Skip to main content

குதிரை இல்லாத ராஜகுமாரன் -ஒரு நோக்கு -கோமகன்


ஓர் சிறுகதைத்தொகுதியை வாசிக்கும் பொழுது அதன் ஊடாக வருகின்ற புரிதல்கள் /கிரகிப்புகள் வாசகனுக்கு வாசகன் வேறுபடும் அந்தவகையில் அண்மையில் கனடாவில் வதியும் ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத ராஜகுமாரன் ” சிறுகதைத்தொகுதி என்னுள் ஏற்படுத்திய அலைகளை பதியலாம் என எண்ணுகின்றேன்.ராஜகுமாரன் என்றாலே வெண்புரவி அல்லது கரும்புரவியில் ஓர் கம்ரபீமான தோற்றத்துடன் ராஜபாட்டையில் குளம்பொலியுடன் கடுகி விரைவார். அனால் இங்கு குதிரையே இல்லை.இந்த ராஜகுமாரன் எப்படி இருக்கப்போகின்றாரோ என்ற ஐயப்பாட்டுடன் சிறுகதைத்தொகுதியில் உலா வந்தேன்.இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் பல்வகை ரசங்களுடன் வெளியாகி இருக்கின்றன.

நிகழ்காலத்தில் தொலைந்ததை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் எமது வாழ்க்கையின் அனுபவங்களைச் தொலைக்கச்செய்கின்றோம் ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது அந்தத் தொலைந்த அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றங்களினால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்கும். இப்படியான கதை சொல்லிகளையும் கதை மாந்தர்களையும் குதிரை இல்லாத ராஜகுமாரனில் பயணிக்கும்பொழுது கிரகிக்க முடிந்தது.

பொதுவாகவே நேரிய பாதையில் செல்லும் வாழ்க்கை முறைமை என்பது யாருக்குமே சாத்தியமாவதில்லை. கிறிஸ்துவுக்கு முன் அல்லது பின் என்பதைப்போல எல்லோருக்குமே திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என்று இந்த உலகில் இருக்கின்ற அனைத்து மாந்தர்களுக்குமே இரட்டைபடையான வாழ்க்கைதான் நிரந்தரமமாக இருக்கின்றது.குதிரை இல்லாத ராஜகுமாரனும் இதையே கதைக்களங்களை கொண்டிருக்கின்றது.

குதிரை இல்லாத ராஜகுமாரநின் ராஜபாட்டையானது : மண்வாசனைகளையும் அதுசார் வெளிப்பாடுகளைக் கொண்ட “கறுத்தக்கொழும்பான்” ,”தெற்காலை போற ஒழுங்கை”,”ஆசை வெட்கம் அறியும்” என்ற ராஜபாட்டையாகவும்,

தத்துவம் ,நிதிகளை சொல்கின்ற ( போதனை)”பத்தியம் “,விழிப்புகள் “கடவுளும் கோபாலப்பிள்ளையும்” என்ற ராஜபாட்டையாகவும்,

ஆண்-பெண் உறவு காதல் பற்றி சொல்கின்ற “பௌரஷம்”,”நிழலைத்தேடும் நிழல்கள் “,ஆதலினால் காமம் செய்வீர்”,”குதிரை இல்லாத ராஜகுமாரன் “,”செம்பருத்தி”,”சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது? ” என்ற ராஜபாட்டையாகவும்,

கிளை விதிகளாக ,”மௌனத்தின் சப்தங்கள் “,”மேலும் சில கேள்விகள் ” என்று பல ராஜபாட்டைகளில் என்னால் வலம்வர முடிந்தது.

இதில் கடவுளும் கோபாலப்பிள்ளையும் என்ற கதையை ஆராயலாம் என எண்ணுகின்றேன்.இந்தக்கதையானது கனடாவில் வாழும் ஒருவருக்கு வேதாகமத்தில் வரும் தேவகுமாரன் போல் கடவுள் காட்சி தந்து உரையாடுவது போல கதைக்களம் நகருகின்றது.இந்தக்கதையின் உள்ளடக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.முற்றுமுழுதாகவே நிராகரிக்கின்றேன்.மானிட குலத்துக்கு கடவுள் காட்சி தருவாரென்றால் இந்த உலகில் பல பிரச்சனைகள் இல்லாதொழிந்திருக்க வேண்டும்.ஆனால் பிரச்சனைகள் பிரச்சனைகளாகவே இருக்கின்றன.அத்துடன் புலம்பெயர்நாடுகளில் குறி சொல்லுதல் சாத்திரம் பார்த்தல் என்று ஏலவே பல வியாபாரிகள் சனங்களை மயக்கி வைத்து இருக்கின்ற வேளையில் இது போன்ற பழமைவாத சிந்தனைகளில் அமிழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் வாசிகளுக்கு இந்த கதை ஊக்கியாகவே இருக்கின்றது.இது தவிர்த்து இந்தக்கதையில் வேறு எதையும் என்னால் கிரகிக்க முடியவில்லை.

