பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு.
07 மார்கழி 2018
000
கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்டது என்று எல்லாமே நான் தான். எனக்கு தங்கையோ சகோதர்களோ இருக்கவில்லை. ஒருவேளை எனக்கு ஒரு தங்கைச்சியோ அக்காவோ இருந்திருந்தால் பெண்வாசம் என்றால் என்னவென்று தெரிந்திருக்குமோ என்னவோ. இப்பொழுதெல்லாம் எனக்கு கலியாணத்தில் பெரிதாக ஆர்வம் வரவில்லை. உடல் மனம் இரண்டின் தேவைகளை அதன் போக்கில் இயல்பாக இருக்க விட்டு விட்டேந்தியாக வாழ்வதும் ஒரு ஜென் நிலைதான் என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. சிலவேளைகளில் அதிக பொறுப்புகளை எடுப்பதற்கு நான் அஞ்சுகின்றேனோ என்றும் கூட எண்ணியதுண்டு.
இந்தப் பொறுப்புகளே ஒருவிதமான சுமைதானே? எனது அம்மாவும் அப்பாவும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட இச்சையால் அம்மாவுக்கு நான் பத்துமாதங்கள் சுமையானேன். பின்னர் சனத்தொகையில் ஒரு இலக்கத்தைக் கூட்டி நான் வாழுகின்ற இந்த உலகத்துக்கு சுமையானேன். மூன்று அரைக் கிலோ சுமையாக இருந்த என்னைச் சுமக்க அம்மா எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பா? அம்மாவை நினைக்கவே ஒருபக்கம் கவலையாகவும் பாவமுமாக இருந்தது. சம்பவத்தில் அம்மாவும் அப்பாவும் தான் சம பங்காளிகள். ஆனால் அப்பா சம்பவம் முடிந்தவுடன் கெத்தாக மீசையை முறுக்கிக் கொண்டு ராஜநடை போட்டார் ஆனால் அம்மாவோ சம்பவத்துக்கு சாட்சியாக பத்து மாதம் மூன்று அரைக் கிலோ சுமையுடன் நடக்க விட்ட இயற்கையின் சிஸ்ரத்தின் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் இப்பொழுது அம்மா எனக்கு ‘சந்தோசம்’ என்று இன்னுமொரு சுமையை கொண்டுவரத் துடியாய் துடிக்கின்றா.
எனக்குப் பெண்கள் விடயமென்றால் அதுவொரு வேண்டாத ஆணியாகவே எனக்குத் தோன்றியது. முன்பின் தெரியாதவர்களை கலியாணம் என்ற சடங்கால் இணைந்து அவர்களைச் சில நேரங்களில் எமக்குப் பிடிக்கா விட்டாலும் எங்களது சுயத்தை ‘சமரசம்’ என்ற பெயரில் போலிக்கு ஒழித்துக்கொண்டு அவர்களுடன் வாழ்வது என்பது என்னைப் பயமுறுத்தியது என்றும் சொல்லலாம். இதனால் நான் அம்மாவின் கவலைக்குரியவனாக மாறி விட்டிருந்தேன். கண் தெரியாத இடத்தில் ஒரு நல்ல பெண் துணையுடன் பிள்ளைகளை பெற்று நான் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பது அம்மாவின் தினசரிக்கவலைகளில் ஒன்று. அவரவருக்கு அவர்கள் பிரச்சனை.
பனிக்காலத்து அதிகாலைப் பனிமூட்டம் நிலத்தைக் கௌவியிருந்த வேளையொன்றின், வீட்டில் அடைந்து கிடக்காது வெளியே வேகநடைபயிற்சிக்கு நான் செல்ல முதல், மேசையில் இருந்த எக்ஸ்பிறாசோவை சிப்பியவாறு கணனியில் இருந்து மெதுவாகக் கசிந்து கொண்டிருந்த பிரான்ஸ் இன்போ செய்திகளை உள் வாங்கியபடியே நான் எழுத வேண்டிய சிறுகதைக்காகக் கணனியின் தட்டச்சுப்பலகையில் எனது விரல்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தன. இடையில் பிரான்ஸ் இன்போவில், கடந்த இரவு மாலியில் இரண்டு பிறெஞ் இராணுவப்படையினர் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியின் விபரிப்பினால் எனது கைவிரல்கள் சோர்ந்து விழுந்தன.
