Skip to main content

‘எனக்கான ஓவிய மொழியை மக்களே தீர்மானிக்கின்றார்கள்’-நேர்காணல் ஓவியர் புகழேந்தி




இந்தியாவின் தலைசிறந்த ஓவியங்களில் ஒருவரான ஓவியர் புகழேந்தி, போரியல் ஓவியங்களினால் எம்மிடையே தனியான இடத்தைப் பிடித்தவர் .இவரது போரியல் ஓவியங்களான புயலின் நிறங்கள், உறங்கா நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், போர் முகங்கள் எமது சனங்களின் அவலங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி மானிடஇருப்பின் மனச்சாட்சிகளை கேள்விக்குட்படுத்தின. மேலும் இவரால் , எரியும் வண்ணங்கள் உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், ,அதிரும் கோடுகள், சிதைந்த கூடு,புயலின் நிறங்கள், அகமும் முகமும், தூரிகைச்சிறகுகள்,நெஞ்சில் பதிந்த நிறங்கள்,மேற்குலக ஓவியர்கள்,தமிழீழம்- நான் கண்டதும் என்னைக்கண்டதும்,ஓவியம் கூறுகளும் கொள்கைகளும், எம்.எஃப்.உசேன்,வண்ணங்கள் மீதான வார்த்தைகள்,தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை என்று மொத்தம் பதினாறு நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கிடைத்துள்ளன .

“சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன?

ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப்பானதாக இருக்கின்றது. அந்த சாதிய அடையாளங்களோடு வாழ விரும்புகின்ற சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவில் தலித் ஓவியத்தின் தாக்கம் எப்படியாக இருக்கின்றது?

பிறப்பால் தலித்தாகப் பிறந்தவர்கள் செய்வது எல்லாம் தலித் ஓவியமா?அல்லது தலித்துக்களின் ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவது தான் தலித் ஓவியமா?என்னைப் பொறுத்தவரை தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவது தான் தலித் ஓவியம்.பிறப்பால் தலித்தாக இருப்பவர்கள் பலரும் அது போன்று படைப்பதில்லை.அவர்களின் சிந்தனை,வெளிப்பாடு, செயல்பாடு எல்லாமே அதற்கு மாறான வேறு திசைகளை நோக்கியே இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவில் சமூக சிந்தனைகளோடு வெளிப்படும் ஓவியங்களும் குறைவு… வெளிப்படுத்தும் ஓவியர்களும் மிகமிகக் குறைவு.இதிலிருந்து தான் தலித் ஓவியத்தின் தாக்கத்தையும் பார்க்க முடியும்.”

என்று குண்டூசி முனைகளாக குத்தியிருக்கின்றார் தூரிகை மொழியின் நாயகனான பேராசிரியர் புகழேந்தி. இலங்கையில் இருந்து வெளியாகும் ‘உவங்கள்’ இணைய சஞ்சிகைக்காக,


கோமகன்


0000000000000000000000000

இந்தத் தூரிகையின் முகவரிதான் என்ன ?

நான் பிறந்தது தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டை என்ற சிற்றூரில். கிராமப்புறத்திலேயே பள்ளிக்கல்வியும் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில். ஐந்தாண்டு இளங்கலைப் பட்டயமும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஓவியத்தில் முது கவின்கலைப் பட்டமும் பெற்றேன். தற்போது சென்னை ஓவியக்கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகின்றேன். இருபத்திரண்டு ஆண்டுகளாக ஆசிரியப்பணியிலும், முப்பத்தி மூன்று ஆண்டுகளாக கலை மற்றும் பொது வாழ்க்கையிலும் இயங்கி வருகின்றேன்.

என்னுடைய தொடக்கப்பள்ளி நாட்களில் வரலாற்று நூல்களில் உள்ள ஆங்கில பிரபுக்களின் ஓவியங்கள் என்னை ஈர்த்தன.அவற்றைப் பார்த்து வரைந்து கொண்டிருப்பேன். கையில் கிடைக்கும் கரித்துண்டு மற்றும் பச்சிலைகளைக் கொண்டு சுவற்றில் ஏதாவது வரைந்து கொண்டிருப்பேன்.மணற் பரப்பிலும் குச்சிகளால் நான் நினைத்ததை கீறிக் கொண்டிருப்பேன். இது போன்ற செயல்பாடுகள் என்னை மேலும் மேலும் வரையவும் சிந்திக்கவும் தூண்டின. இவ்வாறு தான் தூரிகை என்னை வசப்படுத்தியது. காலப்போக்கில் என் வசமானது.

நீங்கள் ஓவியம் கீறுவதற்கு அகத்தூண்டலாக (inspiration) இருப்பது யாது ?

ஆரம்ப கால கட்டத்தில் இயற்கை எனக்கு அகத் தூண்டலாக இருந்தது.மலர்கள், செடிகள், கொடிகள், மரங்கள், ஆடு, மாடு, மனிதர்கள் என்று பார்த்தவைகளை வரைந்து கொண்டிருந்தேன். 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு சமூகம். அதாவது சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள், மனிதர்களிடையே இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் அதனால் விளையும் படுகொலைகள் இவைகளே நான் ஓவியம் வரைவதற்கான அகத் தூண்டலாக இருக்கின்றன.

