Skip to main content

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி




பிள்ளையள் வணக்கம்,

எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும் கேம்கேட்ட பரம்பரை கண்டியளோ. அதிலையும் நான் ஐஞ்சாம் வகுப்பு படிகேக்கை தமிழ் பாடப் புத்தகத்திலை சந்திரனும் முயலும் எண்ட பாட்டு வெண்பா வரிசையிலை வரும். எனக்கு அந்த பாட்டு சுட்டு போட்டாலும் வரேலை. என்ரை தமிழ் வாத்தி பெட்டையுளுக்கு முன்னாலை அடிச்ச அடி இண்டைக்கும் நினைச்சால் கண்ணாலை ரத்தம் வரும் கண்டியளோ.

என்னமொண்டையும் சொல்லவேணும் இப்பத்தையான் அமைச்சர் ,அப்பத்தையான் வாத்தியார் ஒருதரிட்டை டியூசனில படிச்சன் .அவர் எப்பவும் "அப்பன் " எண்டுதான் கூப்பிடுவர். அடி எண்டால் சொல்லி வேலையில்லை. மொழியிலயும் உள்ளங்கையிலையும் தான் நடக்கும். வெடிவால் முளைச்சு சிங்கங்கள் சிலுப்பி திரியிற நேரத்திலை பெட்டையளுக்கு முன்னாலை அடிச்சால் எப்பிடி இருக்கும்?? என்னோடை இருந்த ஒரு கூட்டாளி ஒருத்தன் எப்பவும் ஒரு ட்ரிக் வைச்சிருப்பான். அவர் உள்ளங்கையிலை அடிக்க முதலையே ஆஆஆஅ நோகுது சேர் எண்டு டிக்கியிலை கையை தேய்ப்பான். அந்த அமைச்சர் ஆரெண்டு சொல்லுங்கோ ?? 

அப்பத்தையான் வாத்திமார் கிட்ட முட்ட 90 வீதமான ஆக்களின்ரை தேசிய மொழி "வன்முறைதான்". இதுகளாலைதான் நாங்கள் வன்முறையிலை காதல் வைச்சமோ தெரியாது. சோதினை மூட்டதிலை இவங்கடை அடிஅகோரத்திலையே குலைப்பன் காச்சல் அடிச்சு எடுக்க வேண்டிய நல்ல மாக்ஸ்சுகளையும் எடுக்காமல் விட்டம். அன்பாய் ஆதரவாய் சொல்லி குடுக்க வேண்டிய பாடங்களை இந்த வாத்திமார் வன்முறையாலையே சொல்லி சொல்லி எங்களை வறுத்தெடுத்தாங்கள். அதுக்காக எல்லா வாத்திமாரையும் நான் குறை சொல்லேலை கண்டியளோ. அச்சா வாத்திமாரும் இருந்தவைதான்.

சின்ன வகுப்பிலை கூட பொம்பிளை ரீச்சர்மார் நல்லவையாய் இருந்தவை. ஆனால் அவையும் எங்களை டிசிப்பிளினாய் நடத்திறம் எண்டு வறுத்தெடுத்தவைதான். எப்பிடியும் தங்கடை பிள்ளையளை டபுள் புறமோசன் போட்டு எங்களை விட ஒருவகுப்பு கூட விடுவினம். "எங்களுக்கு ஒழுக்கம் நன்று வகுப்பேற்றப்படவில்லை" எண்டு ரிப்போர்ட்டிலை போட்டு வீட்டிலை அப்பரை சன்னதம் ஆட வைப்பினம். வகுப்பேற்றப் படவில்லையாம் பேந்தென்ன ஒழுக்கத்துக்கு நல்ல பேர் குடுக்கிறது?? இவையின்ரை இந்த கம்பசூத்திரம் எனக்கு இண்டைவரைக்கும் விளங்கேலை கண்டியளோ.

இந்த வாத்திமார் கெட்டு நொந்து இருந்த நேரம் நாங்கள் எட்டிகூட பாக்கேலை. இப்ப இருந்தாப்போலை நாங்கள் நல்ல பிள்ளையளுக்கு நடிக்கிறது அவ்வளவு நல்லாய் இல்லை பாருங்கோ. ஆனால் அப்ப அவையிட்டை வாங்கின அடியள்தான் இண்டைக்கும் எங்களை நெம்பிகொண்டு நிக்கச் செய்யுது எண்டதையும் மறக்க ஏலாதுதான். மொத்தத்திலை ரெண்டு பக்கமும் கணக்கு தீத்த பள்ளிக்கூடச் சிவியம் தான் எங்கடை காலத்திலை நடந்திது.



06 ஆவணி 2014

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...