இந்த சிறுகதைத்தொகுதியில் வருகின்ற கதைக்களங்களும் கதைமாந்தர்களும் நிகழ்காலத்தில் பயணித்தாலும் .கதை சொல்லிகளின் மீது கதையாசிரியர் கையாண்டிருக்கும் சொல்லாடல்கள் அதுவும் பெண்கள் மீது வைக்கும் வர்ணனைகள் அரத்தல் பழசாகவே இருந்து வாசிக்கின்ற பொழுது ஒருவித ஆயாசத்தைத் தருகின்றது.அதே போல் கதைக்குரிய தலையங்கங்கள் சினிமாவில் வருகின்ற தலைப்புக்கள் போலவே இருக்கின்றது.உதாரணமாக சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது? , நிழலைத் தேடும் நிழல்கள் போன்றவை.

“தெற்காலை போற ஒழுங்கை” என்ற கதையில் சாதிகுறைந்த ஓர் குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளை ஓர் உயர்குடியில் பிறந்து அந்தக்குடும்பத்துக்கு வந்த மருமகள் தீர்த்து வைப்பதாக நுலாசிரியர் சொல்கின்றார். இதன் மூலம் உயர்குடியில் பிறந்தவர்கள் நற்பண்புகளையும் இழிகுடியில் பிறந்தவர்கள் அதற்கு நேரெதிராகவே இருக்கின்றார்கள் மறைமுகமாக உணர்த்துவதாகவே எடுக்க முடிகின்றது.இந்த இடம் ஓர் விவாதத்திற்குரிய பொருளாக மாறுகின்றது.

“மௌனத்தின் சப்தங்கள் ” கதை என்னுள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. அதிலிருந்து விலக நாட்கள் எடுத்தன.மண்வாசம் தெறிக்கும் சொல்லாடலில் ஓர் பூசாரி+பரியாரி-யின் வாழ்வில் உள்ள அகச்சிக்கல்களையும் அவரது மகனில் அவர் வைத்திருக்கும் அளவில்லா பாசத்தையும் இறுதியில் மகன் நோய்வாய்ப்படும் பொழுது அதைக்காணச் சகியாது தனது கையினாலேயே நச்சு மூலிகைகளைக் கொடுத்துக் கொடுத்துக் கருணைக்கொலை செய்வதைக் கதை விபரிக்கின்றது.இந்தக்கதையில் கிளைப்பாத்திரமாக வரும் அன்னம்மா மூலம் கிராமத்தில் நடக்கும் இட்டுக்கட்டல்களை தனக்கே உரிய பாணியில் நூலாசிரியர் விபரித்தது இந்தக்கதைக்கு உயிர் ஊட்டியது என்றே எண்ணத்தோன்றுகின்றது.என்னளவில் இந்தச் சிறுகதைத்தொகுப்பில் இருந்த கதைகள் ஒருசிலதே பேசக்கூடியதாக இருக்கின்றன மற்றையவை சிறுகதைத்தொகுதியின் தலைப்புக்கேற்பவே இருக்கின்றன.

ஒர் கதைக்களத்தையோ இல்லை கதைமாந்தர்களைக் கதாசிரியர் தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் வெளிப்பரப்பை மட்டும் ஆராயமல் அக்காலத்தில் வாழும் மனிதர்களின் அகசிக்கல்களையும் விவாதிக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்புகள் நான் பயணித்த இந்த சிறுகதைத்தொகுதியில் அருந்தலாகவே காணப்பட்டன.ஓர் சிறந்த கதை சொல்லியான ராஜாஜி ராஜகோபாலன் இந்த சிறுகதை தொகுதியில் ‘குதிரை இல்லாத ராஜகுமாரனாகவே’ இருக்கின்றார்.ஆனாலும் இனிவருங்காலங்களில் தனது கதை சொல்லும் உத்திகளில் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்று நம்புகின்றேன்.

நூலின் பெயர்:குதிரை இல்லாத ராஜகுமாரன்

நூலின் வகை: சிறுகதைத்தொகுதி

நூலாசிரியர்: ராஜாஜி ராஜகோபாலன்
விலை: 200 இந்திய ரூபாய்கள்
வெளியீடு: சுதர்சன் புக்ஸ்
74 மணிமேடை கீழ் புறம்
நாகர்கோவில் 629001
தமிழ்நாடு

தினகரன் 23 ஐப்பசி 2016

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம