மாசி மாதத்து ‘தமிழினி’ இணைய சிற்றிதழ் படிக்க கூடியதாக இருந்தது. அதில் ஏக காலத்தில் 03 ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. நொயல் நடேசனின் “கானல் தேசம்” குறித்து ப தெய்வீகனும், தீபச்செல்வனின் “நடுகல்” குறித்து தருமு பிரசாத்தும், இறுதியாக உமாஜியின்” காக்கா கொத்திய காயம்” அனோஜனாலும் விமர்சனத்துக்கு உள்வாங்கப்பட்டிருந்தன.
கானல் தேசத்திற்கான தெய்வீகனது பார்வையில் தர்க்க ரீதியிலான போக்கையும் குறைந்த மொழியாடலில் செறிவான விமர்சன பண்பையும் அவதானிக்க முடிந்தது. கானல் தேசத்தின் ஊடாக ஒரு வரலாற்று செய்தி ‘புனைவு’ என்ற ஜன்னலின் ஊடாக எவ்வளவு தூரத்திற்கு திரிபு படுத்தப்படுவதுடன் அதுவே ‘வரலாறு’ என்று இளையவர்களை நம்பச் செய்யும் வல்லபங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது. குறிப்பாக ‘புலிகள் பெண் போராளிகளை கர்ப்பணிகளாக்கி தற்கொலை போராளிகளாக அனுப்பினார்கள்’ என்ற வரலாற்று அபத்தத்தை தரவுகளுடன் உடைத்தெறிந்த பாணி குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனத்தை படிக்கும்பொழுது “வரலாற்றில் மலங்களிப்பது தடை செய்யப்பட வேண்டும்” என்ற உணர்வை எனக்கு ஏற்பத்தியது. ஒன்றாக இருந்து குடித்த குடிக்காகவும் ஒன்றாக சாப்பிட்ட கடனுக்காகவும் பரஸ்பரம் முதுகு சொறிந்து “அரோகரா” போடாது அருகில் இருந்து நெருங்கிப் பழகினாலும் பொது வெளியென்று வரும்பொழுது அதில் தமது தனித்தன்மையைக் காட்டும் இத்தகைய விமர்சன போக்குகள் சிறிது நம்பிக்கையை தரக்கூடியவையாக இருக்கின்றன.
தீபச்செல்வனின் “நடுகல்” நாவலுக்கான விமர்சனப் போக்கு குறித்துப் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. கொடுந்தமிழில் எழுதுவதுடன் வாசகர்களுக்கு எதுவுமே விளங்கக்கூடாது என்பதில் கவனமாக இருத்தல் தான் இலக்கியத்தரமான விமர்சனம் என்ற மாயை இளைய தம்பிகளுக்கு ஊட்டப்படுவது வருத்தத்திற்கு உரியதும் கண்டனத்துக்குரியதுமாகும். நடுகல் நாவலுக்கான விமர்சனத்தைப் படிக்கும் பொழுது ஒரு வாசகனாக கொம்யூனிஸ்ட் கட்சியின் மொஸ்கோ பத்திரிகை படித்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.
அனோஜன் எழுதிய உமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூலின் விமர்சனம் பாராட்டத்தக்கது. கடந்த வருடம் இந்த நூல் வெளியாகி அது குறித்து உடனடியாக ஏதும் சொல்லாது, நீண்ட கயிற்றில் விட்டு ஒரு இளைய படைப்பாளிக்கு அதுவும் அவரது முதலாவது நூலிற்கு விமர்சனம் எழுதுவது உண்மையில் வரவேற்க்கப்பட வேண்டிய விடயமேயானாலும் ஒரு பிரதியை இன்னொரு எழுத்தாளரின் பிரதியின் கண்ணாடிகளின் ஊடாக “விமர்சனம்” என்ற போர்வையில் முன்னெடுப்பது சீரிய விமர்சனப் பண்பல்ல. அதுவும் உமாஜி போன்றோருக்கு இவ்வாறான விமர்சனம் செய்வது அவர்களது எழுத்து முயற்சிகளுக்கு காயடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.
இந்த நிலைகுறிப்பில் எனக்கு யாருடனும் தனிப்பட்ட முரண்கள் கிடையாது. இந்த மூன்று விமர்சனங்களை ஒரு வாசகனாக எப்படிப் பார்த்தேன் என்பதையே எழுதியிருக்கின்றேன். நன்றி .
கோமகன்
17 மாசி 2019
Comments
Post a Comment