Skip to main content

Posts

வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-17

கூடத்தின் கதவைத் திறந்துகொண்டு அவனும் வந்தியத் தேவரும் உள்ளே நுழைந்தபோது, அதற்குள் மூன்று பெண்மணிகள் இருந்தனர். ஒவ்வொருவராக அந்த மூவரையும் உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவர்களில்ஒருத்திகூட அந்த மாயமோகினியைப்போல் இல்லை. “முன்பு இதற்குள் எத்தனை பேர்கள் இருந்தார்கள் தெரியுமா?” என்றுகேட்டார் வல்லவரையர். “வெளியில் நின்று கொண்டே அவளைப் பிடித்துத் தள்ளினேன், தாத்தா! நான் உள்ளே நுழைந்து சென்று பார்க்கவில்லையே?” என்று பதறினான் இளங்கோவேள். அங்கிருந்த மூவரில் ஒருவர் பட்டமகிஷி என்பது அவளுடைய தோற்றத்தால் விளங்கியது. அரசிக்கு உரிய ஆடை அணிகள் அவரை அலங்கரித்திருந்தன. குனிந்த தலை நிமிராமல் சோகமே உருவாகக் கண்ணீர்உதிர்த்துக் கொண்டிருந்தார் அவர். வல்லவரையரையும் இளங்கோவையும்அவர் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பட்டமகிஷியின் காலடியில் உட்கார்ந்து தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் மற்றொரு மாது. மகிஷியைப் போலவே நடுத்தர வயதிருக்கும் அவளுக்கு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய அலங்காரங்கள் ஏதும் அவளிடம் இல்லை. முகத்தைத் தூக்கி வெறுப்புடன் அவள் இளங்கோவை ஒரு முறை பார்த்துவிட்டு உடனே திரும்பிக் கொண

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-16

இளங்கோவின் குதிரை கோட்டை வாயிலை நெருங்குவதற்கு முன்பே அதை நன்றாக இழுத்து மூடிவிட்டார்கள். வல்லவரையர் வந்தியத்தேவர் நெருப்புப் பொறி பறக்கும் கண்களோடு அங்கு நின்றுகொண்டே வீரர்களுக்குப் பற்பல விதமான கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். “ஓடுங்கள்! அரண்மனையின் எல்லா வாயில்களையும் மூடச்சொல்லுங்கள்!” என்றார் சிலரிடம். “எதிரிகள் எங்கு தென்பட்டாலும் அவர்களை வளைத்துக் கொண்டு காவலில் வையுங்கள்!” என்றார். இன்னும்சிலரிடம், “நிலவறைப் பாதைகள், ரகசிய வழிகள், தப்பிச் செல்வதற்கான மார்க்கங்கள் எங்கேயாவது தென்படுகின்றனவா என்று தேடிப் பாருங்கள்!”என்றார் மேலும் சிலரிடம். வல்லவரையரிடம் நெருங்கிப் பேசுவதற்கே அச்சமாக இருந்தது இளங்கோவுக்கு. நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் வாயில் கதவுகளைத் திறக்கச் செய்வாரா அவர்? வீரர்களின் மத்தியில் புகுந்து தயங்கிக்கொணடேபோய் அவர் முன்னால் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ. “நீ எங்கு இங்கே வந்தாய்?” என்று வியப்புடன் கேட்டார் வல்லவரையர். “மகிந்தரின் மகனை யாரோ குதிரைமேல் தூக்கி வைத்துக் கொண்டு இந்த வழியாகச் சென்றார்கள். நம்முடைய வீரன் என்று நம்பி ஏமாந்து போய்விட்ட