அதே போல் மனிதம். சமூகத்தின் மீது இருக்கின்ற பற்று. அநீதியையும் அழிவையும் பார்க்கும்போது ஏற்படும் கோபம், அக்கறை இதுவே என்னை அடிக்கடி வரையத் தூண்டுகின்ற காரணிகளாக இருக்கின்றன.

ஓவியர்கள் சந்திக்கின்ற சவால்கள் எப்படியாக இருக்கின்றன ?

ஒவ்வொருவரையும் பொறுத்து வேறுபடுகின்றது. செயல்பாடுகளைப் பொறுத்தும் வேறுபடுகின்றது.என்னைப் பொறுத்தவரை சமூகம் குறித்து வெளிப்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் அதிகம்.ஓவியங்களைக் காட்சிப்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள், குத்தப்படும் முத்திரைகள், அதனால் நிகழும் திட்டமிட்ட புறக்கணிப்புகள், அச்சுறுத்தல்கள், புலனாய்வு பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள். இப்படி நிறைய…

கலைகளில் ஆதி அந்தமாக ஓவியக்கலை இருந்தாலும் அதிகம் இரசனைக்கு உட்படுத்தாமைக்கு என்ன காரணம் ?

வரலாற்றுக்கு முந்தைய மனிதன் மொழியாக ஓவியத்தைப் பயன்படுத்தினான். அவனது உணர்வுகளை மகிழ்வாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும், ஓவியங்களாக பாறைகளில் குகைகளில் வரைந்தான். அவை நமக்குப் பல்வேறு செய்திகளையும் வரலாறுகளையும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களால் ஓவியத்தேவையை, இரசனையை மனிதன் பின்னுக்குத் தள்ளினான்.மேலும் மனித வாழ்வோடு தொடர்புடைய ஓவியம் மேல்தட்டு மக்களுக்கானதாக மாறிப்போனது. ஓவியம் சந்தைப்பொருள் ஆனதாலும் அடித்தட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போனது. ஓவியத்திற்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.ஓவியம் என்றல்ல எந்தக் கலை வடிவங்களையும் தொடர்ந்து பார்ப்பதன் மூலமும் உள்வாங்குவதன் மூலமும் இரசனை என்பது மேம்படுகின்றது. தற்போது உள்ள எந்திர வாழ்க்கையில் மனிதன் ஓவியத்தைத் தேடிச்சென்று பார்த்து இரசிப்பதற்கும் உள்வாங்குவதற்கும் தயாராக இல்லை. அப்படியே அவன் சென்று பார்க்க விரும்பினாலும் அந்த ஓவியங்கள் அவனுக்கானதாக இல்லை. அதனால் இரசனை என்பது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இடத்துக்கு இடமும் வேறுபடுகின்றது.

உங்களது தூரிகை மொழியானது எப்படி இருக்கின்றது ? அதை மாற்றங்களுக்கு உட்படுத்தி விசாலப்படுத்தியிருக்கின்றீர்களா ?

என் தூரிகை மொழி தனித்துவமானது. மேலும் என் மொழியை மக்கள் தீர்மானிக்கின்றார்கள். 1983 -முதல் 1993 வரை செய்யப்பட்ட ஓவியங்கள் மக்களிடம் காட்சிப்படுத்தப்பட்ட போது, உள்ளடக்கம் மக்களைப் பற்றியதாக இருந்தாலும், வடிவம் மக்களுக்கு நெருக்கமானதாக இல்லை என்ற கருத்து வெளிப்பட்டது. அதிலிருந்து கிடைத்த படிப்பினைகளைக் கொண்டு, அதற்குப் பின் செய்த ஓவியங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தேன்.அது மக்களிடம் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் பரந்த தளத்திற்கு என் ஓவியங்களைக் கொண்டு சேர்த்தது. அதேபோல், வண்ண ஓவியம், கோட்டோவியம், பதிப்போவியம் (Etching), Linocut போன்ற வெவ்வேறு ஊடுபொருளில் (Medium) படைப்புகளை உருவாக்கும்போது அதற்கேற்ற வகையில் மொழி மாற்றமடையும். அதுவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

நீங்கள் கீறுகின்ற ஓவியங்களில் நிறங்களை எப்படியாகக் கையாளுகின்றீர்கள் ?

என்னுடைய ஓவியங்ககளில் மண் சார்ந்த வண்ணங்களையே பயன்படுத்துகின்றேன். நான் எந்த கருப்பொருளை வெளிப்படுத்துகின்றேனோ,அதற்கேற்ற வண்ணங்களையே பயன்படுத்துகின்றேன்.தேவையற்ற வண்ணப் பயன்பாடுகளை நான் கையாளுவதில்லை.

உங்கள் ஓவியங்கள் மாறுபட்ட கோணங்களில் எமக்கு கிடைத்திருக்கின்றன. நீங்கள் இவற்றை வரைகின்ற பொழுதோ இல்லை வரைந்து முடித்ததன் பின்னரோ நீங்கள் சந்திக்கின்ற உளவியல் சிக்கல்கள் எப்படியாக இருக்கின்றன ?

அது போன்ற ஓவியங்களை செய்வதற்கான மனத்தயாரிப்பில் இருக்கும்போதே மிகப் பெரிய துயரத்தை அனுபவிக்கின்றேன்.பல நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதிருக்கின்றேன்.அதன் பிறகு தான் ஓவியத்தை செய்யத் தொடங்கியிருக்கின்றேன். வரைகின்ற போதும் அந்த வலியோடு தான் வரைகின்றேன்.முடிந்த பிறகும் அது தொடர்ந்தாலும் மன உலைவிலிருந்து விடுதலையும் கிடைக்கின்றது. நான் உணர்ந்த, எனக்கு ஏற்பட்ட வலியை வேதனையை அவ்வோவியங்களில் வெளிப்படுத்துகின்றேன்.அதனால் தான் அந்த ஓவியத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதே வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றது.

நவீன ஓவிய முறைமைகளும் மரபு சார் ஓவிய முறைமைகளுக்கும் இடையிலான உங்கள் புரிதல் தான் என்ன?

மரபினுடைய நீட்சியே நவீனம்.இரண்டுமே வடிவம் சார்ந்தது.உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவது மரபு.உள்ளத்தை வெளிப்படுத்துவது நவீனம். ஒரு பொருளையோ மனித உருவத்தையோ இருப்பதை அப்படியே வரைவது மரபு என்றால், மன உணர்வுகளை வெளிப்படுத்துவது நவீனம்.உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவதில் திறன் பெற்றவர்கள் மட்டுமே நவீனத்திலும் வெளிப்படுத்தமுடியும்.அதற்கு தொடர்ந்த பயிற்சியும், புரிதலும், உள்வாங்கலும் மிக அவசியம்.

அத்துடன் மரபு சார் ஓவிய முறைமைகளில் வடிவத்திலும், வண்ணப் பயன்பாட்டிலும் எவ்வித சமரசமுமற்ற சரியான துல்லியமான வெளிப்படுத்துதல் இருக்க வேண்டும்.அதில் முழுக்க முழுக்க திறன் சார்ந்த உத்தியை கையாளுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் இயலும்.நவீன ஓவிய முறைமைகள் மரபு சார் ஓவிய முறைமைகளில் பெற்ற திறன் தேர்ச்சியின் அடிப்படையில் வடிவங்களில் மாற்றங்களைச் செய்து மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வண்ணங்களை, வெளிகளை, இழை அமைவுகளை கலைப்பண்பு கூறுகளைப் பயன்படுத்தி சுயமாகப் படைப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. படைப்பாளனின் சிந்தனையை வெளிப்படுத்தி புதிய ஒன்றை உருவாக்குவதற்கும், எல்லைகளை உடைத்து அதற்கென புதிய எல்லைகளை வகுத்துக் கொண்டும் நவீனம் செயல்படுகிறது.

மரபுசார் ஓவிய முறையில் இருந்து என்னென்ன விடயங்களை சமகால ஓவிய முறைகளில் வெளிப்படுத்த வேண்டும் ?

சமகால ஓவியங்களில் மரபு ஓவியங்களில் இருந்து வடிவங்களையும் வண்ணங்களையும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி அவற்றை கையாளுகின்றபோது தொன்மை வடிவங்கள் குறித்த சிறு புரிதல்களையாவது ஏற்படுத்த முடியும். இது நவீன நாடகங்களில் சாத்தியப்படுவதைக் காண முடிகின்றது.

சம காலத்தில் மரபு ரீதியிலான ஓவியங்கள் அதிகம் புழக்கத்தில் இல்லை. இதற்கு அடிப்படையில் காரணங்கள் உள்ளதா?

மரபு என்பதை நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றேன். ஒன்று தொன்மை. மற்றொன்று நேரியம் (Realism). தொன்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அது இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் மாறுபடக்கூடியது. ஆனால், நேரியம் என்பது, மிகவும் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றது. எந்த ஒரு கலை வடிவமும் மக்களின் பயன்பாட்டைப் பொறுத்தே நீடித்து நிற்கும். பயன்படுத்தாத எதுவும் அழிந்தும் மறைந்தும் போகும். அப்படித்தான் தொன்மை என்ற மரபு ஆகிவிட்டது. பிற்காலத்தில் மரபாகப் புரிந்து கொள்ளப்பட்ட நேரியம் என்பது பயிற்சியோடும் கல்வியோடும் தொடர்புடையதாக மாறியது. கவின் கலைக் கல்வி முறையில் மிகவும் அடிப்படையாக இன்றளவும் திகழ்கிறது. ஒரு காலத்தில் அடித்தட்டு மக்களின் வடிவமாக இருந்த தொன்மை மரபு இன்று மேல்தட்டுக்கான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. அதுவும் மிகமிகக் குறைவாகவே. அதனால் அது புழக்கத்திலிருந்து மறைந்து விட்டது. நேரியம் என்பதும், நவீனத்துவதுக்குப் பிறகு, மக்கள் பயன்பாட்டிலிருந்து மறையத் தொடங்கியது. சமகாலத்தில் பொதுவாக ஓவியம் என்பதே வசதி படைத்த மேல்தட்டுக்கு உரியது என்ற நிலையம் அதற்கு காரணம்.

ஓவியங்களில் பின்நவீனத்துவத்தின் பங்களிப்பானது எப்படியாக இருந்தது அல்லது இருக்கின்றது ?

கலைத்துறையில் நவீனம் என்பது ஓவியத்தில் தான் முதன் முதலில் வெளிப்பட்டது.அதன் பிறகு தான், கட்டிடக்கலை, கவிதை போன்ற எழுத்துத் துறைகளுக்கும் பரவியது. ஓவியத்தில் பதிப்பியம் (Impressionism), உணர்ச்சிப் புறப்படுத்தலியம் (Expressionism) போன்ற பல்வேறு கலை இயக்கங்களில் அதுகுறித்த புரிதல்களோடு ஓவியங்களை செய்து கொண்டிருந்த ஓவியப் படைப்பாளிகள் ஒரு குழுவாக சேர்ந்து இயங்கினார்கள். அதன் பிறகு கருத்து முரண்பாடுகளால் அதிலிருந்து வெவ்வேறு போக்குகள் உருவானது. சிறிது காலத்திற்குப் பிறகு குழு செயற்பாடுகள் மறைந்து, தனித்துவ செயற்பாடுகள் மேலெழுந்தன. அந்த வகையில் பார்க்கின்ற போது பின்நவீனத்துவத்தில் அனைத்து ஓவியப் படைப்பாளிகளும் தனித்துவத்தோடு வெளிப்படுத்தலையும், இயங்குதலையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் போது ஓவியங்களில் பின் நவீனத்துவம் என்பது தனித்து அடையாளங்களை வழங்கியது.

புகைப்படக் கருவிகள் (camera) மற்றும் இலக்க முறையிலான வடிவமைப்புகள் (digital design) ஆகியவற்றின் வருகையினால் ஓவியத் துறையானது வீழ்ச்சியடைந்து விட்டது என்று உணர்கிறீர்களா?

அறிவியல் புரட்சியால் புகைப்படக் கருவி வந்தது. புகைப்படக் கருவி வருவதற்கு முன்பு, உருவ ஓவியங்களையும் நிலக் காட்சிகளையும் இன்னும் ராஜா ராணி மற்றும் கோமகன்களுக்கும் அவர்கள் அரண்மனைகளை அலங்கரிக்கக் கூடிய ஓவியங்களையும் ஓவியர்கள் தான் செய்து வந்தார்கள். புகைப்படக் கருவி வந்த பிறகு ஓவியர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஓவியர்கள் செய்த வேலைகளை புகைப்படக் கருவி செய்தது. அதனால், அதையே நம்பி வாழ்ந்த ஓவியர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், ஓவியர்கள் புதிய ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு creative -ஆக படைக்கத் தொடங்கினார்கள். அதே போல் digital வருகைக்குப் பிறகும் பாதிப்பு ஏற்பட்டது. படைப்பு ரீதியிலான செயல்பாட்டில் இருந்த ஓவியர்களுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் வடிவமைப்பு போன்ற விளம்பர வேலைகளில் செயல்பட்டு வாழ்வை வளமாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காலத்துக் காலம் தொழில் நுட்பம் வளர வளர இது போன்ற சிக்கல் உருவாவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் ஓவியத்தின் அடிப்படை இல்லாமல் எந்த தொழில் நுட்பமும் வளரவும் முடியாது.. செயல் பாடவும் முடியாது. அந்த வகையில் ஓவியத்துறை என்றும் வீழ்ச்சி அடையாது. அதை எவ்வாறு வளர்த்துக் கொண்டு கையாளுகின்றோம் என்பதைப் பொறுத்து தான் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமைகின்றது.

மேற்கத்திய போர்க்கால ஓவியங்களுக்கும் தெற்காசியாவில் இருக்கின்ற ஓவியங்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடுகளை காண்கின்றீர்கள்?

மேற்கத்திய நாடுகளில் போர்க்கால ஓவியங்கள் பல ஓவியர்களால் ஒரு சில ஓவியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கென்று மதிப்பும் வரவேற்பும் வரலாறும் இருக்கின்றது. ஆனால், தெற்கு ஆசிய நாடுகளில் அவ்வாறு இல்லை என்றாலும் ஒரு சிலர் செய்திருக்கின்றார்கள். ஒன்றை இங்கே நான் குறிப்பிட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் கூட இல்லாத அளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளில் நூறு ஓவியங்களுக்கு மேல் நான் செய்திருக்கிறேன். ஒரு தனி ஓவியர் ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இவ்வளவு ஓவியங்கள் செய்திருப்பது என்பது வரலாற்றில் வேறு எங்கும் நான் அறிந்த வரை இல்லை.

மேற்கத்திய ஓவியர்களில் உங்களை அதிகம் பாதித்தவர்கள் யார் ?

பாப்லோ பிக்காஸோ, சால்வர்டார் டாலி.

ஓவியக் கலையானது நூல்களின் விளக்கப்படமாக மாறியிருக்கின்ற நிலை பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?

எழுத்து மொழி வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு, காட்சி மொழி துணை செய்கிறது. இரண்டும் இயைந்து பார்க்கின்றவரையும் படிக்கின்றவரையும் பரவசப்படுத்துகின்றன என்று சொல்லலாம்.

