இன்று மதியம் ஒரு அலுவலாக லா பேட்டைக்கு (லாச்சப்பல்) செல்ல வேண்டியிருந்தது. காரியத்தை எனது நண்பர் மனோவின் அச்சத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. காரியம் முடிந்த பின்னர் எனக்கும் மனோவிற்கும் இடையில் தேநீர் குந்திக்கொள்ள, உரையாடல் தேநீரின் ஆவியுடன் கலந்து மேலெழுந்தது. நீண்டநாட்கள் இருவரும் சந்திக்காதபடியால் உரையாடலும் தேநீர் ஆவியைப் போல் சுற்றிச்சுழன்றது. எமது பேச்சுக்கள் சமகால இலக்கிய செல்நெறிகள், புதிய வருகைகள் என்று பலதையும் பிரித்து மேய்ந்து முகநூலில் வந்து நின்றது.
நான் மனோவினது முகநூற்செயற்பாடுகள் குறித்த எனது ஆதங்கத்தை முன் வைத்தேன். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. முன்னர் மனோ ஒரு பெரிய இலக்கியத்தளத்தின் செயற்பாட்டாளர். ஒன்றிற்கு இரண்டு இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். இன்று அவர் பொதுவெளியில் மௌனமாக இருப்பது எனக்கு உடன்பாடான விடயமல்ல. அப்பொழுது அவர் சொன்னார் ,
"கோமகன் நீங்கள் தவறாக புரிகின்றீர்கள். எனக்கு முகநூல் ஒரு பெரிய நாவலை வாசிக்கின்ற உணர்வை தினமும் ஏற்படுத்துகின்றது. நீங்கள் ஒரு நாவலை எழுதும்பொழுது அதற்கு வேண்டிய கதைமாந்தர்களை உங்கள் பார்வையிலேயே வடிப்பீர்கள். ஆனால் முகநூல் என்ற நாவல் அப்படியல்ல. அது பல கதைமாந்தர்களையும் பல கதைக்களங்களையும் கொண்டது. கதைசொல்லி ஒற்றைக்கதாபாத்திரமாகவும் பல்முனைப்பாத்திரமாகவும் தோன்றுவார். அதில் மஹாராஜா, கட்டியக்காரன், மந்திரி, சேனைத்தளபதி, மஹாராணி, தோழி, விதூஷகன், என்று பல பாத்திரங்கள் இருக்கும். மனிதனின் பல்வகை உணர்ச்சிச்சுழிப்புகளும் இந்த நாவலில் இருக்கும். அதை ஒரு வாசகனாக இருந்து வாசிப்பது எவ்வளவு அற்புதமானது தெரியுமா? இந்த உணர்வை தான் வாசித்த எந்தவொரு இலக்கிய பனுவலும் தரவில்லை" என்கிறார்.
அத்துடன் நில்லாது தனக்கு வாழ்க்கையில் எதை செய்யக்கூடாது எதை செய்யலாம் என்பதை இந்த முகநூல் தான் ஆசானாக இருந்து வழிகாட்டுகின்றது. ஒவ்வொருவரின் நிர்வாண தரிசனங்களையும் இந்த முகநூல் விகற்பமில்லாது காட்டுகின்றது. ஆகவே எழுதுவதை விட இந்த நாவலை வாசிப்பதே சிறந்தது" என்றார்.
என்முகத்தில் ஓர் புன்னகை சுழித்தோடியது. மனோவினது பேச்சு "இடி ஓசையாக" இருந்தாலும் எதுவானாலும் கண்டபடி ஓரிடத்தில் எழுதமுடியாது என்ற அவரது உட்கிடங்கையையும் சொல்லாது சொல்லியது.
கோமகன்
December 27, 2018
Comments
Post a Comment