைந்தது இருப்பது பேராவது பங்கெடுப்போம். அப்போதைய பாடசாலைச் சூழல் அப்படித்தான் இருந்தது. இந்த சூழல்தான் பதின்ம வயதில் எனக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது என்று சொல்லலாம். மகாஜனாவுக்கு அதை நிறுவிய பாவலர் துரையப்பாபிள்ளையில் இருந்து மஹாகவி, அ.செ.மு, அ.ந.கந்தசாமி எனத் தொடர்ந்து மிக நீண்ட இலக்கிய பாரம்பரியம் இருந்தது. அதில் தொங்கிக்கொள்வது மிக இலகுவாக இருந்தது!
சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வமிருந்தது. அப்பொழுது கல்வித் தோழனாகவும் உறவினனாகவும் இருந்த (அவுஸ்திரேலியாவில் வாழும்) விக்கி என்ற விக்னேஸ்வரனும் என்னைப் போலவே தீவிர வாசகன். நாம் இருவரும் ஒன்று சேர்ந்து முதன்முதலாக, கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்தோம். அது இரண்டே இதழ்கள்தான் வெளியாகியது. அதே வேளையில் கல்லூரியில் வகுப்பு நண்பர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் விஞ்ஞானமன்றம் என்று ஒன்றை ஆரம்பித்து “அறிவு ” என்ற மாத சஞ்சிகையை ஆரம்பித்தோம். இது அந்தக் காலத்தில் ஒரு புதிய சாதனையாகக் கல்லுரியில் பாராட்டப்பட்டது. இதற்கு முக்கிய ஊன்றுகோலாகவும் வழிநடத்துனராகவும் இருந்தவர் மயிலங்கூடலூர் பி.நடராஜன். அவர் கற்பித்தது உயிரியற் பாடமாக இருந்தாலும் தனது தமிழ் அறிவினால் மற்றவர்கள் முன்னே, எங்களை ஒரு முன்னுதாரணமாக வழிநடத்தியவர்.
அதே காலகட்டத்தில் எனது கதை ஒன்று “சுடரிலும் ” கவிதை “அலை “யிலும் வெளியாகின. அவையே கல்லூரிக்கு வெளியே பிரசுரமாகிய எனது முதல் கதையும் கவிதையும் ஆகும் . அதில் “சுடரில் ‘வெளியாகிய கதை அந்த மாதத்துக்குரிய சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டது. அதேபோல “சுடர் ”அகில இலங்கை ரீதியாக நடாத்திய சிறுகதைப்போட்டியில் நான், பாலசூரியன், விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களையும் பெற்றிருந்தோம். அந்தகாலகட்டத்தில் நாங்கள் அவ்வளவு தூரத்திற்கு தீவிரமாக இருந்தோம். அது தந்த உற்சாகமே எங்களைத் தொடர் இலக்கிய செயற்பாடுகளில் வழிநடாத்தியது.
பின்னர் தொடர்ச்சியாக இலக்கிய முன்னெடுப்பில் பாலசூரியன், சபேசன், ரவி (அருணாச்சலம்) போன்றோர் என்னுடன் இணைந்து கொண்டார்கள். இதன் வெளிப்பாடாக, பாடசாலை நாட்களில் “புதுசு” என்ற காலாண்டுச் சஞ்சிகையை ஆரம்பித்தோம். ”புதுசு” சிறுபிள்ளை வேளாண்மையாக அல்லாமல், ஒரு புதிய வரவாக வெளியே பார்க்கப்பட்டது. அதில் வெளியாகிய கவிதைகள் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அதன் பெறுமதி அப்பொழுது (எமது வயது காரணமாகத்) தெரியாது போய்விட்டாலும், அந்தக் கவிதைகளை மற்றையவர்கள் இப்போதும் கொண்டாடும் பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நான் முதன் முதலில் சிறுகதையில் பரிசைப் பெற்றபொழுது ஆதவன் கதிரேசர்பிள்ளை தானாகவே என்னை அழைத்து எனது கதைகளில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழிநடாத்தினார். அவரே என்னை இலக்கியம், கலைகள் சார்ந்து கூடுதலாக வழிநடத்தியவர் எனலாம். அதே வேளையில் சேரனுடனும் உறவுகளை வளர்த்துக் கொண்டோம். அவரதும், ஆதவனண்ணையின் வீடும் எமது பாதி உறைவிடமாக இருந்தது. அங்கு நாங்கள் எந்த வேலையிற் செல்லவும் எதுவித தடையும் இருந்திருக்கவில்லை. சேரன், சோழன், பாண்டியன், பின்னாட்களில் ஒளவை என்று எல்லோரும் இலக்கியம் சார்ந்து கதைக்கக் கூடியதாக இருந்தது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் .
இந்தக் காலகட்டத்தில் “ஞாயிறு படைப்பாளிகள் வட்டம்’ என்ற ஒன்றை உருவாக்கினோம். இந்த வட்டமானது கலைரீதியிலான நிகழ்வுகளை முன்னெடுக்கவே உருவாக்கப்பட்டது. கவியரங்கில் பல்வேறு இடங்களில் சேரன், ஆதவன், பாலசூரியன் போன்றோர் பங்குபற்றியிருந்தோம். கவியரங்கு, கவிதாநிகழ்வாகப் பரிணமித்த காலம் அது. இந்த வட்டத்தினால் இலங்கையிலேயே முதன்முதலாகக் கிராமங்கள் தோறும் நான், சேரன், ஆதவன் ஆகியோர் கவிதாநிகழ்வுகளை நடாத்தினோம். அத்துடன் ஆதவன் கதிரேசர்பிள்ளையின் நெறியாள்கையில், மாவை நித்தியானந்தனின் ”திருவிழா” என்ற நாடகத்தில் எல்லோரும் பங்குபற்றியிருந்தோம். பாராளுமன்ற அரசியலைக் கடுமையாக விமர்சித்த அந்த நாடகமே, வடபகுதியில் முதன்முதலாகத் தெருவுக்கு இறங்கிய “வீதி நாடகமாகும் “.
“புதுசு“ வெளியாகிய நேரத்தில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் மூத்த இலக்கிய ஆளுமைகளான கே .டானியல், அ .யேசுராசா போன்றோர் கலந்து கொண்டு எங்களை உற்சாகப்படுத்தினார்கள். இவர்கள் வெவ்வேறு தளங்களில் பயணம் செய்தாலும் இளையவர்களை வளர்த்தெடுப்பதில் ஓரணியில் நின்றார்கள். அதேபோல இளவாலை நாடக மன்றத்தினர் எங்களுக்கு கலைகள் சார்ந்த முன்னெடுப்புகளில் மிகவும் அனுசரணையாக இருந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் “பாலம்” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கவிதாநிகழ்வைத் தமிழகத்தில் (சித்ரா, அருட்குமரனுடன்) முதற்தடவையாக நிகழ்த்தினேன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படியான ஒரு வடிவத்தின் கவிதை வாசிப்பைத் தமிழகத்தில் யாரும் கண்டதில்லை எனப் பலர் கூறினர்.
இப்படியான சூழல்களே என்னையும் நண்பர்களையும் மிகவும் உற்சாகமாக வழிநடாத்தக்கூடியதாக இருந்தது. அத்துடன் இந்த இளமைக்காலங்களே பின்னர் என்னைப் பற்றிப் பலர் பேசவும், என்னைச் சரியான கட்டுமானத்தில் வளர்த்தெடுக்கவும் உதவியது என்றும் சொல்லலாம்.
இலங்கையை விட்டு வெளியேறமுன்பு 1986 – 87 காலப் பகுதியில் ஈழமுரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன் பிரபல பத்திரிகையாளர் கோபு (எஸ்.எம்.கோபாலரட்ணம்) ஆசிரியராகப் பணிபுரிந்த அந்த நாட்கள், பத்திரிக்கைத் துறை பற்றிய ஒரு புரிதலை உண்டாக்கிய நாட்கள்.
உங்கள் கவிதைத்தொகுதிகள் நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா? இல்லையென்றால் அதற்கான பின்புலங்கள்தான் என்ன ?
எனது கவிதைகளை நூலுருவில் தொகுக்கவேண்டும் என்று எனது நண்பர்கள் பலர் ஆர்வம் தெரிவித்திருந்தார்கள். கனடாவில் வாழ்ந்து வருகின்ற “வழி ” செல்லத்துரையும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்ற “அரசு” என்கின்ற “நிழல் ” திருநாவுக்கரசுவும் அதில் முக்கியமானவர்கள். ஏதோ காரணங்களினால் நான் அதை அவ்வளவு தீவிரமாகக் கவனிக்கவில்லை. ஆனால் நான் புலம்பெயர்ந்து வந்ததன் பின்னர், புலம் பெயர்ந்த சூழலில் எழுதப்பட்ட கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்து அதுபற்றிய எதிர்வினைகளை அறியவேண்டும் என்றவோர் விருப்பம் எனக்கு இருந்தது. நான் எழுதுவது சரியா,பிழையா, என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பன பற்றி அறிய வாய்ப்பு எனக்கு இல்லாது போய்விட்டது. அதனை அறிய மிக விருப்புடன் இருந்தேன். அதுவே தொகுப்பிற்கான உண்மைக்கு காரணமும்கூட. இறுதியில் ஒரு தொகுதி வெளிவந்தது. அதில் நான் நோர்வேக்கு வந்த 87இல் இருந்து 92 வரை எழுதிய கவிதைகள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலும் நான் ஆசிரியர்களில் ஒருவராயிருந்த “சுவடுகள்” சஞ்சிகையிலும், ஏனைய புலம்பெயர் சஞ்சிகைகளிலும் வந்த இந்தக் கவிதைகளின் தொகுப்பு சில காரணங்களினால் இரண்டு மூன்று வருடங்களாக வெளியீட்டுத் தடங்கல் ஏற்பட்டு, இறுதியில் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் முன்முயற்சியில் தமிழகத்தில், தேசியக் கலை இலக்கிய பேரவையினுடாக வெளிவந்தது. அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர் “நிறமற்றுப் போன கனவுகள்”. கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக்கழத்தில் இந்தக் கவிதைத் தொகுதி புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பிரிவில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தக் கவிதைத் தொகுப்பு “காலம்” செல்வத்தின் மூலம் மீள்பதிப்பாக கனடாவில் வெளியாகியது. அந்த நூலை வெளிக் கொண்டுவந்ததின் நோக்கம் (நான் ஏலவே கூறிய எதிர்வினைகள் பற்றி அறிதல்) இன்றுவரை எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஒரு விடயத்தை நண்பர்கள் (குறிப்பாகச் சேரன், கருணாகரன் போன்றோர்) எனக்கு உறைக்கச் சொன்னார்கள்,புலம்பெயர்ந்த பின்னர் எழுதிய கவிதைகளை விட, நான் ஆரம்பகாலத்தில் எழுதிய அரசியல் கவிதைகள் தொகுக்கப்பட்டிருப்பின் அந்த கவிதைத் தொகுப்பானது பல வீச்சுகளைக் கொண்டிருக்கும் என்று. அதற்கு (அவ்வாறு நிகழாமைக்கு) நானும்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
எனக்குத்தெரிந்தவரையில் ஏறத்தாள இராண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் எழுத்துப்பரப்பில் நீங்கள் நீண்ட மௌனம் சாதித்து வருகின்றீர்கள்.இதற்கு என்னதான் காரணமாக அமைந்தது ?
முதலாவதாக என்னைப்பொறுத்தவரையில் எல்லா எழுத்தாளரது வாழ்க்கையிலும் படைப்புகள் தொடர்பாக ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பானதே என நம்புகிறேன். படைப்பு என்பதற்கு வெவ்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமாக அது இயல்பாக வரவேண்டியது.அதனை வலிந்து திணிக்க முடியாது. எனது படைப்புகளுக்கு ஒத்துவரக் கூடிய சரியான தளம் அமையாததினாலேயே எனது தொடர் மௌனம் நீடிக்கின்றது என நான் நினைக்கிறேன்.இலங்கையில் “சரிநிகர்” வரும்பொழுது எனக்கு அது ஓர் பிரச்சனையாக இருந்திருக்கவில்லை இங்கு நோர்வேயில் நாங்கள் “சுவடுகள்” கொண்டுவரும் பொழுதும் பிரச்சனையாக இருந்திருக்கவில்லை.எப்பிடியாவது எங்கையாவது எனது எழுத்து வரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு பெரும்பாலும் இருந்ததில்லை. அச்சில் எனது படைப்பைப் பார்க்கும் ஆசை தீர்ந்து மிக நெடுங்காலம் ஆகிவிட்ட்து. என்னை எழுதும்படி யாராவது வற்புறுத்தி எழுத வைத்தாலே உண்டு. அதில் முக்கிய பங்காற்றியவர் லண்டனில் வசிக்கும் பத்மநாப அய்யர்.
