Skip to main content

பல விடயங்களைத் துறக்கும் துணிவற்றவர்களால் முழுமையான படைப்பாளிகளாக மாறுவது சாத்தியமில்லை- வாசுதேவன்

வாசுதேவனை ஏன் தெரியக்கூடாது ?


வாசுதேவன் இலக்கியவாதியாக இதுவரையும் அறியப்படவில்லை என்ற அர்த்தத்தில் இந்தக் கேள்வி எழுந்துள்ளதாகவே கருதுகின்றேன். இது ஒரு வகையில் சரியான கேள்வியே. தமிழ் இலக்கிய உலகு விசித்திரமானது. அது தனக்கென எழுதாத சில விதிகளைக் கொண்டுள்ளது. இலக்கியராக ஒருவர் வெளிப்பட வேண்டுமானால் அவரை “மேடையேற்றுவதற்குச்” சில நபரேனும் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்தச் சில நபர்கள் உங்களிடம் சில சமரசக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இங்கே “சமரசம்” என்ற சொல்லு முக்கியமானது. அவர்கள் தங்களைப் போன்று நீங்களும் ரசிக்கவேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்கள். அவர்களின் இலக்கிய அரசியலுக்கு நீங்கள் “கட்டுப்படவேண்டும்”, துணைபோகவேண்டும். நீங்கள் உங்களுக்கான ஒரு சிந்தனைத் தனித்துவத்தைப் பேணுவதை அவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கூட்டாகவன்றி, தனித்துவமாக இருக்கும் யாரையும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகம் சகித்துக்கொள்வதில்லை. அவ்வாறனவர்களை ஓரங்கட்டுவதிலும், இருட்டடிப்புச் செய்வதிலும் அது மிகுந்த கரிசனை கொள்கிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு நோயாகவே மாறிவிட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் தன்னியல்பை மறுப்பதற்கு துணிபவர்கள், அல்லது அவ்வாறு பாசாங்கு செய்பவர்கள்தான் மிளிரமுடியும். நான் அப்படியான ஒரு இலக்கியவாதியல்ல.

நீங்கள் வந்த கால கட்டத்தில் இருந்து இன்று வரை தமிழ் புலம்பெயரிகளின் வாழ்வு நிலையில் எந்த விதமான மாற்றங்களை அவதானித்தீர்கள் ?

எண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து இங்கு வாழும் எம்மவர் வாழ்க்கையை அவதானித்துக்கொண்டு வருகிறேன். இவர்களைப் பொறுத்தவரையில், இந்த முப்பத்தைந்து வருடங்களில் மிகப்பெரும்பகுதி நாட்டில் நடைபெற்ற யுத்தத்துடன் சமாந்தரமாகப் பயணித்ததென்று கூறிவிடலாம். ஒரு நீண்ட யுத்தத்தின் நேரடியானதும் மறைமுகமானதுமான விளைவுகளுக்கு எம்மவர்களின் மிகப் பெரும்பான்மையானவர்கள் உட்பட்டுள்ளார்கள். மிகப்பெரும்பான்மையான சாமானியர்கள் தம் தேசிய விருப்பை, தேசிய அடையாளத்தை பேணும் போக்கில் காணப்பட்டார்கள். இன்னமும் காணப்படுகிறார்கள். தேசியத்தை எதிர்க்கும் அல்லது தேசியத்துடன் முரண்படும் குறைந்த எண்ணிக்கையினரில் பெரும்பாலனவர்கள் தம்மை புத்திசீவிகள் என அடையாளப் படுத்துகிறார்கள். தேசியம் என்ற பொதுப் புத்திக்கெதிராகப் போர்க்கொடி தூக்குகிறார்கள். தமிழ்த் தேசியத்திற்கு இருக்கும் பன்முகத்தை அவர்கள் மறுப்பது மாத்திரம் அல்லாது தேசியம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அவையனைத்தையும் முடக்கி அதனை அவமதிக்கிறார்கள். இது வெறும் தேசியப் பிரச்சனையை முன்நிறுத்தியதல்ல என்பதனையும், இதன் பின்னணிக் காரணங்களாக தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அடிப்படையிலான பிரிவினைகளும் காரணம் என்பதையும் அவர்கள் சூட்சுமமாக மறைத்துவிடுகிறார்கள். அவ்வாறு மறைப்பதற்குத் தேசியம் சார்ந்த போட்பாடுகளை முன்நிறுத்தி அவற்றை ‘பின் நவீனத்துவ’ முறையில் வலுவிழக்க வைப்பதன் மூலம் தேசியக் கருத்தாக்கங்களை தூக்கி வீசுகிறார்கள்.

இந்தப் பகைப்புலத்தில் தமிழரின் இவ்விருவகைப்பட்ட புலம்பெயரிகளும் ஒரு விடயத்தில் எவ்வித மாறுபாடும் அற்றிருக்கிறார்கள். அதாவது, தாம் வாழும் சமூகத்துடன் வாழ்வியல், கலாச்சார, விழுமிய உறவுகளை இவர்களில் யாரும் உறுதியான முறையில் ஏற்படுத்தவில்லை. இவ்வகையில் பார்ப்போமானால், தேசியத்தை எதிரப்பவர்களாயினும் தேசியத்தைப் போற்றுபவர்களாயினும் இவர்கள் அனைவரும் வாழும் சூழ்நிலைக்கு அந்நியப்பட்டு வாழ்கிறார்கள். தமக்கென ஒரு மூடிண்ட உலகத்தைக் கட்டியமைத்து அதனுள் வலம் வருகிறார்கள். ‘லாச்சப்பலில்’ உள்ள வியாபார நிலையங்களின் எண்ணிக்கையையும், அதன் செழிப்புகளையும் மையப்படுத்தி ஒரு ஆய்வை நடாத்தினால் நான் சொல்லும் இவ்விடயம் தெள்ளத் தெளிவாக உறுதி செய்யப்படும்.

ஆகவே, தேசியத்தை எதிர்ப்பவர்களும் தேசியத்தைத் தூற்றுபவர்களும் தம் வாழ்க்கை முறையால் தேசியத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் இதுவே நடந்து கொண்டிருக்கிறது. மிகுதி வெற்றுக்கோசங்களே.

இரண்டாம் தலைமுறையினர்களில் சில எண்ணிக்கையினர் தமது வாழ்க்கை முறையினால் தேசியஅடையாளப் போக்கினை விடுத்துச் சற்று விலகிச் செல்கிறார்கள் என்று எண்ணத் தோன்றினாலும், அவர்கள் தங்களது திருமண மற்றும் பூப்புனித விழாக்களின் போது தம் அடையாளத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுச் சுமப்பதைப்பார்க்கும்போது அந்த எண்ணமும் தவறாகிவிடுகிறது. இந்தியச் சினிமாவின் தயவில் தம் வாழ்வியலையும் விழுமியங்களையும் கட்டமைக்கும் இளந்தலைமுறையினர் தேர்ந்தெடுத்துள்ள பாதை நம்பிக்கையூட்டுவதாக இல்லை.

போரின் உபரிவிளைவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக அறிவுஜீவிகள் குழாம் அந்தந்த நாடுகளின் இயல்பு வாழ்க்கையை வாழுவதற்கு ஏன் தயங்குகின்றார்கள் ? நான் அவதானித்த இடத்தில் அதே தாயகத்து வழக்குகளில் உள்ள சிந்தனைகளுடன் தானே வாழுகின்றார்கள்? ஏன் இலக்கியப்பரப்பில் கூட இப்படியாகத்தானே இருக்கின்றது?

அறிவுஜீவி என்று நாம் யாரைக் கருதுகிறோம் என்ற கேள்வியிலிருந்துதான் உங்களின் கேள்விக்கான பதிலையும் விரிவுபடுத்தமுடியும். படித்தவர்கள், வாசித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள் என தமிழ் புத்தஜீவிகளின் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.

