Skip to main content

சுவைத்தேன்-கவிதைகள்-பாகம் 08


பொன்னையருக்கு வேலை போனது



ரியூற்றறிகள் இல்லாத
காலத்தில்
வீடுகளுக்குப்போய்
ரியூசன் கொடுத்தவர்தான்
பொன்னையா வாத்தியார்
கால் நடையில் தான் வருவார்
குதிக்கால் நிலத்தில் பாவாது
கற்பித்த பாடங்கள்
கணக்கும் ஆங்கிலமும்
அரைமணி நேரத்தில்
கற்பித்தல் நடந்ததோ இல்லையோ
எங்கள் செவியில்
அவர் தொங்குவது தவறாது
பொன்னையர் தொங்கியதால்
என் காதுப் பொருத்து
புண்ணாகியிருந்தது.
அவர் செய்யும் கொடுமையை
வெளியில் சொல்ல முடியாது
‘படிப்பு வரட்டும் என்றுதானே
வாத்தியார் அடிக்கிறார்’
… இது மாமாவின் சித்தாந்தம்.
எனக்காக
அத்தை உருகினாலும்
தலையிடும் அளவுக்கு
துணிச்சலில்லை அவவுக்கு
பொன்னையரை மனசாரத் திட்டினேன்
என் திட்டுப் பலிப்பதாயில்லை
காதுப்புண்ணும் ஆறுதில்லை
கடைசியாக
கடவுள் கண் திறந்தார்
ஒருநாள்
பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது
வேறொன்றுமில்லை
என்னிலை விட்ட சேட்டையை
அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார்
பெரியம்மா கண்டிட்டா
வாத்தியார்
படிக்காட்டி என்ர பிள்ளை
என்னோடை இருக்கட்டும்
நீங்கள் வாருங்கோ’

0000000000000000000000000000

என்ன மரம்



கிராமங்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு பட்டமிருக்கும்
அது பொருத்தமாகவுமிருக்கும்
கதிரவேலுவுக்கு அமைந்த
‘காகம்’ என்ற அடையும் அப்படித்தான்

கதிரவேலு தனிக்கட்டை
தமக்கை செல்லாச்சியோடு
வாழ்ந்து வந்தார்
நல்ல மனிசன்
மரியாதையான பேச்சு
மாலையில்
கொஞ்சம் கள் அருந்துவார்
அது போதும்
தளம்பாட .

அன்று
இரவு எட்டு மணி
செல்லாச்சி திண்ணைக் குந்திலை
கதிரவேலு தட்டுத்தடவி
இருப்புக்கு வருகிறார்
முற்றத்து தென்னை முன் நின்று
அண்ணாந்து பார்க்கிறார்
அக்கா அக்கக்கா
இது என்ன மரம்
காத்திருந்து அலுத்துப்போன
செல்லாச்சி சொன்னா
இதுதானடா தம்பி
வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!

000000000000000000

உண்ணாச்சொத்து



வேலுப்பிள்ளை வாத்தியார்
வேகமாய்ச் சைக்கிள் ஓடார்
மூப்பால் வந்த நிதானம்
சைக்கிளை நிறுத்தி
அவர் இறங்கும் பாணி
வித்தியாசமானது
கால் ஊன்றும் உத்தி
அந்தத் தலைமுறைலில் இல்லை.
அந்தரப்பட்டுக் குதிப்பார்.
மரியாதை கருதிப் பொறுத்திருந்தது
அலுத்துப்போய்
ஒருநாள் கேட்டே விட்டேன்
‘பிறேக் றிம்மைத் தேய்ச்சா
கனகாலம் பாவிக்காது பாரும்’

தனிக்கட்டை
ராசம்மாக்கிழவி
சுறுசுறுப்பான மனுஷி
வயசு தெரியாத தோற்றம்
சந்தைக்குப்போய்
காய்கறிகள் வாங்கி
ஊர்மனைக்குள்
வியாபாரம் செய்வாள்
தலையில் கடகம்
கடகத்துக்கு மேலே
காற்செருப்பு
‘ஏன் ஆச்சி செருப்பைப் போடேல்லை’
என் சின்ன மகள் கேட்டாள்
‘வெயில் கடுமையெண்டால் போடலாம்
நெடூகப்போட்டுத்திரிஞ்சா
கெதியில தேஞ்சுபோம், பிள்ளை’

புதுவவருசம் பிறந்தால்
சந்திரகுமார் சுறுசுறுப்பாகி விடுவான்
தொண்டு நிறுவனங்கள்
வங்கிகள்
கடைப்படிகள்
எல்லாம் ஏறிஇறங்கி
கலண்டர், டயறி சேகரிப்பான்.

அவனுக்குத் தேவை
ஒரு கலண்டரும் டயறியுமே.
ஆனால்
அவனிடம்
ஜனவரி முடிவில்
இருபது முப்பது சேர்ந்து விடும்.
சந்திரகுமார்
ஒரு பக்கமேனும்
டயறி எழுதி அறியான்

றிம் தேயாது சைக்கிளோடிய
வேலுப்பிள்ளை வாத்தியார்
விபத்துக்குள்ளாகி
மருத்துவமனையில் கிடந்தார்
செருப்பைப்பாதுகாத்த ராசம்மா
ஆணிகுத்தி
ஏற்புவலி வந்து செத்துப்போனாள்
சந்திரகுமாரின் டயறி
சலவைக்கணக்கு எழுதப்பயன் படுகிறது.

00000000000000000000000000

நன்றி : சோ பத்மநாதன்



(தொகுப்பில் இருந்து கொய்தவர் கருணாகரன்)

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...