பிரான்ஸ் எப்பொழுதுமே இப்படித்தான் தனது நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளை அடக்கியாள வக்கில்லாது றோட்டில் போகின்ற ஓணான்களைத் தூக்கித் தனது கவட்டுக்குள் விட்டுக்கொண்டிருந்தது. அதில் ஒரு ஓணான் தான் மாலி. முன்னொருகால் இந்த மாலியில் நாடு பிடித்து அடித்த கொள்ளையின் விசுவாசத்துக்காகவும், பின்னொருகால் இதனைச் சாட்டி வந்த குறைந்த கூலிகளான ஆபிரிக்கர்களின் வம்சாவளிகளைத் தனது நாட்டில் சந்தோசப்படுத்தவும், மாலியில் தன்னால் கொண்டு வரப்பட்ட பொம்மை அரசுக்கு முண்டு கொடுக்கவும், அங்கே மாலியின் வடக்கு பிரதேசத்தில் போராடிக்கொண்டிருந்த ட்யூரெக் (Tuareg) ஜிகாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அத்துடன் அங்கே பரந்து விரிந்திருந்த தங்க வயல்களில் மீது ஒரு கண் வைக்கவும், அங்கே 2013-ல் இருந்து இந்த பிரான்ஸ் கடும் பஞ்சாயத்து ஒன்றினைச் செய்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான் நேற்றுத் தனது இரண்டு இளம் வயது படைவீரர்களைப் பலி கொடுத்து விட்டுச் சனங்களைச் சாந்தி செய்வதற்காக வீரவசனங்களை அள்ளி எடுத்து விட்டுக்கொண்டிருந்தது பிரான்ஸ். இந்த நேரத்தில்தான் நான் மறக்க நினைக்கின்ற மம்முடுவின் நினைப்பு மீண்டும் வந்து என் கண்ணைக் கண்ணீரால் நிறைத்தது. அவ்வளவு தூரத்திற்கு அவன் எனது மனமெங்கும் விரவி அலைக்கழித்துக்கொண்டிருந்தான். இந்த அலைக்கழிப்பை சொல்வதில் எனக்கு ஒரு விதமான அகச்சிக்கலும் இல்லை. ஒருவகையில் அவன் என்னைக் கொள்ளை கொண்டவன் என்பது தான் உண்மை. ஆனாலும் எனது மனக்குழப்பங்கள் மம்முடுவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.
0000000000000000000000000000
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதான ஒரு கோடைக்காலத்தில்தான் மம்முடு பதினாறு மாடிகளைக் கொண்ட எனது குடியிருப்பின் ஒரே தளத்தில் நேர் எதிராக இருந்த 56-ஆவது இலக்க வீட்டிற்கு அயலவனாக வந்திருந்தான். மம்முடு அப்பொழுதுதான் முப்பது வயதைக் கடந்திருந்தான் என்று எனக்கு எண்ணத் தோன்றியது. அவன் ஒரு சாதாரணப்பட்ட ஆபிரிக்கன் போல் இல்லாது நெடுநெடுவென்ற வளர்ந்து குறுக்குப்பாடாக அகன்ற வாட்டசாட்டமான பிரகிருதி. அவனின் கரிய நிறத்திற்கு அவனது செக்கச்சிவந்த கண்கள் கொஞ்சம் எடுப்பாகவும் துலாம்பரமாகவும் தெரியும். கம்பளி ஆடுகளின் மயிர்கள் போல் அல்லாது, ஓரளவு நீளமான மயிருடன் அவனது தலை இருக்கும். மம்முடு எப்பொழுதும் முழங்கை கட்ஸ்கள் வெளியே தெரியும் படிதான் தனது சேர்ட்டின் கையை மேலே மடித்து விடுவான். அவனது தொய்வில்லாத அகன்ற மார்பும் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் முழங்கை கட்ஸ்களும் எந்தவொரு பெண்ணையும் அவனது காலடியில் சுருட்டி விழுத்தும் வல்லபத்தை பெற்றிருந்தன. அத்துடன் அவனை உடல்ரீதியாக எதிர்ப்பதற்கு யாரும் அஞ்சும்படியாகவே அவனது உடல்வாகு அமைந்திருந்ததது.
ஒருநாள் காலையில் நான் எனது வீட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு வேலைக்கு இறங்கும் பொழுது எதிரே மம்முடுவும் தனது வீட்டைப் பூட்டிக்கொண்டு என்னுடன் சேர்ந்து லிப்ட்-ல் இறங்கினான். இருவரும் யார் முதலில் பேசுவதென்ற சில்லறை ஈகோவினால் தள்ளுமுள்ளுப்பட்டுக்கொண்டிருந்த பொழுது அவனே பேச்சை ஆரம்பித்தான்,
“காலை வணக்கம் மிஸ்யூர்( மிஸ்ரர்) . எனது பெயர் மம்முடு சுலைமான். உங்கள் அயலவனாக குடிவந்திருக்கின்றேன். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.” என்றவாறு கை கொடுப்பதற்குத் தனது அகன்ற பெரிய கையை நீட்டினான்.”
“ஓ ……… மிக்க மகிழ்ச்சி மிஸ்யூர் மம்முடு. எனது பெயர் ‘அன்ரனிப் பிள்ளை’. எனக்கும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.” மாலையில் நேரமிருந்தால் நீங்கள் வீட்டுப்பக்கம் வந்து இரண்டு வேர் (கிளாஸ்) எடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.”
“மன்னிக்க வேணும் அன்ரனி, நான் மதுபானம் அருந்தவதில்லை. அத்துடன் எனது கலாச்சாரமும் அதை அனுமதிக்காது.”
“சரி மதுபானம்தான் வேண்டாம். ஒரு கப் தேநீராவது …………”
ஆ ……………. அப்படியானால் கட்டாயம் வருகின்றேன். அதுவும் உங்கள் நாட்டுத் தேநீர் போல் நான் வேறெங்கும் கண்டதில்லை, அதன் லாகிரியே தனியானதுதான்.”
மம்முடு எமது தேநீரின் அருமை பெருமைகளை சிலாகித்துக் கதைத்ததில் எனக்குக் கொஞ்சம் அனுக்கமாகவே வந்துவிட்டிருந்தான். அவனில் இருந்து ஒரு மென்மையான பெர்பியூம் வாசம் வீசிக்கொண்டிருந்தது. சாதாரணமாக 147 பஸ்சுக்கு காத்திருந்து காலைநேரப் பூராயங்களை விடுப்புப் பார்த்து இரண்டு பஸ் நிறுத்தங்களை கடந்து செவ்ரன் தொடரூந்து நிலையத்தில் இறங்குகின்ற நான், அன்று இருவரும் நடந்தே சென்று தொடரூந்து நிலையத்தை அடைந்து, அங்கே வந்து நின்ற தொடரூந்தில் ஏறிக்கொண்டோம்.
00000000000000000000000000
அன்று மாலையில் வேலையால் வந்து அவனுக்காக இரண்டு மெழுகு திரிகளை ஏற்றி, இலங்கையால் வரும் பொழுது வாங்கி வந்த சுட்ட மண்ணில் செய்யப்பட்ட தேநீர் சிட்டிகளை தயார்நிலையில் வைத்து விட்டுக் கூடுதல் அழகிற்காகக் கண்ணாடிக்குடுவை ஒன்றில் இரண்டு ரோசா பூக்களையும் வைத்த பொழுது தான் எனக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை மம்முடு சொல்லியவாறு அன்று பின்னேரம் எனது வீட்டிற்கு வரவில்லை. அது எனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டது. முதல் சந்திப்பே இவ்வாறு கோணலாகியது எனக்கு உறுத்தியது. தானாக வலிய வந்து அறிமுகமாகி, எனது வீட்டிற்கு வருவதாக வாக்கும் தந்து அவன் தனது வருகையை புறக்கணித்தது என்னை அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அதன் பின்னர் வேலைக்குப் போகும்பொழுது அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தேன்.
அன்றில் இருந்து சரியாக இரண்டு கிழமைகளின் பின்னர் ஒரு செக்கல் பொழுதொன்றில் மம்முடு எனது வீட்டு கதவின் அழைப்பு மணியை ஒலிக்கச்செய்தான். ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியால் வெளியே பார்த்து விட்டு கதவை அகலத் திறந்தேன். என்னையறியாமலே அவன் மீது கொண்ட நான் கொண்ட கோபம் மெல்ல எட்டிப்பார்த்தாலும் அதனை அடக்கிக் கொண்டு முகத்தில் ஒரு மென்நகையை வரவழைத்துக்கொண்டே.
வணக்கம் அமிகோ ………….(நண்பனே ) எப்படியிருக்கின்றாய் ? நலமாக இருக்கின்றாயா? குடும்பத்தவர்கள் நலமாக இருக்கின்றார்களா ? என்னை மன்னித்துக்கொள். என்னால் உடனடியாக உனது அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த இரவுதான் மாலியால் திரும்பி வந்தேன் .” என்று அடுக்கிக் கொண்டு போனவனை இடைவெட்டி ,
“உள்ளே வா மம்முடு. உன்னைத் திரும்பவும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்று அவனை ஆரத்தழுவி உபசரித்தேன்.
ஆமா ……….. எங்கே எனது தேநீர் ?
“பொறு வருகின்றேன்.”
என்றவாறே அவனுக்காகத் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன். குளிர்ந்த தண்ணீரை ஆவி பறக்கக் கொதிக்கச்செய்து அதில் தேயிலைச் சாயத்தை அளவாகப் போட்டு இறுதியில் அதனைக் கடுஞ்சாயமாக்காது மென்மையான பொன் நிறத்தில் வடித்தெடுப்பதென்பது ஒரு தனிக்கலைதான். நான் தேநீரைத் தயாரித்துக் கொண்டே,
“எதெற்காக இருந்தாற்போல் மாலிக்கு சென்றாய் ?” என்ற எனது குரலில் பூராயம் அறியும் ஆவல் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
“அது ஒரு பெரிய கதை அமிகோ.”
“சொல்லு……”
“எனது அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள். நான், அவரது முதல் மனைவியின் மூத்த மகன். எனக்கு கீழே மொத்தம் ஒவ்வொரு அம்மாவுக்கும் தலா ஐந்து பேராக, இருபது சகோதர சகோதரிகள். உனக்கு தெரியுமா…. ? எங்களது குடும்பமே ஒரு மினி கிராமம் தான்.”
“அப்ப உனது அப்பா சுலைமான் என்ன வேலை செய்கின்றார் ?”
“அவர் ஒரு ஒட்டகத் தரகர். எங்களது பரம்பரைக்கும் ஒட்டகத்துக்கும் மிகவும் நெருங்கிய பந்தம் ஒன்று இருந்தது. எனது முன்னோர்கள் அயல்நாடுகளுக்கெல்லாம் சென்று பெரிய ஒட்டக வியாபாரிகளாக இருந்திருக்கின்றார்கள். அப்பா சுலைமானின் கண்ணில் எந்தவொரு உயர்சாதி ஒட்டகமும் தப்பி விட முடியாது. அதனால் கிழமையில் இரண்டு நாட்கள் கூடுகின்ற ஒட்டகசந்தையில் இவரது தரப்படுத்தலிலேயே ஒட்டகங்கள் விற்பனையாகும். அவரது சொல்லை யாரும் தட்டியதில்லை.”
“அவசரமவசரமாக மாலியில் ஒரு அலுவல் இருந்தது அதுதான் உனக்கும் சொல்லாது போகவேண்டி வந்து விட்டது.” என்று இறைஞ்சும் குரலில் சொன்னான். பூராயம் அறிய இருந்த எனக்கு அவன் ‘அவசர அலுவல்’ என்று மொட்டையாகச் சொன்னது பெரிய ஏமாற்றமாகிப் போய் விட்டது.