இவர்களையெல்லாம் கற்றவர்கள் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். ஆனால், புத்திஜீவி என்பவர் அனைத்திற்கும் முதலில் தன் முன்னாலுள்ள அந்நியச் சூழ்நிலையைச் சரியாகவும் விரைவாகவும் புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் தன்னை மாற்றிக்கொண்டு புதிய சூழ்நிலையில் வெற்றி பெறுபவர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறு பார்த்தோமானால், மேற்கூறிய பட்டியலில் எத்தனை தமீழ் புத்திஜீகள் இருக்கிறார்கள். பிரான்சைப் பொறுத்தவரையில் இலங்கையில் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறி வந்தவர்கள் பலர் தாம் கற்ற கல்வியின் எந்தப் பரிமாணத்தையும் பயன்படுத்தாது சாதாரண தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அதற்கு இரண்டு முக்கிய காரணங்களிருக்கின்றன. ஒன்று: அவர்களின் கல்வி நடைமுறை வாழ்க்கைக்குப் பயனளிக்காத ஒன்று. இரண்டு: குடிபுகுந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ளாதிருத்தல். விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வி தமிழர்களின் மத்தியில் தேய்ந்து கொண்டே செல்கிறது. ஒரு தொலைபேசி பழுதுபார்க்கும் இளைஞனின் தொழிற்சுயாதீனம் இந்தப் பட்டதாரிகளிடம் இருப்பதில்லை.

இன்னொரு பக்கத்தில் இந்தக் கற்றவர்கள் ஏன் தாம் வாழும் நாட்டின் இயல்பு நிலைக்கேற்றாற் போல் வாழ்வதில்லை என்ற கேள்விக்கு என்னிடம் சற்றே மூர்க்கமான பதில்தானுண்டு. மூளைகளின் இரண்டு விதங்கள் உண்டு: ஒருவகையானது ‘வீட்டு நாய்’ போன்றது. மற்யைவகை ‘வேட்டை நாய்’ போன்றது.

‘வீட்டுநாய்’ ஒரு வேலிக்குள், ஒரு வரையறைக்கள், ஒரு எல்லைக்குள் மாத்திரமே வீரியமுடையது. ஆனால், ‘வேட்டை நாயின்’ வீரியம் எல்லைதாண்டியது. தன்னிலக்கை, தன்னிரையைத் தேடியே அதன் பாய்ச்சலின் வீச்சம் இருக்கும். அது பின்விளைவைக் கருத்திலெடுப்பதில்லை. இந்த வேட்டை நாய் மனோநிலையின்மையால் தான் நமது புத்திஜீவிகள் மீண்டும் மீண்டும் வேலிக்குள் நின்று குரைக்கிறார்கள். அல்லது அயல்வேலிக்குள் சண்டை நடக்கிறது. பூனைகளுடன் உறுமல்களும் நடக்கின்றன. அவர்களது அறிவுத்தேடலும், வாழ்க்கை முறையும் அந்த எல்லைக்குள்தான் வரையறை செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் தம்மை எழுத்தாளர்களாகவும், புத்திஜீவிகளாகவும் பிரகடனம் செய்யும் எத்தனையோ பேர்கள் இங்கு வந்து பதினைந்து இருபது ஆண்டுகளையும் தாண்டிவிட்டன. ஆனால், அவர்களால் இந்த மொழியைப் போதியளவு கற்று இந்நாட்டின் செழிப்பான அறிவியல்களையோ அல்லது இலக்கியங்களையோ நேரடியாக அடையமுடியவில்லை. தமிழ் நாட்டின் மொழிபெயர்ப்புகளையே நம்பியிருக்கிறார்கள். எவ்வாறு இலக்கியத்தில் செழிப்பான ஒரு மாற்றத்தை இவர்களால் கொண்டுவர முடியும்? முதலில் தம்மை வளர்த்துக்கொள்ளாதவர்கள் எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டமுடியும். மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை ஒரே பாணியில் இலக்கியமாக்க முற்படும் போது இலக்கியம் சுவைகுன்றி விடுகிறது, வறுமையடைகிறது. வெளியிலிருந்து புதிய விடயங்கள், புதிய அறிவியற் தளங்களிலான பாய்ச்சல்கள் இந்தப் புத்திசாலிகளினால் கொண்டுவருவது சாத்தியமன்று. இவர்களில் விதிவிலக்கான சிலரும் உண்டு. ஆனால் அவர்கள் சத்தம் சந்தடியற்ற படைப்பாளிகள்.

ஏறத்தாழ 49 பாகங்களாக இடம்பெற்ற புலம்பெயர் இலக்கிய சந்திப்புகளால் புலம்பெயர் எழுத்துப்பரப்புகளில் ஏதாவது புதிய கோட்பாடுகளை அல்லது அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய முடிந்ததா ?

நீங்கள் கூறும் அந்த இலக்கியச் சந்திப்புகள் பற்றி ஆழ நீளமாகப் பேசலாம். ஆனால் அந்தச் சந்திப்புகள் எவ்வளவு பயனின்றி இருந்தனவோ அதுபோலவே அதைப்பற்றிய உரையாடல்களின் பயனின்மையும் அமையும். இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் உண்மையில் நடைபெற்றது ஒரு எதிர்ப்பரசியல் இயக்கம் என்பதை அதில் கலந்துகொண்டவர்களும் மறுப்பதில்லை. இலக்கியச் சந்திப்புகளில் 80 களின் பிற்பகுதி, 90 மற்றும் 2000 ஆண்டுகளில் நடைபெற்ற விவாதப்பொருட்களை நான்கு பிரிவிற்குள் அடக்கிவிடலாம்.

அவையாவன:

01 தலித்தியம்

02 பெண்ணியம்

03 புலியெதிர்ப்பரசியல்

04 சிறுபான்மைகளின் குரல் (குறிப்பாக முஸ்லீம்கள் சார்பான குரல்)

என்பனவே அவையாகும். இலங்கை முஸ்லீம்கள் சார்பான குரலென்பதும் புலியெதிர்பு அரசியலின் ஒரு அங்கமாகவே இருந்தது. வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு தலைப்புகளில் இந்த இலக்கியச் சந்திப்பு ஆலைகளில் அரைக்கப்பட்ட விடயங்கள் இவ்வளவே. ஆனால் எது எப்படியிருப்பினும் எந்த விடயமாக இருப்பினும் அனேகமாக இந்தச் சந்திப்புகள் ‘நுனிப்புல்’ மேய்வதிலேயே தம் காலத்தை விரையமாக்கின என்று சொல்வதற்கு எந்தத் தயக்கமும் என்னிடம் இல்லை. இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களில் மிகப்பலர் இலங்கை அரசிற்குச் சாதகமானதும், தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதுமான கருத்து நிலைகளைக் கொண்டிருந்தவர்களுமாவர். ஒவ்வொரு தடவையும் தூர நோக்கேதுமின்றி இவர்கள் உடனடி அரசியலுக்கான பிரகடனங்களுடன் சந்திப்புகளைச் சந்தோசமாக முடித்துக்கொண்டார்கள்.

திண்ணைப் பெண்ணியம் பேசப்பட்டது. ஆனால் அங்கு பெண்ணியக் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டதில்லை.

புலியெதிர்ப்பரசியலே அங்கு முதன்மை பெற்றிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமது ‘இயக்க’ மனப்பாங்கிலிருந்தே தமது அரசியல் பார்வைகளை முன்வைத்தார்கள். இயக்க மனப்பாங்கு எப்போதும் பரந்த தளங்களிலான ஆய்வுகளுக்கான தடைக்காரணியாக இருந்தது. ஆக மொத்தத்தில் ஐரோப்பாவிலும் கனடாவிலும் நடைபெற்ற இலக்கியச்சந்திப்புகள், விடுதலைப் புலிகள் இயக்க முடிவுவரையும், ஈழப் போராட்டத்தின் விகாரமான ஒரு நீட்சியாக இருந்ததே அன்றி வேறொன்றாக இருந்ததில்லை. மிகப்பெரும்பான்மையான ஈழத் தமிழர்களின் அபிலாசைகளிலிருந்து வெகுதொலைவில், அவர்களின் அரசியல் அறிவியல் அபிலாசைகளை உதாசீனம் செய்தும் தொடர்ந்து கொண்டிருந்ததுதான் இலக்கியச் சந்திப்பு. புலியெதிர்ப்பரசியலால் ஒன்றிணைந்தவர்கள் புலிகளின் முடிவிற்குப் பின்னர் பொது எதிரியை இழந்து தமக்குள் பரிதாபமாகச் சண்டையிட்டுப் பிரிந்த விடயம் நகைப்பிற்குரியது. புலிகளின் முடிவின் பின்னர் ஒவ்வொருவரும் எதிரிகளைத் தங்களுக்குள்ளேயே உருவாக்கினார்கள். இலக்கியச் சந்திப்புகளின் ஆதார சுருதியாக இருந்தது புலியெதிர்ப்பும் , தமிழ் தேசிய எதிர்ப்பும்தான் என்பதைக் கூறுவதற்கு இடைவிட வேறு விளக்கங்கள் தேவைப்படாது.