வேங்கையின் மைந்தன்-புதினம் -பாகம் 1 -15

கப்பகல்லகம் கோட்டை கலகலத்துவிட்டது. முற்றுகை முறிந்து விட்டது. முடிமன்னர் மாயமாய் மறைந்து போனார். அரண்மனையோ அலறித்தவிக்கிறது. இந்நிலையில் வெற்றி கொண்டுவிட்ட வேற்று நாட்டு இளைஞனின் முன்பு நின்று கொண்டு, கலகலவென்று அலட்சியமாகச் சிரிக்கிறாள் ஓர் இளம்பெண். இத்தனைத் துணிவு அவளுக்கு எங்கிருந்து வந்தது. இவள் என்ன,பெண்தானா? வியப்படைய வேண்டிய இளங்கோ அவளைக் கண்டு வெறுப்படைத்தான்; வேதனையுற்றான். மன்னர் மகிந்தரைத் தேடிப் பிடித்து மாமன்னரின் முன்பு நிறுத்துவதற்காக ஓடோடியும் வந்தவன் அவன். மன்னரைத்தான் காணமுடியவில்லை; மைந்தனையாவது கைப்பற்றியிருக்கலாமே! வினையாற்ற வந்த இடத்தில் அந்தச் சிறுவனுடன் விளையாட்டு எதற்கு! “சே, சே! பெருத்த அவமானம்!” என்று தன்னையே நொந்துகொண்டு,தனக்கெதிரில் நின்றவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளுடைய இதழ்க் கோணத்தில் நெளிந்த சிரிப்பின் சுவடு அவன் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது. ‘இந்தச் சாகசக்காரி மட்டிலும் என் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தியிராவிட்டால். . .?’ “எங்கே அவன்?” என்று அவளிடம் உறுமினான் இளங்கோ. “அவன் இருப்பிடத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் நான் உன்னைச் சும்மாவிடப்போவதில்ல

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1-14

மூன்று மாத முற்றுகையைத் தாங்க முடியுமென்று வீரம் பேசிய கீர்த்தி,இனி மூன்று நாட்கள் கூடத் தாங்க முடியதென்பதைக் கண்டு கொண்டார்.அவர்களுடைய சினம் இளங்கோவின் மீது திரும்பியது. கொடும்பாளூர் இளவரசனாமே அவன்? சூறாவளியுடன் சேர்ந்த ஊழித்தீயைப் போல் அவன் நமது படைகளைப் பதைபதைக்க வதைத்து விட்டானே? கீர்த்தி குறி தவாறது கூரம்பு எய்வதில் பெயர்பெற்றவர். பறக்கும் பறவைகளையும், பாயும் புலிகளையும், புதருக்குள் ஒளிந்துவிட்ட வனவிலங்குகளையும் அவருடைய அம்புகள் அநாயாசமாக வீழ்த்தியிருக்கின்றன.அப்படிப் பட்டவர் எத்தனையோ முறை இளங்கோவின் மேல் குறி வைத்து அம்புகளை நாணேற்றினார். பலன்? அந்த இளைஞனோ ஒரு மனிதப் புயல்.அவன் ஏறியிருந்த கறுப்புப் புரவியோ கார்காலத்து மின்னல். மன்னர் மகிந்தருடன் ரகசிய ஆலோசனைகள் நடத்தி அவரை இரவோடு இரவாக எங்கோ ஓர் இடத்துக்கு அனுப்பி வைத்தார் கீர்த்தி.எஞ்சியிருந்த வீரர்களையும் அரண்மனைக்கா வலர்களையும் கூட்டிவைத்துக் கோட்டை மதில்களைக் காக்கும் ஏற்பாடுகளை மளமளவென்று கவனிக்கத்தொடங்கினார். மறுநாள் பொழுது புலர்ந்தது. கோட்டை வாயில்கள் திறக்கப் படவில்லை. அகழிப்பாலம் பொருத்தப்படவில்லை. சாவோடு உறவாடும் ப

வேங்கையின் மைந்தன் - பாகம் 1 -13

கப்பகல்லகம் அரண்மனையை விட்டு வெளியில் வந்த வந்தியத்தேவர் இளங்கோவின் கடமையை நினைவூட்டி அவனை சுய நினைவுக்குக் கொண்டு வந்தார். இருவரும் தங்கள் கண்களை நன்றாகச் சுழலவிட்டு, அந்த நகரத்தின் சுற்றுச்கவர்களையும், கோட்டை மதில்களையும், வெளி வாயில்களையும் கண்காணிக்கத் தொடங்கினார். அகழிப்பாலத்தை அவர்கள் கடந்தபோது, “அதோ பார் முதலைகளை!” என்று அவனுக்குச் சுட்டிக் காட்டினார் வல்லவரையர் வந்தியத்தேவர். இயற்கையின் பாதுகாப்பு நிறைந்த இடத்தில்தான் அவர்களும் தலைநகரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்புறம் மூன்று பாகங்களிலும் அரண் போன்று குன்றுகள் எழும்பி நின்றன. கோட்டை வாயிற்களின்இருபுறங்களிலும் மதில் சுவர்கள் மீதும், ஏன்-குன்றுகளின் சிகரங்களில் கூட ஆயுதம் தாங்கிய காவல் வீரர்கள் காணப்பட்டனர். “இளங்கோ! நம்மைப் போலவே இவர்களும் முன்யோசனையுடன் பலகாரியங்களைச் சாதித்திருக்கிறார்கள்” என்ற சொல்லிக் கொண்டே, தம் குதிரையின் மீது தாவி ஏறினார் வல்லவரையர். இளங்கோவும் ஏறிக்கொண்டு, “மகிந்தரின் திறமையைத் தாங்கள் அளவுக்கு மேல் மதிக்கிறீர்கள் அவர் கோழை என்பதை நாமே எதிரில் காணவில்லையா?” என்றான். “அவர் கோழையாக இருந்தாலும் புத

வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம் 1-12

முதற் கப்பலில் சென்ற கடற்சேனை மாதண்ட நாயகரான மாவலிவாணராயர், மற்ற மரக்கலங்களையும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தச் செய்துவிட்டு , மாமன்னரின் கட்டளைக்காகக் காத்து நின்றார். சக்கரவர்த்தியையும் வீரர்களையும் வரவேற்பதற்காக ஜனநாதமங்கலத்திலிருந்து ஈழத்துப் பிரதிநிதி தாழிகுமரனும் பெருங்கூட்டத்துடன் வந்திருந்தார். வரவேற்பு ஆரவாரங்களும், குதூகலக் குரல் ஒலிகளும், முரசுகளின் முழக்கங்களும் ஈழத்து யானைகள் துதிக்கைகளை வளைத்துத் தூக்கிப் பிளிறிய பிளிறல்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு ஒலித்தன. மாமன்னரின் சிரத்தில் மலர் தூவி, அவரை மண்டியிட்டு வணங்கி, அவருக்கு நல்வரவு கூறியது ஜனநாத மங்கலத்து மாளிகையின் கொம்பன் யானை. “மாவலிவாணராயரே! சரிபாதிக் கப்பல்களைத் தெற்கே ரோகணத்துக் கடற்கரைக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள். எங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சமுடியுமோ அங்கெல்லாம் பாய்ச்சி நிறுத்திவையுங்கள். நம்மை யாரும் எதிர்க்கத் துணியாதவரையில் நம்முடைய வீரர்களில் எவரும் ஆயுதங்களைத் தொடவேண்டாம். அமைதியா, போர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு ஆள் அனுப்புகிறேன். அவசியமென்றால் தெற்கிலிருந்து நம் வீரர்கள் ‘கப்பகல்லகம்’

வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 11

நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் தெற்குக் கடலில் அடிவானத்தை ஊடுருவிச் செல்பவைபோல் வரிசையாகக் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. நாகைப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டபின் ஓர் இரவு கழிந்து, மறுநாள் புலர்ந்துவிட்டது. இளஞ்சூரியனின் பொன்னொளியில் பாய்மரச் சேலைகள் அன்னப் பறவைகளின் வண்ணச் சிறகுகளைப் போல் படபடத்தன. கடைசிக் கப்பலின் மேல் தளத்தில் நின்றவாறே உற்சாகப் பரபரப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் தென்னவன் இளங்கோவேள். குதூகலத்தால்ஆர்ப்பரித்துக்கொப்பளித்த பேரலைகள் அவன்மேல் நுரை முத்துக்களை வாரி இரைத்து விளையாட்டுக் காட்டின. மேலே நீலவானம் சுற்றிலும் நீல நீர்ப்பரப்பு; அவன் வாயில் கடற்காற்றுத் தந்த உவர்ப்புச்சுவை. சுறாமீன் குஞ்சுகள் ஆங்காங்கே நீரிலிருந்து மேலே எழும்பிக் குதித்து, மீண்டும் அலைகளில் துள்ளிப் புரண்டு நெளிந்தன. இவையெல்லாம் இளங்கோவுக்கு புதிய அநுபவங்கள் மற்றொரு புதிய அநுபவமும் அவனுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது. முதல் நாள் அவன் புறப்படும் வேளையில் அருள்மொழி அவனுக்குத் திலகமிட்டு அனுப்பி வைத்தாளல்லவா? இப்படி அவள் தன் மென்விரலால் திலகமிட்டு அனுப்புவாளென்றால் தினமும் ஓர் போர்க்களத்து