“நீ பிரான்சுக்கு வந்து எவ்வளவு காலம் ? எதற்காக இங்கு வந்தாய் ?” என்று வேறு திசைக்குப் பேச்சை நான் மாற்றினேன்.
சிட்டியில் இருந்த தேநீரின் இறுதிச் சொட்டை மெதுவாக இழுத்து முடித்து விட்டு நாக்கினால் தனது தடித்த உதடுகளைத் தடவியவாறே, ‘பின்னொரு நாளில் ஆறுதலாகப் பேசுவோம் அமிகோ’ என்று விட்டு என்னிடம் இருந்து விடைபெற்றான் மம்முடு. அவன் என்னை விட்டுச்சென்றாலும் அவனது பேச்சின் லாவகமும் மென்மையான அணுகுமுறைகளும் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.
00000000000000000000000000000
மேபிள் மரங்கள் எல்லாம் தங்கள் இலைகளை மண்ணுக்குத் தானம் செய்து வசந்தகாலத்து இறுதி நாட்களுக்குக் கணக்கிட்டுக் கொண்டிருந்த காலமொன்றில் தொடர்வேலையால் உடலும் மனமும் சலிப்புற்றுக் களைத்து இருந்த நான், பிரான்ஸின் வடமேற்குத் திசையில் இருக்கும் எனக்குப் பிடித்த துறைமுகநகரான செயின்ற் மலோ(Saint-Malo) நகரிற்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு நான் வேலை செய்யுமிடத்தில் இருந்து இரண்டு கிழமை வருடாந்த லீவை எடுத்திருந்தேன். அன்று செக்கல் பொழுதொன்றில் வந்த சோம்பலைப் போக்க கையில் இருந்த எக்ஸ்பிறாசோவை சிப்பியவாறே நைஜீரிய சிங்கம் ஹோல் சொயிங்கா ( Wole Soyinka ) எழுதிய எ ரோல் ஒப் ரூ ( A Tale of Two ) நாவலில் அமிழத் தொடங்கினேன். நாவல் முற்றுமுழுதாக என்னைத் தன்னுள் இழுத்து, அதில் நான் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த பொழுது வீட்டு மணி எனது நீச்சலை நிறுத்தியது. ‘ஆரடாப்பா இந்த நேரத்திலை’ என்று எரிச்சலுடன் புறுபுறுத்தவாறே ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியால் கண்ணைப் பொருத்திப் பார்த்தேன். அங்கே மம்முடு நின்றிருந்தான். நான் கதவைதிறந்தவாறே ,
“வணக்கம் மம்முடு. உள்ளே வா. உன்னைக் கன நாட்களாகக் காணவில்லை, திரும்பவும் மாலிக்கு போய் விட்டயோ என்று நினைத்தேன்.”
“உனக்கு எப்பொழுதும் கேந்திக் கதைதான் அமிகோ. இன்று எங்களுக்கு ‘லைக்’ ( பக்ரீத்) பண்டிகை. கிடைக்கின்ற உணவை பகிர்ந்து சாப்பிடுவது எமது சமூக வழக்கம். அதுதான் உனக்கு கொஞ்ச ஆட்டுஇறைச்சிக் கறி கொண்டு வந்தேன்.” என்று ஒரு சிறிய பிளாஸ்ரிக் பெட்டியை நீட்டினான். நான் வாசித்துக் கொண்டிருந்த நாவலைப் பார்த்து விட்டு ஓ …….நீ சொயிங்கா எல்லாம் வாசிப்பியா ? என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டான்.
“உனக்கும் அவரைத் தெரியுமா ……?”
“தெரியுமாவா …… அவர் எங்களின் வணக்கத்துக்குரியவர். ஆபிரிக்கர்களுக்கு இப்படியும் எழுத வரும் என்று உலகத்துக்கு இடிச்சு சொன்னவர். அவருடைய சீசன் ஒப் அனோமி (Season of Anomy) துப்பறியும் நாவல் வாசிச்சியா ? எனது சின்ன வயசில் படிச்சு கிறுங்கிப் போனேன். ”
“நான் சொயிங்கோவின் தீவிர வாசகன் மம்முடு. அநேகமாக அவரின் எல்லா நாவல்களும் நாடகங்களும் வாசித்திருக்கின்றேன். எப்படி இவரால் இப்படியெல்லாம் எழுத முடிகின்றது என்று நான் வியந்ததுண்டு.”