அண்மைக்காலங்களில் இலக்கியச் சந்திப்புகள் புதிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

கடந்த மலையக இலக்கியச்சந்திப்பில் முஸ்லிம்களின் சார்பான குரல்கள் அனைத்தும் அவர்களது பண்பாட்டுத் தளங்களைக் கணக்கில் எடுக்காது நசுக்கப்பட்டிருக்கின்றனவே………….?

இக்கேள்வி சற்று நகைப்பளிக்கிறது. கடந்த காலங்களில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்புகள் அனைத்திலுமே இடையறாது முஸ்லீம்களை இலக்குவைத்த அடக்கு முறைகளுக்கு எதிரான கண்டனக்குரல்கள் எழத்தவறவில்லை. அதுமட்டுமல்லாது, இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கூட நானறிந்த வகையில் யாரும் அங்கு கண்டிக்கவில்லை. அப்படியிருக்க,மலையகத்தில் மாத்திரம் அவ்வாறு ஏன் நடந்தது ? என்ற கேள்வி ஆச்சரியமூட்டும் ஒன்றுதான். அவ்வாறு நடந்ததுதானா என்பதற்கான காரணங்களை நீங்கள்தான் எனக்குக் கூறவேண்டும்.

இலக்கியச் சந்திப்பை ஒழுங்கமைக்கும் குழுவினரின் இரகசிய அரசியலுக்குள் எனக்கு அதிகாரமளிக்கப்படாததால் அங்கு எது எவ்வாறு முடிவெடுக்கப்படுகிறது என்ற விடயத்தை என்னால் துல்லியமாக அறியமுடிவிதில்லை. ஆனால் ஒரு விடயத்தை என்னால் கூறமுடியும். விடுதலைப் புலிகளினதும், தமிழ்த் தேசியத்தினதும் எதிர்ப்பையே தன் பிரதான இலக்காகக் கொண்ட இலக்கியச் சந்திப்பு தனக்குத் தேவையான நேரத்தில் இஸ்லாமிய மக்களை கருவியாகப் பயன்படுத்திப் பின்னர் விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அவர்கள் தொடர்பான ஒரு புதிய அரசியலை முன்னெடுத்திருக்கக்கூடும். அதுகூட எனது ஊகம் மாத்திரமே. எதிர்காலத்தில் தமிழ்-முஸ்லீம் மக்களின் ஒற்றுமையென்பது இவ்விரு சிறுபான்மையினருக்கும் இன்றியமையாததென்பதை கருத்துலெடுத்து இவ்விடயங்களை ஊதிப்பெருக்கி திட்டமிட்ட முறையில் மக்களுக்கிடையில் பிரிவினை வாதங்களை விதைக்காதிருக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

அப்போ இலங்கை இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவினர் எதெற்காக வெளியேறினார்கள் ? சோனகர்களின் பண்பாட்டுத் தளத்தில் இலைமறை காயாக இருந்துவந்த விருத்த சேதனவிவகாரம் நிகழ்ச்சி நிரலில் இல்லாதவேளையில் ஏற்பாட்டுக்குழுவின் அனுமதியின்றி அதை இடையில் செருகப்பட்டததால் தானே! இது எப்படி நீங்கள் கூறுகின்ற சிறுபான்மை இஸ்லாமியர்களது சார்பான குரலாக இருக்க முடியும் ?

இந்த மர்மத்திற்கு வெளிச்சம் இடவேண்டியவர்கள் அந்த இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள். மாத்திரமே. அவர்களால் மட்டுமே அது முடியும்.

பிரெஞ் புரட்சியை தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய முகாந்திரங்கள் தான் என்ன?

நான் ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். அதனையடிப்படையில் வைத்து ஒரு ஊகமாக பிரெஞ் புரட்சியை மொழிபெயர்த்தேன் என்று பலர் கூறக்கேட்டுள்ளேன். அந்நூலில் நான் எங்கேனும் அது ஒரு மொழி பெயர்ப்பு என்று குறிப்பிடவில்லை.

பிரஞ்சுப் புரட்சி பற்றிய எனது சொந்தக் கற்றல்கள், கலந்துரையாடல்கள், பல்கலைக்கழகங்களிலான கருத்தரங்குகளில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் நான் எழுதிய நூலது. பலரும் இதை உள்வாங்கிக் கொள்கிறார்கள் இல்லை. இதற்குப் பின்னணியாக ஏதாவது அரசியல் நோக்கங்கள் உள்ளனவா என்பதும் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பொதுவாகவே நான் வாழும் நாடு என்ற வகையில் பிரான்சின் வரலாறு எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. ஒரு நாட்டில் வாழும்போது அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்வது எத்தனை முக்கியமானதென்பதை நானறிந்திருந்தேன். ஐரோப்பாவில் எந்த நாட்டின் வரலாறைக் கற்க வேண்டுமெனிலும் கட்டாயமாக ஒருவர் பிரஞ்சு வரலாற்றைத் தாண்டிச் செல்லமுடியாது. எல்லாவற்றிற்கும் மோலக, பிரஞ்சு வரலாறு செழிப்பு மிக்கது. பிரான்சின் அரசியல் சம்பவங்களே இன்று உலகில் காணப்படும் பிரதான அரசியற் கோட்பாடுகள் அனைத்தினதும் ஊற்றுவாய். பிரஞ்சுப் புரட்சியே உலகெங்கிலும் ஏற்பட்ட புரட்சிகளின் தாய்ப்புரட்சி.

1989 ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் இருநூற்றாண்டு நிறைவு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது நான் பிரான்சில் இருந்தேன். இங்கு வந்து ஐந்தே வருடங்கள்தான் ஆகியிருந்தபோதும் எனது விடா முயற்சியினால் பிரஞ்சு மொழியைக் கற்றிருந்தேன். அப்போது இப்புரட்சி பற்றிய புதிய நூல்கள் வெளிவந்தன. பல எண்ணிக்கையான கருத்தரங்குகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. பிரஞ்சுப் புரட்சி வரலாற்றின்பால் அக்காலத்தில் அதீதமாக ஈர்க்கப்பட்டேன். அறிவுத் தேடலின் சுய திருப்திக்காக நான் செய்த முயற்சிகளை ஏன் ஒரு நூலாக்கக் கூடாது என்ற கேள்வி அப்போது என்னுள் எழுந்தது. பல ஆண்டுகளாக நான் மேற்கொண்ட தேடுதலின் விளைவே இந்நூல்.

புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் எவரும் தாம் வாழும் நாட்டின் வரலாற்றில் போதியளவு அக்கறை கொண்டு அதைத் தமிழில் நூலாக்கவில்லை. நீங்கள் ஒருவரே அதைச் செய்துள்ளீர்கள் என்று சிலர் என்னைப் பாராட்டும்போதும், தமிழில் பிரஞ்சுப் புரட்சி பற்றி இவ்வாறான நூல் இதுவரையும் என் கண்ணில் படவில்லை என அறிஞர்கள் கூறும்போதும் எனது முயற்சிகளுக்கான பரிசாகவே அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் இப்போதும் வரலாறு கற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே என்னைக் கருதுகிறேன்.

அப்போ இப்புத்திஜீவிகள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் ?

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அவர்களில் பலர் ‘இயக்க அரசியல்’ எனும் குட்டிப்பொறிக்குள் அகப்பட்டுக்கிடக்கிறார்கள். பல எழுத்தாளர்கள் ஈழப்போரட்டம் என்ற வட்டத்தைவிட்டு வெளியே செல்வதற்கு அஞ்சுகிறார்கள். போராட்டத்தின் உக்கிரத்தை நேரடியாக வாழ்ந்தவர்கள் அவ்வாறிருப்பது நியாயமானது. ஆனால், போராட்டதில் ஆரம்பநிலை இயக்கச் சண்டைகளையே போராட்டமாக புனைந்து அதனையே தூக்கிப் பிடித்துக்கொண்டு அதைச் சுற்றியே அரசியல் செய்கிறார்கள். ஆனால் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு, பூகோள அரசியலில் சிக்குண்டு சின்னாபின்மாகிய விடயத்தை வசதிகருதி மறைத்துவிடுகிறார்கள். நான் வழமையாகக் கூறுவதுபோல் ‘இரண்டாம் வகுப்பில் பாடசாலையைக் கைவிட்டு ஓடியவர்கள், உயர்தரவகுப்பில் பரீட்சையில் தோல்வியடைந்தவர்களை எள்ளி நகையாடுகிறார்கள்’. யாரும் எதிர்பார்த்திராத சர்வதேச மாற்றங்களின் பின்னணியில், உலகமயமாக்கலின் உபவிளைவுகளுக்கு முகம் கொடுப்பது என்பது என்ன சதாரணமான விடயமாவென்ன?

இவ்வுலகில் முன்வைக்கப்பட்ட அரசியற் கோட்பாடுகளும், அவற்றின் அடிப்படையில் உருவாகிய புரட்சிகளும் சுவடுகளின்றிச் சிதைக்கப்பட்டு விட்டனவே ! இப்புரட்சிகளை முன்னெடுத்த தலைவர்கள் பலரின் சிலைகள் கூடச் சிதைக்கப்பட்டுவிட்டனவே ! பெருநிதியங்களின் கைகளில் சிக்கித் திணறும் மனிதகுலத்தின் தலைவிதி நாளை எவ்வாறு அமையப்போகிறது என்பதைப் பற்றிய சிந்தனைகள்தான் இன்று எமக்கு அவசியமாகின்றன. அதற்கு வரலாறுகள் முக்கியமானவை. உலகின் அரசியல் போக்கைத் துல்லியமாகத் தீரமானிப்பதற்கு வாரலாற்றவின் தேவை இன்றியமையாதது. அதை எமது புத்திஜீவிகள் முன்னெடுக்கவேண்டும். ‘இயக்க அரசியல்களும்’, இருட்டு விவாதங்களும் இருப்பதையும் இல்லாமற் செய்யமாத்திரமே பயன்படும்.

ஒரே வேளையில் ஓவியம், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என்று எப்படி கட்டமைக்க முடிந்தது ?

மொழி என் மூச்சு. தமிழும் பிரஞ்சும் என் இரண்டு விழிகள். ஆங்கிலம் எனக்குப் என் இரண்டாம் மொழி. சிங்களத்தையும் ஓரளவு புரிந்துகொள்வேன். அம்மொழியில் சற்று உரையாடுவேன், வாசிப்பேன். உலகின் எல்லா மொழிகளிலும் எனக்குப் பரிச்சயம் இல்லையே என்று எண்ணும் பேராசைக்காரன் நான். ஒரு மொழியை சாதாரணமாக மொழிதானே எனக் கருதுவது சுத்தமான அறிவீனம். அது மானிட அனுபவங்களின் அற்புதத் தேட்டம். வாழ்ந்தொழிந்த, வாழுகின்ற நாகரீகங்கள் அனைத்தினதும் உன்னதச் சுவடுகள் மொழிகளே. இயல்பாகவே எனக்கு மொழிகள்மீது ஒரு காதலிருக்கிறது. அதனாலோ என்னவோ பிரான்சுக்கு வந்த சில வருடங்களில் பிரஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டுவிட்டேன். கணணி இணைவலையத் தொழில் நுட்பத்தில் ‘நோந்தேர்’ பல்கலைக் கழகத்தில் பட்டமெடுத்து அத்துறையிலே சில காலம் கடமையாற்றிய போதும், மொழிசார்ந்த ஒரு தொழிலைச் செய்யவேண்டும் என்ற என் விருப்பே என்னைத் தொழில்முறை மொழிபெயர்ப்பாளனாக மாற்றியது.

மோப்பசான், வோல்த்தயர், எமில் ஸோலா போன்றவர்களின் சிறுகதைகளை ஆரம்பத்தில் மொழிபெயர்தேன். அவை சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவ்வாறுதான் என் இலக்கிய மொழிபெயர்ப்பு ஆரம்பமாகியது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிஞர்களின் கவிதைகளில் தேர்ந்தவற்றறை மொழி பெயர்த்து இருமொழித் தொகுப்பாக வெளியிட்டேன். இரண்டாவது தொகுப்புத் தயாராகிவிட்டது.

ஏதோவொன்றை வாசிக்காது என் நாளெதுவும் கழிந்ததில்லை. வாசிப்பு எனது நாளாந்த இன்றியமையாத தேவை. தேடல் உள்ளவர்கள் எவரெனினும் அவர்களால் வாசிப்பின்றி இருக்கமுடியாது. வாழ்க்கையின் அனுபவங்களை வாசிப்பின் வெளிச்சத்தில்தான் பகுத்துணர்ந்து கொள்ள முடியும். மூன்று மொழியிலும் வாசிக்கிறேன் என்றாலும் இப்போது பிரஞ்சில் தான் அதிகமாக வாசிக்கிறேன். அது என் மொழியறிவையும் செழுமைப்படுத்துகிறது. வாசிப்பு சிந்தனையைக் கட்டமைப்பதற்கான சிறந்த வழி. வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு காலத்தைய வெவ்வேறான பாணிகளிலான இலக்கியங்களை வாசிக்கும்போது விமர்சன மனோபாவம் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. இவ்வாறுதான் நான் விமர்சனப் பரப்பில் பிரவாகம் செய்தேன். விமர்சனம் செய்வது கத்திமேல் நடப்பது போன்ற விடயம். ஒரு நூலின் சாதக பாதகங்களையும் அதன் சிந்தனைக் கட்டமைப்புகளையும் படைப்பாளியின் முன்னேற்றத்தைச் சீர்குலைக்காது அதே நேரத்தில் நடுநிலையாகவும் இருந்தவாறு விமர்சனம் செய்வதென்பது அத்தனை இலகுவாக முடியும் காரியமல்ல. சிலவேளைகளில் திருப்தி ஏற்படுகிறது. அதிருப்தியும் உண்டாவதுண்டு.

நான் சிறுவயதிலேயே, பாடசாலைக் காலங்களிலேயே கவிதைகள் எழுதியவன். முன்னரெல்லாம் அடுக்குச்சொல் கோர்வையாக்கி கவிதை எழுதுவேன். என் ஆரம்பகாலக் கவிதைகளில் அதன் வடிவங்களுகே முக்கியம் கொடுத்தேன். ஆனால், அவற்றின் உள்ளடக்கம் வெறும் காதலாகவோ அன்றில் இயற்கையின் காட்சியாகவோதானிருந்தது. பின்னர் சற்று அரசியலும் இணைந்து கொண்டது. அன்றைய நாட்களில் நான் எழுதிய கவிதைகள் எவற்றையும் நான் சேகரம் செய்துவைக்கவில்லை. அதனால் எவ்வித நட்டமும் ஏற்படவில்லை. கொழும்பில் வேலை செய்த காலத்தில் பல கவிதைகள் சஞ்சிகைகளில் வெளிவந்தன.

பிரான்சுக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீளவும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். வாழ்க்கையின் புதிய புகலிட அனுபவங்களுக்குப் பின்னர் கவிதைகளுக்கு வடிவத்தின் முக்கியத்துவம் தளர்ந்தது. உள்ளடக்கத்தின் செறிவு முக்கியமானதென்பதை உணர்ந்தேன். கவித்துவமும் தத்துவமும் இரண்டறக் கலந்துருவாகும் கவிதைகள் உன்னதமானவை என்று நான் நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக ஒரு நாவல் கூறிவிட முடியாததை ஒரு கவிதையால் குறிப்பிட்டுவிட முடியுமென்பது எனது நம்பிக்கை. கவிதை எனும் ஒரு சிறு மின்னலுக்குள் இடிகள்,முழக்கங்கள், பெருமழை, காட்டாற்று வெள்ளம் என எல்லாமே இருக்கின்றன. அவ்வாறான கவிதைகள்தான் வெற்றி பெற்ற கவிதைகள் என்கிறேன்.