இரண்டாவதாக,இந்தக்கால கட்டங்களில் எனது வாசிப்பு மனநிலையென்பது படிப்படியாகக் குறைந்து இல்லையென்ற நிலைக்குப் போய்விட்டது. அது எனக்கு மீண்டும் எழுதுவதில் பெரும் தடையை ஏற்படுத்தியதே மிகப்பெரிய உண்மை. வாசிக்கும்பொழுதுதான் பல மாறுபட்ட சிந்தனைகள் ஏற்பட்டு படைப்பு உந்து சக்தி ஏற்படும் எனநம்புகின்றேன். இந்த நிலை சிலவேளைகளில் உடையலாம், அது காலத்தின் தீர்ப்பில்தான் உள்ளது. இந்த மந்தநிலைகளை, நான் மிகவும் மதிக்கின்ற படைப்பாளிகளிடம் கூட என்னால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதை மௌனம் சாதிப்பது என்று கருதுவதில் நான் முரண்படுகின்றேன்.ஒரு படைப்பாளியானவன் எப்படி எழுதுகின்றானோ,அதேபோல் அவன் எழுதாமல் விடுவதற்கும் அவனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு என நம்புகிறேன். படைப்பு என்பது எழுதும்போது மட்டும் நிகழ்கின்ற ஒரு செயல் அல்லவே.
உங்களுடைய கவிதைகள் பொதுவாகவே போர்குணாம்சம் கொண்டவையாக இருந்திருக்கின்றன.இப்படியான கவிதைகளை புனைவதற்கு ஏதுவான பின்புலங்கள் எப்படியாக இருந்தன?
நீங்கள் சொல்கின்ற வரைவிலக்கணம் எனக்குப் பொருந்துமோ தெரியவில்லை. நாங்கள் /நான் எழுதத்தொடங்கிய காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நான் பார்த்த, கேட்ட, அனுபவித்த சம்பவங்களைப் பாடுபொருளாக்கி இருந்திருக்கின்றேன். அந்தக் காலகட்டங்கள் இயல்புவாழ்க்கை என்பது இல்லாதிருந்த காலம். நிஜவாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிய முக்கியமான காலகட்டம். அத்தகைய காலத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று என்னைப் போன்றவர்களுக்கு/ எனக்கிருந்தது.அதுவே எனது கவிதைகளில் முக்கிய பாடுபொருளாக அமைந்தது என்று சொல்வேன்.ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இன்னும் அதிகமாக எழுதியிருக்க வேண்டும் போலத் தோன்றுகின்றது.
நவீன கவிதைகளைப் பற்றிய உங்கள் எண்ணப்பாடு எப்படியாக இருக்கின்றது ?
முதலில் நவீனம்/நவீனத்துவம் என்பதில் எனக்கொரு தெளிவுநிலை இல்லை. நான் எண்பதுகளில் எழுதிக்கொண்டிருக்கும் பொழுதில் நவீனமாக இருந்தது இப்பொழுது பழசாகி விடுகின்றது. கலை, இலக்கியப்படைப்புகளான கதை, கவிதை, நாடகம், ஓவியங்கள் போன்ற எல்லா வடிவங்களுமே அந்தந்தக் காலகட்டத்திற் பொருத்திப் பார்க்க வேண்டுமேயொழிய அதை நாங்கள் இதுதான் நவீனம் என்று நிரந்தரமாக வரையறை செய்ய முடியாது என்றே நம்புகின்றேன். இந்த நவீனத்துவம் என்ற சொல்லாடலே என்னைப் பொறுத்தவரையில் ஒரு சங்கடமான சொல்லாடலாகவே தெரிகின்றது. உதாரணமாக எழுபதுகளின் பிற்கூற்றில் கொழும்பில் இருந்தும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் வந்த நாடகங்களை “நவீன நாடகங்கள் ” என்று அழைத்தனர். இப்பொழுதும் நாடகங்கள் வருகின்றன. அதுவும் நவீன நாடகம் என அழைக்கப்படுகின்றது. அப்படியானால் எழுபதுகளில் வெளியாகிய நாடகங்கள் நவீன நாடகம் இல்லையா என்றவோர் கேள்வி எழுகின்றது. ஆனால் சில படைப்புகள் இருக்கின்றவற்றை உடைத்துக்கொண்டு ஒரு புதிய வெளியை உருவாக்குமானால், அதை ஓரளவுக்கு நவீனத்துவம் என்று சொல்லலாம் என எண்ணுகின்றேன். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்டகாலத்தில் வந்தவைதான் நவீனத்துவம் என்று சொல்லப்படுவதில் நான் முரண்படுகின்றேன்.
உங்களைப்பொறுத்தவரையில் ஓரு நல்ல கவிதைக்கான வரவிலக்கணம்தான் என்ன ?
இந்தக் கேள்விக்கான பதிலை நான் ஒரு படைப்பாளி நிலையில் இருந்து சொல்வதை விடுத்து ஒரு வாசகன் என்ற நிலையிலேயே சொல்ல விரும்புகின்றேன். ஒரு கவிதையானது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டும். அதாவது, அது சொல்லவரும் விடயத்துக்கு நேர்மையாக இருக்கவேண்டும். அத்துடன் கவிதையானது அதிகமாக வாசகனைத் துன்புறுத்தக்கூடாது என அதிகம் நம்பிகின்றவன் நான். எளிமையான சொல்லாடல்களில் தீவிரமான பலவிடயங்களை கவிதையில் சொல்ல முடியும். நான் விரும்பி வாசித்த கவிஞர்கள் எல்லோருமே மிகத்தீவிரமான விடயங்களை எளிமையாக எழுதினார்கள். எளிமையில் இருந்து விலகி புதிர் போன்ற கவிதைகளின் பாடுபொருட்களை நான் அதிகம் ரசிப்பதில்லை. (அதை முற்றிலும் நிராகரிக்கிறேன் எனப் பொருள் கொள்ளத் தேவையில்லை.)
நீங்கள் சொல்லியிருந்தீர்கள் ‘ஓர் கவிதையானது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டும்.’ என்று அதை படைத்த கவிஞனும் நேர்மையாக இருக்க வேண்டுமா? இல்லை கவிதை மட்டும் நேர்மையாக இருந்தால் போதுமா ?