ஓவியங்களுக்கும் பார்வையாளனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி ………..?

இடத்துக்கு இடம் படைப்பாளனுக்குப் படைப்பாளன் வேறுபடுகிறது. ஓவியங்கள் எதை வெளிப்படுத்துகின்றன.எங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.ஓவியங்கள் காட்சிபடுத்தப்படும் இடங்கள் பெரும்பாலும் சாமானியர்கள் நெருங்க முடியாத இடமாக இருக்கின்றன.அப்படியே நெருங்க முடிந்தாலும் உருவமும்,உள்ளடக்கமும் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இல்லை என்ற கருத்து இருக்கின்றது.ஓவியம் ஒரு சந்தைப் பொருளாகவும் கலைக் காட்சிக் கூடங்கள் சந்தைப் படுத்தும் இடமாகவும் இருக்கின்றன.ஆனால், மக்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை,போராட்டங்கள் குறித்தும் வெளிப்படுத்துகின்ற ஓவியங்களுக்கும்..பார்வையாளனுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது.இன்னும், மக்களிடம் நெருங்கிச் செல்கின்ற பொழுது அந்த உறவு மேலும் பலப்படுவதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன்.உணர்ந்து கொண்டும் இருப்பவன்.

அதேபோல ஓவியர்களுக்கான அங்கீகாரங்களும் இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.வளர்சி பெற்ற மேலைச் சமூகத்தில் ஓவியர்கள் மிகவும் மதிக்கப் படுகின்றார்கள்.பிற துறை கலைஞர்களுக்கும் அதே போல் மதிப்பு இருக்கிறது.அதற்குக் காரணம், அச்சமூகக் கட்டுமானம்.ஆனால், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதுவும் பொருளாதார வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் அற்ற நிலையில் கலைப் படைப்புகளுக்கான தேவையும் மதிப்பும் குறைவாகவே உள்ளது.அதனால், ஓவியர்களுக்கான அங்கீகாரங்களையும் அந்த நிலையிலிருந்தே பார்க்க முடியும்.ஆனால், ஏற்கனவே நான் கூறிய படி சமூகம் சார்ந்து செயல்படக் கூடிய கலைஞர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் ஒப்பீட்டளவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

தூரிகை மொழிகளினால் இந்தச் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றீர்களா?

நிச்சயமாக ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றேன்.அந்த நம்பிக்கையில் தான் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக படைத்துக் கொண்டும்,இயங்கிக் கொண்டும் இருக்கின்றேன். தொடர்ந்து இயங்க வைப்பதும் அந்த நம்பிக்கை தான்.

நவீன தூரிகைகளின் பங்களிப்பானது மதங்களில் எப்படியான தாக்கத்தைக் கொண்டு வந்தன?

மதங்கள் நவீன சிந்தனைகளையே இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அவ்வாறு இருக்கும் போது, நவீன தூரிகை முறைகள் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவரின் புராண இதிகாசக் கதைகள் இந்து மதத்தில் பரவிக் கிடைக்கின்றன.இதை ஓவியங்களாக காட்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனவா ? இல்லையென்றால் ஏன்?

அவ்வாறு எதுவும் வெளி வந்திருப்பதாகவே தெரியவில்லை.நவீன ஓவிய வெளிப்பாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனைப் போக்கில் ஓவியம் செய்து கொண்டிருப்பவர்கள். அவரவர்களுக்கென்று சில தெரிவுகள் இருக்கும்.அந்த அடிப்படையிலேயே வெளிப்படுத்துவார்கள். அதில் நமக்கு உடன்பாடும் இருக்கலாம்.முரண்பாடும் இருக்கலாம்.

ஓவியங்களில் பெண்கள் வெறும் பாலியல் பிண்டங்களாகவே சித்தரிக்கப்படுகின்றார்கள் என்ற விமர்சனத்தில் நீங்கள் எப்படியாக இருக்கின்றீர்கள்?

எல்லாவற்றையும் அவ்வாறு தட்டையாகப் பார்த்து விட முடியாது.மேலை நாடுகளில் ஓவியர்கள், உடற் கூறுகளை ஆய்ந்து பயிற்சி செய்வதற்காக ஆண் பெண் இருபாலரின் நிர்வாண உயிர் மாதிரிகளை வைத்து பார்த்து பயிற்சி செய்து அதன் மூலம் தங்களின் மனித உடற்கூறு திறனை வளர்த்துக் கொண்டார்கள்.பயிற்சி என்ற அடிப்படையில் அது தேவையே.மேலைச் சமூகத்தில் அது போன்ற பயிசிகள் மிகவும் இயல்பானவை. ஆண்கள் பெண்களையும்.. பெண்கள் ஆண்களையும் நிர்வாண உயிர் மாதிரிகளை பார்த்து பயிற்சி செய்கின்றார்கள்.ஆனால்,கீழை நாடுகளில் அவ்வாறு இல்லை. அதனால், அவற்றை வெளிப்படுத்துவதிலும், உற்று நோக்குவதிலும் வேறுபாடு இருக்கின்றது.ஆனால் சிலர் பாலியல் ரீதியான சிந்தனைகளை ஓவியங்களில் வெளிப்படுத்துகின்றார்கள்.இது போன்று எழுத்துக்களிலும் வெளிப்படுவதைக் காணலாம்.