“நான் அடுத்த முறை வரும்பொழுது சொயிங்கோவின் தி இன்ரெர்பிறிற்ரர் (The Interpreters) அடுத்த பிரபலமான துப்பறியும் நாவலைக் கொண்டுவந்து தருகின்றேன், படித்துப்பார்.” என்று முகமெங்கும் பரவசநிலையில் சொன்னான் மம்முடு. எனக்கென்னவோ இருவரும் மிகமிக அருகாக நேரலையில் பயணிக்கின்றோமோ என்றுகூடத் தோன்றியது.
“எல்லாம் சரி உனது ஆட்டிறைச்சிக் கறிக்கு மிக்க நன்றி மம்முடு. என்னிடம் உனக்கு எதுவும் தர இல்லையே. அத்துடன் இன்று நான் சமைக்கவும் வேறு இல்லை.” என்று குற்ற உணர்வுடன் நான் சொன்னேன்.
“அட இதென்ன பெரிய விடயம் உன்னிடம் அள்ள அள்ளக் குறையாத சுவையான தேநீர் இருக்கின்றதே……. போடு குடிப்போம் .” என்று உரிமையுடன் கேட்ட மம்முடு இன்னும் எனக்கு அனுக்கமானான். அவன் இங்கே வந்து குப்பை கொட்டும் கதையை அறியும் ஆவலுடன் ,
“நான் உன்னிடம் போனமுறை கேட்ட கேள்வி ஒன்று நினைப்பு இருக்கா மம்முடு… ?”
“ஓ ………….. இருக்கே அமிகோ. அதுவும் ஒரு பெரிய கதைதான். அநேகமாக நீயும் அனுபவித்துத்தான் இருப்பாய் என்றுதான் எண்ணுகின்றேன். நான் தலை நகர் பமக்கோ ( Bamako) வில் இருந்து 1500 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கிடல் ( Kidal ) கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் கிராமத்தில் நகராகத்தின் வாசம் இல்லை. அதுதான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அப்பா சுலைமான் ஒட்டகத்தரகர் என்றபடியால் கிராமத்தில் நல்ல செல்வாக்கும் பசைப்பிடிப்பும் உள்ள ஆள். அவர், நான்கு அம்மாக்கள் இருபது சகோதர சகோதரிகள் கொண்ட ஒரு பெரிய குடும்பமாக இராசா மாதிரி இருக்க முடிந்தது.
எழுத வாசிக்கத் தெரியாத எங்களுக்குப் படிப்பும் நாகரிகமும் சொல்லித் தருகின்றோம் என்று சொல்லித்தான் இந்த பிறெஞ் ஒட்டகங்கள் எங்கள் கொட்டகைகளுக்கு உள்ளே நுழைந்து கொண்டன. பின்னர் எங்களிடம் இருந்த தங்க வயல்கள் மேல் இருந்த காதலைத் தங்கள் பெருவிருப்பாக காட்டிக் கொண்ட பொழுதுதான் நாங்கள் முழித்துக் கொண்டோம். அனால் அதற்குள் காலம் கடந்து போய் விட்டது. மாலியில் இருக்கின்ற கொஞ்ச சில்லறைகளுக்கு சில்லறைகளை அள்ளி வீசித் தங்கள் காரியங்களை கச்சிதமாக செய்து கொண்டிருந்தன இந்தப் பிறெஞ் ஒட்டகங்கள். அப்பொழுதுதான் எங்கள் மண்ணையும் வளத்தையும் காக்க ‘ட்யூரெக்’ அமைப்பு உருவாகியது. அதன் கவர்ச்சியில் நானும் எனது பதின்முன்று வயதில் ட்யூரெக்-கில் சேர்ந்து கொண்டேன். ஆரம்பத்தில் ‘ட்யூரெக்’ அமைப்பு என்னை அரசியல் ரீதியாக வளர்த்து எடுத்துக் கொண்டது. பின்னர் இராணுவப்பயிற்சிக்காக யேமனுக்கு சென்றேன். அங்குதான் நான் அதிரடித்தாக்குதல்களின் முன்னணி நிபுணராக அவதாரம் எடுத்தேன்.