படைப்பாளியானவன் நேர்மையாக இல்லாதவிடத்து அவன் சொல்லப் போகின்ற படைப்பும் நேர்மை இல்லாது போய் விடுகின்றது. படைப்பாளி நேர்மையானவரா என்பதை வரையறுப்பதில் சில மாறுபாடுகள் ஏற்படும். சில படைப்பாளிகள் தமது தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் படைப்புகளில் போட்டு குழப்பிக் கொள்வது வழமை. ஆனால் அது இயல்பானது என்றே எடுக்க வேண்டும். ஏனெனில் படைப்பாளியானவன் வானத்தில் இருந்து குதித்து வந்தவனல்லன். ஒரு மனிதனுக்கு உள்ள ஆசாபாசங்கள் அவனுக்கும் உண்டு என்ற உண்மையை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் அவனது சொந்த வாழ்க்கை பிரச்சனைகள் படைப்புகளில் தெறிக்கும் பொழுது அது வேறுவகையான ஓர் தளத்துக்கு அவனை இட்டுச்செல்கின்றது. இத்தகைய போக்கு எல்லாப்படைப்பாளிகளிடமும் உண்டு. அதே வேளையில் நல்ல படைப்பாளிகள் என்று நம்பப்படுபவர்களிடமும் இதே பிரச்சனைகள் உண்டு. அதற்காக படைப்பாளியானவன் நூறு விகிதம் நேர்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவன் சொல்ல வருகின்ற விடயத்துக்கும் அவனுக்கும் முடிந்தளவு நேர்மையாகவே இருந்தால்த்தான் அவனும் அவனது படைப்பும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீண்டகாலம் வாழும் என நம்புகின்றேன்.
கவிதையுலத்தினுடனான உங்கள் தொடர்பு ஓரு நீண்ட சஞ்சாரத்தைக் கொண்டது. இந்த சஞ்சரிப்பில் கவிதையுலகின் உச்சம் அல்லது பின்னடைவு என்று எதனைக் குறிப்பிடுவீர்கள் ?
எனது கவிதைகள் முதலில் வெளியாகிய 76ல் இருந்து ஏறத்தாழ 80வரை ஆரம்பத்தில் வானொலிக்காக நிறையவே எழுதியிருக்கின்றேன். வானொலியில் எந்தக்கவிதையுமே வெளியாகும் என்றவொரு சூழல் அந்தக் காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அவ்வாறு எழுத எனது வயதும் ஒரு காரணமாக இருந்தது. அந்த வயது புகழை மட்டுமே நாடியிருந்தது. ஆனால் புகழுக்காக மட்டும் எழுத கூடாது என்ற அனுபவங்களால் அவற்றைக் கடந்து 80களுக்குப் பின்னர் நான் எழுதிய கவிதைகளை, எனது படைப்புக்காலத்தில் உச்சமானவையாகக் கருதுகின்றேன். அந்தக்காலத்தில் எழுதிய கவிதைகளையே பேராசிரியர் கா சிவத்தம்பி விதுந்துரைத்ததும் பலர் வாசித்துப் பாராட்டியதும். அந்தக் கவிதைகளின் பாதிப்பால் சிலர் புதிதாக எழுத வந்தோம் என்று கூறுவதும் (கி.பி.அரவிந்தன், தேவ அபிரா போன்றோர் தமது செவ்விகளில் இதனைக் கூறியுள்ளனர்) மகிழ்ச்சிதான்.
உங்களால் கவிதையுலகில் சுதந்திரமாக இயங்க முடிந்திருந்ததா ?
இல்லை என்று சொல்ல முடியவில்லை. எனக்கான இடத்தை நானே தீர்மானித்தேன் எனது படைப்புகளை பாராட்டியவர்களும் இருக்கின்றார்கள். விமர்சனம் செய்தவர்களும் இருக்கின்றார்கள். பொதுவாகவே படைப்பாளிகள் தங்களுக்கான சுதந்திரத்தைத் தாங்கள்தான் தேர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். எனது படைப்புகள் இப்படித்தான் வரவேண்டும்/ வரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தவர்கள் இல்லை, அவ்வாறு கூறுவோரை நான் அனுமதிக்கவும் மாட்டேன். அதேபோல எனக்குள்ளும் சில மனக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனால் சிலவேளைகளில் நான் விரும்பியும் எழுத முடியாத நிலைகள் இருந்திருக்கின்றன. நான் விரும்புகின்ற விடயங்களை வேறு ஒருவர் மிகஅழகாக எழுதும் பொழுது என்னால் இவ்வாறு துணிந்து எழுதமுடியவில்லையே என்று கவலைப்பட்டும் இருந்திருக்கின்றேன். உதாரணமாக பேசாப்பொருள் விடயங்களில் எனக்கொரு மனத்தடங்கல் இருந்து வந்திருக்கின்றது. அது வேறு ஒருவகையில் வெளியே வரும்பொழுது இத்தகைய அனுபவங்களை பெற்று இருக்கின்றேன்.
கவிதைகளின் எதிர்காலப் பரிணாமம் எப்படியாக இருக்கும் என்று எண்ணுகின்றீர்கள் ?
என்னைப் பொறுத்தவரையில் இலக்கியமானது படிப்படியாக சுருங்கிக் கொண்டு வருவதாகவே எண்ணுகின்றேன். காரணம் உலகமானது எண்ணிப்பார்க்க முடியாதவாறு வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. எனது காலத்தில் ஒரு நூல் வெளியே வருவதானால் அது குறைந்தது ஆயிரம் பிரதிகள் வெளியாகும். அவை அனைத்தும் பெரும்பாலும் விற்று முடிந்துவிடும். இன்றைய காலத்தில் நூறு பிரதிகள் விற்பனையாவதே ஒரு சாதனையாகக் கருதுகின்றார்கள். நாங்கள் எவ்வளவோ முன்னேறி விட்டோம் என்று சொல்கின்றோம். ஆனால், வாசிக்கின்ற மனநிலை திருப்திகரமாக இல்லை. சமகாலத்தில் இலக்கியம் என்பதே ஓர் குறிப்பிட்ட குழுவினர் தங்களுக்குள் வாசித்து விட்டு செல்கின்ற நிலைக்குள் வந்து விட்டது என்பதே யதார்த்தம். கவிதை என்பதையும் இந்தப் பகுப்பிலேயே உள்ளடக்கலாம். கவிதை என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள் தாராளமாக எழுதிக்கொண்டு இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்துக்குப் பேசப்படுகின்ற கவிதைகளின் எதிர்காலமானது மிகவும் குறுகிவிட்டது என்பதுதான் எனது துயரமான மனநிலை. முப்பது வருடங்களுக்கு முந்திய இரு தடவைகள் மட்டுமே மேடையேறிய எனது நாடகப் பாடல் ஒன்றினை, ஒரு நண்பர் நினைவில் வைத்திருந்து, அண்மையில் முகநூலில் பதிவிட்டிருந்தார். அது பிரசுரமான ஒன்றல்ல. நாற்பது வருடங்கள் பழசாகிவிட்ட எனது இன்னொரு கவிதையை லண்டனில் நிகழ்ந்த சந்திப்பொன்றில் சபேசன் மனதில் இருந்து ஒப்புவித்தான். இப்போதுள்ள கவிதைகள் எத்தனை பத்து வருடங்களைத் தாண்டும் (நான் எழுதினாலும்தான்.) ??