தெற்கு ஆசிய சமூகத்தில் ஓவியத்துறையில் பெண்களின் இருப்பு அல்லது வீச்சு எப்படியாக இருக்கின்றது?

மேற்குலக நாடுகளை ஒப்பிடும் பொழுது,தெற்கு ஆசிய சமூகத்தில் ஓவியத் துறையில் பெண்களின் இருப்பு குறைவாகவே உள்ளன.ஆனால், சம காலத்தில் பெண்கள் அதிகமாக முழு நேர ஓவியர்களாகவே இருக்கின்றார்கள்.ஆனாலும், இது போதாது.இன்னும் அதிகமானவர்கள் வரவேண்டும். இருக்கின்ற பெண்கள் நல்ல வீச்சுடன் படைக்கின்றனர்,செயல்படுகின்றனர்.

உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு எப்படியாக இருந்தது?

1983 -ஆம் ஆண்டு நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் மாணவனாக இணைந்த போதே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தில் பங்கு பெற்றேன்.பிறகு, தமிழீழத் தமிழர்கள் சந்தித்த துன்பங்களையும்.துயரங்களையும்,படுகொலைகளையும் ஓவியங்களாக வெளிப்படுத்தினேன்.அக்காலத்தில், பல்வேறு போராட்ட அமைப்புகள் அறிமுகமாயின.1985 -ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு அதிக நெருக்கம் ஏற்பட்டது.அதற்கு, என்னுடைய கலைச் செயல்பாடு மிக முக்கிய காரணியாக இருந்தது.தொடர்ச்சியாக தமிழீழத்திற்கு பலமுறை பயணம் மேற்கொள்ளவும் என்னுடைய ஓவியங்களை காட்சிப் படுத்தவும் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பது,ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பது உட்பட பல பணிகளை பல மாதங்கள் செய்யும் அளவிற்கு வளர்ந்தது.2004 -க்குப் பிறகு அரசியல் ரீதியான பணிகளிலும் ஈடுபட வேண்டியிருந்தது.

ஈழத்தமிழரின் தமிழ்த் தேசியத்தை ஓர் அரசியல் ரீதியாக முன்நிலைப்படுதுவீர்களா இல்லை கலை சார்ந்து முன்நிலைப்படுத்துவீர்களா?

என்னைப் பொறுத்தவரை கலை வேறு அரசியல் வேறல்ல.இரண்டுமே எனக்கு ஒன்றுதான். எனக்கென்று அரசியல் இருப்பதால் தான் அது கலையில் வெளிப்படுகின்றது.அந்த வகையில் ஈழத்தமிழரின் தமிழ்த்தேசியத்தை போராட்டத்தை என் ஓவியங்களில் வெளிப்படுத்துகின்றேன். என் ஓவியங்களும் வீதிக்கு வந்து போராடி இருக்கின்றன.நானும் அரசியல் ரீதியான போராட்டங்களில் வீதிக்கு வந்து போராடி இருக்கின்றேன்.அதனால் ஒரு கலைஞனுக்கு இரண்டுமே தேவை என்று நம்புகின்றேன்.

முள்ளிப்பேரவலம் நடைபெற்று முடிந்ததின் பின்னர் தமிழகத்தின் பிரபலங்கள் அடிக்கடி முள்ளிவாய்க்காலை தரிசிக்கும் சூட்சுமம் என்ன?

போர் உச்சகட்டத்தை அடைவதற்கு முன்பு நானும் பலமுறை அம்மண்ணுக்குச் சென்று அங்குலம் அங்குலமாக அனுபவித்து பயணித்திருக்கின்றேன்.தலைவர்,தளபதிகள்,பொறுப்பாளர்கள், போராளிகள்,மக்கள் என அனைவரோடும் நெருக்கமான உறவோடு இருந்திருக்கின்றேன்.அந்த நினைவுகளும் அனுபவங்களும் என் வாழ்வில் மிக முக்கியமானவை.மறக்க முடியாதவை. மீண்டும் பெற முடியாதவை.முள்ளிவாய்க்கால் பேரவலமும் பெருந்துயரமும் எனக்கு மிகப் பெரிய மன பாதிப்பை ஏற்படுத்தியது.அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாதவனாகவே நான் இருக்கின்றேன்.இந்நிலையில் மற்றவர்கள் ஏன் அங்கு செல்கின்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

சாதியத்தை ஓவியத்தில் வெளிக்கொண்டு வரும்பொழுது உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் என்ன?

ஓவியங்களில் சாதிய சிக்கல்களை வெளிப்படுத்தும் போது எந்த சாதிய அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை வெளிபடுதுகின்றேனோ அதைச் செய்கின்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கசப்பானதாக இருக்கின்றது. அந்த சாதிய அடையாளங்களோடு வாழ விரும்புகின்ற சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவில் தலித் ஓவியத்தின் தாக்கம் எப்படியாக இருக்கின்றது?