எனது “தொலைவில்” தொகுப்பிலுள்ள ‘கோடோ வரும் வரையும்’ என்ற கவிதை சொற்பக் கணங்களில் கிறுக்கிய ஒரு விடயம். அதில் இரண்டு முக்கிய படைப்புகளின் சாராம்சம் இருக்கிறது. கவிதையின் தலைப்பு சாமுவெல் பெக்கட்டின் நாடகத்தினுடையது. அடுத்து ‘கிழவனும் கடலும்’ ஹெமிங்வேயினுடைய நாவல். இவ்விரண்டு படைப்புகளினதும் பரிச்சயம் இல்லாவிட்டால் இக்கவிதையுள் நுழைவது சாத்தியமேயில்லை. வாழ்வின் அபத்தத்தையும் அதுபற்றிய நம்பிக்கையையும் ஒரு முடிச்சில் கட்டி இக்கவிதையில் இறுக்கி விட்டிருக்கிறேன். இது பற்றி நீண்ட உரையாடலையே செய்யலாம்.

ஓவியம் என் பொழுதுபோக்கு. நான் யாரிடமும் எதுவும் கற்கவில்லை. கண் கண்டதைக் கைசெய்கிறது. ஓவியம் வரைவதென்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு தியானம். வரையும்போது நீங்கள் வரைய எண்ணும் விடயதானத்துடன் உங்கள் மனது ஒன்றிவிடுகிறது. உங்களது அகமும் நீங்கள் புறத்தில் உருவாக்க எண்ணும் விடயதானமும் ஒருங்கிணைந்து விடுகின்றன. அங்கு ஒரு ஆத்மீகத் திருப்தி பெறப்படுகிறது. என்னையும் மீறி வாழ்வின் மீதான சலிப்பு என்னை நெருங்கும்போது ஓவியம் வரைகிறேன். அதனூடாக அபத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறேன், அவ்வளவுதான்.

சமகாலத்து இலக்கிய செல்நெறிகள் உங்களுக்கு உவப்பானதாக இருக்கின்றதா ? இல்லையென்றால் எப்படியாக ?

நீங்கள் சமகாலத் தமிழ்இலக்கியத்தைக் கருத்திலெடுத்தே இக்கேள்வியை தொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணியபடிதான் பதிலளிக்கிறேன். 2009-ல் யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்த யுத்தகால அனுபவங்களைச் சுற்றியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது. இது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், வடிவங்கள் சற்று மாறுபாடடைந்தாலும் உள்ளடக்கங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைத்தான் சுற்றி வருக்கின்றன என்பது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஈழத்திலக்கியம் தமிழ்நாட்டின் உப இலக்கியமாக உருவாகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சமும் இன்று பலருள் எழுந்துள்ளது. அப்படியாயின் அது ஒரு ஆரோக்கியமான போக்கல்ல. நாம் யாருக்காக எழுதுகிறோம் அல்லது படைக்கிறோம் என்ற கேள்வி முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாளியிடமும் இதற்கான பதிலுண்டு. தமிழ்நாட்டை இலக்கு வைத்துச் சிலர் எழுதுகிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் நமது எழுத்துகளுக்குக் கிடைக்கப்படவேண்டிய முறையான அங்கீகாரம் கிடைக்கிறதா என்ற கேள்விக்குத் திருப்தியான பதிலில்லை.

அப்படியானால் அவர்கள் எதற்காக அங்கே முகாமிட்டிருக்கின்றார்கள் ?

தமிழ் நாட்டிலக்கியப் பாரம்பரியத்திற்கு எவ்விதத்திலும் சளைக்காத ஈழத்து இலக்கிய-அறிவியல் பாரம்பரியம் ஒன்று இருந்தது. இவ்வகையில் மேன்மையான எழுத்தாளர்களின் பட்டியலை இலகுவாக நிறுவிவிடலாம். இருப்பினும் தொன்னூறாம் ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான ஈழ இலக்கியவாதிகளில் பலர் தம்மைத் தமிழ் நாட்டுப் பாரம்பரியத்துடன் பிணைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அங்குதான் தம் அங்கீகாரங்களையும் கோரிநிற்கிறார்கள். குறிப்பாக, புலியெதிர்ப்பு இலக்கியங்களை அங்கு வெளிக்கொணர்பவர்களுக்கு ‘குறிப்பிட்ட’ மீடியாக்களில் பிரச்சாரங்களும் அங்கீகாரங்களும் வழங்கப்பட்டு அவ்வழியிலேயே செல்லுமாறு அவர்கள் தூண்டப்பட்டார்கள். இந்திய மேலாண்மையை முற்றுமுழுதாய் ஏற்று அதையே சுவாசிக்கும் தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் காலடிகளில் சரணடைந்த புரட்சி எழுத்தாளர்களைப் பற்றி எதும் கூறுவதற்கில்லை. இவர்களின் தந்திரம் இவர்களைச் மேலும் சிறுமையடையச் செய்யும்.

‘பல விடயங்களைத் துறக்கும் துணிவற்றவர்களால் முழுமையான படைப்பாளிகளாக மாறுவது சாத்தியமில்லை.’ என்று சொல்கின்ற நீங்கள் யாரை முழுமையான படைப்பாளியாக இனங்காணுகிண்றீர்கள் ?

ஒரு இலக்கியப் படைப்பென்பது சமூகப் பிரக்ஞையின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. ஒரு கலகக்குரலாக இருக்கின்றது. நையாண்டிகயாக இருக்கின்றது. விமர்சனமாக இருக்கின்றது. கூப்பாடாகவும் கண்ணீராகவும் இருக்கின்றது. சாட்சியமாக இருக்கின்றது. ஒரே நேரத்தில் இவை எல்லாமாகவும்கூட இருக்கின்றது.

படைப்பாளியின் பிரக்ஞைமீது வீழும் வாழ்வியல் அனுபவங்களின் மீள்தெறிப்பாக இலக்கியம் மொழிவாயிலாக வெளிப்பாடடைகிறது. அவ்வகையில், படைப்பாளியின் சுயாதீனம் சார்ந்து தனித்துவமும், வீரியமும் கொண்டதாக அது அமைகிறது. இங்கு நான் படைப்பாளியின் சுயாதீனம் எனக் குறிப்பிடுவது ஒருவகையான ‘இலக்கியத் துறவறம்’. சமூக வாழ்வில் இருந்தவாறே சமுகத்தையும் தன்னையும் புறநிலையிலிருந்து மாத்திரம் அவதானிக்கும் படைப்பாளியின் தன்மை. ஒரே நேரத்தில் விலகி நின்றும் அண்மித்திருந்தும் சமூகத்தை அவதானிக்கும் படைப்பாளியின் பார்வை என்பது விடுவிக்கப்பட்ட பார்வை. அவ்வாறான விடுவிக்கப்பட்ட பார்வைகளே படைப்பின் பரிமாணத்துள் தத்துவ நிலைகளை நிறுவுகின்றன. தொஸ்தவேஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ மற்றும் பல்ஸாக்கின் ‘முப்பது வயதுப்பெண்’ போன்ற நாவல்கள் இவ்வகைப் படைப்புகளின் உன்னதமான உதாரணங்கள்.

கவிதைக்கு இறுக்கமான மொழிகள் வேண்டுமா ?

என்னைப் பொறுத்தவரையில் மொழிவழியான எல்லா வெளிப்பாடுகளிலும் எண்ண உள்ளடக்கம் மொழியினூடு வடிவம்பெறுகிறது. எண்ணத்தின் ஆழம் மற்றும் துல்லியம் சார்ந்து அதை வெளிப்படுத்தும் மொழியின் வடிமமும் தன்னை இசைவுபடுத்திக்கொள்கிறது. இந்த இசைவு வெற்றி பெறும்போதே கவித்துவம் துளிர்கிறது. இதற்குப் பெரும் உதாரணங்களாக நான் (பிரஞ்சுக் கவிஞர்) சார்ள் போதலயரின் கவிதைகளை உதாரணம் காட்டுவேன்.

மிக இலகுவான சிக்கலற்ற மொழியில் ஒரு சில வரிகளில் கூட மிகச்செறிவான விடயங்கள் கவிதைகளில் சொல்லப்படுவதைப் பார்க்கிறோம் தானே. இறுக்கமான மொழி இன்றியமையாத இடத்தில் மாத்திரமே பாவித்தல் வேண்டும் என்பது என்கருத்து.

‘கவிதையின் உள்ளடக்கம், உருவம் மற்றும் நவீன கவிதை போன்றவை பற்றிய விரிவான ஆய்வுகள் இல்லை. விவாதங்கள் ஈழத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி முன்னெடுக்கப்படவில்லை’ என்று சொல்லப்படுவது பற்றி ………?

பொதுவாகவே கவிதைகள் உலகளாவிய மானிட அனுபவத்தின் தத்துவ வெளிப்பாடாக இல்லாதிருக்குமெனில் அவை காலத்தின் பாதச்செருக்கில் சருகாகி நொருங்கிவிடக் கூடியவை என்பது முக்கியமாக விடயம். கவிதையின் உருவமும் உள்ளடக்கமும் சமச்சீராகவும் சமாந்தரமாகவும் இணைந்து இயல்பு நிலையில் இயங்கவில்லையெனில் அங்கு கவித்துவத் தோல்வி ஏற்படுகின்றது. அது ஒரு கருத்தியல் தோல்வி. அது ஒரு தத்துவத் தோல்வி. மேற்கில் நவீன கவிதைகள் உள்ளடக்கத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றன.

எழுதுபவர்களே வாசிப்பாளர்களாகவும் சுருங்கி விட்ட தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களின் சுயமுனைப்பு, சுயவிளம்பரத்திற்குக் கொடுக்கும் முதலிடம் போன்ற விடயங்கள் கவிதைகள் பற்றிய தரமான செறிவான உரையாடலை அசாத்தியமாக்கியுள்ளன. அவரவர் தங்களுடைய குழுமங்களில் உள்ளவர்களின் கவிதைகளை மேற்கொணர்ந்து மேலோட்டமான விமர்சனங்களையும், கொஞ்சப் புழுகுகளையும் முன்வைக்கிறார்களே தவிர முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தக் குழுமனோநிலையின் பக்க விளைவுகள் பாரதூரமானவை. படைப்பிலக்கியப் பரப்புகளில் அது நஞ்சூட்டியாகவெ தொழிற்படுகிறது.

எப்படி நஞ்சூட்டியாகவே தொழில் படுகின்றது ?

இலக்கிய விமர்சனம் என்பது பல கோணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. கருத்தியல், அழகியல் மற்றும் மெய்யியல் கோணங்களில் ஒரு படைப்பு விமர்சகத்திற்கு உள்ளாகும் போது படைப்பின் வீரியமும் அதன் செழிப்பும் வெளிக்கொணரப்படுகிறது. புதிய படைப்பாளிகளுக்கு வெளிச்சமும் படைப்பூக்கமும் கிடைக்கிறது. தேடல் ஆர்வம் பெருகுகிறது. இலக்கியப் படைப்பின் உன்னத அடிப்படையே தேடல்கள்தாம். அனுபவத்தின் தேடல் மற்றும் அறிவின் தேடல். இவ்வாறன விமர்சன வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடிக்காதது இருளில் மண்டிவிடுகிறது. மாறாக, மொண்னை விமர்சனங்களும் புழுகுகளும் படைப்பாளிக்கு தன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றி விட்டதான பிரமையைக் கொடுக்கின்றன. படைப்பாளி தேடுவதற்கு இனியேதுமிலை என்ற நிலைக்குள் பலவந்தாகத் தள்ளப்படுகிறான் (ள்). பெறுமதியற்றது சந்தையில் உச்ச விலைக்கு விற்கப்படுகிறது. இதுவே படைப்புலகின் நஞ்சூட்டலாக அமைந்துவிடுகிறது.

வ.செ.ஐ.ஜெயபாலன், சேரன், வில்வரத்தினம், சோ.பத்தமநாதன், எம்.ஏ. நுஃமான், சோலைக்கிளி போன்ற எமது கவிகள் எப்படியான தாக்கங்களை எமது எழுத்துப்பரப்பில் உருவாக்கினார்கள்? இவர்களில் உங்களை கவர்ந்தவர்கள் யார்?

இவர்கள் எல்லோரும், இன்னும் மிகப் பலரும் எமது இலக்கியப்பரப்பில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனாலும், இவர்களுக்கான ஒரு இலக்கியத் தொடர்ச்சியைத் தேடுவது அபத்தம். அவரவர் அவரவர் காலத்தின், அனுபவங்களின் தூண்டுதல்களைக அவரவர் மொழிகளில் கவிதையாக்கியவர்கள். இவர்களுள் சோலைக்கிளி ஒரு வித்தியாசமானவர். கருத்தியல், அழகியல் மற்றும் மெய்யியல் கோணங்களில் இவர்களின் கவித்துவப் படைப்புகள் இன்னமும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

பல்கலைக்கழக இலக்கிய ஆய்வுப் பணியில் இவை உள்ளடக்கப்பட்டால் பல விடயங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். நவீன தராசுகளில் இப்படைப்புகளை நிறுவைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது என்னவா. இவர்களும், இன்னும் பெயர் பெறாத எத்தையோ கவிஞர்களும் எனக்குப் பிடித்தவர்கள். நாம் மீண்டும் மீண்டும் சிலரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மேடையேற்றுப் படாத மற்றையவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் பற்றியொரு பட்டியலையே நிறுவி விடலாம்.

இலக்கியப்பக்கம் நாங்கள் போதுமானதாக உரையாடி இருக்கின்றோம் என எண்ணுகின்றேன் கொஞ்சம் அரசியலை தொடாவிட்டால் எனக்குத் திருப்திகரமாக இருக்காது. அத்துடன் நீங்கள் வந்தகாலம் எமக்கான புலம்பெயர் அரசியல் முகிழத்தொடங்கிய காலம் என்பதும் ஒரு காரணம்…….

தமிழ் தேசியம் தொடர்பான உங்கள் வரைமுறை தான் என்ன ?

தேசியம் என்றால் என்னவென்ற புரிதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். தனித்துவமான வாழ்வுமுறையை, நம்பிக்கைகளை, விழுமியங்களை, கோட்பாடுகளை மற்றும் பல்தரப்பட்ட ஒருமைப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசிய இனம் என்று கருதலாம்.

என்னைப் பொறுத்தவரையில் தேசியங்களை இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது என் வழக்கம்: நற்தேசியம், நச்சுத்தேசியம்.

ஒரு தேசியம் தன்னை வியாபகம் செய்யும் நோக்கில் இன்னொன்றை இழிவுபடுத்தினாலோ அன்றில் அழிவிற்குட்படுத்தினாலோ அத்தேசியம் நச்சுத்தன்மையைப் பெறுகிறது. நச்சுத் தேசியமே பாசிசத்ததின் அடிநாதமாகவும் உள்ளது. தேசியத்தின் உபகூறான மதத்தின் பாசிசக் கூறுகள் அம்மதத்தைத் தாங்கிநிற்கும் தேசியத்தின் மீதும் தொற்றிக்கொண்டு விடுகின்றன.

ஆக, மதவிழுமியங்களின் பாசிசக்கூறுகள் மறுபேச்சின்றி மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை. மானிடச் சமத்துவத்திற்கு அவை வழிகோலவேண்டியவை.

தன்வாழ்வின் அழகியலை மேம்படுத்தி, மானிடப்பெறுமானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இயற்கையுடன் இசைவுற்று மற்றைய தேசியங்களுடன் நட்புற்றிருக்கும் தேசியம் நற்தேசியம் என்பது மாத்திரமல்லாது அத்தேசியம் தேவையானதும் ஒன்றாகும். மானிட வாழ்வின் அழகியலுக்கும், உன்னதக் கலைப்படைப்புகளின் தோற்றத்திற்கும் தணிந்த சமாதானமான பல்தேசிய வாழ்வு இப்பூமியில் இன்றியமையாததாகும்.