அதாவது ஹைக்கூ கவிதை வடிவங்களே எதிர்காலத்தில் உச்சம் பெறும் என எண்ணுகின்றிர்களா ?
ஆம் ………. ‘நேரம்’ என்பதை கவிஞர்கள் கணக்கில் எடுத்து கவிதையை கடுகில் குறுக்கினால் வெற்றியடையலாம். மஹாகவி காலத்திலேயே அவர் அழகாக எழுதியும் கூட நெடுங்கவிதைகள் சவால்களை சந்தித்தன.அதன் பின்னர் வ ஐ செ ஜெயபாலன் நெடும்கவிதைகளை குறைவாக எழுதி அதில் வெற்றியடைந்துள்ளார். சிறிய கவிதைகள் கூட செறிவான சொற்செட்டுள்ள கவிதைகள் அருந்தலாகவே வந்து இருக்கின்றன. இவைகள் சரியாக அங்கீகரிக்கப்படும் சூழல்கள் இல்லை என்றே எண்ணுகின்றேன்.அதற்கு முக்கிய காரணியாக இருப்பது கவிதை என்று எண்ணிக்கொண்டு எழுதுபவர்கள் வாசகர்களை விட அதிகமாக இருக்கின்றார்கள். இதற்கு சமூகவலைத்தளங்களின் அசுரவளர்ச்சியும் ஓர் காரணம். ஆனால் இந்த சூழலை உடைக்க வேண்டுமென்றால் ஓர் குழுமமாக கவிஞர்கள் செயல்பட்டு தரமான கவிதைகளை பரவலாக்க வேண்டும். அது தொடர்பான விமர்சன, கலந்துரையாடல்களை ஏற்படுத்தல் மூலம் ஓரளவு செயல்படுத்த முடியும் என எண்ணுகின்றேன். இல்லையானால் கவிதைகள் எழுதுபவர்கள் அருந்தலாகவும், கவிதை மாதிரி எழுதுபவர்கள் மிகவும் அதிகமாகவும் இருக்ககூடிய அபாயகரமான சூழலே ஏற்படும்.
ஒப்பரிவகை கவிதைகளின் புனைவு பற்றிய உங்களின் பார்வைதான் என்ன?
பொதுவாகவே கவிஞர்களின் அனுபவத்தின் ஊடாகவே அவர்களது பாடுபொருட்கள் கட்டமைக்கப்பட்டிருக்கும். கவிஞர்களது அனுபவங்கள் துயர் படிந்ததாகவும் நம்பிக்கையீனங்களாகவும் இருக்குமாயின் இப்படியான ஒப்பாரி வகைக் கவிதைகள் வருவது தவிர்க்க முடியாது. ஆனால் கவிஞன் என்பவனுக்கு சமூகத்தில் ஒரு பொறுப்புணர்வு இருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். அவர்கள் ஆயிரம் கவலைகள் துயர்கள் இருந்தாலும் தம்மை சுற்றியுள்ள சமூகத்திற்குப் புதிய தேடல்களையும், வாழ்வு மீதான நம்பிக்கைகளையும் விதைப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். சில வேலைகளைகளில் தங்களையும் மீறி இவ்வாறான கவிதைகள் வருவதுண்டு. ஆனால் காலப்போக்கில் சமூகப்பொறுப்பும் புதிய தேடல்களை உருவாக்கும் கவிதைகளுமே நிலைத்து நிற்க வல்லன.
தன்- மையைக் கவிதைகளின் மீதான உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ?
உங்கள் கேள்வியான ஒப்பாரிவகை கவிதைகளுக்கு நான் அளித்த பதில் இதற்கு ஓரளவு பொருத்தமானது. நீங்கள் எதுவாக இருக்கின்றீர்களோ அதுவாகவே உங்கள் வெளிப்பாடும் இருக்கும். கவிஞன் சிறிய வட்டம் அல்லது உலகத்திற்குள் நின்று சுழலத் தொடங்கினால் அவனது வெளிப்படுத்தும் ஆற்றலும் அதற்கேற்பவே இருக்கும். ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு வெளியுலகத்தொடர்புகளை அதிகப்படுத்துகின்றானோ அதற்கேற்ப அவனது தேடல்களும் பன்முக ஆற்றல்களும் வெளிப்படும் என எண்ணுகின்றேன்.
முகநூலின் பாவனை இன்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கின்றது.இதனால் ஓரு கவிஞனது அல்லது படைப்பாளியினது ஆக்குதிறன் மழுங்கடிக்கப்படுகின்றதா ?
எந்த ஒரு விடயமும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாதபொழுது அது எம்மையே விழுங்கி கொள்ளக் கூடிய அபாயம் என்ற ஒன்று உண்டு. சமூக வலைத்தளங்களும் ஏறத்தாழ இதையே ஒத்துள்ளன. ஆனால், சமூகவலைத்தளங்கள் மிக ஆழமான விடயங்களையும் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆக எதை நாங்கள் தெரிவு செய்கின்றோமோ அதில் எமக்கான பயன்பாடுகள் இருக்கும். குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வாழ்க்கையில் தொலைத்த பல உறவுகளை மீட்டுத் தந்துள்ளது என்பதனை மறுக்க முடியாது. நேரம் என்பதை அவற்றைப் பயன் படுத்துபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
உங்களைப்பொறுத்தவரையில் கவிதைக்கு ஆண் மொழி பெண்மொழி என்று உள்ளதா ?
விக்கிரமாதித்தன் கதைகளைப் பார்த்தோமானால், அதில் கூடு வீட்டுக் கூடு பாய்வது போனற கதைகள் வரும். ஒருவன் அந்தப் பாத்திரமாகவே மாறி அதன் இயல்புகளை வெளிப்படுத்துவது கலைஞனுக்கு கொடையாகும். இந்த சித்தி கைவரப்பெற்றவர்கள் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணவில்லை. ஆனாலும் நாம் வளர்ந்த சூழல்களினால் ( பிரதேசம் சார்ந்து ) சிலவேளைகளில் இருமொழிகளுக்குமான நுண்ணிய வேறுபாடுகளை உணரக்கூடியதாக இருக்கும். இருந்த போதிலும் நான் ஏலவே கூறிய கூடு விட்டு கூடு பாயும் கலை கைவரப்பெற்றவர்களுக்கு இந்தப் பிரிவினை ஒரு பொருட்டல்ல. தான் சார்ந்த நிலையை வெளிப்படுத்தும் ஒருவரை ஆண்மொழி/ பெண்மொழி பிரயோகிக்கிறார் என நீங்கள் வரையறுக்கக் கூடும். இவ்வாறு வேறு பகுப்புகளும் சாத்தியமே.
