ஐஸ் கிறீம் வாழ்க்கை
நமக்குள்ளே நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். எதைச் செய்ய நினைத்தாலும் ஏழு கருத்துகள் வருகிறது. நேற்று செய்ததை நினைத்து இன்று வேதனைப்படுகிறோம். செய்யவும் விருப்பம், ஆனால் தயக்கம். விருப்பமிருக்கிறது ஆனால் தைரியமில்லை. நமக்குள்ளேயே குழந்தையுணர்வு ஐஸ்கிரீம் கேட்கிறது. தாய் குரல் குறைவாய் சாப்பிடு என்கிறது. தந்தை குரல் கூடாது என்று மிரட்டுகிறது. ஆசிரியர் திட்டுகிறார். அறிவு அது கெடுதல் என்கிறது. கெளரவம் இடம் பார்த்து சாப்பிடு என்கிறது. அந்தஸ்து உயர்ந்த விலையுள்ளதை கேட்கிறது.
ஆக குழந்தையுணர்வாய் ஒருமையாய் ஒரு ஐந்து நிமிடம் வாழ நம்மால் முடிவதில்லை. அப்படிப் பிளவுபட்டு கிடக்கிறோம். ஆகவே பிளவில் சக்திகள் சிதைந்துவிடுகின்றன. கடைசியில் நாம் ஐஸ்கிரீம் ஆசையைக் கூட வாழாமல் அமுக்கி கட்டாயதனத்துக்குள் நுழைந்துகொள்கிறோம்.
இப்படி நமக்குள் பல குரல்கள், பல மாறுபட்ட கருத்துக்கள், அறிவுகள். இதையெல்லாம் மெல்லும் மன ஓட்டம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த ஓட்டத்திற்கே சக்தி செலவாகிவிடுகிறது. வாழ்வதற்கு சக்தி மீதம் இருப்பதில்லை. இந்த பிளவு நிலை, இந்த சிதறுண்ட நிலையிலிருந்து நாம் மீளவேண்டும். அப்போதுதான் ஓர் உணர்வாய் சக்திப் பெருக்கமாய் வாழ்வைத் தொடுவோம். அப்போது அங்கு தயக்கமும் பயமும் போய் குதூகலமும் கொண்டாட்டமும் பிறக்கும்.
000000000000000000000000
உள்ளுணர்வு
உள்ளுணர்வுபடி நாம் வாழ்வது இந்தக் காலத்தில் பிறந்து ஒரு 6 மாதம்வரை தான் பிறகு மனம் வந்து விடுகிறது. நான் என்ற கற்பனையும் அதைச் சுற்றி கட்டடமும் கட்ட ஆரம்பித்து விடுகிறது குழந்தை.
உள்ளுணர்வுபடி வாழும் குழந்தையைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது, இதயம் திறக்கிறது, உணர்வு நெகிழ்கிறது, நாமும் சிறிது உணர்வு பெறுகிறோம், மனதின் பிடி சிறிது தளர்கிறது. ஆகவே உள்ளுணர்வுபடி நாம் இப்போது வாழ துவங்கினால் மீண்டும் நாம் குழந்தை போலாவோம். குழந்தையாக மாட்டோம். குழந்தை போல, அதாவது உள்ளுணர்வுப்படி நான் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழும் மனிதனாக நாம் இருப்போம். குழந்தை உள்ளுணர்வுப்படி வாழ்ந்தாலும் அப்படி வாழ்வதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லாமையால் அதை இழந்துவிடுகிறது. மேலும் அதற்கு தன்னைக் காத்துக் கொள்ளுமளவு அறிவும் உடலும் வளராமையால், அடுத்தவரை சார்ந்தே வாழ வேண்டி இருப்பதால், அடுத்தவரால் தாய் தந்தையால் திணிக்கப்படுவதை மறுக்க சக்தியற்று தன் உள்ளுணர்வை சிறிது சிறிதாக இழந்து விடுகிறது.
