Skip to main content

கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்


புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது.

இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொகுப்பின் சில கதைகளை நடு ஆன்லைன் இதழில் அவ்வப்போது படித்திருக்கிற நியாபகங்கள் மீளவந்தாலும்,இத்தொகுப்பின் வழி மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் மேலும் சில புதிய கோணங்களில் சில புதிய தரிசனங்கள் காணக்கிடைப்பதை மறுப்பதற்கில்லை.எழுத்து எல்லா காலத்துக்கும் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்வதில்லை என்றாலும் எழுத்தின் ஆழமும் அவை எழுதப்படும் சூழலும்,காலமுமே கதையை நூற்றாண்டுகள் கடந்தும் புத்துயிர்ப்புடன் இருக்கச்செய்வதாக அமைகிறது.அந்தவகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'அகதி மற்றும் மாதுமை' ஆகிய மிகப்பிரதானமான இரண்டு கதைகளும் கிளாசிக் என்று சொல்லலாம்.

பெரும்பாலன கதைகள் வல்லினம், மலைகள்,ஜீவநதி,எதுவரை,முகடு ஆகிய ஆன்லைன் இதழ்களிலும் இலக்கிய சஞ்சிகைகளிலும் புலத்திலும் இனைய வெளிகளிலுமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கதைகளின் களங்களும் அவை படரும் வெளிகளும் நுட்பமானவையாக இருப்பதால் தான் முரண்,தகனம்,டிலீப் டிடியே,ஏறுதழுவுதல்,பருப்பு கதைகள் ஒரு புதிய முயற்சிகளாகவும் ஆக்காட்டி,வெடிப்பு,சுந்தரி ஆகியவை வேறுவகை மாதிரிகளாகவும் அமையப்பெற்றிருக்கிறது.ஒரு கதை அதன் வழமையான பாடுகளில் இருந்து முற்றிலுமாக சமன்குலைந்து விதம்விதமான வகைகளில் கோர்க்கப்படுவதுதான் படைப்பாளனுக்கு அழகு.அதுதான் படைப்பு நேர்த்தியும் கூட.

கதைக்களங்கள் அதன் காலங்களை கொண்டு இறந்தகாலத்தின் துயரத்தை,நிகழ்காலத்தில் மீளாய்வதற்கும் அதன்வழி எதிர்காலத்தை கூடுமானவரை குறைந்தபட்ச சுபிட்சத்திற்காகவேனும் தயார் படுத்திக்கொள்வதற்கான சில வழிவகைகளை,காலச்சக்கரம் நிகழ்த்திக்காட்டும் என்றாலும் கூட அதன் நொடிமுட்கள் எல்லாநேரத்திலும் தன்னியல்பு போக்கிலேயும் சுழலுவதில்லை என்பதால்,ஒவ்வொருவரும் அதன் இனம்புரியாத ஏதோவொரு அனுபவத்தை தன்வாசிப்பின் வழி கண்டடைவதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் புனைவுகள் உருவகப்படுத்தி தரும் என்பதால்,கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமல்ல காலத்தை அதன் முன்னும் பின்னுமான இயல்பின் வழியே புரிந்துகொள்வதற்கும் தான் என்பதை முரண் தொகுப்பு மிககச்சிதமாக சாத்தியப்படுத்தி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் . பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின...

‘முரண்’ தொடர்பாக இவர்கள் இப்படிச்சொல்கின்றார்கள்

கோமகனுக்கு சிறுகதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் அக்கறை அதிகரித்துள்ளது. ஏன்றாலும் விடயங்களை தேடுவதில் அவர் இன்னும்கூட முயற்சி எடுக்கலாம். ‘முரண்’ ஒரு முரணில்லாத தகவல்களின் வடிவமைப்பு. நிஜவாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைதான் அது. கணவன் மனைவியரிடையே உள்ள அந்தரங்கங்களை உடைத்துப் பீறிட்டெழும் சில வார்த்தைகளின் பின்புலம் நல்லவையாக இருப்பதில்லை. இந்தக்கதையின் மைய வேரே, “உங்களில பிழையை வச்சுக் கொண்டு என்னையேன்அரியண்டப்படுத்திறியள்?” என்ன பிழை ? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அதன் விளைவுகள் என்ன? என்பதை விபரிக்கிறது ‘முரண்’ சிறுகதை. எழுத்துகளில் வெளிப்படும் லாவண்யம், கதாநாகனை தப்ப வைக்க முயன்றாலும் படு தோல்வியே கிடைக்கும். வாசகர்கள் முட்டாள்களா என்ன? ‘தகனம்’ சிறுகதை நடந்து வரும் பாரதிபுரம் தின்னைவேலி பால்பண்ணை சுடலை விவகாரம். ஆழகான சிண்டுமுடிப்பு. அதை இதைவிட வேறு விதமாக எழுத முடியுமா? யாராவது முயன்று பார்க்கலாம். ஆனால் இந்தளவுக்கு திறமையாக அந்தப்பிரச்சனையை முடித்துவைக்க யாரால் முடியும்? இதேயளவு அவர் கையாண்டு எழுதியிருக்கும் இன்னுமொரு பிரச்சனை ‘ஏறு தழுவல்’ சிற...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...