ஆனால், மேற்கத்தைய காலணித்துவ ஆதிக்கமும், மற்றும் 18, 19 ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற கைத்தொழில் மற்றும் வியாபார வியாபத்தின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களும், யுத்தங்களும் உலகைப் புதிய ஒழுங்கொன்றினுள் தள்ளிவிட்டன. கோட்பாடுகள் மோதிக்கொண்டன. இருப்பினும் இவையெல்லாவற்யும் தாண்டி, உலகை ஒருகுடைக்குள் ஆள வேண்டும் என்ற திட்டம் பலமாக உருவெடுத்தது.

இன்றைய நிலையில், உலகம் ஒரு பெரும் சந்தையாக உருவாகியிருக்கிறது. தேசியங்கள் அதன் நீடித்த இருப்பிற்கும், வியாபகத்திற்கும், ஒருமைப்படுத்தலுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. தேசிய வாழ்வு சந்தைப்படுத்தலுக்கான தடையாக பெருநிதியங்களால் உணரப்படுகிறது. அதன் காரணமாகவே நச்சுத்தேசியங்களை முன்னுதாரணமாக்கி அனைத்துத் தேசியங்களையும் இல்லாதொழிக்கும் முயற்சியில் பெருநிதியங்கள் இறங்கியுள்ளன.

அமேசன் காடுகளில் வாழும் நற் தேசியக்குழுமங்கள் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதற்குத் தடையாக உள்ளன. தற்போது அவர்களின் இருப்பு ஆபத்து நிலைக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

தமிழ் தேசியம் தன்னில் சில முக்கிய அறிவியல் மாற்றங்களையும் மற்றும் மானிடவியற் சீர்திருத்தங்களையும் செய்யவேண்டும் என்பதை எந்தத் தயக்கமுமில்லாது கூறும் அதேவேளையில், தமிழ்த்தேசியம் ஒரு நச்சுத் தேசியமல்ல என்பதையும் ஆணித்தரமாகக் கூறுவேன்.

அப்படியானால் தாயகத்தில் வாழுகின்ற மலையகம், தமிழர், சோனகர் ஆகிய இனக்குழுமங்கள் தனித்தனி தேசியர்கள் என்பதை ஏற்று கொள்கின்கிறிர்களா ?

அதை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது மறுப்பதற்கு நான் யார் ? அவர்கள் தங்களைத் தனித் தேசியங்களாகக் கருதும் நிலையில் அவர்களின் தனித்துவத்தை மதித்து அவர்களுடன் நட்புறவைத் தமிழ்த்தேசியம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்பதே எனது எண்ணப்பாடு.

யாழ் மையவாதம் தொடர்பாக என்ன சொல்கின்றிர்கள் ?

இலங்கையிலுள்ள வேலணை என்னும் கிராமத்தை நான் அடியாகக் கொண்டவன். அங்கு வாழ்ந்த வேலணையர்கள் வேலணையர்கள் அல்லாதவர்களை அவரவர் ஊரின் பெயர் சொல்லியே அழைப்பார்கள். நீர்வேலியான், புங்குடுதீவான், கொழும்பாள் என்றவாறாக… அப்போது இது எனக்குச் சாதாரணமாகவே தோன்றியது. பின்னர் தீவார்கள் என்ற பெயரால் தீவுமக்களை யாழ் குடாநாட்டில் இழிவாக அழைப்பதென்பதைக் கேள்விப்பட்டேன். இடங்களின் பெயர்களை மனிதர்களுடன் ஒட்டிவைத்து அவர்களுக்கு முத்திரையிடுவதும் அதன் அடிப்படையில் ஒருவித அந்நியத்துவத்தைப் பிரகடனம் செய்வதும் சாதாரண விடயம் என்பதை வெளிநாடுகளிலும் இந்நிலை நிலவுவதை அறிந்து கொண்ட பின்தான் உணர்ந்து கொண்டேன். ஊர்ச்சண்டைகள் இல்லாத உலகமேயில்லை.

யாழ் மையவாதம் என்ற சொல் யாரால் உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் அர்த்தமும் மாறுபாடடைகிறது என நான் கருதுகிறேன். உபயோகிக்கும் நோக்கமும் மாறுபாடடைகிறது. கிழக்கு மாகாணத்தவர்கள், சைவ-வேளாள மரபை எதிர்ப்பவர்கள், கிறிஸ்தவர்கள், புரட்டஸ்தாந்தவர்கள், இஸ்லாமியர்கள் என ஒவ்வொருவரும் யாழ் மையவாதத்திற்கு ஒவ்வொரு கருத்தைக் கொண்டுள்ளார்கள் எனப்படுகிறது. உதாரணமாக சைவம் தவிர்ந்த ஒரு மதத்தவர், சைவர்களை நேரடியாகத் திட்டினால் அது மத நிந்தனையாகி விடும். ஆனால் அவருக்கு யாழ் மையவாதம் என்ற சொல் சைவத்தைத் திட்டுவதற்குப் போதுமானது. அவ்வாறு திட்டுபவர் தன்மதம் சார்ந்த ஒரு தீவிரவாதியாக இருந்தாலும், மதரீதியான இழிவுபடுத்தலே அவருடை பிரதான நோக்கமாக இருந்தாலும் அவர் தப்பித்துவிடலாம். அதற்காக யாரும் அவரின் மதத்தை குறைகூறப்போவதில்லை.

யாழ் மையவாதம் என்பது தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியினரிடம் உள்ள ஒரு அரசியற் சொல்லாடல். அது ஒரு அரசியல் இலக்கை உள்நோக்கமாகக் கொண்ட மொழியுருவாக்கம். அந்த நோக்கம் பிழையானதென்றோ அன்றில் சரியானதென்றோ நான் கூறவில்லை. அவரவர் நோக்கில் அவரவர் இலக்குகள் முக்கியமானவை. இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையை முன்நிறுத்தும் பௌத்த-சிங்கள மேலாண்மையாளர்கள் யாழ் மையவாதம் என்ற கருத்தியலை தமிழர்களைப் பிரித்தாள்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் அவர்களின் நிசமான அச்சம் தமிழ் மையவாதம் பற்றியதே.

யாழ் மையவாதத்தின் எதிரிகளாகத் தங்களைப் பிரகடனம் செய்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் ‘விரும்பியோ, விரும்பாமலோ’ பௌத்த-சிங்களப் பேரினவாதத்தின் நட்புச் சக்திகளாக உள்ளார்கள். இவர்களில் பலர் சைவர்கள் அல்லாதவர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பாக உற்று நோக்கப்பட வேண்டிய விடயம். யாழ் மையவாத எதிர்பை கட்டியுருவாக்கும் புத்தி ஜீவிகளில் பலர் சைவத்துக்கு எதிரானவர்களாக இருப்பதென்பது ஆச்சரியமான விடயமொன்றல்ல எனினும் அவர்கள் தத்தமது மதங்களில் ஆழமான பற்றுக்கொண்டவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

பொதுவாகவே குற்றமயப்படுத்தலில் ஒரு கள்ளத்தனமான வஞ்சகம் உள்ளதென்பதை நான் நீட்சேயப் பார்வையில் ஏற்றுக்கொள்பவன். யாழ் மையவாதம் என்ற வாதத்துள்ளும் ஓரு அரசியல் மற்றும் குறிப்பாக மத வஞ்சனை புதைந்து கிடப்பதாகக் கருதுகிறேன்.

சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் சைவர்களைப் பிரித்தாளும் நோக்கில் சைவர்கள் அல்லாத தமிழர்களில் சிலர் முன்வைக்கும் வஞ்சகக் கருத்தியல் யாழ் மையவாதம். இதே யாழ் மையவாதத்தைக் கருவியாக்கி பௌத்த-சிங்களம் ஒட்டு மொத்தத் தமிழர்களையே பிரித்தாள்கிறது.

ஐரோப்பியக் கட்டுமானத்துள் பல்தேசியக் கூறுகள் கரைந்து ஒற்றைத் ஐரோப்பிய ஒற்றைத் தேசியமாக உருவெடுத்துள்ளமை பற்றி ?