ஆனால் வளர்ந்து விட்ட நாம் உள்ளுணர்வை திரும்பப் பெற்று வாழும் சாத்தியம் இருக்கிறது. அதற்குரிய சக்தியும் ஆற்றலும் நமக்கு வந்துவிட்டது. இப்படி உள்ளுணர்வுப்படி வாழ்ந்தால் நாம் ஒழுக்கமற்று, பணிவற்று, மரியாதையற்று, அன்பற்று, காட்டுமிராண்டியாகி விடுவோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
உள்ளுணர்வுப்படி வாழ ஆரம்பித்தால் செக்ஸ் இருக்கும், ஆனால் கற்பழிப்பவன் இருக்கமாட்டான். கடமை இருக்காது, ஆனால் கருணையும் அன்பும் இருக்கும். போலித்தனமான மரியாதையும், தந்திரமான பணிவும் இருக்காது, ஆனால் மனிதநேயம் இருக்கும். பாதுகாப்புக்காகவும், சுயநலத்துக்காகவும் உறவு கொண்டாடுதல் இருக்காது, ஆனால் நட்பும் பகிர்தலும் இருக்கும். வியாபாரம் என்ற பெயரில் சுரண்டல் இருக்காது, ஆனால் உழைப்பும் உற்பத்தியும் இருக்கும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் கலை இருக்காது, உணர்வை கூர்மைப்படுத்தும் படைப்பும், கலையும், இசையும் பிறக்கும். தண்டனையின் பயமுறுத்தல் இருக்காது, ஆனால் உள்ளுணர்வின் இயல்பில் இயங்கும் ஒழுங்கு இருக்கும். நாம் உள்ளுணர்வுப்படி வாழ்கிறோம் என்ற உணர்வு இல்லாமல், ஆனால் உள்ளுணர்வுப்படியே அதுவே ஒரு துணையாக, வழிகாட்டுதலாக, வாழும்
பல்லாயிரம் கோடி ஜீவராசிகளைப் பாருங்கள். மரம், செடி, கொடி என பூத்துக் குலுங்கி கனி கொடுக்கும் பல்லாயிரம் கோடி தாவர இனத்தைப் பாருங்கள். எவ்வளவு அமைதியும், பொறுமையும், இயற்கையோடான இணைப்புணர்வும், அழகும், ஆனந்தமும், படைப்பும், ஆராய்ச்சியும் அவைகளிடம் நிறைந்துள்ளன.
00000000000000000000000000000
பயம்
நான் என்னுடைய பயத்தைப் பற்றி விழிப்புணர்வு அதிகம் கொள்ள ஆரம்பித்தேன். – அதிகம் நபர்கள் கூடும் இடத்தில் இருக்க எனக்கு ஏற்படும் பயம் பற்றி, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கு ஏற்படும் பயம் பற்றி, அவர்கள் என்னை விரும்புவார்களா மாட்டார்களா என்பது பற்றி நான் கொள்ளும் பயம் பற்றி – என்னுடைய பயங்களை பார்க்க ஆரம்பித்தேன். இறுதியில் நான் வாழ்நாள் முழுவதும் பயத்திலேயேதான் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்ற
உண்மையை சந்தித்தேன். மற்றவர்கள் என்ன செல்வார்களோ என்ற பயம்.
நான் செய்தது அனைத்துமே மற்றவர்களைப் பொறுத்ததுதான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்கள் அதை அங்கீகரிப்பார்களா இல்லையா என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது.
இது மனசோர்வையும் தாண்டியது. இது பயங்கரமானதாக இருந்தது. என்னால் இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. நான் என்ன செய்தாலும், எங்கே சென்றாலும், இது என்னுடைய முகத்தில், வயிற்றில், கால்களில் இருந்தது. நான் பயக்குழியில்
வாழ்வதாக எனக்கு தோன்றியது. அந்த குழி மிகவும் ஆழமானதாகவும் நான் அதிலிருந்து வெளியே வர முடியப் போவதில்லை என்றும் தோன்றியது.
பின்பு….. சிலநாட்கள் கழித்து, (அது எத்தனை நாட்கள் கழித்து என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை,) பயம் குறைந்துள்ளதை உணர்ந்தேன். மேலும் அது குறைந்துகொண்டே போவதையும் உணர்ந்தேன். மிகப்பெரிய மாறுதல் நிகழ்ந்தது, மின்னல் வெட்டியது என்றெல்லாம் என்னால் கூற
முடியாது. அதை பார்ப்பது மட்டுமே போதுமானது. நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்தை பார்த்து, நிஜமாகவே அதை உணர்ந்து, அதற்கு காரணம் நீதான், வேறு யாரும் காரணமல்ல
என்பதை நிதர்சனமாக உணர்ந்து கொண்டு, தன்னுணர்வோடு அதை வாழ்ந்து பார்க்கும் போது…….. எத்தனை நாட்கள் உன்னால் அதை செய்ய முடியும்? எத்தனை நாட்கள் நீ தொடர்ந்து நரகத்தில் வாழ்வதை தன்னுணர்வோடு தேர்ந்தெடுப்பாய் ?
உங்களுடைய பயத்தை மதிப்பீடு செய்யாமல், ஒய்வாக, மனதிற்கு வெளியே நின்று பார்ப்பது மட்டுமே போதுமானதாகும். அப்போது விழிப்புணர்வு என்னும் ரசவாதம் தனது வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.
0000000000000000000000000
கட்டாயத்தனம்
24 மணிநேரமும், ஒவ்வொரு சின்ன செயலையும், கருத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. நேரத்தை வீணடிக்கக்கூடாது, பணத்தை வீணடிக்ககூடாது, உழைப்பை, அறிவை, உணவை, தண்ணீரை, இப்படி எதையும் வீணடிக்ககூடாது. அதோடு எவ்வளவு சிக்கனமாக, உபயோகமாக, விரைவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அப்படிச் செய்யவேண்டும் . வளரவேண்டும். இப்படி வீணடிக்ககூடாது, அதிகபட்ச ஆதாயம் அடையவேண்டும், வளரவேண்டும், சாதனை படைக்கவேண்டும் என்ற அந்தக் கட்டாயத்தனம் ஒரு நோய் என்கிறார் ஓஷோ. மனிதனைப் பீடித்துள்ள மிக அபாயகரமான சக்தி வாய்ந்த நோய் இது. இது ஈகோவை வளர்ப்பதாக, செயல்களில் திறமையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் இது வெகு
சீக்கிரம் பற்றிக்கொள்கிறது. முழுதாக ஒருவனை ஆக்கிரமித்துவிடுகிறது. இது ஈகோவை வளர்க்கிறது. அறிவும், திறமையும் கொடுக்கிறது. ஆகவே இது ஒருவனுக்கு எவ்வளவு துன்பமாக இருந்தபோதிலும் இதை விடுவது கடினமாக இருக்கிறது. வெளிவரத் தயக்கமாக இருக்கிறது. இதன் வேரை, இது எப்படி நமக்கு வந்தது, எப்படி நம்மை விட்டு விரட்டமுடியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் அறிய ஒருவனால் முடிவதில்லை.
இதனால் ஒருவனால் எதையும் அனுபவித்து வாழ முடிவதில்லை. சந்தோஷம் கொள்ள முடிவதில்லை. தவறுகளை ஏற்க முடிவதில்லை. மற்றவர்களை அவர்களாகவே ஏற்று சந்தோஷப்படமுடிவதில்லை. ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்க முடிவதில்லை. காரணமற்று, பயனற்று விளையாட்டாய் எதையும் செய்ய முடிவதில்லை. அழகை ரசிக்கவும், அன்பை ஆராதிக்கவும், தனிமையில் வாழவும் முடிவதில்லை. மொத்தத்தில் உண்மையான வாழ்வையும், அதன் ஆனந்தத்தையும் அவனால் என்றுமே அனுபவிக்க முடிவதில்லை. இருக்கும் வாழ்வையே அனுபவிக்கமுடியாதவனுக்கு தியான நிலை என்ற சாத்தியமே இல்லை. மேலும் மிகுந்த முயற்சிக்கு பின்னும் இவனுக்கு பலன் கிடைக்காத கோபத்தில், தியானம் புரியாமல் வாழ்பவர்களைப் பார்த்தே சில நேரம் பொறாமை பிறக்கிறது. தன்னைவிட அவர்கள் சந்தோஷமாய் இருப்பது போல இவனுக்குத் தெரிகிறது. இதனால் இவனது கட்டாயத்தனம் இன்னும் இறுகுகிறது. அல்லது சலிப்பில் வேறு முயற்சிக்கு மாற முடிவு செய்கிறான். ஆனால் சமுதாய போலித்தனமும் ஏற்புடையதாக இல்லாததால் அங்கும் கூட்டத்தில்
ஒருவனாக மாறமுடியாமல் அவதிப்படுகிறான். கடைசியில் புதிய ஈகோவில் புதிய தன்னைப் போன்றவர்கள் கூட்டம் ஒன்றைச் சேர்த்து அதில் ஒரு அங்கமாகிவிடவே முயற்சிக்கிறான்.
கோமகன்
Comments
Post a Comment