பிறப்பால் தலித்தாகப் பிறந்தவர்கள் செய்வது எல்லாம் தலித் ஓவியமா?அல்லது தலித்துக்களின் ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவது தான் தலித் ஓவியமா?என்னைப் பொறுத்தவரை தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துவது தான் தலித் ஓவியம்.பிறப்பால் தலித்தாக இருப்பவர்கள் பலரும் அது போன்று படைப்பதில்லை.அவர்களின் சிந்தனை,வெளிப்பாடு, செயல்பாடு எல்லாமே அதற்கு மாறான வேறு திசைகளை நோக்கியே இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவில் சமூக சிந்தனைகளோடு வெளிப்படும் ஓவியங்களும் குறைவு… வெளிப்படுத்தும் ஓவியர்களும் மிகமிகக் குறைவு.இதிலிருந்து தான் தலித் ஓவியத்தின் தாக்கத்தையும் பார்க்க முடியும்.

ஓவியங்கள் சாதி பார்த்ததில்லை.ஆனால் தலித் ஓவியம் என்ற பகுப்பு வர வேண்டியதும் அது தொடர்பான விவாதங்களும் எதற்காக?

தலித் எழுத்துக்கள் போன்று தலித் ஓவியம் என்ற பகுப்பு வருவது தவறில்லை.ஆனால்,பிறப்பால் தலித்தாக இருப்பவர் வெளிப்படுத்தும் ஓவியங்கள் அனைத்துமே தலித் ஓவியமா? அப்படியென்றால் தலித்திய சிந்தனைகளற்று மேட்டிமைச் சிந்தனைகளோடு வியாபாரத்திற்காகச் செய்யப்படும் ஓவியங்களை தலித் ஓவியங்கள் என்று வரையறுக்க முடியுமா?பிறப்பால் தலித்தாக அல்லாத ஒருவர் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் வெளிப்படுத்தும் ஓவியங்களை என்னவென்று கூறுவது?தலித்தாக பிறந்த ஒருவர் சந்தைக்காக ஒரு படைப்பை உருவாக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.அதே நேரத்தில், அதை எவ்வாறு தலித் ஓவியம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியும். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் ஆதார மையம் என்ற அமைப்பு தலித் ஓவியக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினார்கள். அதன் பிறகு ஒரு நாள் தோழர் திருமாவளவன் அவர்கள் என்னைச் சந்தித்த போது, “உங்கள் ஓவியம் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததா”?என்று கேட்டார். “பிறப்பால் நான் தலித் இல்லை. அதனால் என்னைச் சேர்க்கவில்லை. என் ஓவியங்களும் இடம் பெறவில்லை” என்றேன். “அப்படி எவ்வாறு கூற முடியும்.. உங்கள் அளவிற்கு தலித் ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தியவர்கள் வேறு யாரும் இல்லையே” என்றார். “உண்மை தான் ஆனால் தலித் ஓவியர்கள் ஒன்றிணைந்து தலித்திய சிக்கல்களை ஓவியங்களில் வெளிப்படுத்தினால் நல்லது தானே” என்றேன்.ஆனால் அக்காட்சியில் இடம்பெற்ற ஓவியர்கள் பலருக்கும் அந்த சிந்தனையே கிடையாது. அதில் கலந்து கொண்ட ஓவியர் ஒருவர், “நான் புராணங்களில் இருந்து கூறுகளை எடுத்து ஓவியங்கள் செய்து கொண்டிருந்தேன். நல்ல விற்பனையானது ஆனால் அந்தக் காட்சிக்குப் பிறகு விற்பனை பாதிக்கப்பட்டது” என்று பின்னாளில் கூறி வருந்தினார்.

அதே போல் 1991 -ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சுண்டூரில் இருபத்தியோரு தலித்துகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.அப்போது ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவனாக இருந்தேன்.சுண்டூருக்கு நேரில் சென்று ஒரு நாள் முழுவதும் அம்மக்களோடு இருந்து துயரில் பங்கெடுத்தேன்.பின்பு அது குறித்து சுண்டூர் படுகொலை என்ற தலைப்பில் ஓவியம் ஒன்றைச் செய்தேன்.நான் சுண்டூருக்கு சென்று வந்தது குறித்து ஆனந்த விகடனில் செய்தி வெளியானது.அதைப் படித்த ஓவியர் ஒருவர் என்னிடம், “நீ என்ன அரசியல் வாதியா ? அதையெல்லாம் செய்கின்றாய்” என்று கேட்டார்.பிறப்பால் அவர் ஒரு தலித்.

ஈழத்து இலக்கியமும் அதன் வீச்சுக்களும் பற்றிய உங்களின் சிந்தனைப் போக்கு எப்படியாக இருக்கின்றது?

ஈழத்து இலக்கிய குறித்து எனக்கு எப்போதுமே உயரிய மதிப்பு உண்டு.அதுவும் போராட்ட களத்தில் இருந்து எழுதப்படும் எந்த எழுத்துக்கும் மிக வலிமை உண்டு.அந்த வலிமையை ஈழத்து இலக்கியத்தில் காண்கின்றேன்.எண்பதுகளின் தொடக்கத்தில் ஈழ விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கிய பிறகு நான் படித்த ஈழத்துக் கவிதைகள்,சிறுகதைகள் என்னை மிகவும் பாதித்தன.மக்களின் வலியை.. வேதனையை.விடுதலை வேட்கையை அந்த இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கும் போதே போராளிகள் பலர் எழுதிய எழுத்துக்களையும் படித்திருக்கின்றேன்.அவைகள் எல்லாம் முழுமையாகத் தொகுத்து வெளி உலகுக்குக் கிடைக்கப் பெற்றிருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும் என்பது என் கருத்து.

