Skip to main content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் -பாகம் 14



உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . 

பனங்களி செய்யிற பக்குவம் :


தேவையான சாமான் :

நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம்.

பக்குவம் : 

நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ.கை கவனம் நார் வெட்டி துலைச்சுப் போடும் வெட்டினாப்பிறகு திருப்பியும் பழத்தை தண்ணீரிலை நல்லாய் கழுவுங்கோ பிறகு பழத்தை பிய்க்க. இரண்டு மூண்டாய் பழம் விதையோடை பிரியும். அதை பிழிஞ்சு அதிலை இருக்கிற களியை ரெண்டு கையாலையும் அமத்தி எடுங்கோ. களி தும்புகளோடை சேந்து வரும் . மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைச்சு களியை வடியுங்கோ. வடிச்ச களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை மணம் போக காச்சி எடுத்து ஆறவையுங்கோ. 

தேவையான சாமானுகள்:

பனங்களி – 1 கப்
சீனி- ¼ கப்
எண்ணெய் – லீட்டர்.
வறுத்த உழுந்துமா – ¼ கப்
உப்பு தேவையான அளவு.

பக்குவம் :

காச்சின பனங்களியோடை உழுத்தம்மா உப்பு சேர்த்து கிளறி விடுங்கோ . தாச்சியிலை எண்ணையை விட்டு நல்லாய் கொதிக்க விடுங்கோ . மாவைக் கையில் எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாக எண்ணெயிலை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கோ. 



படிமானம்:
எண்ணை ஒத்தி எடுக்கிற பேப்பரிலை போட்டு எண்ணையை வடியவிட்டு , ஆற வைச்சுப்போட்டு ரெண்டு மூண்டு நாள் கழிய வைச்சி சாப்பிடுங்கோ. சொல்லிவேலையில்லை ஐஞ்சு நிமிசத்திலை பலகாரத்தட்டு உங்களைப் பாத்து சிரிக்கும். 





கோமகன் 

October 17, 2013

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...