இந்தக் கிழமை அம்ருதாவில் வெளியாகிய தெய்வீகனின் "உச்சம்" சிறுகதைக்கு அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமர்சனம் வாசிக்கக் கிடைத்தது. அதை வாசித்த பொழுது எனது மனம் கிரகித்துக் கொண்ட விடயங்களைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.
"ஓடுவது எப்பெடியென்று சொல்லும் முடவன் தான் விமர்சகன்" என்று இலக்கியப்பழமான லெ முருகபூபதி ஐயா எனக்களித்த நேர்காணலில் சமகாலத்து விமர்சன முறமையை வரையறை செய்கின்றார். அனோஜனின் விமர்சனத்தை நான் வாசித்த பொழுது மேற்கண்ட வரையறையே எனது நினைவுக்கு வந்தது. பிரதியைப் பிரதியாகப் பாராது எழுதியவரின் ஊடாகப் பிரதியைப் பார்த்து தனது மன அரிப்புக்களை உச்சுக் கொட்டியிருக்கின்றார் அனோஜன். ஒரு ஆக்கத்தை யாரும் விமர்சிக்கலாம். அதுதான் முறையுங்கூட. ஆனால் அதற்கொரு நேர்மைத்தன்மையும் அதிஉயர் மனப்பக்குவமும் வரவேண்டும். ஜெயமோகனின் முகாமில் இருந்து பேதி போவதானாலும் அதில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று பயங்கரமாக நம்புகிறவர் அனோஜன். "உச்சம் " சிறுகதையில் எந்தவொரு சரியான விடயங்களும் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே -
'உச்சம்’ சிறுகதை(?) எந்த இலக்கியக் கூறுகளும் அற்ற வெற்றுக் குப்பை.சுத்த ஹம்பக்" - என்று முற்று முழுதாகப் பிரதியை நிராகரித்து அறம் பாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான விமர்சனம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் நில்லாது எதையெதை பிரசுரிக்க வேண்டும் என்று 'அம்ருதா" ஆசிரியர் குழுமத்துக்கு வகுப்பு எடுத்திருப்பது அனோஜனது விமர்சனத்தில்(?) இன்னொரு சிறப்பம்சமாக இருக்கின்றது.
அனோஜனுக்கும் எனக்கும் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது சிறுகதைகளை ஆழமாக உற்று நோக்கியவன் என்ற வகையிலும் அவரது கடந்தகால கதைகள் பலவற்றில் பெண்களது மார்பகங்கள் மற்றும் அவர்களது இன்னோரன்ன அவயவங்களை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து உச்சம் கண்டு, ஒரு இந்திரிய எழுத்தாளராக வருவதற்கு தனது கதைகளில் முக்கோ முக்கென்று முக்கிய அனோஜன், தெய்வீகனது கதைகளில் தெய்வீகன் பெண்களைப்போட்டுத் தாக்குகின்றார் என்று சீற்றம் கொண்டு பெண்களைக் காக்க வந்த கிருஷ்ணராக சங்கூதுவது எந்தவிதத்தில் அறமாகின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.
சமகாலத்து இலக்கிய வெளியில் தான் மட்டும் மலம் கழிக்கும் பொழுது அது யாருக்குமே மூக்கைப்பிடிக்கும் அளவுக்கு நாறாது, மாறாக அது நறுமணத்தையே கொடுக்கும் என்ற அதிஉயர் நம்பிக்கையுடன் கணணியின் முன்னால் அமருகின்ற அனோஜன், எதுவித கூச்ச நாச்சமும் இல்லாது அல்லதுவிடின் குற்ற உணர்வுகளோ இல்லாது பொதுவெளியில் விமர்சனம் என்ற போர்வையில் அறம் பாடித் தனது மன உளைச்சல்களையும் மன வெக்கைகளையும் வெப்பிராயங்களையும் வஞ்சகத்தனத்துடன் விசிறியடிப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
ஆரம்பகாலங்களில் எதுவித மாசுக்களும் அற்று எழுத்தை மட்டுமே நேசிக்கின்ற வேகத்தை மட்டுமே உள்ள படைப்பாளிகளிடம் 'ஆதர்சம்" என்ற போர்வையில் நஞ்சுகளைக் கலக்கின்ற மூத்த இலக்கியவாதிகளை( பருப்புகளை) பரிதாபத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இந்த உச்ச வலைகளில் விழுந்து தமது மணங்களை முகர்ந்தறியாது பத்திரிகைகளுக்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் வகுப்பெடுக்கும், அறம் பாடும் - உச்சு கொட்டிகொண்டிருக்கும் - அனோஜன் போன்றவர்களும் பரிதாபத்துக்குரியவர்களே!
பிற்குறிப்பு : அனோஜன் தன்னையும் கேள்விக்குட்படுத்தி தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த எதிர்வினை எழுத்தப்பட்டுள்ளது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை .
கோமகன்
02/09/2018
Comments
Post a Comment