நீங்கள் கவிதைக்கு கொடுத்த முக்கியத்தவத்தை ஏன் சிறுகதைக்கு கொடுக்கவில்லை ?
இதை நான் அடிக்கடி என்னிடமே கேட்டதுண்டு. பாடல்கள் எழுதியிருக்கின்றேன். நாடகங்களும் எழுதியிருக்கின்றேன். ஒரு சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். குறுநாவலும் எழுதியிருக்கின்றேன். ஆனால், எனக்குத்தோதான வாகனமாகக் கவிதையே இருந்தது. கவிதையில் நான் எண்ணியதை அச்சொட்டாக சொல்ல முடிந்தது.மற்றைய வடிவங்களில் எனது எண்ணங்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிரமமான காரியமாக இருந்தது. எனது எண்ணங்களை கவிதையாக வெளிப்படுத்தும்பொழுது மனதிற்கு ஓர் உவப்பாக இருக்கின்றது. நான் ஒரு விடயத்தையும் திருத்தி திருத்தி எழுதுவது குறைவு. நான் தனிமையாய் உணரும்பொழுது சில கவிதை வரிகள் தோன்றுவதுண்டு. அதை நான் அப்படியே எழுதிவிடுவதுதான் எனது வழக்கம். இந்த வசதிகள் எனக்கு மற்றைய வடிவங்களில் இல்லையென்றே சொல்வேன். அத்துடன் மற்றைய வடிவங்களில் எனது வெளிப்படுத்தும் திறன் குறைவாகவே உணர்கின்றேன்.குறிப்பாக நாடகங்களில் இந்த குறைபாட்டை உணர்ந்தேன். அதனால் நாடகத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.மற்றைய துறைகளில் எழுதுவது எனக்குப் பெரிய சுமையாகவே பட்டது ஆனால் கவிதையில் எழுதாமல் கவிதை வரிகள் எனது மூளையின் ஓரத்தில் பதிந்து இருந்தன.
புலம்பெயர் இலக்கியத்தைப் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ?
பொதுவாக ஈழத்தில் இருந்து யுத்த சூழல்/ பொருளாதார காரணிகளால் இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் படைப்புகளையே புலம்பெயர் இலக்கியம் என நாம் கூறுகின்றோம். நான் சொல்லப்போகின்ற பதிலும் இதனடிப்படையிலேயே இருக்கும். இந்தப்புலம்பெயர் இலக்கியத்தின் அடிப்படை விடயங்கள் தாயகத்தின் மீதான கோபங்கள் துயரங்கள் மீள்நினைவுகள் என்பனவையே. அவற்றில் இருந்து விடுபட்டு புலம்பெயர் சூழல்களில் கதைக்களங்களை அமைத்த படைப்புகள் ஒப்பீட்டளவில் மிக்க குறைவு. இது ஏன் என்பது எனக்கு இன்றும் புரியாத புதிராக உள்ளது. அந்த நிலை வெகுவிரைவாகவே மாறிவிடும் என்றே எண்ணுகின்றேன். அடுத்த தலைமுறை, இலக்கியம் படைக்கும் பொழுது அது தமிழில் இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அதையும் புலம்பெயர் இலக்கியம் என்றே நாங்கள் எடுக்க வேண்டும். அவர்களது வாழ்வு அனுபங்களை புலம்பெயர் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே நாங்கள் பார்க்கவேண்டும் என நான் விரும்புகின்றேன். அது வெளிவருவதற்குரிய காலம் வெகுவிரைவிலேயே வந்துவிடும் என்பது உண்மை. அதேவேளையில் நான் இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இதுவரை காலமும் புலம்பெயர் இலக்கியம் வளர்ச்சியடைவதற்கு, பல தனிப்பட்டவர்களின் உழைப்பினால் வெளியாகிய பல சஞ்சிகைகளின் மூலமே பல எண்ணற்ற படைப்புகள் அடையாளப்படுத்தப்பட்டன. எல்லாமே ஒருவித பொருளாதார ஆதாரங்களும் இல்லாது தனிப்பட்டவ ர்களது சொந்த உழைப்பும் அர்ப்பணிப்புமே தமிழர் சூழலில் புலம்பெயர் இலக்கியம் எனற சொல்லாடலைப் பேசுவதற்கு அடித்தளமிட்டிருந்தன. அந்தவகையில் நான் 1988இல் இருந்து 1998வரையில் நோர்வேயில் இருந்து வெளியாகிய “சுவடுகள் “சஞ்சிகையில் கணிசமான பங்கை ஆற்றியிருக்கின்றேன் என்பது எனக்கு மகிழ்ச்சி தருவது!
புலம்பெயர் இளைய சமூகம்தான் புலம்பெயர் இலக்கியத்தின் போக்கை தீர்மானிக்கின்ற சக்தி என்று சொல்லியிருந்தீர்கள்.இவர்களது ஆக்கங்களானது அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் மொழிகளில் வரும் என எண்ணுகிறீர்களா ?
ஆம்…அதுதான் அடுக்கட்ட நகர்வாக இருக்கும் என எண்ணுகின்றேன். எமது காலங்கள் முடிவதற்கு அதிக தூரங்கள் இல்லை. எமது காலங்களில், எமக்குத்தெரிந்த தமிழ் மொழியிலேயே எழுதினோம்/எழுதுகின்றோம் ஓரிருவர் விதிவிலக்காக. வந்த இடத்தில் அந்தந்த மொழிகளை லாகவமாகக் கையாளக் கூடிய ஒருசிலரைத்தவிர நான் படைப்பாளிகளைப் பெரிதாகச் சொல்ல மாட்டேன். அந்த நிலையில் இளையவராலேயே அடுத்த கட்டத்துக்கு புலம் பெயர் இலக்கியத்தை புதிய வீச்சில் நகர்த்த முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு முகங்களைக் கொண்ட படைப்புகளாக அந்தப் படைப்பாற்றல்கள் வெளியாகும் என நம்புகின்றேன். அத்துடன் அவர்கள் மிகலாகவமாக தங்கள் தங்கள் மொழியை வெளிப்படுத்துவதால் எமது இலக்கியமானது பலகட்டத் தளங்களில் பயணிக்கத் தொடங்கும்.
தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இலக்கியச்சந்திப்புகள் ஈழத்து தமிழ் எழுத்துப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றீர்களா?
அப்படி அதிர்வுகளைக் கொண்டுவருவதானால் இதுவரையில் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன்.1989 ஆண்டு டிசம்பர் மாதம் பெர்லினில் நடைபெற்ற 8 ஆவது இலக்கிய சந்திப்பில் முதன் முதலில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.அத்துடன் நோர்வேயில் நடைபெற்ற முதல் இலக்கிய சந்திப்பிலும் கலந்து கொண்டேன். இலக்கிய சந்திப்புகளில் நான் பார்த்த ஒரு நேர்மறையான ஓர் விடயம் என்னவென்றால், பல்வேறு தளங்களில் இருந்தவர்கள் அனைவரும் அங்கு வந்து தாம் எண்ணியதை எதுவித தடங்கலும் இன்றி சுதந்திரமாகப் பேசிச் செல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் அதில் மிகப்பெரிய பலவீனமாக இருந்த விடயம் என்னவென்றால் ஓர் இலக்கிய சந்திப்புக்கும் அடுத்த இலக்கியச் சந்திப்புக்கும் இடையில் போதிய ஆவணப்பதிவுகள், தொடர்ச்சிகள் இருப்பதில்லை. அதுதொடர்பான பேச்சுக்கள் அடுத்த சந்திப்பில் கலந்துரையாடப் படுவதில்லை. இந்த ஆவணப்படுத்தல்கள் இலக்கியச் சந்திப்பில் பங்கு பற்ற முடியாதவர்களுக்கு எந்த நேரத்திலும் அதை பார்ப்பதற்கு உரியதாக இருக்க வேண்டும். ஆனால், அந்தச் செயல்பாடானது பெரியளவில் நடைபெறவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது பலவீனமாக விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புகள், மிக இலகுவாக இவர்களைத் தமக்கு எதிரானஅமைப்பு என்று பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, மற்றவர்கள் அவர்களைப் பகிஸ்கரிக்க செய்ததின் மூலம் இந்தச் சந்திப்பானது ஒரே திசையில் சென்றதுடன், விடுதலைப்புலிகளுடன் உடன்பாடு கொள்ளாதவர்களின் சந்திப்பு என்ற தோற்றத்தைக் கொடுத்தது. அத்துடன் தொடர் பிரச்சாரத்தால் அந்த எண்ணக்கருத்தை உறுதி படுத்தியும் இருந்தது. இந்த சந்திப்பு ஜனநாயகத்துக்கான குரலாக இருந்த போதிலும், அதில் எல்லோரும் பங்கு பற்ற முடியவில்லை என்பதும் உண்மை. அத்துடன் சந்திப்புகளானது ஒன்றிற்கொன்று தொடர்புகள் இல்லாது ஒவ்வொருவரும் தமது தெரிவையும் தமக்குத் தமக்குத் தெரிந்தவர்கள் மூலம் நடத்த முற்பட்டதால் அதன் அர்த்தம் என்பது கொஞ்சம் திரும்பித்தான் போய் விட்டது. ஆனால் ,சாதகமான அம்சம், அங்கு யாரும் எப்பொழுதும் எதையும் சுதந்திரமாகக் கதைக்கலாம் என்பது மறுக்க முடியாதது. அப்படியான சுதந்திரம் இலக்கியச் சந்திப்புத் தவிர்ந்த இடங்களில் கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் 89/90 களில் அரசியல் தொடர்பான கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படட வேளையில், கூட்டம் போட்டு கதைப்பது என்பது மிகவும் துணிச்சலான விடயம். அதுதான் இலக்கியச்சந்திப்பின் ஆரம்பகட்ட சாதகமான அம்சம். அந்த அம்சமானது ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தேவை இல்லாமலே போய் விட்டது. அதாவது ஒரு கட்டத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் தங்கள் காலத்திலோ /இல்லாத காலத்திலோ இதனைப் பற்றி பொருட்படுத்தாமலே போனதின் பின்னர் அங்கு வருகின்றவர்கள் தங்களைத் தாங்களே பிரமுகர்கள் ஆக்குகின்ற முன்னெடுப்புகள் தொடங்கியதால் புலம்பெயர் இலக்கிய சந்திப்பின் அதிஉயர் பெறுமதி என்பது ஏறத்தாழ இல்லாமலே போய் விட்டது. இன்றைய இலக்கிய சந்திப்பானது இலக்கியக்காரர்கள் சந்திக்கின்ற நிகழ்வாக இருக்கின்றதே ஒழிய, இலக்கிய ரீதியாக முன்னெடுப்புகளை செய்கின்றதா என்பதில் எனக்குச் சந்தேகங்கள் உண்டு. இந்தக் காரணங்களினால் நான் அதிகம் அதில் ஈடுபடுவதும் இல்லை. ஆனால், நான் ஏலவே சொல்லியவாறு ஆரம்பத்தில் பலர் மிகத்துணிச்சலாக தமது கருத்துக்களை எடுத்து சொல்லக் களம் வகுத்தது இந்த இலக்கியச் சந்திப்பே. அந்த நேரத்தில் பல சஞ்சிகையாளர்கள் ஒன்று கூடித் தமது அனுபவங்களை பகிர்ந்ததாகவும் இந்த இலக்கிய சந்திப்பு அப்பொழுது இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பொதுவாகவே படைப்பாளிகளுக்கான கருத்துச் சுதந்திரங்கள் அவ்வப்பொழுது அரசியல் காரணங்கள் மற்றும் சமூக காரணங்களினால் அடக்கப்படுவதும், அவர்களது படைப்புகள் முடக்கப்படுவதும் சர்வதேச ரீதியாகவும் மற்றும் உள்ளூரிலும் பார்க்கின்றோம்.கடந்த வருடம் கூட மாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகன் இப்படியொரு சர்ச்சையில் சிக்கி தான் இலக்கிய உலகில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு சென்றார்.ஆனால் இந்த வருடம் அவரது விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அவர்மேல் உள்ள தடைகளை நிக்கியதுடன் அவர்மேல் உள்ள வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கின்றது.ஓர் அச்சுறுத்தலுக்குப் பயந்து இலக்கிய உலகை புறக்கணித்த ஓர் படைப்பாளிக்கு கிடைத்த ஓர் வெற்றியாக இந்தத்தீர்ப்பினை எடுத்துக் கொள்ளலாமா? இல்லை படைப்பாளிகளுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்து கொள்ளலாமா ?
இது உலகம் முழுவதும் நடைபெறுகின்ற ஒரு விடயம் தான். நாங்கள் இதைத் தனியாகப் பார்க்காது பொதுவாகவே பார்க்க வேண்டும். சமகாலத்தில் பொதுவாகப் படைப்பாளிகளுக்கு நூறு விகித கருத்து சுதந்திரம் இல்லை.பொதுவாகவே படைப்பாளிகளின் வினைகளானது இடம் மொழி கலாச்சாரம் போன்றவற்றினுடாக எதிர்வினைகளாகவோ நேர்வினைகளாகவோ மாற்றமடையும். பெருமாள் முருகன் விடயத்திலும் இதுவே நடைபெற்றது. எமது தமிழ் சமூகமும் நேர்வினைகளைக் கொண்ட முன்னேறிய சமூகமாகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். பெருமாள் முருகன் தனது கருத்தை ஓர் ஐரோப்பிய நாட்டில் வைத்திருப்பாரானால், அவரின் பின்னர் முழுப்படைப்பாளிகளும் நின்றிருப்பார்கள். ஆனால் பெருமாள் முருகன் விடயத்தில் குரல் கொடுப்பதில் கூட படைப்பாளிகள் பிளவுபட்டு நின்றார்கள். இந்த நிலைப்பாடானது இலங்கைக்கும் பொருந்தும்.சமூகத்தில் இருக்கின்ற தீயசக்திகள் /பிற்போக்கு சக்திகள் ஒரு படைப்புக்கு எதிராகக் கிளர்ந்து எழும்புகின்ற பொழுது அதனை எதிர்க்கின்ற மனவலு இல்லாத சமூகக்கட்டமைப்பே தமிழகத்திலும் இலங்கையிலும் இருக்கின்றது. இந்த நேரத்தில் படைப்பாளிகள் எனப்படுபவர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அந்த நேரத்தில் பெருமாள் முருகன் இலக்கிய உலகில் இருந்து விலகியதை ஒருசிலர் விமர்சிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அதை ஒரு தந்திரோபாயமான பின்வாங்கலாகவே பார்க்கின்றேன் .சில வேளைகளில் சட்டமே படைப்பாளிகளை பாதுகாக்கத் தவறி விடுகின்றது. அந்த வேளையில் பெருமாள் முருகன் எடுத்த முடிவானது தன்னைப்பாதுகாக்கத் தவறிய சட்டம்/ அரசு மீதும், சமூகத்தின் மீதும் இருந்த வெறுப்பினால் ஏற்பட்டது என்றே நான் புரிந்து கொள்கின்றேன். ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை தருவதில் எவ்வளவு சுதந்திரம் இருக்கின்றதோ அவ்வளவு சுதந்திரம் அந்தப் படைப்பில் இருந்து ஒதுங்குவதிலும் இருக்கின்றது. நான் என்றுமே பெருமாள் முருகன் பக்கத்திலேயே நின்றேன், நிற்கின்றேன். தாங்கள் பெருமாள் முருகனை பாதுக்காக்கத் தவறி விட்டோம் என்ற குற்ற உணர்வை, தமிழகப் படைப்பாளிகளிடத்தில் என்னால் காண முடியவில்லை. அவருடன் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர் நின்றிருக்க வேண்டும்; ஆனால் நிற்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.
உங்களுகென்று யாராவது ஆதர்சங்கள் இருந்திருக்கின்றார்களா ?
எனக்கு ஆதர்சமாக என்றும் எப்பொழுதும் இருந்தவர்/ இருப்பவர் மஹாகவிதான். நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே எனக்குப் பரிசாகக் கிடைத்தது மஹாகவியின் நூல்கள். அப்பொழுது எனக்கு அவரது படைப்புகளை வாசிக்கின்ற வசதிகள் இருந்தமையால் அவருடைய கவிதைகள்தான் பெரிதும் ஈர்த்தன.அதன் பின்னர் எனது கவிதைகளில் கூட அவரது சொல்லாட்சிகள் பட்டுத்தெறித்தன.அவர் மிகஎளிமையான சொல்லாடல்களில் எவ்வளவோ விடயங்களை சொல்லியிருக்கின்றார். அவரது பாடல்கள் எனக்குப் பிரமிப்பைக் கொடுத்தன. இன்றும் அவரது பாடல்கள் எனக்கு வரிவரியாக அத்துப்படி.
’உரை நடை’ என்று வரும் பொழுது எனக்கு ஈர்ப்பைத் தந்தவர் சுஜாதா என்கின்ற ரங்கராஜன். எத்தனையோ நல்ல படைப்பாளிகளை நான் வாசித்திருக்கின்றேன்.ஆனால், சட்டகங்களில் சிக்காத அவரின் கட்டற்ற மொழிப் பிரயோகம் என்னை ஈர்த்தது. ஏற்கனவே இருந்த அத்தனை பேரின் மொழிநடைகள் எல்லாவற்றையுமே சுஜாதாவின் மொழிநடை கட்டுடைத்துப் பாய்ந்தது. அவர் கூடுதலாக ஜனரஞ்சக எழுத்துக்களை எழுதியிருந்தாலும், அவருடைய எழுத்துக்கு மிகத்தீவிரமான ரசிகனாக எனது பதின்ம வயதில் இருந்திருக்கின்றேன். அவருடைய நூல்கள் எல்லாமே எமது பாடசாலை நூலகத்தில் இருந்தன. அவருக்குப் பிறகு இவ்வளவு துணிச்சலாக எழுதியவர்களை நான் பார்க்கவில்லை. இன்றும் கூட அவரின் பாதிப்புகள் எனது எழுத்துக்களில் இருக்கின்றன என நம்புகிறேன்.
உங்கள் கவிதையின் மொழிதான் என்ன ?
நான் ஏலவே கூறியவாறு நான் எப்படியாக இருக்கின்றேனோ அப்படியே எனது கவிதை மொழியும் இருக்கும். நான் கண்டு, பார்த்த, கேட்ட விடயங்கள் எல்லாமே எனது கவிதை மொழியில் இருக்கும். இதை நான் சொல்வதை விட என்னுடைய படைப்புகளை வாசித்தவர்கள்தான் சரியாகச் சொல்ல முடியும் என நம்புகின்றேன். ஆனால் நான் பிரக்ஞை பூர்வமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுபவன் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் எனது மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்தில் வடிக்கின்ற ஒருவன். ஆதலால் எனக்கு மொழித்தேர்வு என்பது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் எனது வாசிப்பு மனநிலைகள் பின்புலம் இப்பொழுது நான் வசிக்கின்ற சூழல்கள் போன்றவையே எனது மொழியை தீர்மானிக்கின்றன.இது ஏனய படைப்பாளிகளுக்கும் பொருந்தும் என எண்ணுகின்றேன்.
நடு -பிரான்ஸ்
30 ஐப்பசி 2016
Comments
Post a Comment