எனது பயிற்சிக்காலம் முடிய மீண்டும் மாலிக்குத் திரும்பி வந்து பல தாக்குதல்கள் எனது தலைமையிலேயே நடந்தன. இளைஞர்கள் எல்லோருக்கும் நான் அதிரடிக் கதாநாயகன் ஆனேன். என்ன காரணமோ தெரியவில்லை அவர்கள் என்னை ‘தூக்குவதற்கு’ ஆயத்தங்கள் செய்தபொழுது, நான் இத்தாலியின் கடல் எல்லைக்குள் வந்து விட்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து இங்கே வந்து விட்டேன். இங்கு நான் அரசியல் தஞ்சம் கேட்ட பொழுது மறுபேச்சில்லாமல் இவர்கள் அங்கீகாரம் செய்து பின்னர் தங்கள் குடிமகனாகவும் கொண்டு வந்துவிட்டார்கள் என்றால் பாரேன்.”
என்று தொடர்ந்த மம்முடு தான் உளவுப் பிரிவில் இருந்த கதையை நைச்சியமாக மறைத்து விட்டிருந்தான். அது அவனது பயிற்சி முறையாகத்தான் இருக்க வேண்டும். முன்பின் தெரியாத ஒருவரிடம் யாராவது உளவாளி என்று சொல்வார்களா என்ன ?
பொண்ட் படம் பார்த்த மாதிரி வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த நான் ,
“எப்படி உன்னை இவ்வளவு விரைவில் குடிமகனாக்கினார்கள் ? நானே பத்து வருடத்துக்கு மேல் காத்திருந்தேன்.”?
அவன் பதில் ஒன்றையும் தராது பெரும்சிரிப்பொன்றைத் தந்தான். மம்முடு என்ற சாகசக்காரன் இப்பொழுது என்னை முழுவதுமாக நிறைத்து விட்டான். இப்படியானவர்களிடம் பழகுவதே எனக்குப் பெருமையாக வேறு இருந்தது. ‘செயின்ட் மலோவுக்குப் போய் விட்டு வந்து இவனிடம் இன்னும் கதைத்தால் ஒரு பெரிய நாவல் எழுதிப்போடலாம் போலை இருக்கே’ என்று என்மனம் என்னுள் உருப்போட்டது.
செயின்ட் மலோவில் இவன் நினைப்பைத் துறந்து விட்டு அதன் அழகிலும் அமைதியிலும் என்னை தொலைந்து விட்டிருந்தேன். அதன் கடற்கரையிலும் துறைமுகத்திலும் கால்போன போக்கில் அலைந்து திரிந்து, வெள்ளை மனம் கொண்ட மாந்தர்களிடம் தகவல்களுக்காக மணித்துளிகளை செலவு செய்து மனதை நிரப்பி கொண்டு மீண்டும் செவ்ரன் வந்து இறங்கினேன். வந்தவுடன் முடிப்பதற்கு சில பக்கங்கள் விடப்பட்டிருந்த ‘எ ரோல் ஒப் ரூ ‘வை புரட்டிக் கொண்டிருந்தேன். நெடும் பயண அலுப்பில் செற்றியிலேயே படுத்து நித்திரையாக்கிக் கொண்டிருந்த என்னை, என்றுமில்லாதவாறு வீட்டுக் கதவின் முன்னே நாய் ஒன்று உறுமும் சத்தம் எழுப்பியது. எதிரே கிடந்த மணிக்கூட்டு அதிகாலை இரண்டு மணி எனக்காட்டியது. எனது வீட்டு மாடியின் கீழ் பக்கமாக இருந்து நீல நிறத்தில் வெளிச்சங்கள் விட்டு விட்டு வர நான் பல்கணியைத் திறந்து பார்த்தபொழுது, கீழே நிலப்பரப்பில் போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவர்களுக்கு துணையாக குடியிருப்பு தொகுதியைச் சுற்றி ஹெலிஹொப்டர் ஒன்று பரா வெளிச்சத்தை அடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தது.
என்றுமில்லாதவாறு எதற்காக எனது குடியிருப்பை போலீஸ் பெட்டியடிக்கிறது. இந்த இடம் பிரச்சனைகள் இல்லாத இடம் வேறு. அதுவும் எனது விட்டு கதவிற்கு முன்னால் போலீஸ் பிரசன்னமானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சத்தம்போடாது மெதுவாக வந்து எனது கண்களை ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியில் பொருத்தினேன். அங்கே ஐந்தாறு அன்ரி கிறிமினல் கொமாண்டோ படைகள் மம்முடுவின் வீட்டுக் கதவின் முன்னால் நிலையெடுத்து நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் உடலையொட்டிய கருப்பு சீருடைகளை அணிந்தும் தங்கள் முகத்தை முகமூடிகளால் மறைத்துக் கொண்டும் இருந்தார்கள். ஒருவன் மெதுவாக சைகை காட்ட ‘போலீஸ்’ என்றவாறே கதவை உடைத்துக்கொண்டு மம்முடுவின் வீட்டிற்குள் பாய்ந்தார்கள்.
கண்இமைக்கும் நேரத்தில் மம்முடுவை நெட்டித் தள்ளியவாறே கொமோண்டோக்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அதிர்ச்சியில் இருந்து விலகாத மம்முடு திமிறியவாறே அவர்களுடன் பெருங்குரலில் வாக்குவாதப்பட்டுகொண்டிருந்தான். அவனது நீண்ட நெடிய கைகள் காற்றில் அலைந்தன. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுப் பாடாக முடிந்தது. கொமோண்டோக்களை விட உயரமாக இருந்த அவன் நடுவில் நின்றவனை உணர்ச்சி மிகுதியால் தனது கையினால் நெஞ்சில் வைத்து தள்ளிவிட அவன் அலங்க மலங்க நிலத்தில் விழுந்தான். அந்த இடைவெளியில் மம்முடு திமிறிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி ஓட வெளிக்கிட்டபொழுது அவனின் பின்னால் நின்றிருந்த ஒரு கொமோண்டோ மின்னல்வேகத்தில் கால்தடம் போட்டு மம்முடுவை விழுத்தி அவனின் கழுத்தின் மீது முழங்காலை வைத்து நெரித்தவாறே அவனின் பெரிய கைகளை பின்பக்கமாக மடக்கி விலங்கிட முயற்சி செய்து கொண்டிருந்தான். மம்முடுவின் கால்கள் வலியால் தரையை உதைந்தன. தனது நண்பனை நெஞ்சில் கைவைத்தது மம்முடு தள்ளியதை அந்தக் கொமோண்டாவினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அது தங்களது அதிகாரத்தின் மீது கை வைத்ததாகவே அவன் மொழிபெயர்த்துக்கொண்டான். ஒருகட்டத்தில் மம்முடு மூச்செடுக்க கஸ்ரப்பட்டு பெருங்குரலில் அலறுவது தெரிந்தது. மம்முடுவை கைவிலங்கிட முயற்சி செய்து கொண்டிருந்த அந்தக் கொமோண்டோ தான் கற்ற வித்தையெல்லாவற்றையும் மம்முடுவில் காட்டிக்கொண்டிருந்தான். எனக்கென்னவோ ஸ்பெயின் மெட்ரிட் நகரில் நடக்கும் குழுவன் மாட்டை வெறியேற்றி மெதுமெதுவாக ஈட்டியால் குத்தி விளையாடும் விளையாட்டே (ட்ரிக்கோ டி முர்த்தே, Tercio de muerte, Third of death ) நினைவுக்கு வந்தது. பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டே சத்தப்படாது எனது கண்கள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தன. எண்ணி இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் சேவல் ஒன்று கேருவது போல் மூன்று முறை கேரி மம்முடுவின் தலை கீழே சாய்ந்தது.
Comments
Post a Comment