ஈழத்து ஓவியர்களைப் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

ஓவியர் மாற்கு அவர்களின் ஓவியங்கள் சிலவற்றை அச்சு வடிவில் பார்த்திருக்கின்றேன். அ. ராசையா,ரமணி போன்ற ஓவியர்களை பார்த்தும் பழகியும் இருக்கின்றேன். அவர்களுடைய ஓவியங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.அவர்களுக்கென்று ஒரு தனித்துவமும் இருக்கின்றது.ஆனால், பொதுவாக இன்னும் பல ஓவியப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். குறிப்பாக போராட்ட களத்தின் அனுபவம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.என்று அவர்களிடமும், கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய என்னுடைய உரையிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.அதே போல் கல்வி நிறுவனங்களில் ஓவியத் துறையில் அடிப்படைப் பயிற்சியை மேம்படுத்தினால் எதிர்காலத்தில் நல்ல பல ஓவியர்களை ஈழம் பெறும்.அதற்கான விதைகளைப் போட்டோம்.ஆனால், எல்லாம் கனவாகப் போய்விட்டது.

புலம் பெயர் இலக்கியத்தில் ஓவியத்தின் பங்கு எப்படியாக இருக்கின்றது ?

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு தமிழ் ஈழத்திலும், தமிழகத்திலும் வாழ்கின்ற தமிழர்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.அந்தந்த நாடுகளில் அருங்காட்சியகங்கள், கலைக் காட்சி கூடங்கள் என்று நிறைய பல நூற்றாண்டு ஓவியப் படைப்புகளை, கலைப் படைப்புகளை பொக்கிசங்களாக பாதுகாத்து வருகின்றன.அவைகளை அங்கு வாழும் தமிழர்கள் பலரும் பார்ப்பதில்லை.அவைகள் எல்லாம் மேலை நாட்டினர் மட்டுமே ரசிக்கவும்.. உள் வாங்கவும் முடியும் என்றும் தமிழர்கள் நம்புகின்றார்கள்.இலக்கியப் படைப்பாளிகள் கூட சிலரைத் தவிர பலரும் அது குறித்து புரிதல் இல்லாமலேயே இருக்கிறார்கள். அதனால், இலக்கியங்களிலும் அது பிரதிபலிக்கின்றது.இன்னும் நிறைய பன்முகத் தன்மையோடும் புரிதலோடும் வெளிப்பட்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு புலம் பெயர் இலக்கியங்களுக்கு இன்னும் இருக்கிறது.

இலக்கியம் கலைகள் போன்றவை ஒருவருக்கு சோறு போடாது என்ற வாதத்தை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

வயிற்றுக்கு உணவு முக்கியம் தான்.அதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.உணவு உண்பது மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாகவும் இருக்க முடியாது.கலை இலக்கியம், மக்களின் சிந்தனைப் பசிக்கு உணவாக இருக்கிறது.மக்களை சிந்திக்கவும் பண்படுத்தவும் கலை இலக்கிய படைப்புகள் உதவுகின்றன.இதற்காக கலைஞனும் எழுத்தாளனும் பட்டினி கிடந்தும் உழைக்கிறான் என்று சொல்லலாம்.அப்படிப்பட்ட கலைஞர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கின்றது.ஆனாலும், தற்போதைய நிலையில் கலை இலக்கியத்திற்கான வேறுபட்ட தளங்களும் வெளிகளும் உருவாகி இருக்கின்றன.படைப்புகளை வைத்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளும் உருவாகி இருக்கின்றன. ஆனால்,அது எல்லோருக்கும் வாய்க்கிறதா என்பது தான் கேள்வி.

பொதுவாகவே கலைஞர்களிடையே இருக்கும் ஞானக்கிறுக்கை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

கலைஞர்களிடம் இருக்கும் ஞானச்செருக்கை கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால், கிறுக்கை எப்படி ஏற்றுக்கொள்வது.

பொது வெளியில் நீங்கள் எவ்வாறு இருக்கப்பட வேண்டும் அல்லது அறியப்பட வேண்டும் என விரும்புகின்றீர்கள்?

ஒடுக்கப்படுகிறவர்களின் பக்கம் நிற்கும் மனிதனாகவும் கலைஞனாகவும்…

உங்களுக்கென்று ஆதர்சங்கள் யாராவது இருக்கின்றார்களா?

அப்படி ஆதர்சம் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.முன்னோடிகளாக, உலக அளவில் பிக்காசோவும் இந்திய அளவில் எம். எப். உசேனும் என்று சொல்லலாம்.

வளர்ந்து வருகின்ற ஈழத்து ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உற்று நோக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். திறன் வளர்ச்சியோடு அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.உலகளாவிய சிந்தனையோடு தமிழின அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான இலக்கிய அரசியல் என்ன ?

மனித நேய சமூக அரசியல்.





உவங்கள் -இலங்கை

02 கார்த்திகை 2016


Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம