மனிதர்கள் தங்கள் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பி வாழ்ந்த காலம் அது. திரை கடலோடித் திரவியம் சேர்ப்பதென்பது, தொலைதூரத்து நாடுகளின் போர்களங்களுக்குச் சென்று மீள்வதைப் போன்றது. கீழைக் கடலில் கிழக்கு நோக்கிப் புறப்பட்டால் எதிர்க்கரை காண்பதற்கு, வாரங்களல்ல-மாதங்கள் காத்திருக்க வேண்டும். மாநக்கவரம் தீவுகளில் சில தினங்கள் தங்கி மீண்டும் கிளம்பினால், ஒரே நீலக்கடல்,நீலவானம், திரும்பிய பக்கமெல்லாம் நீல நிறந்தான். சார்ந்த காற்று வீசத் தொடங்கும் காலங்களில்தான் பாய் மரங்களை அவிழ்த்துக் கொண்டு துடுப்புப் போடுவார்கள். சார்ந்த காற்று எதிர்க்காற்றாக மாறாதிருக்க வேண்டும்; கடல் அலைகள் மலைச் சிகரங்களின் உயரத்துக்கு எழும்பாதிருக்க வேண்டும். இன்னும் மறைந்து மோதும் கடற்பாறைகள், முதுகால் கலம் கவிழ்க்கும் திமிங்கிலங்கள், துள்ளித்தாக்கும் சுறா மீன்கள்,நள்ளிரவில் கொள்ளை கொள்ளும் கடற் கள்வர்கள்-இவ்வளவு தொல்லைகளையும் கடந்து செல்ல வேண்டும், கடந்து திரும்பவேண்டும்...இதில் நம் தமிழ்நாட்டு வணிகர்கள் என்றுமே சளைத்தவர்களல்லர். ஐயவீர நாச்சியப்பரைச் சேர்ந்தவர்கள் கடல் வாணிகத்திலும் தேர்ந்தவர்கள்; தரை வாணிகத்தில...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்