முதலில், ஐரோப்பியக் கட்டுமானம் என்பது ஓரு பொருளாதாரக் கட்டுமானமே தவிர அது ஒரு தேசியக்கட்டுமானமல்ல. அரசியற் கட்டுமானம்கூட அல்ல. இக்கட்டுமானம் பெருநிதியங்களின் நன்மைகளை இலக்குவைத்து மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தற்போது ஐரோப்பியர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் புரிந்து விட்டது. ஐரோப்பாவை ஒரு தேசியக்கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கான பொதுக்கூறாகக் கிறிஸ்தவமதம் உள்ளபோதும், ஐரோப்பியர்களின் விழுமியங்கள் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டவை. ஐரோப்பியர்கள் தாம் ஐரோப்பியர்கள் என்பதை பொதுவாக ஏற்றுக்கொண்டாலும் தமது தனித்துவங்களின் மீதும் தேசிய ஆடையாளங்களின் மீதும் மிகவும் கரிசனை கொண்டவர்களாக உள்ளார்கள்.

ஐரோப்பா என்பது இறைமையுடைய பல்தேசியங்களின் கூட்டாட்சியாக உருவாகவேண்டும் என்ற குரல் பலமாக எழுந்துகொண்டிருக்கிறது. இவ்வாறான கட்டமைப்பை முன்மொழியும் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இங்கிலாந்து ஐரோப்பியக் கட்டமைப்பை விட்டு வெளியேறினால் அது பாரிய பொருளாதாரச் சிக்கலுக்கு முகம் கொடுக்கநேரிடும் எனப் பெருநிதியங்களும் அவர்களின் அடிவருடி மீடியாக்களும் வாய்கிழியக் கத்தியதுதான் பயன். வேறொன்றும் நடக்கவில்லை.

நெப்போலியன் பலத்தினால் ஐரோப்பாவை ஒரு குடைக்குக் கீழ் உருவாக்க முனைந்து தோல்வியடைந்ததது யாவரும் அறிந்ததே. அதே இலக்கில் அதே வழியைப் பின்பற்றிய ஹிட்லருக்கும் அதுவே நடந்தது. அதையடுத்து தற்போது பெருநிதியங்களின் அதிகார வியாபகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. ஆகவே ஐரோப்பியக் கட்டுமானத்துள் அதன் தேசியங்கள் கரைந்துவிட்டன என்ற கூற்று ஏற்புடையதல்ல என்றே நினைக்கிறேன். தேசியம் ஒரு கற்பிதம் என்பதோ அன்றில் தேசியங்கள் கரைந்து விட்டன என்பதோ உலகமயமாக்கலின் உதவிக்குத் திட்டமிட்டுக்கொண்டு வரப்பட்ட கோசங்கள்.

நடைபெற்று முடிந்த போரில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என்ன ?

இக்கேள்வியைச் சற்று மாற்றுவதில் உங்களுக்கு உடன்பாடிருக்கும் என நம்புகிறேன். போர் என்பதற்குப் பதிலாக போர்கள் என்று கருதுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். தனியுடமைச் சமூகங்கள் தோன்றியதிலிருந்தும், தமக்கென அடையாளங்களையும், நிலப்பரப்புகளையும் பேணத்தொடங்கியதிலிருந்தும் மனிதர்கள் போர்செய்துகொண்டேயிருந்தார்கள். இன்னமும் போர் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

எத்தனையெத்தனை போர்களை இந்த மானிடம் கண்டுவிட்டது. போர் நடைபெறாத கண்டங்களேயில்லை. மற்றவர்களின் சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்காக நடைபெற்ற போர்கள், ஆக்கிரமிப்புப் போர்கள், மதப்போர்கள், கோட்பாட்டடிப்படையிலான போர்கள் எனப் போர்கள் தொடர்ந்தன. இன்னமும் தொடர்கின்றன.

கடவுளின் பெயரால் உலகில் நடைபெற்ற போர்களிலிருந்து மனிதர்கள் என்ன பயனை அடைந்தார்கள் ? பல மில்லியன் உயிர்கள் பலியாகின.

கம்யூனிச அல்லது சமத்துவக் கோட்பாட்டை முன்நிறுத்திய தொழிலாளர்களின் போராட்டங்கள் என்னானது ? அவற்றின் விளைவுகளெவை ? பல மில்லியன் உயிர்கள் பலியாகின.

அடக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் அநீதியான போராட்டங்கள் அல்ல. ஆனால், அவை ஒவ்வொரு தடவையும் வெற்றிபெறுவதில்லை. உதாரணங்கள் உலகெங்கிலும் கொட்டிக்கிடக்கின்றன. 18,19,20ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களின் கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. எல்லாப் போர்களும் சொல்லும் ஒரு மாபெரும் செய்தி அவை தவிர்கப்படவேண்டியவை என்பது மாத்திரமே. ஒன்று நடைபெற்று முடிந்த பின்னர் அதுபற்றி எதை வேண்டுமானலம் கூறலாம். போர்கலையைப் பற்றி எழுதிய நூல்களை விடவும் போரைத் தவிர்ப்பதற்காக நூல்கள் குறைவாக எழுதப்பட்டுள்ளன போல் தோன்றுகிறது. போர் மானித்தின் தோலுக்குள் செருகி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சாத்வீகப் போராடடங்களில் கூட பக்கவிளைவுகளாக எத்தனை உயிர்கள் இழக்கப்படுகின்றன.

போர் தீங்கானது என்பதற்காக பிரஞ்சுப் பிரசைகள் நெப்போலியனின் சிலையைத் தூக்கிக் கடலில் எறிவார்களா ? தகுந்த நேரத்தில் நடைபெறாப் போர்களால் எத்தனை அழிவுகள் ஏற்பட்டன என்பதைச் சொல்லியா தெரியவேண்டும். வரலாறெங்கும் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. போர்ச்சூழ்நிலை தனக்கான பிரத்தியேக விதிகளால் ஆனது. அங்கு நீதியைத் தேடுவது அபத்தம். போர்ச்சூழல், அங்கு எங்கு நடைபெற்றாலும், கொடூரங்களையும் உரிமை மறுப்புகளையும் கொண்டது. இவ்வுண்மையை மறுப்பவர்கள் தமக்குத் தாமே பொய்யுரைப்பவர்கள்.

வெற்றி, தோல்விக்குப் பின் முன்வைக்கப்படும் அரசியல் ராசதந்திர நகர்வுகள் போரின் நடைமுறைவிதிகளுக்கு வெளியில் நடைபெறும் போரின் விளைவுகள் பற்றிய கரிசனையை மையப்படுத்தியவை. அவை போரை மையப்படுத்துவதில்லை. போர் என்ற புயலின் ‘கண்ணுக்குள்’ அனைத்துமே பிரத்தியேகமானவை. காட்டாற்று வெள்ளம் வேறு. கால்வாய் நீர்வேறு. இது பற்றி நிறையவே பேசலாம்.

வாசுதேவன்-பிரான்ஸ்

00000000000000000000000000000

வாசுதேவன் பற்றிய சிறு குறிப்பு :


ஈழத்தில் வடபுலத்தின் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டு பிரான்ஸில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் வாசுதேவன் சிறந்த கவிஞர்,மொழிபெயர்பாளர், ஓவியர்,திறனாய்வாளர்,இலக்கிய செயற்பாட்டாளர் என்று பல்துறைசார் ஆளுமைகளுக்கு சொந்தகாரராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இதுவரை வெளியாகிய நூல்களாக ‘தொலைவில்’, ‘அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே’ ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளும் , ‘19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள்’ என்ற கவிதை மொழிபெயர்ப்பையும், ‘பிரெஞ்சுப் புரட்சி’ என்ற வரலாற்று நூலினையும் எம்மிடையே ஆவணப்படுத்தியுள்ளார். இவரின் ‘தொலைவில்’ கவிதை தொகுப்பு 2007 ஆண்டின் சிறந்த கவிதை தொகுப்பாக கனேடிய தோட்டத்தால் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது . இவரது கவிதைகள் பெரும்பாலும் எளிமையான சொல்லாடல்களுக்கு சொந்தமாகின்றன.

25 கார்த்திகை 2020

கோமகன்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...