Skip to main content

ஈழத்து சிந்தனைவெளி மீதான கலகச் செயல்-நேர்காணல்-மிஹாத்



அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட மிகாத் இடதுசாரிய சிந்தனையாளர்களில் ஒருவர். அத்துடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. அடிப்படையில் இவர் ஓர் தேர்ந்த விமர்சகராகவே இனங்காணப்பட்டுள்ளார். வயதில் இளையவரான இவரது இலக்கிய ,அரசியல் நுண்அறிவு வியக்க வைக்கின்றன. இவர் ஒரு கால கட்டத்தில் கிழக்கிலங்கையின் ‘பெருவெளி’ குழுமத்தின் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவருடன் கவிஞர் மஜீத், றியாஸ் குரானா, றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்றவர்களும் ‘பெருவெளி’ குழுமத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள். நான் செய்துகொண்ட நேர்காணலில் மிகவும் நீண்ட நேர்காணல் இவரது நேர்காணலாகும்.

கோமகன்

000

நிந்தாவூரில் இடம்பெற்ற எனது நேர்காணல் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் உங்களை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். நீங்கள் தான் “குரலற்றவரின் குரல்” நேர்காணல் தொகுப்பிற்கான நூல்விமர்சனத்தை வைத்திருந்தீர்கள். அனாலும் உங்களை பற்றி என்னால் பெரிதாக அறிய முடியவில்லை ………?

1987 ல் இருந்து சில புரிதல்களைப் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவாகவே நமது செயல்பாட்டின் நீண்டகால பயணத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாய் அமையும் என்பது எனது நம்பிக்கை.

எனது ஊரான அக்கரைப்பற்றில் நான் சாதாரண தரத்தில் படிக்கின்ற போது சூழலில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் எனது அனுபவங்களை நிறையவே பாதித்தன. இனக்கலவரங்கள், தாக்குதல்கள், சமாதான முயற்சிகள் என பல தள மாற்றங்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த கையோடு ஆயுதப் போராட்டக் களத்திலும் அரசியல் அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்திய வல்லரசுக்கு இலங்கையை வளைத்துப் போடும் எண்ணம் உருவான போதுதான் இங்கு படைகளை அனுப்பியிருந்ததாக சில அறிவுஜீவிகள் எனக் கருதப்படுவோர் பேசித் திரிந்தனர். போரை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்குகிழக்கில் மாகாணசபை ஆட்சியை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமாதானத்தை நிரந்தரமாகத் தக்க வைக்கலாம் என இந்தியா கருதியது. அதன் மூலம் இலங்கை மீதான பிராந்தியச் செல்வாக்கையும் அதிகரிக்கலாம் எனும் நோக்கமும் இந்தியாவுக்கு இருந்தது.

(அன்று ஏற்பட்ட அதிகார முரண்பாடு காரணமாக விகாரமாகச் செயற்பட்டு வெளியேறிய புலிகளின் சரித்திரம் 22 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்ததமை வேறு விடயம்.)

அந்த அடிப்படையில் அப்போது இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியானது தனக்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியது. அதனால் அந்நாளில் பிரபலமான இடதுசாரித் தலைவரான தோழர் அபூயூசுப் உறுப்பினரானார்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் / தமிழ் இன முறுகல்கள் பல இடம்பெற்றன. முஸ்லிம் காங்கிரசானது அதனைத் தனது அரசியல் வளர்ச்சி நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. இங்கு கூற வேண்டிய விடயம் வேறானது என்பதனால் அதைத் தவிர்க்கிறேன்.

எமது பகுதியில் தூர்ந்து போயிருந்த இடதுசாரி அரசியல் களமானது அபூயூசுப் மாகாண அமைச்சரானதுடன் புதுப் பொலிவடைந்தது. தோழர் இப்றாலெப்பை, தோழர் பகுர்தீன் P M ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் காரியாலயம் தோழர் பத்மநாபாவினால் திறந்து வைக்கப்பட்டது. நண்பர்கள் பலரும் கூட்டாக அக்கட்சியில் அன்று இணைந்து கொண்டோம்.

பாடசாலை மாணவர்களாயிருந்த போதும் எமது இடதுசாரி அரசியற் செயற்பாடுகள் வேகமாயிருந்தது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தது. அதன் பின்னணியில் நாங்களும் இருந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் மிக அதிகமான மார்க்சீய நூல்களை வாசிக்கும் அனுபவம் எனக்குக் கிட்டியது. கம்யூனிஸ்ட் அறிக்கை முதல் இயக்கவியல் பொருள் முதல்வாதம், பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் என அனைத்து வித மொஸ்கோ பதிப்பு நூல்களையும் கட்சி நூலகம் மூலம் வாசிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. பாடப் புத்தகங்களை விடவும் அரசியல் விடுதலை பற்றிய அக்கறைகள் எங்களுக்குள் அதிகரித்திருந்தது. பல்வேறு சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பன எங்களை வளப்படுத்தின.

மிகையீல் கொர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களான பெரஸ்ரோய்க்கா மற்றும் கிளஸ்னோஸ் என்பவை அந்நாட்களில் மிகப் பெரும் விவாதப் பொருளாகியது. சோவியத் யூனியனின் பொதுவுடமை அரசில் இடம்பெற்று வந்த புதிய மாற்றங்கள் அவ்வப்போது எமது கலந்துரையாடல்களில் நிரம்பியது.

கொர்பசேவ்வின் புதிய அணுகுமுறையினால் சோவியத் யூனியனின் அனைத்துக் குடியரசுகளும் தனி நாடுகளாகப் பிரிந்து விட கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களினால் உலகில் உள்ள பொதுவுடமை சிந்தனையாளர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் கலாசார நகரமான ஸ்ராலின் கிராடிலிருந்த லெனின் சிலை உடைக்கப் படுவதைக் காட்டிய ஏகாதிபத்திய ஊடகங்கள் கம்யூனிசம் தோற்று விட்டதாக உலகுக்கு முழக்கமிட்டு அறிவித்தன.

இந்நிலையில் உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய அரசின் போக்குகளிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அதனைப் போலவே இலங்கையில் அரசு, புலிகள் போன்ற தரப்புகளின் நிலைப்பாடுகள் ஏகாதிபத்தியச் சூழலுக்குள் தனித்தனி முகாம்களுக்குள் சிறைப்பட்டிருந்தது.

இந்த உலகளாவிய நெருக்கடி நிலை எம்மை மிகுந்த கொந்தளிப்புக்குள்ளாக்கியது. இந்தக் காலப்பகுதியில் மெய்யியல் மற்றும் பெரியாரியம் போன்ற அம்சங்களில் எமது கவனம் திரும்பியது. காதல், போதை, கவிதை, இலக்கியம் என சூழ்நிலைகள் மாறின.

அப்போது தினகரன் வார மஞ்சரியில் வீ.ஜெகதீசன் பொறுப்பில் பதிப்பான “கவிதா சாகரம் ” பகுதியில் கவிதைகள் எழுதும் ஒரு தலைமுறை உருவானது. எம்.பௌஸர், ஏயெம்.தாஜ், முழுமதி எம்.முர்தளா, எம்.ஐ.எம்.ஜாபிர், எஸ்.ரபீக் எனும் அந்தப் பெரும் கூட்டத்தில் மஜீத், மிஹாத், றியாஸ் குரானா ஆகியவர்களும் இருந்தனர். சில வேளைகளில் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களின் கவிதைகளே கவிதா சாகரத்தின் முழுப் பகுதியையும் நிறைத்திருந்த சந்தர்ப்பங்களுமுண்டு.

காலப்போக்கில் எங்களோடு குழுவாக இருந்த கவிதை எழுதும் நண்பர்கள் அனைவரும் மு.மேத்தா, வைரமுத்து, அப்துல் ரகுமான் வகை கவிதைகளோடு தமது இலக்கிய தேடலை நிறைவு செய்து கொண்டனர். இன்னும் சிலர் பாலகுமாரன், அசோகமித்ரன், சுந்தரராமசாமி வகை இலக்கியங்கள்தான் தமிழின் உச்சமான இலக்கியங்கள் எனும் நம்பிக்கையோடு செயல்படத் தலைப்பட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் மஜீத், றியாஸ் குரானா மற்றும் எனக்கும் நவீன இலக்கியங்களோடு ஒரு பரிச்சயம் உருவானது. அது விரிவான இலக்கியச் செயற்பாட்டுக் களமாக மாறியது. புதிய சிற்றிதழ்களை வாசிக்கும் பழக்கம் உருவானது. பௌசர் ” தடம் ” சஞ்சிகையைக் கொண்டு வந்த போது அவருக்கு உறுதுணையாய் இருந்தோம். ஆனால் எங்களின் ஆக்கங்கள் எதனையும் பிரசுரிப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. உன்னதமான ( ? ) இலக்கியங்கள் மீதும் தேர்ந்தெடுக்கப்பட்ட (? ) பிரபலங்களின் சுத்திகரிக்கப்பட்ட ஆளுமை எழுத்துக்கள் எனும் இலக்கிய அதிகாரம் அங்கு குடிகொண்டிருந்தது. அதனால் நாம் வேறொன்றாக இருக்க விரும்பினோம்.

மஜீத், றியாஸ்குரானா போன்றவர்களின் நட்பு உருவானதிலிருந்து எங்களுக்குள் தனியான இலக்கிய முகாம் ஒன்று நிலை பெற்றது. எனக்கு இடதுசாரி அரசியல் பரிச்சயம் இருந்தது போல றியாஸ் குரானா “மாற்று ஆன்மீக ” பின்னணியில் பரிச்சயம் கொண்டவர். ஓஷோ ரஜ்னீஸ், ஜித்து கிருஷ்ணமூர்த்தி, ரூமி போன்றோரின் ஆன்மீகச் சிந்தனைகளில் தெளிவு கொண்டிருந்தார். இந்த சிந்தனைக் கலவைகளின் சங்கமமாக எமது இலக்கிய நட்பும், எழுத்தும் மாறியது.

இக்காலத்தில்தான். பிரபலமடையாத ஆனால் வித்தியாசமான mainstream ற்கு புறம்பான பல எழுத்தாளர்களின் நூல்களை தொடர்ச்சியாக வாசிக்க நேர்ந்தது. எழுத்துக்களை விமர்சன ரீதியாக அணுகுவதற்கான பயிற்சிக் களமாக எமது நட்பு மிளிர்ந்தது. சி.சு.செல்லப்பா முதல் க.நா.சு வரையானவர்களின் இலக்கிய ஆய்வுகளோடு பரிச்சயம் உருவானது. பசுவய்யா கவிதைகள், மயன் கவிதைகள், சி.மணி கவிதைகள் போன்றவற்றையும் கடந்ததொரு வாசிப்பு எமக்குள் இலக்கியம் குறித்து எழுதுவதற்கான சுயமான வீரியத்தை உருவாக்கியிருந்தது.

அத்தோடு மாற்று சினிமா குறித்த புரிதலும் இதேகாலத்தில் எமக்குள் இருந்தது. சத்யஜித்ரே, கோவிந்த் நிஹ்லாணி, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், சிபி மலயில், மகேந்திரன், பாலுமகேந்திரா, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற அனைவரின் திரைப்படங்களையும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அல்பிரட் ஹிட்ச்காக்கின் திகில் படங்களின் நுட்பங்களை விவாதித்து எழுதவும் முடிந்தது.1992 காலப் பகுதியில்

“ஒன்றும் இல்லை ” என்றொரு சஞ்சிகையை வெளியிட்டோம். அதன் அட்டைப் படத்தை வரைய ஓவியர் றஷ்மிக்கு அறிமுக வாய்ப்பை வழங்கியிருந்தோம். அந்த சஞ்சிகை தொடர்ந்து வராமல் நின்று போனது.

அந்நாட்களில் தமிழ் பேரினவாதம் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டது. அதனால் எமது விவாதங்கள் அனைத்தும் போர் விமர்சனங்களாக மாற்றமடைந்தன. ஜனநாயகம், பொதுவுடமை போன்றவற்றின் மீதான நடைமுறை சார்ந்த எதிர் விமர்சனம் , தமிழ் தீவிரவாதத்தின் முஸ்லிம் விரோதப் போக்கிற்கு எதிரான உணர்வு போன்றவை வேறு இயங்கு தளங்களுக்கான அவசியத்தை உணர்த்தின.

தொண்ணூறின் நடுப்பகுதியில் தமிழில் வேறுபட்டு இயங்கிய தமிழக சஞ்சிகைகளினதும் எழுத்தாளர்களினதும் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. அந்த எழுத்துக்கள் வழியாக பிரஞ்சு சிந்தனையாளர்கள் பற்றிய அறிதல் ஏற்பட்டது. அதன் பிறகான காலம் அந்தச் சிந்தனையாளர்களின் நேரடி எழுத்துகளைத் தேடிய பயணமாக விரிந்தது.

ஜீன் பிராங்கோ லியோட்டார்ட், டெரிடா, ரோலண்ட் பார்த்ஸ், பூக்கோ, பொட்ரிலாட் போன்ற பிந்திய சிந்தனையாளர்களின் பல்வேறு கட்டுரைகள் வேறு வகையான புரிதல்களையும் மாற்றான இலக்கிய விருப்புறுதியையும் தோற்றுவித்தன. இதன்போது மொழி, அர்த்தம், அதிகாரம், வரலாறு, மானுடவியல், கலாசாரம் என அனைத்திலும் எமது சூழலுக்கான மாற்றுப் பார்வைகளை முன்வைக்கும் முட்டுச் சந்திக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு பின்நவீனத்துவ நிலை என கருதலாம்.

அக்கால கட்டத்தில் சஞ்சிகை ஒன்றைக் கொண்டு வருவதற்கான நியாயங்கள் எம்மிடம் உருவாகியிருந்தன. றியாஸ்குரானா, மஜீத் போன்ற தோழர்களோடு விரிவான விவாதம் இடம்பெற்று ” பெருவெளி ” எனும் சஞ்சிகையை கொண்டு வர தீர்மானித்தோம். அதனைத் தொடர்ந்து றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்ற நண்பர்களும் செயற்பாட்டாளராக இணைந்தனர். கவிஞர் முர்த்தளா மற்றும் மருதமுனை எம்.ஐ.எம். றவூப் ஆகியோரும் இணைந்து செயற்பட்டனர். அச்சு வடிவமைப்பாளராக நண்பர் சாமில் இருந்தார். பெருவெளி சஞ்சிகை பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சூழலின் நியாயங்களுக்கமைவான ஒரு கலகக் குரலாக வெளிவந்தது.

பின்நவீன சிந்தனை முறைகளின் அடிப்படையில் மைய அதிகாரங்களுக்கெதிரான விளிம்புகளின் கலகம் என்பதை இலக்கிய அரசியலாகக் கையேற்ற பெருவெளியின் உள்ளக அம்சங்கள் அதுவரை இலங்கையில் நிலவி வந்த தமிழ் சஞ்சிகை விழுமியங்களைக் கலைத்துப் போட்டது. பல்வேறு எழுத்துப் பரிசோதனைகள் அதில் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு அதிகாரப் புறமொதுக்கல்களுக்கும் உள்ளான தரப்புகளின் எதிர் அபிலாசைகளை வெளிப்படுத்தும் இதழாக அது அமைந்தது. அரச தரப்பு, ஆயுத தரப்பு, உள்ளூர் பண்பாட்டு அதிகார மையங்கள் போன்றவற்றுக்குச் சவாலான போக்குகளை அச்சஞ்சிகை கொண்டிருந்தாலும் அதிகாரங்களோடு சமரசம் செய்யாத உறுதியோடிருந்தது.

பிறகு அதன் செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் தனிப்பட்ட பல விதமான வேலைப் பளுக்கழும் அந்த இதழ் தொடர்வதில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாகவும் சிந்தனைப் புலத்தில் உருவான புதிய கருத்து மாற்றங்களும் பெருவெளியின் இறப்பை உறுதி செய்தன. அது ஒரு காலகட்டத்தின் இயக்கம் என்ற அடைமொழிக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

போர் இடம்பெற்ற காலத்தில் பிரிவினைவாத அதிகார மையங்கள் நவீனத்துவ இலக்கியப் போக்கின் அடிப்படையில் செயல்பட்டன. அவற்றின் இலட்சியங்களுக்கு ஏற்ற வகையிலான இலக்கியங்களை மட்டும் கொண்டாடின. ஏனையவற்றை புறக்கணித்தன. கடந்த நாற்பதாண்டுகளில் வெளிவந்த எண்ணற்ற இலக்கியப் படைப்புகளை ஈழத்து நவீன இலக்கியவெளி புறமொதுக்கி வைத்திருக்கிறது. அவை தமிழ் பிரிவினைவாதத்திற்கு அந்நியமானவையாக அமைந்ததே கவனியாமல் போனதற்கான காரணமாகும். இந்த போக்கிற்கான உந்து சக்தி புலம்பெயர் சூழலில் இருந்தே தோற்றம் பெற்றது. அவை தமக்கு ஏற்ற வகையிலான இலக்கியப் படைப்புகளை மட்டும் முன்னிலைப்படுத்தி ஜனரஞ்சமாக்கின. அதனை தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான வணிக காரியங்களில் ஈடுபட்டன. போரின் முடிவோடு இவை பயணிக்க வேண்டிய பாதை புரியாமல் தட்டுத் தடுமாறி நின்று விட்டன. தற்போது போருக்கு பிந்திய சூழ்நிலையில் நமது இலக்கிய செயல்கள் எதுவாக இருக்க முடியும் என்பது முக்கியமானது.

போர் காலத்தில் இலக்கிய அதிகாரத்தை வடிவமைத்த தரப்புகள் எந்த இலக்கியங்களை எல்லாம் புறமொதுக்கியதோ அவற்றை முன்கொண்டு வருவதே இப்போதைக்கான தேவையாகும். அதேபோல கடந்த காலத்தில் அழிவை முன்னிறுத்திய இலட்சிய எழுத்துக்களின் காலாவதியான வகிபாகத்தை கலக எழுத்துகளூடாக பரிசீலிப்பதே தற்காலத்திற்கேற்ற இலக்கியப் போக்காக அமைய முடியும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த இருபத்தைந்து கால எழுத்துச் செயற்பாட்டில் ஒவ்வொரு தருணங்களையும் பின்னோக்கிப் பார்க்கும் போது எந்தவொரு கட்டத்திலும் மையநீரோட்டப் போக்குகளோடு இரண்டறக் கலந்து விடாமல் வேறொன்றாகவே பயணித்திருப்பதை உணரும் போது திருப்தியாகவே இருக்கிறது. காலத்தின் திசையெங்கிலிருந்தும் நம்மை நோக்கி வரும் கருத்தாக்கங்களின் ஏக நிலையை சிதைக்கும் போதுதான் பல விதமான தரிசனங்களைச் சாத்தியப்படுத்தலாம். அதற்காக மறுத்தோடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

சமகாலத்து எழுத்துப் பரப்பில் எழுதி படிப்பவர்களாகவும் அல்லது நுகர்வினால் வந்த கிளர்த்தல் பொறிமுறை விமர்சனங்களையே பார்க்கின்றேன். ஒரு கறாரான விமர்சனப் பொறிமுறை இல்லாது போனது பற்றி ……. ?

விமர்சன நடைமுறையை பொறுத்தவரை எழுதிப் படித்தல் என்பது விமர்சன உத்தி சார்ந்த ஒன்றல்ல. அதாவது ஒருவர், தான் வெளிப்படுத்த விரும்புகின்ற விமர்சனத்தை பொதுத்தளத்தில் முன்வைக்கப் பயன்படுத்தும் செயல்பாடுதான் அது. சபையில் அல்லது ஊடகங்களில் வாய்மொழியாக முன்வைக்கப்படும் விமர்சனமானது பெரும்பாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நாடகீயமான வெகுஜன உளவியல் மீது சாய்வு கொண்டதாகவே இருப்பது வழமை. இதில் விமர்சனப் பார்வை என்பதை விடவும் பேச்சாற்றல் என்பதே முக்கியமானதாக அமையும். பேச்சு என்பது ஒரு நிகழ்வாக இடம்பெறும் தருணத்தில் ஞாபகத்தில் உருவாகும் சொற்சேர்க்கையை விமர்சனத்துக்கான எல்லையாகக் கொண்டிருக்கிறது. ஆகவே விமர்சித்தல் என்பது எந்த விதமான செயல்பாட்டுடன் தொடர்பு படுகிறது என்பது ஒரு விடயமல்ல. ஆனால் விமர்சனம் எனப்படுவது என்ன வகையான உத்திகளினூடாக முன்வைக்கப்படுகிறது என்பதே முக்கியமாகும்.

// நுகர்வினால் வந்த கிளர்த்தல் // என்று நீங்கள் குறிப்பிடுவது வாசிப்பின் போது ஏற்படும் ரசிப்புணர்வின் அனுபவப் பொங்குகையென இருக்குமாக இருந்தால், அந்த விதமான விமர்சன முறையானது இழிவானதுஎனகருதுவதற்கில்லை. இது நீண்ட கால தொன்மைத் தன்மை கொண்ட விமர்சன முறை என்பதுதான் முக்கியமாகும். இதனை இலக்கிய தளத்தில் முன்வைப்பதற்கு அறிவார்ந்த கருத்தியல்களின் துணை அவசியமற்றது.

இங்கு இதுவரைக்கும் பெரும்பாலானவர்களால் செய்யப்படும் விமர்சன முறை இதுதான். மார்க்சீய விமர்சன முன்னோடிகள் என நம்பப்பட்ட கைலாசபதியும், சிவத்தம்பியும் கூட இந்த வகையான போக்கிற்கு வெளியே முழுமையாகச் செயல்பட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. அதேபோல நவீனத்துவ இலக்கிய ஆய்வுகளை முன்கொண்டு சென்றவரும், நவீனத்துவ இலக்கிய வகைமை சார்ந்து சிந்தித்தவருமான நுஃமான் கூட இந்த விதமான விமர்சனப் பார்வையை விட்டும் தன்னை முற்றாக தவிர்த்துக் கொண்டிருக்கவில்லை.

இங்கு செயல்பட்ட விமர்சகர்கள் யாவரும் பிரதிகளை காலாகாலத்திற்கும் அது நித்தியத்தன்மை கொண்டது என நம்பினார்கள். அதற்குள் இருக்கும் அர்த்தங்கள் மாறவே முடியாதவை என நம்பியிருந்தார்கள். அதனால் அதன் நிலைத்த தன்மைக்கும், வெளியிலுள்ள வாழ்க்கைக்கும் இடையில் உன்னத அறம் ஒன்று சார்ந்த தொடர்பை உருவாக்கினார்கள். அதுவே இங்கு விமர்சனக் கலையாக நிலை பெற்றது.

மாறாக விமர்சன முறைமை என்பது பிரதிக்கும் வாசிப்புக்கும் இடையிலான மோதுகை சார்ந்தது என சிந்திப்பதற்கான கருத்தியல் பரிச்சயங்கள் அவர்களுக்குள் வளர்ந்திருக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகம் தழுவி எழுந்த அறிவியல் மாற்றங்கள் தமிழில் தாக்கம் செலுத்தவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அதிலும் குறிப்பாக மெய்யியல், உளவியல் குறித்து உருவான புதிய கருத்தியல்கள் தமிழ் இலக்கியக் களத்தில் பரவலான புரிதலைப் பெற்றிருக்கவில்லை. மொழியும் குறியீடும் பற்றிய புதிய தெளிவுகள் எழுத்தாளர்களைச் சென்றடைந்திருக்கவில்லை. மெலிதான அரசியல் இழைகள் மூலம் செறிவூட்டம் பெறும் அதிகாரம் என்பதன் வீச்சம் பற்றிய நுணுக்கமான பார்வைகள் எழுத்தாளர்களுக்குள் உருவாகியிருக்கவில்லை. பேச்சும், எழுத்தும் வலியுறுத்தும் மேலோட்டமான கருத்துருக்களுக்குப் புறம்பாக அவற்றில் மீறி நிற்கும் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்திருக்கவில்லை. அதனால் மேம்போக்கானதொரு தட்டை இலக்கியங்களை உருவாக்குபவர்களாகவே பெரும்பாலான எழுத்தாளர்கள் இருந்தார்கள். இந்த நிலையினால் பிந்திய கால விமர்சனங்களை புரிந்து கொள்ளவும் முடியாது, உருவாக்கவும் முடியாது .

மேற்கூறிய சிந்தனைகளை உள்வாங்கி நோக்கும் போது பிரதிகளை ஒரு நிலைத்த தன்மையான கருத்துக் கருவூலங்களாக நோக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இங்குதான் Jacques Derrida மற்றும் Roland Barthes போன்றவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பிட்ட பிரதிகளை வாசிப்பின் சுதந்திரமான கோணத்திலிருந்து அர்த்தப்படுத்துதலை மேற்கொள்ளும் சிந்தனை வலுவூட்டமே பிந்திய கால விமர்சன முறையின் அடிப்படையாகிறது. ஒரு பிரதியை எழுதுகின்ற ஆசிரியன் அதில் அவனுக்கேற்ற வகையில் அர்த்தத்தை நிலைகொள்ளச் செய்கிறான். ஆனால் ஒரு வாசகன் அதே அர்த்தத்தினூடாகவே சிந்திக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒரு பிரதியை எழுதுபவன் அவனது விருப்பத் தேர்வுக்குரிய அர்த்தத்தை அப்பிரதிக்குள் சிறை வைப்பதாக கருதினால், வாசகன் என்பவன் அந்த அர்த்தத்தை சிறையிலிருந்து விடுவிப்பவன் போல செயல்படுகிறான். இதுதான் பிரதி × வாசிப்பு எனும் எதிர்த் தன்மையாகும். இதனால் ஒரு பிரதி ஒவ்வொரு மீள் வாசிப்பின் போதும் எண்ணிலடங்காத அர்த்தங்களை உருவாக்கி விடுவதாக அமைகிறது. இந்த சிந்தனைப் பயிற்சியினூடாக முன்னெடுக்கப்படும் வாசிப்புத் துணையுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களே பிந்திய காலத்துக்குரியவை. இந்த பிந்திய கால விமர்சனத்திற்கான அடித்தளமானது மொழியின் தன்மை பற்றிய சிந்தனைப் புலத்திருந்து தோன்ற வேண்டும். அதாவது மொழி என்பது சத்தங்களின் கோர்வையாக இருந்த போதும் மொழியிலுள்ள சொற்கள் அதற்குள் எந்த அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. பொருட்களுக்கு வெவ்வேறு ஓசைகள் என்ற அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதினூடாகத்தான் அர்த்தங்கள் உண்டாகின்றன.

பேச்சு மட்டுமே மொழியின் தனித்தன்மையல்ல. எழுத்தும் மொழியின் இன்னொரு முக்கிய கூறாகும். அதை எழுதுபவனின் இருத்தல் இல்லாமல் கூட வாசித்து விடலாம். பேசுபவனின் கருத்தையும், எழுதுபவனின் கருத்தையும் கேட்பவனும் வாசிப்பவனும் அதே விதத்தில் அர்த்தப்படுத்துவதில்லை. கேட்கும் போதும், வாசிக்கும் போதும் வேறு விதமான அர்த்தப்படுத்தல்கள் உருவாகி விடும். குறிப்பிட்ட பேச்சையும் / எழுத்தையும் தாண்டியும் அதன் ஆழங்களில் வேறு அர்த்தங்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் அமிழ்ந்திருக்கின்றன. இதனைத்தான் Derrida தனது ஆய்வில் transcendental signified என்கிறார். சொற்களினால் நாம் வழமையாக உணரும் அர்த்தங்களுக்குப் புறம்பான ஆழத்தில் வேறு பல அர்த்தங்களும் நகர்ந்தபடி இருக்கின்றன.

இதற்கான உதாரணம் ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால் :

// நாம் பெருமையுடன் ஒன்று படுவோம் //

எனும் வார்த்தையை நோக்கினால் அதற்கு சிறப்பான அர்த்தங்களை உருவாக்க முடியும். இதனையே கோதாபய ராஜபக்ஷ தெரிவிப்பதாக நோக்கினால் இதன் அர்த்தம் எதுவாக இருக்க முடியும்? நம்மைப் பொறுத்தவரை இது ஒற்றுமை, சகோதரத்துவம் ஐக்கியம் எனும் வகையில் அர்த்தங்களை உருவாக்காது என்பதே உண்மை. இதற்குள் வேறு விதமான அத்துமீறும் தன்மையான அர்த்தங்களையே உருவாக்குவோம். இப்படித்தான் சொற்களின் வழமையான அர்த்தங்களுக்குப் புறம்பான ஆழத்தில் வேறு வகையான அர்த்தங்கள் உருவாகின்றன. இந்தப் புரிதல்தான் deconstruction மற்றும் death of the author போன்ற இலக்கியப் பார்வைகளை உருவாக்குகிறது. இதனூடாக வடிவமையும் விமர்சனங்கள் இன்னொரு படைப்பாகவே நோக்கப்பட வேண்டியவை. இந்த வகை கருத்தியல் சிந்தனைகள் இங்கிருக்கும் பேராசிரியர்களுக்கே இல்லாத நிலையில் நமது எழுத்தாளர்களும், சராசரி வாசகர்களும் எப்படியிருப்பார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இரட்டையர்களான கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் காலத்திற்குப் பிறகு விமர்சனத்துறையில் ஒரு பெரிய பாரிய இடைவெளி இருக்கின்றது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஏன் யாரும் முன்வரவில்லை?

இலங்கை தமிழ் இலக்கியப் பரப்போடு தொடர்புற்ற வயோதிப இலக்கியவாதிகளுக்குள் நிலவுகின்ற cliche வகையான Template நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கேள்விக்கான பதிலை சிவத்தம்பியின் கருத்தொன்றில் இருந்து தொடங்குதல் பொருத்தம்.

Srilankan Tamil literature with a very active role in opposing social oppression among Tamils, especially in the late fifties and sixties now began to speak of the more comprehensive oppression by the state. The dividing line comes in 1981. . . .
A new literary idiom was born. Almost 3 years later, the poetry that has been written, the short stories that have been penned, . . . .

இது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் Writers and Artists Meet in Jaffna என்னும் கட்டுரையில் குறிப்பிடும் சில கூறுகளாகும். 2003 ல் யாழில் நிகழ்ந்த புரிந்துணர்வு ஒப்பந்த அமைதியை வலுவூட்டும் கூட்டமொன்றில் பல மொழி கலைஞர்கள் மத்தியில் இதனை முன்வைத்தார்.

எண்பதுகளையொட்டிய இலங்கையின் தமிழ் இலக்கியம் தொடர்பாக பேராசிரியரின் பார்வையை இந்தக் கட்டுரை மூலம் ஓரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் இக்கால எழுத்துக்களை எந்த வகையான பார்வையூடாக அவதானிக்க முயல்கிறார் என்பதனை நாம் கவனிக்க வேண்டடும்.

அவரைப் பொறுத்தவரை இலங்கையின் நவீன தமிழ் எழுத்தியக்கமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்களத்துவ அதிகார அடக்குமுறைக்கு எதிராக நிலையூன்றியதும் தமிழ் தீவிரவாதத்தைச் செறிவூட்டக் கூடியதும் தமிழ் மனதின் போர்காலத் துயரங்களை காட்சிப்படுத்தும் இலக்கியச் செயல் வடிவமே என கணிக்க முற்பட்டிருக்கிறார் என்பதை அவதானிக்க முடியும். இந்த இலக்கிய வரைபடத்தை உருவாக்க அவர் கையாளும் அளவீட்டுக் கருவிகள் கூட எந்த வகையைச் சார்ந்தது என நாம் சிந்திக்காமல் இருந்து விட முடியாது.

சுதந்திரத்திற்குப் பிறகான அதிகார மோதலில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டைக்கான துருப்புச் சீட்டாகப் பயன்பட்ட “விடுதலை ” என்னும் போலியான கோஷத்தினை நவீன தமிழ் இலக்கியத்தின் உள்ளார்ந்த சாரமாக பேராசிரியர் உணர்த்த முற்படுகிறார்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த தமிழ் இளைஞர்களை “விடுதலை ” என்னும் இந்தச் சொல்லானது அழிவான அரசியல் பாதை நோக்கி ஈர்த்ததற்கு பேராசிரியர் முன்னிறுத்த முற்படும் இலக்கிய வகைமையும் காரணமாகவே இருந்தது.

இந்தப் புலமைசார் மதிப்பீடுகளின் வழியாக தமிழ் அதிகாரத்துவம் தனக்கு வசதியான ஒரு இலக்கிய வழித்தடத்தை அமைத்து” ஈழத்து நவீன இலக்கியம்” என்ற பெயரில் நிறுவனமடைய முற்பட்டது. இன முரண்பாடுகளைக் கொதிநிலையில் வைத்திருக்கும் எழுத்துக்களும் வன்முறை வழிபாட்டுக்கான எழுத்துக்களும் துயர அனுபவங்களை ஒப்பாரிப் புனைவுகளாக்கிய எழுத்துக்களும் இந்த கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தேடியெடுக்கப்பட்டன. அந்த வகையில் அவை தென்னிலங்கைப் பெரும்பான்மை மக்களைச் சென்றடையாத வருத்தத்தையும் பேராசிரியர் கொண்டிருந்தார்.

அந்த வகையான காரண அடிப்படையில்தான் அவர் ஒரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார் : “It is pity that most of these writings have not been translated into Sinhala. But some like M. A. Nonhuman ‘s “Tears of the Buddha “(on seeing the burning of the Jaffna library), the short fiction of Ranjakumar, Uma Varatharajan and Thirukkovil Kaviyuvan demand a separate analysis of how they bring out in unforgettable, moving and artistically powerful images of the ravages of war and the sufferings of men, women, youth and children”.

இங்கு பேராசிரியரின் அணுகுமுறையை கூர்ந்து நோக்கினால் எம்மால் சில விடயங்களை வெளிப்படையாகவே அவதானிக்க முடியுமாயிருக்கும். எழுபதுகளின் இறுதியில் இருந்து அரச தரப்பினாலும் பெரும்பான்மைவாத கடும்போக்காளர்களினாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட அநீதிகளையும் பாரபட்சங்களையும் பதிவு செய்த எழுத்துக்களே நவீன ஈழத்து இலக்கியம் என்ற சட்டகத்துக்குள் அடக்கக் கூடியதாகும் என்பதுதான் அந்த அவதானிப்பாகும். ஆனால் அதே காலப்பகுதியில் வெளிவந்த எண்ணற்ற வேறு வகை எழுத்துக்கள் யாவும் அவரது புலமைத்துவ இருட்டடிப்புக்கு உட்பட்டவையல்லாமல் அவை அவரைப் பொறுத்தவரை இலக்கியங்களே அல்ல என்ற முனைப்பு வெளிப்பாடே நிரூபணமாகிறது.

இன்னொரு புறம் அவரது மதிப்பீட்டு அணுகுமுறையானது அதன் போக்கிலேயே பல்வேறு விதமான பாரபட்சங்களையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதாவது அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களின் பிரதிகளை முன்வைத்து அது வலியுறுத்தும் விடயம் தொடர்பாகக் கூட எதுவும் பேசாமல் பொதுவான அபிப்பிராயம் ஒன்றைக் கூர்மைப் படுத்தும் பாங்கிலேயே விளக்க முற்படுகிறார். அது மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு பெயர்ப்பட்டியலை பிரகடனப்படுத்தும் உள்நோக்கமே முனைப்புப் பெறுவதாயுள்ளது. அந்தப் பட்டியலை பல சபைகளிலும் பல முறை உச்சாடனம் செய்தால் அந்தப் பெயரிலுள்ளவர்கள் நவீன எழுத்தாளர்கள் என்ற பேறைப் பெற்று விடுவார்கள்.

மேலும் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எந்தளவிற்கு போர் ஒப்பாரி இலக்கியக் காரியங்களை மேற்கொண்டனர் என்பதும் ஒரு முக்கிய கேள்வியாகும். அவை பற்றிய விவாதம் இங்கு அவசியமற்றது என்ற போதிலும் சில கருத்துகளை கூறாமல் இருந்து விட முடியாது. பேராசிரியர் நுஃமான் எழுதிய புத்தரைப் பற்றிய கவிதையானது யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட சமயத்தில் பிரிவினைவாத அரசியல் உணர்வெழுச்சியை உருவாக்கியதுதான்,ஆனால் அதன் பிறகான மோதல் காலத்தில் அது அர்த்தங்களை இழந்து போனது.நுஃமானைக் கூட தமக்குத் தோதாக கவிஞராக முன்னிறுத்தவே விரும்புகிறார்.

ரஞ்சகுமாரின் “கோசலை ” போன்ற கதைகள் போர்காலப் பதட்டங்களை கிராமிய வாழ்வுக்குள் நின்று பூடகமாகப் புரிய வைத்தாலும் அவை குவியப்படுத்தும் ஒப்பாரிகள் யாவும் அந்தச் சூழ்நிலைகளுக்கு அப்பால் எதுவித உரையாடலையும் ஏற்படுத்த முடியாதவை.”அரசனின் வருகை ” என்னும் ஒரேயொரு அரசியல் புலம் கொண்ட உமா வரதராஜனின் கதையின் அடிப்படையில் அவரை பட்டியலில் குறிப்பிடுவது தவறல்ல. ஆனால் அதைவிட அதிகம் எழுதியவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அத்துடன் அக்கதையானது முஸ்லிம் வாழ்வியலை முழுமையாகப் புறக்கணித்ததுமாகும். அக்கால “சரிநிகர் ” பத்திரிகை உருவாக்கிய அபிப்பிராயத்தை மட்டுமே இலக்கிய வரையறுப்புக்கான புள்ளியாக சிவத்தம்பி கருதுகிறார் என இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதேநேரம் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் மிக முக்கியமான தவறையும் செய்கிறார். “One should not fail to mention here the literary response of the eastern province Muslims to some of the problems they faced during this period. Intact Solaikili, the Muslim poet who brought out the dilemma and turmoil of the Muslim in surrealistic language. “

என்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் துயர அவலங்களை சோலைக்கிளிதான் பேசினார் எனும் சித்திரத்தை உருவாக்க முயல்கிறார். ஆனால் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட கையறுநிலையை பதிவு செய்தவர்களில் அஷ்ரப் சிஹாப்தீன், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களே குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இங்கு பேராசிரியரிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருப்பதை உணர முடிகிறது.

ஆனால் பேராசிரியர் முன்வைத்த எழுத்தாளர்களை விட விடுதலை வேட்கையைக் கூர்மைப்படுத்திய பலர் இந்த மண்ணில் தமது எழுத்துக்களால் நிலைபெற்றனர். அவர்கள் போர் நிகழ்ந்த பூமியிலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக இயங்கிய போதும் புலமைத்துவக் கண்களுக்குப் புலப்படாமல் போனமை அதிசயமே.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போரைப்பற்றிக் கவிதை வரைவதும் கதைகள் புனைவதும் ஒரு மோஸ்தரான நோய்க் கூறாகப் பரவியிருந்ததை சமாளித்து புலமையாளர்கள் உன்னதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்களும் இங்கிருந்தது. அப்போது இயங்கிய தீவிர இலக்கிய சஞ்சிகைகள் என கருதப்பட்டவைகள் போர் மனநிலைக்குப் புறம்பான எழுத்துகளையோ அல்லது மாற்றமான பார்வைகளையோ கீழ்மையான மதிப்பீட்டுடனே அணுகின.

இந்த பொது மனநிலையைத் தொந்தரவு செய்தவாறும் மாற்றுப் பார்வைகளூடாக கருத்துகளை முன்வைத்தும் இலக்கியக் களத்தில் நின்ற பல செயல்பாட்டாளர்கள் அமைதிப்படுத்தப் பட்டார்கள் அல்லது நிரந்தரமாக மௌனமாக்கப் பட்டார்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டார்கள்.

விடுதலைப் போராட்டமானது வெகுஜன வெளியில் ஒரு வித புனிதமாகவும் உள்ளார்ந்த நிலையில் மனித தர்ம வீழ்ச்சி கொண்டதாகவும் இருந்ததை இங்கு கொண்டாடப்பட்ட எழுத்துக்கள் கவனம் கொள்ளவுமில்லை அவற்றை மதிப்பிட்ட புலமையாளர்கள் சுட்டிக் காட்டவுமில்லை. கைலாசபதியைப் பொறுத்தவரை அவர் போராட்டம் உக்கிரமடைந்த காலத்திற்கு முன்பே இறந்து போனமையால் சிவத்தம்பியின் போரிலக்கியம் மீதான பார்வைகள் போன்ற நழுவல்களிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் சிவத்தம்பி நீண்ட காலம் வாழ்ந்ததினால் ஆயுததாரிகளின் தேசியவாதத்திற்குள் அகப்பட்டுக் கொண்டார்.

அளவுக்கதிகமாக உரமூட்டி வளர்க்கப்பட்ட போர்வாத இலக்கியச் செல்நெறியானது இறுதிப் போரின் தோல்வியோடு காலாவதியாக்கப் பட்டிருந்தது.போராட்டக்காரர்கள் அனைவரும் இல்லாமல் போய்விட்ட நிலையில் வீர முழக்கமிட்ட படைப்புப் பிரதிகளின் அர்த்தங்கள் இனி எதற்கானவை என்ற பரிசீலனையின் தேவை மேலெழுகிறது.

இறுதி யுத்த தோல்விக்குப் பிறகான சூழலானது வேறு வகை மதிப்பீட்டு விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய நியாயம் உருவாகியிருக்கிறது. போர் அக்கறைகளும் பகைமையை வளர்க்கும் பாதையும் இனி எழுத்துக்களால் வடிவமைக்கப் படுவதானது அழிவுகளைப் புதுப்பிப்பதாகவே அமையும் என்பதான உண்மையிடம் மண்டியிட வேண்டிய புது நியதி வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த நிலையைப் புரிந்து கொள்ளாத இன்னொரு தலைமுறை போரின் பாசிச முகத்தை மறைத்து இழப்புகளையும் வலிகளையும் பொதுவெளிக்குக் கொண்டு வந்து ஜெபம் செய்ய முற்படுகின்றன. இவர்களும் ஏற்கனவே இருந்த புலமைத்துவ வழிமுறைகளைப் பின்தொடரும் ஒப்பாரி வழித்தோன்றல்களேயன்றி வேறில்லை. அத்தோடு ஏற்கனவே குறிப்பிட்ட பட்டியலை சிலர் இன்று வரைக்கும் பேண முற்படுவதை நோக்கும் போது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் வேளையில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கக்கூடும்.

போராட்டத்தின் முதல் பாதியில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் உருவான பழிதீர்த்தல்கள் இலக்கிய வழியாகவும் முனைப்படைந்திருந்தது. இது வெறுமனே புலிகளுக்கு எதிரான எழுத்துச் செயல்களாக முன்னிலை பெற்றதேயொழிய ஒரு இலக்கியக் கருத்தியலாக செழுமை பெறவில்லை. அதனால் அந்த வகையான புலி எதிர்ப்பு எழுத்துக்களும் இறுதி யுத்தத்தின் முடிவோடு உதிர்ந்து விட்டது.அவை பெரும்பாலும் புலம்பெயர் சமூகத்தினுள் இருந்து போலி மாற்றாக உருவானவை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை அதற்குள் நிலவும் புனிதமற்ற சேதிகளைப் பேசும் இலக்கியக் கண்ணோட்டங்களினால் இனி வேறொரு வரைபடத்தை வரைய வேண்டிய அவசியம்தான் இங்கிருக்கும் நலிவுற்ற மக்களை முன்கொண்டு செல்ல முடியும்.

இந்த விதமான பார்வைத் துணையுடன் இக்கேள்விக்கான பதிலை சிந்திப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன். கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகிய இருவரும் அடிப்படையில் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள். பொதுவாக பேராசிரியர்களின் முழுநேர வேலையும் ஆய்வு ரீதியாக வாசித்தல், எழுதுதல் என்பதாகவே இருப்பது வியப்பில்லை. சராசரி வாழ்க்கை நிர்ப்பந்திக்கின்ற பொருளாதார அலைச்சல் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதனால் அதிகமான ஆய்வுகளை அவர்கள் எழுத்தாக வெளித்தள்ளி விட முடியும். அந்த வகையில் இப்போது விமர்சனங்கள், திறனாய்வுகள் இல்லையே எனும் குற்றச்சாட்டை இங்கிருக்கும் academist களை நோக்கியே வைக்க வேண்டும். இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்குள் மந்தைகளுக்குக் கதை கூறும் இடையர்கள்தான் மலிந்து காணப்படுகின்றனர்.அவர்களிடம் புது வகையான ஆய்வுகளை எதிர்பார்க்க முடியாது.

இன்று விமர்சனங்களும் ஆய்வுகளும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் அதிகம் இடம்பெறுவதை அவதானிக்கலாம். பல எழுத்தாளர்கள் அந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்கள் துறைசார் பண்டிதர்களில்லை என்பதற்காக அவர்களின் பணிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. அத்துடன் விமர்சனம் சார்ந்து இப்போது இயங்குபவர்களில் அதிகமானவர்கள் பழமைச் சிந்தனையின் அடிப்படையிலான ரசனைக் குறிப்புகளை பதிவு செய்தல் எனும் நோக்கிலேயே எழுதி வருவதும் குறிப்பிட வேண்டியதாகும். அவர்கள் பல விதமான கோட்பாட்டு அடிப்படையிலான கருத்தியல்களுடன் எழுத்துப் பணியை அணுகாமல் இருப்பதனால்தான் மிகப்பெரும் இடைவெளி உருவானது.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியவர்கள் ஒரு காலகட்டத்தின் இலக்கியப் பணியாக விமர்சனத்துறையை செழுமைப் படுத்தினார்கள்தான். அவர்களின் விமர்சனங்களுக்குள் பழமைவாத மார்க்சீய பார்வையும், மரபார்ந்த ரசனைவாத கிளர்வுறுதலும் இருந்திருக்கின்றன. அவை இன்றைய கால இலக்கியச் சிந்தனைகளின் வழியே நோக்கும் போது பின்தங்கிய நிலையில் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் பொதுவாகவே தமிழில் விமர்சனம் பற்றி பேச வெளிக்கிடுவோர் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் தாண்டி வேறு பெயர்களை உச்சரிக்க விரும்புவதில்லை. அவர்கள் இருவரினதும் அகடமிக் செல்வாக்கானது நிறுவனமயப்பட்ட அதிகாரமாகி எழுத்துத் துறையினரை அழுத்தியிருந்ததே இதற்குக் காரணம். இவர்கள் இருவரையும் விட அக்காலத்தில் ஏ.ஜே.கனகரட்னாவும், எம்.ஏ.நுஃமானும் தமிழ் இலக்கிய வழித்தடத்தை செப்பனிட்டவர்கள் என்பது மறுக்க முடியாதது. கனகரட்னாவின் அதிக இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாக தமிழுக்கு வந்தவை என்பதற்காக அவரை புறக்கணிப்புக்குரியவராக இருட்டடிப்புச் செய்து விட்டனர். நுஃமானை அதிகம் பேசாமல் விட்டதற்கான காரணம் இனத்துவேசமாக இருக்கலாம்.

இலங்கையில் தமிழில் பின்நவீனத்துவம் குறித்த கருத்தியல்களும், அது தொடர்பான இலக்கியப் படைப்புகளும், பிந்திய கால விமர்சன முறைமைகளும் எந்தவொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் உருவாகவில்லை. அதற்கு வெளியே “பெருவெளி “, “மாற்றுப் பிரதி “, “மறுத்தோடி ” போன்ற சஞ்சிகைகள் மூலமாகவே கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டு கொள்ளாமல் தற்கால தமிழ் இலக்கிய விமர்சனத்துறையை தாண்டிச் செல்ல முடியாது.

இன்று விமர்சனத்துறை வேறு வகையான சிந்தனைகள் வழியே விரிந்திருக்கிறது. சிலர் அதனை முன்னெடுக்கிறார்கள். இன்றைய வாழ்வியல் அழுத்தங்களைக் கடந்து வெளிவரும் அந்த வகை எழுத்துக்கள் எண்ணிக்கையில் குறைவுதான் என்பதற்காக கைலாசபதி, சிவத்தம்பிக்குப் பிறகு அற்றுப் போய்விட்டது எனும் வாதம் பழைமையில் மகிழ்வுற்றுக் கிடப்பதற்கு ஒப்பானது.

கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை என்று பொதுவாகத் தமிழில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், சமகாலத்து உலக நிலவரங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் போனதற்கான காரணம் என்று எதை சொல்கின்றீர்கள் ?

இந்தக் கேள்வியானது தெளிவற்ற குழப்பங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. இதில் கவிதைப்புனைவு என்று குறிப்பிட்ட உங்களால், கதைப்புனைவு என்று குறிப்பிட முடியாமல் போயிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் புனைகதை என்பது பழைய மரபார்ந்த இலக்கிய திட்டங்களை சுமந்ததாகவே இருப்பது என்பதில் சந்தேகமில்லை. புனைவு என்ற விடயம் இன்று பழைய அடிப்படையில் நோக்குவதற்கான தகுதியை இழந்து விட்டது.

இலக்கியத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உருவான புதிய கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும், அது ஏற்படுத்திய வித்தியாசமான சிந்தனைப் பயிற்சிகளாலும் அதன் அடிப்படைத் தன்மைகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. அந்தப் பாதிப்பின் சுவடுகள் எதனையும் தமிழில் கண்டு உணர முடியாத அளவுக்கு தமிழ் இலக்கிய மனம் நோய்மையுற்றிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் குறிப்பிடும் மூன்று அம்சங்களான,

கவிதைப்புனைவு,

புனைகதை,

விமர்சனத்துறை என்பவை அந்த மரபான பழையவைகள் பற்றியதா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது. தமிழில் அந்த விதமான இலக்கிய வர்க்கம் ஒன்று செயல்பாட்டில் இருப்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவை பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால்,

தமிழில் குறிப்பிடக் கூடிய அளவு சிந்தனை மாற்றங்களை உள்வாங்கிய செயல்பாடுகள் இடம்பெறாமலும் இல்லை. இன்று, கவிதைப்புனைவு, கதைப்புனைவு,விமர்சனத்துறை என்பவை வேறு விதமாக வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றை தமிழ் பொதுமனம் எந்தளவிற்கு வரவேற்றிருக்கிறது என்பதே முக்கிய கேள்வியாகும். இந்த இருட்டடிப்பு குறித்த பார்வை இல்லாமல் இதனை கடந்து சென்று விட முடியாது.

மறுபுறம் உங்கள் கேள்வியில் இன்னுமொரு சிக்கலை அவதானிக்க முடிகிறது. // தமிழில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும் சமகால உலக நிலவரங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் போனதற்கான காரணம் எது // என்றதொரு விடயம் பற்றி சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.

இலக்கியத்தில் உலக நிலவரம் என்றால் என்ன? அவ்வாறு உலகத்துக்கு பொதுமையான அம்சம் ஒன்று சாத்தியமானதுதானா? அவ்வாறு ஒரு அம்சம் பரிந்துரைக்கப்படுமாயின் அது இலக்கியத்தில் அதிகாரத்துவமான எழுத்துச் சடங்குகளை வலியுறுத்துவதாகவே அமையும். எழுத்துக்களின் பல்வகைமையை அழித்து விடும். இலக்கிய உலக நிலவரம் என்பதனால் ஒற்றையான சீர்த்தன்மையை அல்லது இலக்கிய ஒழுங்கு முறையை உருவாக்க எத்தனிக்கக் கூடாது. எழுத்து முயற்சிகள் ஒரு போதும் பொதுவான நிலைப்பாடு நோக்கி தள்ளி விடப்பட கூடாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒரே விதமான இலக்கியப் போக்கு நிகழ வாய்ப்பில்லை. ஆனால் பல்வேறுபட்ட புதிய கருத்தியல் வளர்ச்சி மூலமான எழுத்து முயற்சிகள் கவனத்தை ஈர்க்கக் கூடியவை. உலக நிலவரம் என்பதனால் குறிப்பிட்ட இலக்கிய வகைமை ஒன்று தரமுள்ளதாக தரப்படுத்தப் படுகிறது. அது தவிர்த்த ஏனையவை அனைத்தும் உலக நிலவரங்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கப்படுகிறது. இங்கு இந்த விதமான இலக்கிய தரப்படுத்தல் அதிகாரத்தை யாருக்கு யார் வழங்குவது? அடிப்படையில் இது கோளாறான பார்வை.

இலக்கியச் செயல்பாடென்பது எந்த விதமான தரப்படுத்தல்,  ஒதுக்குதல் போன்ற நிபந்தனைகளுக்கும் உட்படாத சுயாதீனத் தன்மை கொண்டதாகும்.

இங்கு கருத்தியல்கள் குறித்த புதிய அணுகுமுறைகளும் அதன் பன்மைத்துவமும் இன்றியமையாதது. ஒவ்வொரு தனி நபர் செயல்பாடும் வித்தியாசமானது . அது இலக்கிய உற்பத்திகளிலும் எதிரொலிக்கக் கூடியது என்பதை புரிந்துகொண்டு இலக்கிய பொதுமைப்படுத்தல்களை கடந்து செல்ல முடியும்.

பின்நவீனத்துவ கோட்பாடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதத்தன்மையானதா என்ன?

இந்தக் கேள்வியானது பின்நவீனத்துவம் குறித்து தெளிவான புரிதலற்ற நிலையிலிருந்து எழுப்பப்படும் ஒன்றாகவே கருத முடியும். பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடல்ல. அது பிந்திய காலத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பகுப்பாய்வுச் சிந்தனை முறைமைகளின் தொகுப்பாகும். இந்தச் சிந்தனை முறைமைகள் என்பவை நிச்சயமான உத்தரவாதங்களுடன் இறுதி வடிவம் பெறாமல் புதுப்பித்துக் கொள்வதற்கான நெகிழ்ச்சி கொண்டவை. அதனால், இந்தச் சிந்தனை முறைகளோடு இடையீடு செய்வதென்பது சிரமமானதென பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையோ வகையான அறிவியல் பரிணாம வளர்ச்சியூடாக மாற்றமடைந்து வந்திருப்பதுடன் புறச் சூழலையும் அதற்கேற்ற வகையில் கையாண்டு கொண்டிருக்கிறான். இந்த அறிவியல் விருத்தியின் உன்னதக் காலம் என இவ்வுலகச் சிந்தனையாளர்களால் கொண்டாடப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டை அண்மித்த காலத்தில் பல வகையான கோட்பாடுகளும் உலகின் போக்கில் ஆளுமை செலுத்தின. அதன் போது பல வகையான அக / புற மேம்பாடுகளை மனிதன் உருவாக்கினான். அரசியல், அறிவியல், பொருளாதாரவியல், ஆன்மீகவியல் என அனைத்திலும் இக்காலகட்டம் கோட்பாட்டு வளர்ச்சிகளை எட்டியது. மருத்துவம், பொறியியல் போன்ற துறைகள் நவீன மயப்பட்டன. தொழில்துறை உற்பத்திகளில் இயந்திரப் பாவனை உருவானது. தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போக்குவரத்து விருத்தி கண்டது. நவீன ரக ஆயுதங்களின் உற்பத்திகள் அதிகரித்தன. அச்சு இயந்திரங்கள் பாவனைக்கு வந்தன. அதனால் நூல்களும் அறிவு மேம்பாட்டுச் சாதனமாக பெருக்கெடுத்தன. நூல்களின் பயன்பாடானது அறிவு மேம்பாடு மட்டுமல்லாமல் கலைகள் சார்ந்த பாவனைத் தன்மையையும் பெற்றது. அதனால் இலக்கியங்கள் பெருக்கெடுத்தன. இந்த நவீன காலகட்டத்திற்கேற்ற அற ஒழுங்குகளை நிலை நிறுத்தும் வகையிலான இலக்கியச் சிந்தனைகளும் அதற்கேற்ற கலைக் கோட்பாடுகளும் உருவாகின. இவை யாவும் கூட்டாக நிறைந்துதான் அன்றைய உலகியல் ஒழுங்கை வடிவமைத்தன. இந்த நவீனத்துவ யுகத்தின் உச்சமான சிந்தனை அறப் போக்குகளும், கண்டுபிடிப்பு வரப்பிரசாதங்களும் கூட்டாகத் திரண்டு உலகத்தின் மீது மாபெரும் அழிவுச் செயலைத் தொடுத்தன. அதுதான் இரண்டாம் உலகப் போர்.

சென்ற நூற்றாண்டில் உலகப் போர் ஏற்படுத்திய அழிவின் விளைவுகள் அனைத்திற்கும் அன்றையச் சூழ்நிலையை பீடித்திருந்த அறிவியல் விருத்தியும் அதனோடு பிணைந்திருந்த கோட்பாட்டு அறங்களுமே காரணமாகும். அதுகாலவரை மனித குல மேம்பாட்டுக்கு துணையாய் அமையும் எனக் கண்ட கோட்பாடுகள் யாவும் பேரழிவுகளுக்கான கருவூலமா எனச் சிந்தித்த சில தரப்புகள் அவர்கள் சார்ந்த துறைகளில் மாற்றமான ஆய்வுகளை மேற்கொள்ள எண்ணினர். அதற்கு ஏற்கனவே இருந்த சில எதிர்ச் சிந்தனையாளர்களின் கருத்துகளை அடியொற்றி முன்னோக்கிச் செல்ல எத்தனித்தனர். அதற்காக நவீனத்துவ காலத்தின் எல்லா விதமான சிந்தனைப் பிரயோகங்களையும் மறுப்பதென்று அர்த்தமுமல்ல. அதன் மானுடப் பயனுள்ள விழுமியங்களை உள்ளீர்த்து மேம்படுத்தியபடி முன்செல்லலும் அவசியமானதாக இருந்தது.

Each society has its regime of truth, it’s “general politics ” of truth that is, the types of discourse that it accepts and makes function as true என்று பூக்கோ விபரிப்பதை,

தனி மனிதர்களின் நம்பிக்கை தொடர்பான அல்லது உண்மை பற்றிய தீர்க்கமான முடிவு என்பது அவர்களின் பிரத்தியேகமான பிரக்ஞையினூடாக எட்டப்படுவதில்லை. அது வேறு பல மனிதர்களின் அபிப்பிராயத் தொகுப்புகளால் உருவாக்கம் பெறுகிறது என்பதாகும். இந்த வகைத் தொகுப்புகளே மனிதர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகத் திரள்கிறது. எனவே இந்த அதிகாரங்களை உறைய வைப்பதென்றால் கீழிருந்து அதற்கு எதிரான மாற்று உரையாடல்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைப் போக்கு சார்ந்து பொதுத் தளத்தில் செயல்படுவதும் பின்நவீனத்துவ நிலைதான். அந்தச் செயல்பாடுகளில் எழுதுதலும் ஒரு வகையாகும்.

“The nature of knowledge cannot survive unchanged within this context of general transformation. It can fit in to the new channels, and become operational, only if learning is translated into quantity of information ” என்று கூறும் ஜீன் பிராங்கோ லியோடார்ட்டின் சிந்தனைகள் நவீன கால அறிவியல் தியறிகள் யாவற்றின் மீதும் ஐயம் கொள்ளச் செய்தது. அறிவு என்பது உள்வாங்கப்படுகின்ற தகவல்களின் தன்மையினாலும் அவற்றின் எண்ணிக்கையினாலும் தீர்மானிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, அது எந்த நேரத்திலும் திரிபு படுத்திக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மனிதர்களுக்குள் சேகரிக்கப்படும் தகவல் அறிவுக்கேற்ப அவருக்கான மதிப்பு கணிக்கப்படுகிறது. தற்காலத்தில் பகுத்தறிவு கூட இயந்திரங்களுக்குள் சேமிக்கப்படும் அரூப பண்டமாகி விட்டது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பின் தன்மையானது அரூபமான பண்ட விநியோகம் மற்றும் பண்ட நுகர்வு போன்றதுதான்.

தகவல்களின் தொகை மதிப்பும் அதன் பிரயோகமும்தான் அறிவு என்பதாக நம்பப்படும் சூழலில் சமூக இயங்கியலானது மனித மூளைச் செயல்பாட்டுடன் மட்டுமே தொடர்பு கொண்டதாக அல்லாமல் கணினி போன்ற பல்வேறு இயந்திரங்களின் உபயத்திற்குள்ளும் அகப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இயந்திரங்களின் செயல்பாடுகளே மனித அறிவையும், அவனது ஆற்றலையும் தீர்மானிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

அறிவு என்பது இரண்டு விதமாக மனிதர்களில் செயல்படுகிறது. ஒன்று : விஞ்ஞானபூர்வமான கதையாடலாக செயல்படுகிறது. மற்றையது : புனைவுத் தன்மையான கதையாடலாக செயல்படுகிறது.

விஞ்ஞானபூர்வமான கதையாடல்களின் காரண காரியங்களூடாக நிரூபிக்கப்படுகின்ற கதையாடல்கள் நம்பிக்கையாக உருவாக்கப்படுகின்றன. புனைவுத் தன்மையான கதையாடலூடாக மரபு வழி கட்டுக்கதைகள் எடுத்தாளப்பட்டு நம்பிக்கையாக செறிவூட்டப்படுகின்றன. இவை இரண்டையும் பரிசீலிப்புக்குரிய விடயமொன்றின் இரண்டு பக்கங்களாக நோக்குவதன் அவசியத்தையே லியோடார்டின் சிந்தனைகள் வலியுறுத்துகின்றன. அதனால்தான் அறிவு என்பது எப்போதும் நிச்சயமற்ற ஒன்றாகவும் எப்போதும் மாற்றங்களுக்கு உள்படுவதையும் காண்கிறோம். இதனால் இறுதி முடிவான ஒன்றை வலியுறுத்துவது இலக்கியங்களின் பணியல்ல என்பதும் நிரூபணமாகிறது.

பின்நவீனத்துவம் என்பது இலக்கியம், அரசியலாக மட்டுமே குறுகிய சிந்தனை முறையல்ல. சென்ற நூற்றாண்டின் பிந்திய காலத்தில் உலக நடத்தையின் மீது தாக்கம் செலுத்திய கோட்பாட்டில் முக்கியமானது மார்க்சீயமாகும். உலகை பொருள்முதல்வாதம் சார்ந்து நோக்கும் அதன் நுண்மையான கூறுகளுக்குள் இருக்கும் போதாமைகளை ஆராய்ந்த Jean Baudrillard ன் பார்வைகள் பின்நவீனத்துவத்துவ யுகத்தின் பரிணாமத்தை மேலும் விரிவு படுத்தியது.

நாம் பயன்படுத்தும் பொருளை விட அதன் மூலம் உணர்த்தப்படும் மதிப்பு பிரதானமாக இருக்கிறது. இந்த மதிப்பானது பொருளின் பயன்பாட்டுப் பெறுமதி, பரிவர்த்தனைப் பெறுமதி ஆகியவற்றை விடவும் உன்னதமாக நோக்கப்படுகிறது. இதற்கான நியமங்கள் இவ்விரு பெறுமதிகளைத் தாண்டிய குறிப்பீடு (transcendental signified) களால் வடிவமைகிறது. பண்டத்தின் மதிப்புப் பெறுமதி தொடர்பான சிந்தனை வளர்ச்சியே நுகர்வுக் கலாசாரத்தின் அடிப்படை. இது கார்ல்மார்க்ஸ் சிந்திக்கத் தவறிய புள்ளியிருந்து புதிய கருத்தியலாக வளர்ந்திருக்கிறது என்பதை Jean Baudrillard உலகத்திற்கு அறிமுகம் செய்தார். இதனால் ஒன்றை விட மற்றொன்று சிறந்தது எனும் எண்ணம் வளரத் தொடங்குகிறது. அப்போது புதிய புதிய பண்ட உற்பத்திகள் அபரிமிதமாக மேற்கொள்ளப்படுவதற்கு சாத்தியமாகிறது. இங்கு தேவைக்கேற்ற உற்பத்தி என்பதற்குப் பதிலாக உற்பத்திக்கேற்ப தேவை தீர்மானிக்கப்படுகிறது. இதன் போது நுகர்வு என்பது சூதாட்ட விளையாட்டாக மாற்றப்படுகிறது.

மதிப்பு நோக்கிய பார்வை தீவிரமடையும் போது தேவைகளின் அர்த்தமும் சிதைக்கப்படுகிறது. அப்போது கையிருப்பில் தேவைக்கதிகமாக இருக்கின்ற பண்டத்தின் மதிப்பும் திடீரென காலாவதியாக்கப்படுவதன் மூலம் புதிய தேவைகள் உருவாகி விடுகின்றன. அங்கு புதிதாக மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்கள் தொடர்ச்சியாக சந்தையை நிறைத்த படி இருக்கிறது. நுகர்வு ஒரு தொற்று நோய் போல பரவிக் கொண்டிருக்கையில் கார்ப்பரேட் முதலாளித்துவம் சராசரி வாழ்வைச் சூறையாடுவது புரியாதபடி இருக்க சூழலும் அதற்கேற்ப தகவமைக்கப்படுகிறது. இதை எளிதாக உணர்த்த Jean Baudrillard தனது Symbolic Exchange And Death எனும் நூலில் “If we consume the product as product, we consume its meaning through advertising “என்கிறார். இங்கு ஒரு உற்பத்தி பண்டத்தின் அர்த்தம் என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் பகட்டான ஊடக விளம்பரங்களூடாக ஊட்டப்படுகிறது. எம்மையறியாமல் இது ஒரு கலாசார அதிகாரமாக எம்மை வழி நடத்துகிறது. எந்தவொரு மனிதனும் தான் நினைத்தபடி சுயாதீனமாக வாழ முடியாது. அவன் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை கார்ப்பரேட் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கின்றன. ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அர்த்தப் போலிகளே மனிதர்களுக்கான பண்பாட்டுச் சாரமாக விநியோகமாகிறது. இந்த ஊடகங்கள் யாவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை வீரியத்தை மங்காமல் பாதுகாப்பதற்கென நிறுவப்பட்டவைதான். இந்த யுகம் கார்ப்பரேட் முதலாளித்துவ சக்திகளின் விளையாட்டு விதிகளூடாகவே வழி நடத்தப்படுகிறது. சமயம், அறம், ஒழுக்கம், மனிதாபிமானம், நீதி நேர்மை போன்ற யாவுமே சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே கையாளப்படுகின்றன.

இது பிந்திய கால சிந்தனை வளர்ச்சி பற்றிய மேலோட்டமான எடுத்துரைப்புத்தான். உளவியல் முதல் பௌதீகவியல் என பல்வேறு துறைகளில் புதிய சிந்தனைகள் பல்கிப் பெருகி வரும் போது அவை இலக்கியங்களிலும் எடுத்தாளப்படுகிறது. பண்பாட்டு நுகர்வுச் சாதனமாக இலக்கியக் களம் செழிப்படைந்திருக்கும் தற்காலத்தில் அது புதிய சிந்தனைகளை உள்ளீர்க்காமல் நகர முடியாது. இந்த அவசியப்பாட்டை பின்நவீனத்துவ அணுகுமுறைகள் பூர்த்தி செய்து வருகின்றன. இந்தச் சிந்தனை முறை அதிகார வலியுறுத்துதலைக் கொண்டதாக இருப்பதில்லை. சகல விதமான இலக்கியக் கோலங்களையும் பரிசீலனைக்கென உள்ளீர்க்கும் தன்மை இதற்குண்டு. ஒற்றையான நிலைப்பாடுகளை வலியுறுத்தாமல் வித்தியாசங்களை அனுசரிக்கும் ஆற்றலை வேண்டி நிற்கிறது. மேற்கில் உருவான சிந்தனை முறை கீழைத்தேயத்திற்கு பொருத்தமற்றது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு காலத்தில் இதன் மீதான பிரதான தாக்குதலாக அமைந்திருந்தது. அதன் அறிவற்ற தர்க்க நிலையினை பின்னர் பலரும் உணர்ந்து விட்டனர். மேற்கில் உருவான சிந்தனை முறையானாலும், கீழைத்தேயத்தில் உருவான சிந்தனை முறையானாலும் அதன் உலகிற்குப் பயன்படும் முக்கியத்துவம்தான் அவசியமானது. பின்நவீனத்துவம் மேற்கில் பயன்படுத்தப்பட்ட விதத்திற்கும் இங்கு தமிழில் அது பயன்படுத்தப்படும் விதத்திற்கும் வேறுபாடுகளுண்டு. தமிழ் இலக்கியக் களத்தில் எமது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பின்நவீனத்துவ சிந்தனை முறைமைகளை உபயோகிப்பதுதான் பொருத்தமானது என்பதை நன்கு உணர்ந்து எமது எழுத்துக்களினூடாக அதனை முன்னெடுத்து வருகிறோம்.

மிகுந்த கருத்தியல் புரிதலோடு முன்னெடுக்கப்படும் எழுத்தியக்கம் ஒன்றின் செயல்பாடுகளை மேலெழுந்தவாரியான புரிதலோடு எதிர்கொள்ளும் சிலர் அதற்கு எதிரான அவநம்பிக்கைகளை அவதூறுகள் போல விதைக்க முனைகின்றனர். பின்நவீனத்துவ இலக்கியச் செயல்பாடுகளை விமர்சிக்க முனைபவர்கள் தெளிவான கருத்தியல் தளத்தில் இருந்து அதனைச் செய்ய முயலவில்லை. அத்துடன் அதிகார நீக்கமுள்ள எந்தவொரு புதிய மாற்று கருத்தியலையும் அனுசரித்து உள்ளீர்க்கும் பின்நவீனத்துவ சிந்தனைகளை மரபுவாதிகள் எதிர்ப்பதற்கு பலமற்று இருக்கிறார்கள். பின்நவீனத்துவம் தன்னிடம் எந்த வித புனிதங்களையும் கொண்டிருக்கவில்லை. அதனை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள் புனிதம் என்ற வசை கொண்டு தூற்ற எத்தனிக்கிறார்கள்.

‘புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்களது ஆவிகளை ஈழத்தில் உலாவ விட்டிருக்கின்றார்கள்’ என்று ஒரு விமர்சனம் றியாஸ் குரானாவுடனான நேர்காணலின் பொழுது எனக்குக் கிடைத்தது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்தைப் பற்றி எழுதுவதற்கு எதுவித தகுதியும் அற்றவர்கள் என்று எடுத்து கொள்ளலாமா?

இது பற்றி றியாஸ் குரானா குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு உண்டு. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்பவர்களின் முதல் தொகுதி இலங்கையிலிருந்து வெளியேறி நான்கு தசாப்தங்கள் கடந்து விட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தினுடனான போராட்ட காலத்தில், மற்றும் தொண்ணூறில், இறுதி யுத்த காலத்தில் என நாட்டை விட்டு வெளியேறியவர்களின் புலம்பெயர்வு இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தாக்கம் செலுத்தும் விடயமாக அமைந்திருக்கிறது.

பெரும்பாலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் யாவரும் பொருளீட்டும் நோக்கங்களுக்காகவே வெளிநாடு சென்றனர். அங்கு சென்றவர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வராமல் இருப்பதற்கும், தாம் சென்ற நாடுகளில் அகதி அந்தஸ்து பெறவும், குடியுரிமை பெறவும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை வசதியாக பயன்படுத்தினர் என்பதே உண்மை. இதற்காக பல வகையான ஆவணங்கள், இலக்கியங்கள், அரசியல் அறிக்கைகள் என்பன உருவாக்கப்பட்டன.

இவற்றுக்குப் புறம்பாக தமது மனதில் தேங்கிய போர் அனுபவங்களையும், வலிகளையும் எழுத்து மூலம் பதிவு செய்யவும் சிலர் முயன்றனர். இது காலப்போக்கில் ஒரு ஃபேஷனாகவும் மாறத் தொடங்கியது. போர் அனுபவங்களிலிருந்து பல தசாப்தங்கள் தூரமாக்கப்பட்டவர்களும் அதனை மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஒப்பாரி இலக்கியங்களாக எழுதிக்கொண்டிருந்தனர்.

சொந்த நிலத்தை வெறுத்து பொருளீட்டும் நோக்கில் வெளிநாடுகளில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொண்ட குடியேறிகள் எல்லாம் பல வருடங்கள் கடந்த பின்பும் தாய்நாட்டு கழிவிரக்கங்களை எழுதிக் குவித்தபடியே இருக்கின்றனர். அவர்களுக்கு தாம் வாழுகின்ற நாடுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக எழுதும் அளவிற்கு எந்த விதமான வலிகளும் ஏற்படவில்லை. மாறாக தாய்நாட்டு துயரங்களே இன்னும் மனதை உறுத்தியபடி இருக்கிறது.

இலங்கையில் வாழும் மக்களில் பெரும் பகுதியினருக்கே போர் அந்நியமான அனுபவமாக கருதக் கூடியது என்ற போதும், இங்கு வாழ்வு பல வகைப்பட்டதாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இங்கு எழுதும் பலரின் எழுத்துகளுக்குள் சுயாதீனமான தேர்வுகள் வந்து விட்டன. ஆனால் எப்போதோ புலம்பெயர்ந்தவர்களின் நினைவுகளில் புதிய யுத்த வடுக்கள் எழுத்துக்களாக தெரிவது அருவருப்பாகவே தோன்றுகிறது.

வெளிநாடு சென்று பொருளீட்டுவதற்காக போரை புலம்பெயர்வுக் காரணியாக பயன்படுத்தியவர்கள் தாய்நாடு குறித்த ஏக்கங்களை எழுத்துகளில் வடிப்பது அசூசையானது என்ற போதும் அது தவறானதல்ல. ஆனால் அவர்களுக்கு தாய்நாட்டில் மீண்டும் வாழக் கூடிய நிலையிருந்தும் அதை தவிர்த்து விட்டு மேலை நாடுகளில் வாழ்ந்தபடி போலியான துயரங்களையும் போலியான தாய்நாட்டு ஏக்கங்களையும், போலியான அரசியல் விருப்புறுதிகளையும் இலக்கியங்களில் எழுத முற்படுவது கீழ் ரகமானது.

தமிழில் எந்த கறுமத்தையாவது எழுத வேண்டுமென்றால் அவர்களின் குடியேற்ற தேசங்களில் கிடைக்கும் சமகால அனுபவங்களிலிருந்து எழுத முடியுமே. அது தமிழ் இலக்கியத்திற்கும் புதிய அனுபவங்களை தரக் கூடும். ஆனால் அதை தவிர்த்து இலங்கையின் போரை மட்டும் எழுத முற்படுவதும், இலங்கையில் எப்போதோ விடுபட்ட வாழ்வின் நினைவுகளை இப்போதும் மீட்டெடுக்க முனைவதும், அதனை இலங்கையின் ஒட்டுமொத்த எழுத்து மனமாக நிறுவ முற்படுவதும் கண்டனத்துக்குரியது.

அது மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் இலங்கையில் வாழ்பவர்களின் இலக்கிய எஜமானர்கள் போல கையாள முற்படுவதும் கண்டிக்கத்தக்கது. தம்மிடம் ஓரளவு நிதி வசதி இருப்பதை ஒரு வாய்ப்பாகக் கருதிக் கொண்டு இலங்கையில் வாழும் எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கை தமது விருப்பத்திற்கேற்றவாறு கையாள எண்ணுவதும் கீழ்மையானது. பொதுவாக இது போன்ற அனைத்து செயல்களிலும் எழுத்தாளர்கள் வெளிப்படுத்துகின்ற தோற்றத்திலிருந்து அவர்களின் ஆன்மா இங்கு பேய் பிடித்து அலைவதாக கருதலாம். இதற்கு தகுந்த பரிகாரம் இலங்கையில் இருந்து செய்யப்பட வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆவிகளை இடைக்கிடையாவது அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் அலைய விடுங்கள்.

“சொந்த நிலத்தை வெறுத்து பொருளீட்டும் நோக்கில் வெளிநாடுகளில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொண்ட குடியேறிகள்”// ஆனால் யதார்த்தம் அப்படி இல்லையே ? புலப்பெயர்வு என்பது கட்டம் கட்டமாக இடம்பெற்றது. 60/ 70 ஒருவகை, 70/80 இன்னொருவகை, 80-ற்குப்பிறகு மற்றொருவகை. இதில் நீங்கள் குறிப்பிட்ட பொருளாதார குடியேறிகள் 60/ 70- களில் இருந்திருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை, ஆனால் மற்றைய இரன்டு வகையும் மாற்றுக்கருத்து, அரசபயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து உயிர் தப்பவே புலப்பெயர்வு நிகழ்ந்திருக்கின்றது. இதில் இலங்கையில் இருக்கின்ற அனைத்து இனத்தவர்களுமே அடங்குகின்றார்கள். ஆனால், நீங்கள் எல்லோரையும் ஒரே கூடையினுள் போடுவது அபத்தமாக இல்லையா ?

இலங்கைச் சிறுபான்மை மக்களின் அகதி வாழ்க்கையானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. மலையக தமிழர்களே இலங்கையின் முதல் அகதிச் சமூகமாகும். 1983 ஜூலை கலவரத்தின் பின்னர்தான் தமிழ் அகதிகளின் பிரச்சினை அரசியல் முக்கியத்துவம் உடையதாக மாறியது.

அகதி என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி பரிந்துரைக்கும் அர்த்தமானது “கதியற்றவன்” என்பதாகும். வாழ்வதற்கு உத்தரவாதம் எதுவுமற்ற நிலையை இது குறிக்கிறது. ஆனால் இலங்கையின் போர்ச் சூழல்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் அகதிகள் எனப்படுவோரில் அதிகமானவர்கள் இந்த விதமான அர்த்தத்தில் நோக்கப்பட முடியாதவர்கள்.

அகதி விடயத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள், வள்ளங்களில் ஏறி தப்பியோடி தமிழக முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள்,மேலை நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர்கள் என்று பல வகையுண்டு.

உள்நாட்டிலும், தமிழகத்திலும் அகதிகளானவர்களின் துயரங்கள் போரின் நிர்ப்பந்தங்களால் உருவானவை. அவர்களின் துயரங்கள் இன்று வரைக்கும் தீர்த்து வைக்கப்படாதவை. அகதியாதலில் மாற்றுக் கருத்தாளர்கள், அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய வகையினர் மட்டுமில்லை. புலிப் பயங்கரவாதத்தினால் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களும், முஸ்லிம்களும் அடங்குவர். 1995 ஜயசிகுறு இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ் மாவட்டத்திலிருந்து புலிகளினால் வன்னிக்கு இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்களும், தொண்ணூறில் புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பிற பிரதேசங்களில் தஞ்சமடைந்த முஸ்லிம்களும் அகதிகளே. இவற்றை தமிழ் பொது மனதின் நினைவில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை பலரும் முன்னெடுத்தாலும் செங்கை ஆழியான், சாத்திரி போன்ற படைப்பாளிகள் தமது புனைவுகளுக்குள் கொண்டு வந்ததை முக்கியமாகக் கருத வேண்டும்.

ஆனால் மேற்கு நாடுகளில் அகதியானவர்களின் துயர நிலை அவ்வாறானதல்ல. அவர்கள் குழுவாகவோ அல்லது தனி நபர்களாகவோ அவர்களே உருவாக்கிக் கொண்ட பொருளீட்டுவதற்கான பயணமது. ஜூலை கலவரத்தின் பின்னர் உருவான அகதி வாழ்வின் துயரங்களை தீர்க்க 1987 இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் ஏற்பட்ட அமைதிச் சூழலில் வழியேற்பட்டது. ஆனால் வேண்டுமென்றே அது புலிகளால் தவற விடப்பட்டது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தொழில்சார் நிபுணத்துவம் கொண்டவர்களே. அவர்களின் புலம்பெயர்வுக்கும் போருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஆனால் 1983 ஜூலை கலவரத்திற்கு பின்னரான சூழலில் மேற்கு நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தியது. அதன்போது மேற்குலக தூதரகங்கள் வழியாக வெளிநாடு செல்லும் யோகம் பெற்றவர்கள் எல்லோரும் போரின் அச்சுறுத்தலுக்கு இலக்கானவர்களல்லர். பெரும்பாலும் நகர்ப்புற உயர் வகுப்பு தமிழர்களே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

வடக்கிலும், கிழக்கிலும் போர் உருவான போது அதனோடு தொடர்புற்றுக் கிடந்த கீழ்நிலைத் தமிழர்களுக்கு உள்நாட்டில் போராடுவதற்கான வாய்ப்புகளே கிடைத்தனவேயொழிய மேற்குலகில் அகதியாகி பொருளீட்டும் வாய்ப்புகள் கிடைக்கவேயில்லை. நலிவடைந்தவர்களுக்கே மண்பற்றும், இன விடுதலைப் போரும் எனும் நிலை தவிர்க்க முடியாமல் திணிக்கப்பட்டது. மேட்டுக்குடிகளுக்கு டயஸ்போறா உல்லாச கோஷம் எனும் புது விதி உருவானது.

தொண்ணூறின் பிறகான அகதி வாழ்வானது பலதரப்பட்டது. அதில் பெருமளவான சீரழிவுகள் புலிகளின் தொலைநோக்கற்ற தீர்மானங்களால் உருவானவை. இரண்டாம் கட்ட ஈழப் போர் என்பது மிக அதிகமான அகதிகளை மேற்குலகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நிரலோடு தொடங்கப்பட்டது. அதற்கென பலநூறு பணியாள் மாபியாக்கள் கண்டங்கள் முழுவதும் அமர்த்தப்பட்டிருந்தனர். அந்தக் காலத்தில் மேற்கில் அகதியாதல் என்பது மிகை பொருளீட்டும் வியாபார செயல்பாடாக நம்பப்பட்டது. போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறவே சம்பந்தப்பட்டிருக்காத எண்ணிலடங்கா இலங்கை தமிழ் மக்கள் மேற்குலக அகதி முகாம்களை நிரப்பத் தொடங்கினர். இந்த வகைப்பட்ட திரைகடலோடி திரவியம் தேடும் முயற்சிக்கு ஈழப்போரை பயன்படுத்திய கூட்டத்தினரை அகதி என்ற வரையறைக்குள் வகைப்படுத்துவது போரின் மூலம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு இலங்கையிலும், தமிழகத்திலும் அல்லலுறும் அகதிகளுக்குச் செய்யும் துரோகமாகவே நோக்க முடியும். நிஜமான அகதிகள் பெரும்பாலும் இவ்விரு பிரதேசங்களில்தான் இருக்கின்றனர்.

மாற்றுக் கருத்தாளர்கள் என்ற அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் சொற்ப அளவானவர்களே. இதில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள், அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் என்பவர்களே பெரும்பாலும் அடக்கம். இவர்களில் ஒரு பகுதியினர் தலைமறைவாகவோ அல்லது இராணுவ அனுசரணையுடனோ உள்நாட்டில் வாழப் பழகிக் கொண்டனர். ஏனையோர் கூட நாட்டை விட்டு வெளியேறியதற்கான பிரதான காரணம் பொருளீட்டல்தான் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

இப்படியான பின்னணியில் புலம்பெயர்வாளர்களை நோக்கும் போது எண்பதுகளுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்குச் சென்றவர்கள் அனைவரையும் திரைகடலோடி திரவியம் தேடிய இலங்கையர் எனும் கூடையுள் போடுவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இவர்கள் இன்று டயஸ்போறா சமூகமாக மாறி விட்டனர். பெரும் வணிகச் சுழலுக்குள் இவர்களின் வாழ்க்கை சுழல விடப்பட்டுள்ளது. இதன் மூலம் புது வகை பண்பாட்டு நெருக்கடிகளையும், புது வித பொருளாதார நெருக்கடிகளையும், இலங்கைக்கு முற்றிலும் அந்நியமான வாழ்க்கை முறைகளையும் கொண்ட கூட்டமாக இவர்கள் உருவாகி வருகின்றனர். இந்த நிலையில் கூட தம்மிடமுள்ள வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் போக்கில் ரிமோட் கொன்ரோல் செயல்பாடுகளை மேற்கொள்ள இவர்கள் முயல்கிறார்கள் என்பதே உண்மை.

“இலங்கையின் போரை மட்டும் எழுத முற்படுவதும், இலங்கையில் எப்போதோ விடுபட்ட வாழ்வின் நினைவுகளை இப்போதும் மீட்டெடுக்க முனைவதும், அதனை இலங்கையின் ஒட்டுமொத்த எழுத்து மனமாக நிறுவ முற்படுவதும் கண்டனத்துக்குரியது.”// ஆனால், ஏறத்தாழ 30 வருடகாலமாக போர்சூழலில் இருந்தவர்களால் வேறு எதை தரமுடியும் எனக்கருதுகின்றீர்கள்? அத்துடன் 2 ஆவது உலகப்போர் நடைப்பெற்று பலவருடங்கள் ஆகிய பின்னரும் பல சாகாவரம் பெற்ற இலக்கியப்படைப்புகள் வந்திருக்கின்றதே ? அவர்கள் நீங்கள் கூறியவாறு போர்வலிகளை வெறுத்து ஒதுக்கவில்லையே …….?

நீங்கள் இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறீர்கள்.

01 // முப்பது வருட போர்ச் சூழலுக்குள் வாழ்ந்தவர்கள் வேறு எதனைத்தான் எழுத முடியும் //

02// போரின் வலிகளைப் பேசுவது நியாயமானது. இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன //

முதலாவது விடயத்திற்கு பதிலளிப்பதென்றால் இரு விடயங்கள் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

அவை, போர் பற்றி எழுதப்பட்ட உள்ளூர் எழுத்தாளர்களின் எழுத்துக்கள். மற்றையது போர் பற்றி எழுதப்பட்ட புலம்பெயர் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்.

போர் பற்றி எழுதப்பட்ட உள்ளூர் எழுத்தாளர்களின் பிரதிகளுக்கும், புலம்பெயர் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளை அவதானிக்க முடியும். இரண்டு வகைப் பிரதிகளும் பேசும் போர் பற்றிய பார்வைகளும், அனுபவங்களும் வேறான கோணங்களில் அமைகின்றன. நீங்கள் குறிப்பிடும் முப்பது வருட போர் அனுபவங்களை சுமந்தவர்கள் உள்நாட்டில்தான் வசிக்கிறார்களே தவிர புலம்பெயர் தேசங்களில் இல்லை.

புலத்தில் வசித்தபடி எழுதுபவர்கள் போரின் சில காலத் துளி அனுபவங்களை மாத்திரம் சுமந்தவர்களே. அத்தோடு அவர்களின் எழுத்துகளுக்குள் போர் வலிகளை அதீதமாக பரப்புரை செய்யும் நோக்கம் தென்படுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த காலம் முழுவதும் மக்கள் போரைத் தவிர வேறு எதனையும் அனுபவிக்கவில்லை எனும் போலியான அபிப்பிராயத்தை உருவாக்குகிறார்கள்.

இலங்கையில் முப்பது வருட காலம் போர் இடம்பெற்றது உண்மை. ஆனால் அது எல்லா நிலப்பகுதியிலும் நடைபெறவில்லை. எண்பது முதல் தொண்ணூறு வரையான காலப்பகுதியில் நேரடி யுத்தங்கள் இடம்பெறவில்லை. அக்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மாத்திரம் கெரில்லா சண்டைகளே இடம்பெற்றன. தொண்ணூறுக்குப் பிறகான இருபது வருடங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நேரடி யுத்தங்கள் இடம்பெற்றன.

போர் நிகழ்ந்த பிரதேசங்களைத் தவிர்த்து வாழ்ந்த மக்களுக்கு போரின் நேரடி அனுபவங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அந்த மக்களின் வாழ்க்கை வேறு விதமானவை. அதாவது கடந்த முப்பது ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த எல்லா பிரதேச மக்களையும் போர் வாழ்க்கை பாதிக்கவில்லை. ஆனால் சில எழுத்தாளர்களின் படைப்புகள் இதனை மூடி மறைத்து போர் மட்டுமே அனைத்து மக்களின் வாழ்வாக இருந்தது போல சித்தரித்து விடுகிறது.

போர்ச் சூழலுக்குள் வாழ்ந்தவர்கள் போரை மட்டுமே எழுத முடியும் எனும் கருத்து மிக தவறானது. எதை எழுத வேண்டும் என்பது சுயாதீனமானது. ஆனால் இங்கு பெரும்பாலும் திட்டமிடப்பட்ட பிரச்சாரங்களே எழுத்துக்கள் எனும் போர்வையில் உருவாக்கப்பட்டன.

புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய போர் வலிகள் எனப்படுபவை எதிரியாக வடிவமைக்கப்பட்டவர்கள் மீதான கொலைகளை கொண்டாடியவை. தமது பக்கத்து மனிதர்களின் கொலைகளை அனுதாப பிரச்சாரமாக முன்னெடுத்தவை. தமக்கு வேண்டாத மனிதர்களின் மீதும் இனக்குழுக்களின் மீதும் பழியுணர்ச்சியை கூர்மைப்படுத்தியவை. சாத்தியமற்ற இலட்சியங்கள் மூலம் மக்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியவை. அந்தப் பிரச்சார எழுத்துகளின் வழியே போரை நிலைத்திருக்கச் செய்து மேலை நாடுகளில் தமது இருப்புகளை உறுதிப்படுத்தியவை. இந்த விதமான எழுத்துக்களுக்கு போருக்கு பிறகான காலத்தில் பொருளுமில்லை தேவைப்பாடுமில்லை.

நாம் இங்கு போரின் வலிகளைப் பேசுவது தவறென்று வாதிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்களையும் வெறுத்தொதுக்கவில்லை. போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்கள் போரை முன்னெடுக்கும் ஒரு தரப்பை ஊக்குவிப்பதாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதாரண மக்களின் வாழ்வையும், வலிகளையும் போர்ச்சூழலுக்குள் இருந்து நோக்கும் இலக்கியங்களே கொண்டாடப்படக் கூடியவை.

போர் இலக்கியங்கள் என்ற பெயரில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட எண்ணற்ற பிரச்சார இலக்கியங்களை விடவும் இலங்கையிலிருந்து எழுதப்பட்ட புனைவுகள் முக்கியத்துவமுடையவை. போர்ச்சூழலுக்குள் அல்லலுற்ற சாதாரண மக்களின் வாழ்வை காட்சிப்படுத்திய புனைவுகளில் செங்கை ஆழியானின் “மரணம் மலிந்த பூமி ” மற்றும் எஸ்.ஏ.உதயன் எழுதிய ” தெம்மாடுகள் ” போன்றவை குறிப்பிடக் கூடியவை.

“மரணம் மலிந்த பூமி” எனும் நாவலானது, 95ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்பாணத்தைவிட்டு 5 இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கவனத்திற்கொண்டு எழுதப்பட்டது. மக்களுக்காக போராட வந்த இயக்கத்தை, ராணுவத்தை, மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை இந்நாவல் வெளிப்படுத்துகிறது.

மக்களோடு தாயகத்திலேயே வாழ்ந்து அந்த மக்களின் துயரங்களையும், அவர்களின் இயலாமைகளையும், அவர்களின் இழப்புக்களையும், மிக ஆழமான சம்பவங்களினுாடாக பதிவு செய்திருக்கிறது. அந்த வெளியேற்றத்தின்போது, ஒரு கதாபாத்திரம் 90 களில் யாழ்பாணத்தைவிட்டு முஸ்லிம்களை வெளியேற்றியதையும் நினைவுபடுத்துகிறது. போரட்டத்திற்கிருந்த நியாயம், ஆனால், அதை வழிநடத்தியதில் இருந்த பிற்போக்குத்தனம், என அனைத்தையும் சாதாரண மக்களின் அனுபவப்பதிவுகள், உரையாடல்கள் என ஒரு பன்மையான விரிந்த தளத்தில் இந்நாவல் அணுகுகிறது.

“தெம்மாடுகள் ” எனும் நாவலானது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கடலோர கிராமத்து மக்களின் வாழ்வானது எவ்வாறு சிதைவடைந்து அகதி வாழ்வாக சீரழிகிறது என்பதை விபரிக்கிறது. இயல்பான சம்பவங்களூடாக விடுதலைப் போராளிகளையும், இராணுவத்தினரையும், போலி சமூக ஆர்வலர்களையும், போராளிக் குடும்பங்களையும் விமர்சனம் செய்கிறது. போரில் ஈடுபடும் போராளித் தரப்புக்கும், அப்பாவி மக்களுக்கும் இடையிலான வாழ்வின் வேறுபாடுகளை பல்வேறு உரையாடல்கள் ஊடே உணர்த்தும் கதையோட்டம் இந்நாவலின் சிறப்பாகும். எந்த விதமான ஆயுத அமைப்புக்கோ அல்லது அதிகார கட்டமைப்புக்கோ அல்லது தவறான இலட்சியங்களுக்கோ சாய்வு கொள்ளாமல் நலிவுற்ற மனிதர்கள் மீதான அக்கறையாக விரியும் கதை என்பதால் அதிகாரத்தின் மகிமைக்கு வெளியே நிற்கிறது.

இது போன்ற கதைகளே போரின் தகிப்பு கொண்ட மனித வாதைகளைப் பேசுபவை. இது போன்ற கதைகளே காலம் கடந்தும் அர்த்தம் பொதிந்தவையாய் அமைகின்றன. இது போன்ற கதைகளே போருக்குப் பிறகும் புனைவின் வசீகரம் குன்றாமல் இருப்பவை.இவை போன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் கதைகளுமாகும்.

புலம்பெயர் சூழலில் எழுதப்படுபவையெல்லாம் அமைப்பாக்கமான தேவைகளுக்கு பிரச்சாரம் செய்ய போலி வலிகளை பேசுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் போர் வலிகளை பேசிய இலக்கியங்களை விட வாழ்வின் ஏனைய பரிமாணங்களை பேசிய இலக்கியங்களே மிக அதிகம். போருக்கு வெளியில்தான் அதிகமான தமிழர்களின் வாழ்வு தங்கியிருந்தது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

பாரம்பரிய சிறுகதை வடிவம் இன்று காலாவதியாகி விட்டதா ? ஆம் என்றால் இன்றும் அன்ரன் செக்கோவ் மார்க்சிம் கோர்க்கி லியோ ரோல்ஸ்டாய் போன்றோர்களது படைப்புகள் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன ?

பாரம்பரிய சிறுகதை வடிவங்கள் காலாவதி ஆகி விட்டதா என்ற கேள்விக்கு ஒரு சொல்லில் பதிலளிக்க வேண்டுமாக இருந்தால், ஆம் என்று கூறி விட முடியும். ஆனால் அது பற்றி விளக்காமல் விட்டால் அந்த பதில் பூரணமற்றதாகவே இருக்கும். நீங்கள் தமிழில் பாரம்பரிய சிறுகதை வடிவங்கள் காலாவதி ஆகி விட்டதா என்றொரு பீடிகையை முன்வைக்காமல் விட்டது ஆறுதல்.

சிறுகதை வடிவம் என்பது அது தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு எடுத்துரைப்பு முறை மாற்றங்களுக்கும், வடிவ மாற்றங்களுக்கும் உட்பட்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய அதிகார பீடங்களுக்கும், சமூக அறங்களுக்கு இசைவானதாகவும் சிறுகதைகள் உருவாக்கப்படிருக்கின்றன.

இந்த விதமான கருத்தியல்களுக்கு உட்பட்டு புனையப்பட்ட சிறுகதைகள் வாசகர்களை ஏவலர்கள் போலவே நடத்த எத்தனிக்கிறது. வாசிப்பு என்பது உரைப்பவன் × செவிமடுப்பவன் என்ற பொதுவான பிரசங்கச் சடங்கு நிலையில் செயல்படும் காரியமாக நம்பப்பட்ட போது மரபான சிறுகதைகளுக்கு மவுசு இருந்தது. அவை வாசகர்களுக்கு அறங்களை போதித்தன. அதிகாரங்களை எவ்வாறு அனுசரித்து வாழ்வது என வகுப்பெடுத்தன. சிறுகதைகளின் வடிவங்கள் காலத்துக்கு காலம் மாற்றங்களை பெறுவது வெறும் கவன ஈர்ப்பையும், கவர்ச்சியையும் பேணுவதற்கானதாக சிந்திக்கப்பட்டால் அது பிரச்சினைக்குரியது. சிறுகதைகளின் உள்ளடக்கமும், வடிவமும் பிற்காலத்தில் தோன்றிய கோட்பாட்டு விழிப்புணர்வுடன் கூடியதாக உணரப்படும் போது உருவாகும் மாற்றங்களைத்தான் இங்கு முக்கிய அம்சமாக கருத வேண்டியிருக்கிறது.

இந்த வகையான புரிதலுக்குட்பட்டு நோக்கும் போது பழைய மரபான சிறுகதைகள் வலியுறுத்தும் விடயங்களில் இருந்து புதிய இலக்கிய சிந்தனைகளால் வடிவமைக்கப்படும் சிறுகதைகள் பாரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பு, உள்கூறு, வடிவம் போன்ற அனைத்திலும் இந்த வேறுபாடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன. மொழி பற்றிய புதிய கோட்பாட்டுப் புரிதல்களும், இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் நுகர்வுக் கலாசாரத்தினால் வடிவமையும் வாழ்வும் சிறுகதைகளின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களை உருவாக்கி விட்டன. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சிறுகதைகளை இன்றைய புதிய மாற்றங்களின் வழியாக பரிசீலிக்கும் போது அவை காலாவதி நிலையை அடைந்து விட்டன என்பதை பகிரங்கமாக கூற முடியும்.

இதனோடு நீங்கள் எழுப்பியிருக்கும் உப கேள்விக்கான பதிலையும் கூறித்தானாக வேண்டும். அந்தன் செகோவ், மார்க்சிம் கார்க்கி போன்றவர்களின் கதைகள் இன்றும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களை முன்வைத்து மரபான சிறுகதைகள் காலாவதியாகவில்லை என்பதை நிரூபிப்பதே உங்கள் எண்ணமாக இருக்கிறது.

அந்தன் செகோவ், மார்க்சிம் கார்க்கியின் கதைகள் மட்டுமல்ல இன்னும் பலரின் கதைகளும் ஆங்காங்கே கொண்டாடப்படுகின்றனதான். புதிய இலக்கிய சிந்தனைகளால் இதுவரை தமது புரிதலை வளப்படுத்தாதவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட முடியும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது ஒரு விதமான nostalgic mania என்றே எண்ணுகிறேன். பழையவற்றின் மீது ஏற்படும் ஈடுபாடு. அரிதான antique பொருட்களின் மீது ஏற்படும் மோகத்தைப் போன்றது. இதுவும் ஒரு விதமான கொண்டாட்டம்தான். அறுபது வருடங்களுக்கு முன்பு இறந்து போன மார்லின் மன்றோவின் நிக்கரை பல லட்சம் டொலர் கொடுத்து வாங்கும் கலா ரசிகனின் மோகத்துக்கு இணையானது. எப்படித்தான் மார்லின் மன்றோவின் நிக்கர் அதிகமாக விலை போனாலும் அது இன்று சந்தையில் உற்பத்தியாகும் புதிய நிக்கருக்கு இணையானதாக இருக்கப் போவதில்லை. அந்த நோக்கத்தில் அதை அணியவும் வாய்ப்பிருக்காது. அதைப் போன்றதுதான் நீங்கள் குறிப்பிடும் கொண்டாட்டங்களும். பெல் பொட்டம் கால்சட்டைகள் ஒரு காலத்தில் மிகவும் ஃபேசனாக அணிந்து கொள்ளப்பட்ட ஆடையாகும். அது பின்னர் காலாவதியாகி விட்டது. அதை இப்போது கொண்டாடப் போகிறேன் என்று கூறியபடி அணிந்து கொண்டு வீதியில் இறங்கினால் எப்படி இருக்கும்.

ஆகவே பழையவற்றில் ஏற்படுகின்ற ஈர்ப்பு என்பது தற்காலத்தில் உருவாக்கப்படுகின்ற புதிய உற்பத்திகளை நிராகரிக்கின்ற செயல் அல்ல. மாறாக காலாவதியான முன்னொரு காலத்தின் பொருட்களை நினைவில் மீட்டுதல் பற்றியதுதான். இது இலக்கியத்தில் காலாவதியான சரக்குகளுக்கும் பொருந்தும்.

சமகாலத்தில் பெண்கள் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் கீழ் நிலை உயிரிகளாகப் பேணப்படுவது குறித்து............? ஏனெனில் பொதுவெளியில் பெண்கள் மீதான அணுகுமுறை மிகவும் கிழத்தரமாக மாற்றப்பட்டத்தை என்னால் அவதானிக்க முடிந்தது.

சம காலத்தில் பெண்கள், குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் கீழ் நிலை உயிரிகளாக நடத்தப்படுவது குறித்து என்ற பதம் மூலம் நீங்கள் உணர்த்த முற்படும் அர்த்தங்களை நான் மறுதலிக்கிறேன். ஏனெனில் முஸ்லிம் பெண்கள்தான் உலகளவிலும், நமது சூழலிலும் கீழ் நிலை உயிரிகளாக நடத்தப்படுவதான ஒரு பிரச்சார தோற்றத்தை அது கொண்டிருக்கிறது.

முஸ்லிம் பெண்கள் என்றில்லை, உலகளவில் எல்லா பெண்களுக்கும் எதிரான அடக்குமுறைகளும், பாரபட்சங்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மதம், இனம், மொழி, நிறம், தேசம் என்பவை ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் இஸ்லாமிய பெண்கள் என்று முக்கியத்துவப்படுத்தி கேட்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. இன்று உலக அளவில் வலதுசாரி அரசியல் கருவியாக வளர்த்து விடப்பட்டிருக்கும் இஸ்லாமிய வெறுப்புவாதம் (Islamophobia) பெற்றிருக்கின்ற ஜனரஞ்சக வெளிச்சம் மூலமாக தோன்றியிருக்கும் கவனமே இதற்கு காரணமாகும்.

மதவாதத்தின் அடிப்படையில் இதற்கு பதிலளிப்பதை விடவும் தகவல்கள் வழியாக புரிதலை ஏற்படுத்துவதே பொருத்தமாகும். இஸ்லாமிய அடிப்படை நெறிகளின் படி பெண்களின் உரிமை குறித்து பாரபட்சங்கள் காட்டப்படவில்லை என பலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையகப்படுத்திக் கொண்ட ஆண்களினால் அடக்குமுறைப் பண்பாடுகள் நாளடைவில் இஸ்லாமிய நடைமுறைக்குள் உள்வாங்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மேலைத்தேய நாடுகளில் மிகையாக உள்ளது என்பதற்கான காரணங்களையும் நாம் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் விக்டோரியா மகாராணியின் காலத்தில் பிரிட்டனில் பெண்களுக்கான உரிமைகள் மிக கீழ் நிலையில் இருந்தது. பெண்கள் பொது இடங்களில் சகஜமாக பிறருடன் கூடி இருப்பதற்கான அனுமதி கூட இருக்கவில்லை. அங்கு1883 ம் வருடம் பெண் ஒழுக்கவியல் குறித்து Lady Huff என்பவர் எழுதிய Book Of Etiquette எனும் நூலில் புதுமையான கட்டுப்பாடுகள் பல இடம்பெற்றிருந்தன. அது அரச சபையிலும் செல்வாக்கு செலுத்தியது. நூலக அலுமாரிகளில் ஆண் எழுத்தாளர்களுடைய நூல்களும், பெண் எழுத்தாளர்களுடைய நூல்களும் அருகருகே உரசியபடி இருக்க கூடாது எனும் ஒழுங்கு அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது நடைமுறை செயல்பாட்டிற்கும் வந்திருந்தது. நூல்களுக்கே அப்போது இந்த நிலையென்றால் பெண்களுக்கான சுதந்திரம் அங்கு எவ்வாறு மட்டுப்பட்டிருக்கும் என்பதை சிந்திக்க முடியும்.

1770 ம் வருடம் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்களுக்கு எதிராக முட்டாள்தனமான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. "சூனியக்காரிகளுக்கு எதிரான சட்டம்" என்று அதற்கு பெயரும் இடப்பட்டது. சூனியக்காரிகள் எனப்படுவோர் யாரெனில் நயவஞ்சகிகள், நறுமணம் பூசிக்கொள்ளும் பெண்கள், அலங்கார கேச ஒப்பனைகள் செய்து கொள்வோர், குதி உயர்ந்த காலணி அணிந்த பெண்கள், பிட்டங்களையும் மார்புகளையும் நிமிர்த்திய தோற்றம் கொண்ட பெண்கள் என ஒரு நீண்ட பட்டியல் கொண்டது. இந்தச் சூனியக்காரிகள் செய்யும் குற்றம் யாதெனில், இது போன்ற அலங்கார தந்திரங்களினால் மகாராஜாவின் பிரஜைகளை இந்த சூனியக்காரிகள் ஈர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்தக் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் குறித்த பெண்களுக்கு பிரத்தியேகமான தண்டனையும் வழங்கப்பட்டு திருமணமும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இன்று மேலைத்தேய ஏகாதிபத்தியம் நவநாகரிகம் என்று கொண்டாடும் காரியங்கள் அனைத்தும் அன்று குற்றங்களாக காணப்பட்டிருக்கின்றன. இவ்வாறுதான் மேற்கில் ஒரு காலத்தில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பாரம்பரியத்தின் மாறுதல்கள் கொண்ட தொடர்ச்சிதான் இன்றும் மேற்கில் உள்ளது. ஏனெனில் இன்றுவரை பெண்ணியம் அங்கு தீவிரமான செயல்பாட்டில் உள்ளதற்கு அங்கு உரிமை மறுப்புகள் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

ஒரு காலத்தில் குற்றமாகக் கருதப்படுபவைகள் வேறொரு காலத்தில் மானுட நாகரிகமாகவும், சமூக விடுதலையாகவும் அர்த்தம் கற்பிக்கப் படுகின்றன. ஏகாதிபத்திய அதிகார மையங்களின் தேவைக்கேற்ப இந்த அர்த்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மேற்குலகம் தனது உள்ளக விடயங்களை மறைத்து விட்டு இஸ்லாமியர்களுக்குள் மட்டுமே பெண் அடக்குமுறை இருப்பது போன்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதை மூளையில் ஊற்றிக் கொண்ட கீழைத்தேய மக்களும் இந்தக் கதைகள் வழியே சிந்திக்கத் தொடங்கியமை அறிவுடமையாகாது.

மேற்கை ஒரு பக்கம் வைத்து விட்டு நமது இந்திய துணைக்கண்டத்தில் பெண்களின் நிலையை சிந்திப்போம். எல்லா சமூகங்களிலும் பெண்களுக்கு எதிரான பல்வேறு சமூக அடக்குமுறகள் ஒழுக்கம், சம்பிரதாயம் என்ற போர்வையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பை பிரதானப்படுத்திய சிந்தனையானது பெண்ணுடலை தனிச்சொத்தாக கையகப்படுத்திய வழிமுறைதானே. திருமணத்தின் பின்னர் முதல் உறவில் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் பாரம்பரியம் கொண்ட சமூகங்கள் இன்றும் உள்ளனவே. முறையான சொத்துப் பங்கீட்டில் பெண்களை முறைப்படி உள்ளடக்காத சமூகங்கள் உள்ளனவே. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய சமுதாயத்திற்கு வெளியில்தான் உள்ளன.

இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்களுக்கு ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்து பெண்கள் மேலாடை அணிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. தமது முலைகளை மறைத்து ஆடை அணிவதற்கு கூட ஒரு தரப்பு மக்கள் போராட வேண்டியிருந்தது. இன்றைய காலத்தில் பெண் உடலை திறந்து காட்டுவது நாகரிகம் என நம்ப வைக்கப்படும் சமூகங்கள் ஒரு காலத்தில் அடக்குமுறையினால் உடலை திறந்த படி வாழ்ந்தமையை சிந்திக்கத் தவறுகிறது.

ஒரு காலத்தில் சமூக அடக்குமுறையாக தீர்மானிக்கப்பட்டிருந்த அர்த்தங்கள் வேறொரு காலத்தில் பெண் சுதந்திரத்திற்கான அர்த்தங்களாக தீர்மானிக்கப்படுகின்றன. இதனை தீர்மானிக்கும் கருத்தியல் அறம் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு நியாயம் கொண்டதாக ஏன் மாறுபடுகிறதென எவரும் சிந்திக்காமல் ஒரு சமூகத்தை இழிவு படுத்த துணிகிறோம்.

அந்தக் காலத்திலும் சரி, இப்போதும் சரி இஸ்லாமிய பெண்களுக்குள் இது போன்ற கண்ணியக் குறைவான வாழ்க்கை முறை செல்வாக்கு செலுத்த முடியவில்லை. ஏனெனில் அவர்களது இஸ்லாமிய நம்பிக்கை நெறியில் ஆண்களும், பெண்களும் எவ்வாறு ஆடை அணிதல் வேண்டும் என்பது பற்றிய தெளிவான பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்து வந்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள்தான் கீழ்நிலை உயிரிகளாக நடத்தப் படுகிறார்கள் எனும் தர்க்கம் தவறானது. உலகளவில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு ஆண் மைய சிந்தனையின் அதிகார ஏகபோகமே காரணமானது. எல்லா சமூகங்களிலும் உள்ள ஆண் மைய சிந்தனையின் அதிகார வடிவமே பெண்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை கட்டமைத்து செயல்படுத்துகிறது என்ற கோணத்தில் சிந்திப்பதே நேர்மையானது.

இந்த வகையில் நோக்கும் போது இஸ்லாமிய பெண்கள் மனித உயிரிகளை விட கீழ்மையாக நடத்தப்படுகிறார்கள் என்பது பொருத்தமற்றது. இது தற்கால வெகுஜன அரசியல் சூழ்ச்சிகளினால் வெறுப்பை விதைக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் சில இஸ்லாமிய அடிப்படைவாத மூடர்களின் அநாகரிகமான பொதுவெளி நடத்தைகளும் இந்தக் குற்றச்சாட்டை உருவாக்குவதற்கு காரணமாகி விடுகின்றன.

90 களுக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றிய ஆண்கள் பெண்கள் தமது பாரம்பரிய உடைகளையே அணிந்து வந்தனர். ஆனால் இன்று இந்த சூழல் முற்றுமுழுதாகவே மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக...........?

இலங்கையில் தொண்ணூறுக்கு முன்னர் ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்தனர் எனும் புரிதல் மிகவும் பொதுமைப்படுத்தல் கொண்டது. மேலோட்டமான பார்வை கொண்டது. பாரம்பரிய ஆடை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல. பாரம்பரிய ஆடைகளின் தன்மையோ, வடிவமோ மாற்றப்படக் கூடாததுமல்ல. இலங்கையிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் வெவ்வேறு வகையான பாரம்பரிய உடைகள் உள்ளன. காலவோட்டத்தில் அவற்றில் பல விதமான மாற்றங்கள் உருவாகி வந்துள்ளன. இலங்கைச் சமூகங்கள் அனைத்தும் பொதுவாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது பாரம்பரிய அடையாளங்களுக்குப் புறம்பாக உடை அணியும் பழக்கங்களைக் கொண்டவைதான். அதேபோல முந்திய காலங்களில் இலங்கைச் சமூகங்கள் அணிந்து வந்த ஆடைகளின் தன்மைகள் படிப்படியாக வடிவமாற்றம் பெற்றே வந்துள்ளன. இந்த வகையாக ஆடைகளின் வடிவ மாற்றங்களை நோக்காமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் குறி வைத்து ஆடை தொடர்பில் அத்துமீறிச் சிந்திப்பது நிந்தனைத் தன்மையானது. இலங்கையில் முஸ்லிம்கள் தவிர்ந்த பிற சமூகங்களில் சென்ற நூற்றாண்டு வரை மேலாடை அணிவதற்கு பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் உடலின் மேல் பகுதியை மறைப்பதற்கான சுதந்திரத்தையும், உரிமையையும் அம்மக்கள் பெற்றார்கள்.

மனிதர்களின் உடலை மறைப்பதில் ஒவ்வொரு சமூகத்திடமும் வெவ்வேறு அளவுகள் பழக்கமாகி இருக்கிறது. அதனை அவரவரின் தனித்துவமான விருப்பு என சகித்துக் கொள்ளாமல் அரசியல் சார்ந்த வெறுப்புகளுடன் அணுகுவது சகவாழ்வுக்கு எதிரானது.

அபாயா, நிகாப், புர்கா போன்ற ஆடை வடிவங்களை முஸ்லிம்களுக்கு மட்டுமானது என்ற வரையறையுடன் நான் நோக்கவில்லை. இந்த ஆடையின் மீதான அவசியத் தேவையும் அது சார்ந்த நோக்கமும் உடைய எவரும் இதை அணிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகிறேன். இங்கு நான் கருதுகின்ற தேவையும், நோக்கமும் என்பது எந்த வகையான இறுக்கமான வற்புறுத்தலுக்கும் உட்படாதது. ஏனைய ஆடை வகைகள் மீதான தெரிவும் அவ்வாறானதே.

ஆடை குறித்த மேலைத்தேயத்தின் எண்ணப்பாட்டை விட மத்திய கிழக்கு அரபுகளின் மனநிலை வேறானது. ஆடை என்பது அதை அணிபவரது ஆளுமையை மட்டும் வெளித் தோற்றத்தில் சுட்டி நிற்பதில்லை, மாறாக அவரது பிராந்தியம், வாழ்க்கைச் சூழல், சமூகத் தரம், அறம் சார்ந்த நம்பிக்கைகள் என பலவிதமான தோற்றப்பாடுகளைக் கொண்டது. எடுத்துக்காட்டாக ஹிஜாப் என்னும் சீலை கொண்டு தலையை மூடாத பெண் வெளிப்படையான மன நிலை கொண்டவர் எனவும், தலையை மூடிய பெண் மத ஒழுக்கமும் மரியாதையும் கொண்டவர் எனவும் நம்பப் படுவதே அரேபிய ஆடைக் கலாசாரத்தின் தொனியாகும். இது அறிவியல் பரிசீலனைக்கு அப்பால் உள்ள போதும் நடைமுறைப் பழக்கமாக மாறி பல நூற்றாண்டுப் பின்தொடர்தலைக் கொண்டிருக்கிறது.

சனப் பரம்பலும் புதிய தேச நிர்மாணங்களும் உருவாகி வரும் உலக ஒழுங்கில் ஆடைக் கலாசாரம் குறித்த பார்வைகள் புது வகை நெருக்கடிகளையும் பிணக்குகளையும் தோற்றுவித்த படிதான் உள்ளன.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கெடுபிடி மிக்க சூழலை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. இம்முறை அக்கெடுபிடியானது முஸ்லிம்களைக் குறி வைத்து நகர்த்தப் படுவதை உணர முடிகிறது. ஈஸ்டர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதனால் இந்தக் கெடுபிடிக்குள் அவர்கள் நசுக்கப்படும் புதிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருக்கின்ற உறவுகளில் தடையாக இருப்பதில் முக்கியமானது எதுவென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசப்படுவது வழமை. ஆனால் அரசியல் ரீதியிலான பிரதிநிதித்துவ விடயங்கள் அல்லது தீர்வு முயற்சிகள் பற்றிய முக்கியமான தருணங்களில் ஒற்றுமை குறித்த சிந்தனைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. சாராம்சமாக சொன்னால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வரலாறு முழுவதும் ஒற்றுமை இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்தவரையில் தமிழர்கள் ஓரளவு ஆதிக்கம் கூடியவர்களாக இருப்பதனால் அவர்கள் முஸ்லிம்கள் தமக்கு கீழ்ப்படிவானவர்களாக இருக்க வேண்டுமென எண்ணுகிறார்கள். இதுவே வரலாறு நெடுகிலுமான முரண்பாடுகளுக்கு காரணமாயிற்று.

சுதந்திரத்திற்கு முந்திய இலங்கையில் பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் பேசும் தமிழர்களினதும், தமிழ் பேசும் முஸ்லிம்களினதும் ஏக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஏக அரசியல் பிரதிநிதியாக இருந்த பொன்னம்பலம் இராமநாதன்1885 ல் Ceylon Legislative Council இலும், 1888 ல் Royal Asiatic Society இலங்கை கிளையிலும் முஸ்லிம்களின் அரசியல் உரிமையை சிதைக்கும் விதமாக உரையாற்றினார். முஸ்லிம்கள் தனியான இனமல்ல அவர்களும் தமிழர்கள்தான் என இராமநாதன் எடுத்துரைத்தார். முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசிய போதிலும் தந்தைவழி பண்பாட்டின் அடிப்படையில் வேறொரு இனமாக வாழ்பவர்கள் என்பதை இராமநாதன் ஏற்க மறுத்தார்.

இராமநாதனின் கருத்துகளுக்கு எதிராக அப்போது முஸ்லிம்கள் மத்தியில் வலுவான எதிர்ப்புகள் உருவாகின. சித்திலெப்பை போன்ற அறிஞர்கள் அது குறித்து பல்வேறு மறுப்புரைகளை வழங்கினர். இராமநாதனின் பேச்சுக்கு பதவி நிலை குறித்த தனிப்பட்ட உள்நோக்கங்கள் இருந்தன என்பது வேறு விடயம்.

தமிழைத் தாய் மொழியாக கொண்டும் தமிழ் பழக்கவழக்கங்களை தாராளமாக அனுசரித்த போதிலும் அரேபிய தந்தையரின் வம்சாவளி வந்த சோனகர்களுக்கு அவர்களுடைய இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள விசுவாசமும் பற்றும் அவர்களை விசேட தனித்துவமுள்ள இனமாக இலங்கையில் வாழ வழி வகுத்தது. இஸ்லாத்தின் தார்மீக கொள்கையும், சாதி வித்தியாசமற்ற சமூக நடைமுறையும் சோனகரின் தனித்துவத்திற்கும் இன அபிவிருத்திக்கும் பாரிய வாய்ப்பாகிப் போனது. தந்தை வழிச் சோனகரும், பெரும்பாலும் தாய் வழி தமிழரும் ஒன்றிணைந்த இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த எல்லோரும் இன ரீதியாக இலங்கைச் சோனகர் என்றும் பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் என்றும் அழைக்கப்படுவதே வரலாறு. தேசிய இனங்கள் குறித்த வரையறையானது எப்போதும் ஒன்றாகவே இருந்ததில்லை. பண்பாடு அடிப்படையிலும் தேசிய இனங்கள் உருவாக முடியும்.

பொன்னம்பலம் இராமநாதனின் முஸ்லிம் விரோத உள்நோக்கத்தை அறிந்த முஸ்லிம்கள் அவரது பிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்தனர். வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களின் பிரதிநிதியாக ஆட்சி மன்றத்தில் பதவி வகிக்க முடியாது எனும் எதிர்ப்புகள் கிளம்பின. முஸ்லிம்களை முஸ்லிம்களே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதனால் 1889 அக்டோபர் 29 ம் திகதி எம்.சி. அப்துர் ரஹ்மான் முஸ்லிம் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் நவீன பிரதிநிதித்துவ அரசியல் களத்தில் தனித்துவமான அரசியல் உரிமைகளை பெறுவதில் முஸ்லிம்களும், தமிழர்களும் வேறாகவே சிந்திக்கின்றனர் என்பதற்கான முதல் தோற்றம் உருவாகியது.

சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கையில் தமிழ், முஸ்லிம் அரசியல் முரண்பாடு என்பது வடக்கையும் கிழக்கையும் பிரதானப்படுத்தியதாகவே அமைந்தது. தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள தேசிய கட்சிகள் வழியாக அரசியலை அணுகினர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும் அது போலவே செயல்பட்டாலும் நாளடைவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளிலும் ஈர்க்கப்பட்டனர். ஆனால் செல்வநாயகம் முதல் அமிர்தலிங்கம் வரையான தலைவர்களின் அரசியல் காலத்திலும் கூட தமிழ், முஸ்லிம் அரசியல் என்பது சம அந்தஸ்து கொண்டதாக அமைந்திருக்கவில்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியை பயன்படுத்தியதும், முஸ்லிம்கள் தமக்கு கீழ்ப்படிவாக இருப்பார்கள் என தமிழ் தலைவர்கள் நம்பி மோசம் போனதுமே அக்காலத்து உள்ளூர் அரசியல் உறவாக இருந்தது. அப்போது கூட பொன்னம்பலம் இராமநாதன் காலத்து சிந்தனைகளே தமிழர்கள் மத்தியில் தொடர்ந்தன.

1978 அரசியலமைப்பு மாற்றத்தின் பிறகு அரசியல் சூழல் வெகுவாக மாறத் தொடங்கியது. தமிழ் மிதவாத அரசியல் செல்வாக்கிழந்து ஆயுதக்குழுக்களின் பிடியில் வடக்கு, கிழக்கின் அரசியல் சிக்கியது. போராடிய இயக்கங்கள் தமது ஆளணித் தேவைகளுக்கு முஸ்லிம் இளைஞர்களையும் உள்வாங்கிக் கொண்டனவே தவிர முஸ்லிம் சமூகம் குறித்து அவைகளிடம் கூட சமஅந்தஸ்து வழங்கும் சிந்தனைகள் உருவாகவேயில்லை. குறிப்பாக சொன்னால் தமிழ் மிதவாத அரசியலை விட ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகளே முஸ்லிம்களுக்கு பேராபத்தானதாக மாறியது.

எண்பதுகளுக்கு பிறகு தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்த ஆயுதபலம் முஸ்லிம்களை அச்சுறுத்தவும், பொருளாதார ரீதியாக நசுக்கவும், அவசியமானால் உயிர் பறிக்கவும் பயன்பட்டது. இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றன. அத்தோடு இனப்பிரச்சினை தீர்வு குறித்த பேச்சுவார்த்தை விடயங்களில் இருந்தும் முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை விடயத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்த சமூகமாக செயல்படுவதை தமிழர்கள் விரும்பாத நிலையில், சிங்கள அரசும் அதனை வழி மொழியும் நிலைதான் இருந்தது. திம்பு பேச்சுவார்த்தை, இந்திய - இலங்கை ஒப்பந்தம் போன்றவற்றில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப் பட்டனர். போராடிய சமூகங்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும் என்பதே தமிழ் ஆயுதக் குழுக்களின் அப்போதைய நியாயமாக இருந்தது. அத்தோடு தமிழ் ஆயுதக்குழுக்களும் பொன்னம்பலம் இராமநாதனின் கருத்துகளை விட்டும் புதிதாக சிந்திக்கவில்லை. முஸ்லிம்கள் தனியான சமூகமான போதும், போரில் பாதிக்கப்பட்ட சமூகமான போதும் தீர்வு குறித்த தமது அபிலாஷையை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க விடாமல் தமிழர்கள் தடுத்தனர்.

இலங்கையில் நிகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போரானது வர்க்க அடிப்படையில் நிகழவில்லை. அப்படியான எண்ணம் இயக்கங்களுக்கு இருந்திருந்தால் சகல சமூகங்களிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டமாக அது உருவெடுத்திருக்கும். வடக்கு, கிழக்கில் வாழும் பிற இரண்டு சமூகங்களையும் நீக்கம் செய்த போராட்டமாக அது இருந்தது. மட்டுமல்லாது பிற சமூகங்கள் மீது வெறுப்பைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது.

தொண்ணூறாம் ஆண்டு கிழக்கில் முஸ்லிம்களை படுகொலை செய்தும், வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியும் விட்டதன் மூலம் புலிகளின் போராட்டத் தன்மை எத்தகையது என்பது வரலாற்றில் நிரூபணமானது. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் ஒரு தரப்பாக செயல்பட புலிகள் எதிர்த்தனர் என்பதையும் இதனோடு இணைத்து சிந்திக்க வேண்டும். அப்போதும் கூட பொன்னம்பலம் இராமநாதன் கருத்தின் அடிப்படையிலேயே தமிழர்கள் சிந்தித்தனர்.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம் ஒற்றுமை என்பது முஸ்லிம்கள் அவர்களுக்கு கீழ்ப்படிவானவர்களாக இருக்க வேண்டும் என்பதாகவே வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிங்களவர்களும் ஏனைய சிறுபான்மை சமூகங்களை இவ்வாறுதானே அடக்க எத்தனிக்கிறார்களென தமிழர்கள் உணர விரும்புவதில்லை. தமிழர்களின் இந்தச் சிந்தனைக்கு எதிரான அரசியல் உரையாடலை முஸ்லிம்கள் 140 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ் தரப்புகள் முஸ்லிம்களின் குரலை இதய சுத்தியுடன் இதுவரை செவிமடுக்கவேயில்லை. தமிழர்களை சக சிறுபான்மைச் சமூகமாக மதிக்கும் முஸ்லிம்கள் தம்மையும் தனித்துவமான சமூகமாகவும் அரசியல் இணக்கத்துடனும் அனுசரிக்கும்படி வேண்டுகிறார்கள். வேறான சமூகம் என்ற அடிப்படையில் சமமாக மதிக்கும் படி வேண்டுகிறார்கள்.

இதுவரைக்கும் இரண்டு சமூகங்களுக்குமிடையிலான நல்லுறவுக்குத் தடையாக இருப்பது மேலே குறிப்பிட்ட வரலாற்றுத் தொடர்ச்சியான தமிழ் அரசியல் மேலாதிக்கமேயன்றி வேறில்லை. சகல விதமான நம்பிக்கைகளும் இறுதிப் போரில் அழிந்து போய் விட்ட நிலையில் இந்த மேலாதிக்க கடும் போக்கும் சிதைவடைய வேண்டிய தேவை இருக்கிறது. இந்தச் சிதைவின் உச்சியில் நின்ற படி இரு சமூகங்களும் சம அந்தஸ்து உள்ளவர்களாக கை கொடுக்கும் போதுதான் புதிய நம்பிக்கைகள் உருவாகும்.

உங்கள் உணர்வுகளையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆயினும், உங்கள் பதில் ஒற்றைப்படைத்தன்மையாக இருப்பதாகவே எனக்குப்படுகின்றது.

"எண்பதுகளுக்கு பிறகு தமிழ் ஆயுதக்குழுக்களிடம் இருந்த ஆயுத பலம் முஸ்லிம்களை அச்சுறுத்தவும், பொருளாதார ரீதியாக நசுக்கவும், அவசியமானால் உயிர் பறிக்கவும் பயன்பட்டது. இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றன."//

"தொண்ணூறாம் ஆண்டு கிழக்கில் முஸ்லிம்களை படுகொலை செய்தும்............" என்று சொல்கின்ற நீங்கள், இதே காலப்பகுதிகளில் முஸ்லிம் தரப்பால் தமிழர்களுக்கு எதிராக எதுவுமே நடைபெறவில்லை என்று எப்படி சுலபமாகக் கடக்க முடிகின்றது?


முஸ்லிம் தரப்பால் தமிழர்களுக்கு எதிராக எந்தவித வெறியாட்டங்களும் செய்யப்படவில்லை என நான் கடந்து செல்லவில்லை. முதலில் முஸ்லிம் தரப்பு என்பது எதுவென புரிந்து கொள்ள வேண்டும். அது முஸ்லிம் பொதுமக்களா? அல்லது முஸ்லிம் ஆயுத இயக்கங்களா? அல்லது அரச அனுசரணையுடன் செயல்பட்ட இராணுவக் குழுக்களா என்பதில் தெளிவு வேண்டும்.

முஸ்லிம்களுக்குள் எந்த விதமான ஆயுதப் போராட்ட இயக்கங்களும் இருந்ததில்லை. அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிராகவோ ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. முஸ்லிம் ஆயுத இயக்கங்கள் இருந்திருந்தால், அவை அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிராகவோ சண்டையிட்டிருந்தால் அது வரலாற்றுப் பதிவாகியிருக்கும். அதற்கென ஒரு தலைமைத்துவமும், அங்கத்தவர் குழாமும், அதற்கான அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள்வெளிக்கு வந்திருக்கும். அவ்வாறு எந்த விதமான விடயங்களையும் இலங்கைச் சூழலில் அவதானிக்க முடிந்திருக்கவில்லை.

புலிகள் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களை தடை செய்து சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு வேட்டையாடிய போது அந்தக் குழுக்களில் இணைந்திருந்த முஸ்லிம்கள் தமது உயிருக்குப் பாதுகாப்பு தேடி பாதுகாப்பு பிரிவிடம் சரணடைவதற்கு முன்பான சிறிது காலம் மக்களுக்குள் பதுங்கி வாழ்ந்தனர். பின்னர் அவர்கள் இராணுவத்தின் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். அந்த காலப்பகுதியில் தமிழ் ஆயுதக் குழுக்களால் எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு எதிராக சில முஸ்லிம் இளைஞர்கள் தமது ஊர்ப்புறங்களில் பழிவாங்கலை மேற்கொண்டிருக்கலாம். அது கண்டனத்துக்குரிய ஈனச் செயல்தான். உயிர் பறிக்கும் தண்டனையை அரசாங்கம் வழங்குவது கூட ஏற்றுக்கொள்ள தகாதது என சிந்திக்கும் இடத்தில் இருந்து இதனை நோக்கினால் மிகுந்த வேதனை தருவதாகும்.

தொண்ணூறில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு பயங்கரவாதத்தை மேற்கொண்ட போது படுகொலைக்குள்ளான முஸ்லிம்களின் ஊர்களில் எழுந்தமானமாக சில பழி தீர்க்கும் செயல்கள் இடம்பெற்றன. அப்போதும் அதனை முஸ்லிம் பொதுமக்கள் அனைவருமே கண்டித்தனர். அது போன்ற கொடூர தருணங்களில் புத்திசாலித்தனமற்ற உணர்சி வெறி கொண்டு பழிதீர்க்கும் எண்ணம் சில தனி நபர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடும். இப்படியான சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டு முனாஸ் கால்தீன் என்னும் மானுட நேயம் கொண்ட எழுத்தாளர் அக்காலத்தில் "வன்மம்" என்னும் கதை ஒன்றை எழுதினார். அதனை அண்மையில் றியாஸ் குரானா கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வரலாற்றை மீண்டும் நினைவூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகளை ஒரு சமூகத்தினதோ அல்லது அந்த சமூகத்தின் நிறுவனத்தன்மையான பதில் நடவடிக்கையாகவோ கருத முடியாது.

இறுக்கமாக ஒழுங்கமைக்கப்பட்ட புலிகள் அமைப்பின் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும், அந்த இனச்சுத்திகரிப்பில் பாதிப்படைந்ததினால் ஆத்திரமடைந்து பழியுணர்ச்சியில் பிழை செய்த உதிரியான மக்களின் கொடுஞ் செயல்களையும் ஒரே வகையான அரசியல் மதிப்பீடு கொண்ட வார்த்தைகளால் சுட்டிக்காட்ட முடியாது. அவ்வாறு தொடர்ச்சியாக பரப்புரை செய்வது முஸ்லிம் விரோத உள்நோக்கம் கொண்ட செயலாகவே பார்க்கப்படும்.

இதுவரைகாலமும் ஒரு இலக்கியனாலேயே இனங்களிடையே நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும் என நான் மனதார நம்பியிருந்தேன். எனது வருடாந்த விடுமுறையில் நான் தாயகம் வரும் பொழுதெல்லாம் இதனை முன்நிலைப்படுத்தி வந்திருக்கின்றேன். அந்த நம்பிக்கைகள் எல்லாம் இப்பொழுது தகர்ந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. நான் மதிப்பு வைத்திருந்த இலக்கியத்தோழர்களே காழ்ப்புணர்ச்சிகளைப் பொதுவெளியில் கொட்டுவதில் போட்டி போடுகின்றார்கள். கறுப்பு வெள்ளை , புனிதப்படுத்தல்கள் போன்றவற்றைத் தவிர்ந்து இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா ?

இலங்கை போன்ற கருத்துச் சுதந்திர மறுப்புக்கும், பலாத்காரத்திற்கும் பேர் போன நாட்டிற்கு வந்து இங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு கடமை ரீதியான அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. இலக்கியவாதிகள் எனப்படுவோர் விசேடமான பிறவிகள் அல்லர். அவர்கள் ஏனைய மனிதர்களைப் போல சாதாரணமானவர்களே. அவர்கள் சமூகத்தைப் பாதிக்கின்ற ஒரு பொது விடயம் தொடர்பாக ஏதாவது அபிப்பிராயம் வெளியிடுவதில் சுயாதீனமான நிலையைக் கொண்டுள்ளார்கள். அந்த நிலைப்பாடுகள் புத்திசாலித்தனமானதாகவோ அல்லது தர்க்க நியாயங்களுக்கு அமைவானதாகவோ இருக்க வேண்டுமென்று எந்த அவசியமான நிர்ப்பந்தமும் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமூகத்தில் எழுத்தாளன் எனப்படுபவனுக்கு எந்தவொரு மதிப்புமில்லை. அவன் பொருளாதார ரீதியாக எவருக்கும் பிரயோசனமில்லாத பலமற்றவன். அதனால் இழி பிறவியாக நோக்கப்படுபவன். தன்னையும், தன்னைச் சுற்றியவர்களையும் பரிபாலிப்பதற்கே தயவற்றவன். பிறர் தயவில்லாமல் சிந்திப்பதற்கு அவன் எத்தனையோ தடைகளையும், பரிதாபங்களையும் கடக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எழுத்தாளர்களுக்கு மட்டும் சமூகம் குறித்த பொறுப்புணர்வும், அக்கறையும் இருக்க வேண்டுமென எமது பொதுப்புத்தி நம்ப வைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

எத்தனையோ அதிகார நிறுவனங்கள் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சமூகத்தை அடக்கி ஆள்கின்றன. அவை சமூகத்தை சுரண்டிக் கொள்ளையிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு எந்த விதமான சமூகப் பொறுப்பும், அக்கறையும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு அது முக்கியம். ஏனெனில் அவன் ஒரு ஏமாளிக் கழுதையாக எல்லோர் அழுக்கையும் சுமப்பவன். இந்த விதமான முட்டாள் பரிதாபத்திலிருந்து எழுத்தாளர்களைக் காப்பாற்றியாக வேண்டிய சூழலில் அவர்களுக்கு மேலும் சமூக அக்கறைகளை சுமையாக்கி விட முடியாது. சமூகம் எந்த சீரழிவுகளை நோக்கியும் பயணிக்கட்டும். அவற்றைத் திருத்தி சிறப்புற வைக்கும் கடமையை எழுத்தாளர்கள் ஏற்க முடியாது.

எழுத்தாளர்கள் தமது மகிழ்வுக்கு ஏங்கித் தவிக்கும் பரபரப்புக்குள் சமூகத்துக்காகவும் சிந்திக்க வேண்டுமெனும் வற்புறுத்தல்கள் ஒழிக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களை அவர்களது போக்கில் எந்த அழுத்தங்களும் இல்லாமல் சுயாதீனமாக விட்டு விடுவதே எல்லோருக்கும் நல்லது. அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் எழுதிக்கொள்ளட்டும். அவர்கள் சமூகத்திற்கு பொறுப்புக் கூறுவதற்கும் யோக்கியதை அற்றவர்கள்.

இந்த கண்ணோட்டத்தில் இலக்கியவாதிகள் குறித்து சிந்தித்தால் அவர்களினால் இன நல்லுறவை ஏற்படுத்த முடியாதென்பது தெளிவு. பெரும்பாலான எழுத்தாளர்கள் எனப்படுவோர் ஏதோவொரு அழுத்தமான காரணத்தின் அடிப்படையில் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். அது இன்னொரு தரப்புக்கு அநீதியாகவோ, ஆதரவானதாகவோ அமைந்து விடுகிறது. அதனால் எழுத்தாளர்கள் சமூக அமைதிக்கு எதிரானவர்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

சமூகத்தை நெறிப்படுத்தும் ஈடு இணையற்ற மேய்ப்பர்களாக எழுத்தாளர்களை கருத முடியாதது போலவே அவர்களுக்கு எந்தக் கடமையும் சுமத்தப்பட்டிருக்கவுமில்லை. அதனால் அவர்களின் செயல்பாடுகள் குறித்து பதட்டமடைய வேண்டியதில்லை.

எமக்கும் சரி முஸ்லிம்களுக்கும் சரி நடைபெற்று முடிந்த போரின் வலிகள் பொதுவானவை. இந்த நிலையில் ஒருவரை ஒருவர் சீண்டி வலிகளை மீள்கட்டுமானம் செய்யும் சாடிஸ போக்கு எதற்காக ? இதற்கு அண்மையில் நடந்த பல சம்பவங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்........

இந்தக் கேள்விக்கான பின்னணியானது கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகான சூழலில் பல்வேறு சமூகக்குழுக்களின் சமூகவலைத்தளங்களிலும் ஏனைய இலத்திரன் ஊடகங்களிலும் எழுந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் தொடர்பானதாகவே இருக்க முடியும் என எண்ணுகிறேன். இன்றைய நிலையில் தகவல் தொடர்புவெளியில் உருவாகியிருக்கும் கட்டற்ற சுதந்திரமும், கார்ப்பரேட் வணிக நோக்கம் கொண்ட இலத்திரன் ஊடகங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் சேர்ந்துதான் எமக்கான அன்றாட அரசியல் வடிவமைக்கப்படுகிறது. இதற்கென நேர்மையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறங்கள் எதுவுமில்லை. இதில் தனி மனிதர்களால் உருவாகும் கருத்தம்சங்கள் நீண்ட கால ஆபத்துக்கள் அற்றவை. ஆனால் நிறுவனமயப்பட்ட கருத்தம்சங்கள் மிகவும் ஆபத்தானவை. தனி மனிதர்களின் உதிரியான கருத்துப் பரிமாறல்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் தீவிரம் தணிந்ததாக மாறி விடக் கூடும். ஆனால் நிறுவனமயப்பட்ட கருத்துக்கள் நீண்ட கால நோக்கங்களுக்காக திட்டமிடப்படுகின்றன.

இந்த விதமான சூழ்நிலைகளால் கட்டமைக்கப்படும் பொதுவெளிக்கான கருத்தம்சங்களை ஆய்வு செய்த பிரான்ஸ் சமூகவியல் பேராசிரியரான Pierre Bourdieu தனது Field Of Cultural Products எனும் நூலில் இவற்றை 'புதிய பண்பாட்டு உற்பத்திகள்' எனும் பதம் கொண்டு அழைக்கிறார்.

இன்று வெகுமக்களின் அபிப்பிராயத்தை வடிவமைப்பதில் இலத்திரன் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சமூக வலைத்தளங்கள் இந்த அபிப்பிராய திரட்சியை உலகளவில் பரவலாக்கம் செய்யவும் இதனை மீளவும் பரிணாமப் படுத்தவும் உதவுகின்றன. இதற்குள் நிலவுகின்ற சுதந்திரமானது எல்லை தாண்டிய வன்மமாகவும், அதீத உணர்ச்சிகளை எழுச்சி பெறச் செய்யக் கூடியதாகவும் உள்ளன. இதன் மூலம் மானுட அறம் பாதிக்கப்படுவதான ஒரு தோற்றமும் காட்டப்படுகிறது.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும், கார்ப்பரேட் ஊடக அசுரர்களும் கை கோர்த்ததிருக்கும் சூழ்நிலையில் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கான கருத்துக்கள் பலமற்றவையாகவே இருக்கின்றன. உதிரியான கருத்துக்களை விடவும் ஊடக அசுரர்களின் கருத்துக்கள் வெகுமக்கள் நலன்களை சிதைப்பதற்கான பலமான கருவியாக அமைந்து விடுகின்றன. உண்மையில் உதிரிக் கருத்தாளர்களைக் கூட பிழையாக வழி நடத்துவதே இந்த அசுரர்களின் ஊடகங்கள்தான்.

மறுபுறம் நாம் இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. சமூக வெறுப்பை விதைக்கும் சமூக வலைதள பிரச்சாரங்களை விடவும் சகவாழ்வை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானது. சகவாழ்வுக் கருத்துக்களை பலரும் சமூக வலைத்தளம் வழியாக வெளியிடுகிறார்கள்தான். ஆனால் அவை முக்கியப்படுத்தப்படாத நிலை உருவாகியிருக்கிறது. சமூகங்களுக்கு இடையிலான வெறுப்பையும், துவேஷத்தையும் விதைப்பதை ஒரு ஃபேஷனாக கருதக் கூடிய மனநிலையை மைய ஓட்ட அசுர ஊடகங்கள் வேண்டுமென்றே கட்டமைப்பதனால் சகவாழ்வுக்கான பிரயத்தனங்கள் யாவும் கோளாறு மிக்க கருத்துக்களாக உருமாற்றப்பட்டிருக்கின்றன. எது தவிர்க்க பட வேண்டியது, எது கவனப்படுத்த வேண்டியது என்ற குழப்பங்களுக்கு மத்தியில் அனைத்தும் கொட்டப்படும் இடமாக சமூக வலைத்தளங்கள் அமைந்திருப்பதனால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இன்று அதிகாரத்திற்கு வர விரும்புகின்ற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தை எதிர்க்கும் நிலையிலுள்ள அரசியல் கட்சிகளும் தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், பிளவுகளையுமே நம்பியிருக்கின்றன. அவைகளின் நியாயப்படி புதுப்புது வடிவங்களில் பிரச்சினைகள் உருவாவது அவசியமாகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் வழியாகவும், ஆதரவு ஊடகங்கள் வழியாகவும் திட்டமிடுவது அவசியமாகிறது.

கட்சி அரசியல் என்ற வகைமைக்குப் புறம்பாகவும் சமூக அக்கறையாளர்கள் என்ற பெயரில் உலாவரும் பொது அமைதிக்கு எதிரான விஷமிகளும் முரண்பாடுகளை உருவாக்கும் விதத்தில் இலத்திரன் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செயல்படுகின்றனர். அத்துடன் பிரத்தியேகமாகவும் சுயாதீனமாகவும் தான்தோன்றியாக அபிப்பிராயங்களை வெளியிடுவோரும் சமூக வலைத்தள வெளியில் உலவுகின்றனர்.முன்பு மட்டுப்பட்ட ஊடகங்களின் காலத்தில் நிறுவனப்பட்ட தணிக்கையும், தமக்கு ஒவ்வாதவற்றை கழித்து விடும் வரன்முறையும் இருந்தது. ஆனால் இன்று கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் மாறி விட்டனர். இவர்களின் கழிவுத்தரம் மிக்க தகவல்களும் சேர்ந்துதான் நமக்கான பண்பாட்டுத் தயாரிப்புகளாக வடிவமைந்து புதிய நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றன. இவைகளை சகித்துக் கொண்டு கடந்து செல்வதும், மதிநுட்பத்துடன் வெளிச்சூழலை அணுகுவதும்தான் இந்தப் பண்பாட்டிலிருந்து மீள்வதற்கான தெம்பைத் தரவல்லது.

முன்பு ஒரு விடயம் குறித்த கருத்து பகிர்வு என்பது அது தொடர்பாக பேசப்படுகின்ற குழுவினருக்குள் மட்டும் நிகழும். இன்று அவ்வாறல்ல. சமூக வலைத்தளங்களில் நாம் பேசுகின்ற விடயம் உலகத்தின் கடைசி மூலை வரை வியாபித்துச் செல்லும் நிலையுள்ளது. இப்போது ஒரு கருத்தை முன்பு போல வெளியிட முடியாது. ஒரு கருத்து அது உருவாகும் சூழலில் அதற்கு ஏற்படும் பிரதிபலிப்பு போலவே எல்லா இடங்களிலும் ஏற்பட்டு விடாது. ஒவ்வொரு சூழலிலும் அது வெவ்வேறு வகைப்பட்டதாக நோக்கப்படக் கூடும். இன்றைய சூழ்நிலையில் கருத்தை பகிர்வதும், கருத்தை உள்வாங்குவதும் முன்னைய கால அணுகுமுறையூடாக நிகழவே முடியாது. மற்றமைகளை நோக்கிய கரிசனை இல்லாமல் வெளிப்படும் கருத்துகள் வன்முறைக்கான அடித்தளம் கொண்டிருக்கும். வன்முறையை செலுத்துவதற்கு நாம் யார் என்ற சுய ஆய்வின் படி பிறருக்கான முக்கியத்துவத்தை வழங்குவதை பின்நவீன கால சிந்தனைகள் வலியுறுத்துகின்றன.

ஈஸ்ட்டர் தாக்குதலின் பொழுது பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு இருக்கின்றன. நோக்கம், இந்த தாக்குதலின் வலி தொடர்ந்து எதிர்காலத்துக்கு கடத்தப்படக்கூடாது என்பதே. ஆனால் காத்தான்குடி பள்ளிவாசலின் சேதாரங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனவே. இது உங்களுக்கு முரணாகத் தெரியவில்லையா ?

இதில் என்ன தவறு இருக்கிறது? இரண்டு சம்பவங்களிலும் உள்ள பிரச்சினைகள் பற்றி சிந்திப்பதற்கான அவசியம் எதன்பாலானது? சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை கடந்தகால வலிகளை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வது அவசியமானதுதான். கடந்த கால நிகழ்வுகளை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வது ஒரு பொதுவான நடைமுறைதான். அது சிறுபான்மை மக்களுக்கு மட்டும் விதிவிலக்கானதல்ல.

ஈஸ்டர் தாக்குதலையும், காத்தான்குடி பள்ளி தாக்குதலையும் ஒரே வகையான பயங்கரவாத நிகழ்வுகளாகப் பார்ப்பதில் இருந்து இது போன்ற கேள்விகள் எழக் கூடும். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறான வகைப்பட்டவைகள் என்பதே சரியாகும்.

1990 ல் புலிகள் பலமாக இருந்து கொண்டு இலங்கை அரசுடன் ஒரு மரபு போருக்கு தயாராகிய சூழ்நிலையில் போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் கவனச் சிதறலை ஏற்படுத்தவும், அரசாங்கத்தை தொந்தரவு செய்யவும், தமது போர் நிலத்தில் வாழும் வேண்டப்படாத சமூகக் குழுவான முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்யவும் ஒரு தந்திரோபாயத்தை வகுத்தனர். அதன் மூலம் வடக்கிலிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றவும், கிழக்கிலுள்ள முஸ்லிம்களை படுகொலை செய்யவும் தீர்மானித்தனர். அதன் விளைவே காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். அந்த தாக்குதலில் பெரும் படுகொலை நிகழ்ந்த பள்ளிவாசலின் சேதங்களை முஸ்லிம்கள் பேணி வருவதனை சிலர் விமர்சித்தாலும் அதன் பின்னாலுள்ள காரணங்களை புறந்தள்ள முடியாது.

முஸ்லிம்களை புலிகள் எவ்வாறு கையாள நினைத்தனர் என்பதனை நினைவில் வைத்திருப்பதற்கும், ஏதிலியான ஒரு சமூகம் அதன் எதிர்ப்பை பண்பாட்டு வழியாக எடுத்துரைக்கவும் சிந்தித்திருக்கலாம். அதன் காரணமாக காத்தான்குடி பள்ளியின் தாக்குதல் வடுக்களை இன்றுவரை புனருத்தாரணம் செய்யாமல் விட்டிருக்கலாம். இது யாழ் நூலக எரிப்பையும், 1983 ஜூலை கலவரத்தையும் தமிழர்கள் நினைவு நாளாக இன்றும் அனுஷ்டிப்பதற்கு இணையானது. யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த காய வடுக்களை தமிழ் மக்கள் பல வருடங்களாக அதே தோற்றத்தில் வைத்திருந்தனர். ஆனால் 1994-ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசாங்கம் பலவந்தமாக அதனை புனருத்தாரணம் செய்து தோற்றத்தில் புதுப் பொலிவையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போலவே மஹிந்தவின் கடந்த அரசாங்கத்தில் பேருவளை பள்ளிவாசல் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகியது. அதனை நகர அபிவிருத்தி அதிகாரசபையானது தமது நிதியில் சில வாரங்களுக்குள் விரைவாக புனருத்தாரணம் செய்து காயங்களை மறைத்தது.

வடுக்களை நீண்ட காலமாக பேணி நினைவில் வைப்பது ஒரு அரசியல். அது போலவே ஞாபகங்களில் இருந்து ஒரு வடுவை நீக்கம் செய்வதும் அரசியல்தான். பேருவளை பள்ளியை பொலிவூட்டவும், யாழ் நூலகத்தை பொலிவூட்டவும் எண்ணிய அரசாங்கத்திற்கு காத்தான்குடி பள்ளியை பலவந்தமாக பொலிவூட்டுவதற்கு எண்ணம் ஏற்படவில்லை என்பதும் ஒரு வகை அரசியல்தான். இவற்றையெல்லாம் அந்தந்த கால அதிகார செல்நெறியின் தேவைப்பாடுகளும் நியாயங்களுமே தீர்மானிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான தேவாலயம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த தேவாலயத்தின் காயவடுக்களை விரைவாக மறைத்து விடுவதில் யார் யாருக்கெல்லாம் அக்கறை இருக்கிறதென்பது தெரியாது. அது போலவே அன்றைய தாக்குதல்கள் குறித்த தகவல்களும் வெவ்வேறு வகையாக பரப்புரை செய்யப்படுகின்றன. அது குறித்து பேராசிரியர் ராஜன் ஹூல் எழுதிய விடயம் ஆழ்ந்து யோசிக்கத் தக்கது. அந்த தாக்குதல் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து நாடு தளுவிய பீதியை உருவாக்கி பின்னர் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலோடு தொடர்பு பட்டது எனும் செய்திகளை நாம் அவதானித்தோம். நாளடைவில் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் பூதாகரமாக பேசப்படும் அளவிற்கு குற்றவாளிகள் குறித்த புலனாய்வுகள் தீவிரப்படுத்த படவில்லை அத்துடன் நீதி விசாரணைகளும் விரைவு படுத்தப்படவுமில்லை. ஊடகங்களில் மக்களின் கவனங்களை ஈர்ப்பதற்கான அளவில் மட்டுமே கையாளப்படுகிறது என்பதும் சிந்திக்க வேண்டியவையாகும்.

இவ்வாறான பார்வையில் காத்தான்குடி பள்ளிவாசல் வடுக்களையும், ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களின் வடுக்களையும் ஒன்றாக அணுக முடியாது. இவற்றில் இருந்து ஒரு பொதுவான தொடர்பை உருவாக்க முடியுமானால் இரண்டும் இஸ்லாமிய வெறுப்புவாத அரசியலின் வெவ்வேறு செயல்பாடுகள் என்றே கொள்ள முடியும்.ஒன்றில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னொன்றில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உருவாக்குவதற்கு கொலையாளிகளாக முஸ்லிம்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதான விமர்சனங்களையும் நாம் ஊடகங்களில் காணமுடிந்தது.

மீண்டும் கூறுகிறேன்: 'அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட துயரச் சம்பவங்களின் தடயங்களை அழியாமல் பேணுவதில் குறிப்பிட்ட வகை நியாயங்களும், பிரத்தியேக அரசியலும் இருப்பது போல தடயங்களை மறைப்பதிலும் இருக்கிறது.'

//"1990 ல் புலிகள் பலமாக இருந்து கொண்டு இலங்கை அரசுடன் ஒரு மரபு போருக்கு தயாராகிய சூழ்நிலையில் போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் கவனச் சிதறலை ஏற்படுத்தவும், அரசாங்கத்தை தொந்தரவு செய்யவும், தமது போர் நிலத்தில் வாழும் வேண்டப்படாத சமூகக் குழுவான முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்யவும் ஒரு தந்திரோபாயத்தை வகுத்தனர்". //

எப்படி உங்களால் கிழக்கிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு வேலைகள் நடக்கவேயில்லை என்று சுலபமாகக் கடக்க முடிகின்றது? கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் எங்கிருந்து வந்தார்கள்? கிழக்கிலங்கையில் "கிழக்கில் சிந்திய இரத்தங்கள்" என்ற தலைப்பில் இரா.துரைரத்தினம் தினக்கதிரில் ஒரு கட்டுரை தொடராக எழுதியிருந்தாரே. அதில் ஊர்காவல் படையினர் செய்த இனச்சுத்திகரிப்புகளை விலாவரியாக சொல்லியிருக்கின்றார். இவைகள் யாவுமே 1990 முன்பு நடைபெற்றவை?


/ / கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு //

// கிழக்கிலங்கையில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை //

இந்த விதமான போலிப் பிரச்சாரங்களுக்கு வேறொரு கேள்வியில் பதிலளித்து விட்டதாகவே நினைக்கிறேன். எனினும் சில மேலதிக விடயங்களைக் கூறலாம் என்று தோன்றுகிறது.

கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்ததாக புலிகள் தரப்பு ஊடகங்களாலும், புலி ஆதரவு எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படும் தகவல்கள் மிகுந்த உள்நோக்கம் கொண்டவை. அது கிழக்கில் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலை வரலாற்றை அரசியல் அரங்கிலிருந்து மறைப்பதற்கு உருவாக்கப்பட்ட சதிப்பிரச்சாரமே.

புலிகளின் இனச்சுத்திகரிப்பில் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களுக்கு அண்மையில் இருந்த சில தமிழர்களின் மீது வன்முறைப் பிரயோகம் மேற்கொண்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அதனால் அப்போது அங்கிருந்து சில தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். ஆனால் நிலைமைகள் சீரடைந்ததும் தமிழர்கள் தமது பழைய இடங்களுக்கு திரும்பி விட்டனர்.

கிழக்கில் ஒருபோதும் தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் அளவுக்கு முஸ்லிம்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்ததுமில்லை. அவர்களிடம் அதற்கான வன்முறை நிறுவனங்கள் எதுவும் செயல்படவுமில்லை. ஒரு சமூகத்தை இனச்சுத்திகரிப்பு செய்வதும், வாழ்விடத்திலிருந்து வெளியேற்றுவதென்பதும் சாதாரண மக்களினால் முடியாத காரியம். அது அவ்வளவு எளிதானதல்ல.

யுத்த காலம் முழுவதும் கிழக்கு மக்களின் வாழ்வில் புலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாகவே இருந்தனர். அவர்களின் ஆதிக்கத்தினால் முஸ்லிம்கள் எவ்வகையிலும் பாரியளவிலான படுகொலைகளை மேற்கொண்டு தமிழர்களை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சூழ்நிலை அமைந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு சில நபர்களினால் பழி தீர்க்கப்பட்ட கொலைச் சம்பவங்களை அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தி புலிகளின் கொடுமைகளுக்கு இணையானதாக மாற்றி முஸ்லிம்களை வன்முறைச் சமூகமாக சித்தரிக்கவும், தீர்வு முயற்சிகளிலிருந்து தூரமாக்கவும் பிரயோகிக்கப்பட்ட பிரச்சார உபாயங்களை புலி ஆதரவாளர்கள் இன்றும் ஏந்தித் திரிவது கண்டனத்துக்குரியது. காசி ஆனந்தன் போன்ற குருட்டுக் காவிப் புலிகள் மற்றும் மேலைத்தேய புலிகளும் இன்றளவும் இது போன்ற போலித் திரிபுவாத வரலாறுகளை உருவாக்கி வருகின்றனர்.

கிழக்கில் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை என்பதற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் நிறுவனமயப்பட்ட தொடர்புகள் எதுவும் கிடையாது. அது இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் ஓர் அங்கமாகும். அதன் உருவாக்கம் என்பது கூட புலிகளின் அச்சுறுத்தலை சமாளித்தல் எனும் நோக்கமாகவே இருந்தது.

எண்பதுகளின் பிற்பகுதியில் பொதுமக்களின் வாழ்விடங்களில் உள்ள அரச சொத்துக்களை அழித்து பொதுப்பணிகளை முடக்கும் புலிகளின் செயல்பாடுகளை தடுக்க ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. தொண்ணூறில் முஸ்லிம்களை பெருமளவில் படுகொலை செய்ய புலிகள் தீர்மானித்த போது அதற்கு பாதுகாப்பு வியூகமாக முஸ்லிம் ஊர்களைச் சுற்றி ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவம் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் ஒவ்வொரு ஊரிலுமுள்ள முஸ்லிம் பொதுமக்களை பாதுகாக்க முடியாது என்பதனால் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு சாதாரண தோட்டாவினால் சுடும் துப்பாக்கிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. அது கூட பாதுகாப்பு துறையின் வழி காட்டுதலிலேயே இடம்பெற்றது. இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் எதுவென்றால், நவீன போர்த்தளபாடங்களுடன் ஒரு அரசாங்கத்தை எதிர்கொண்ட புலிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க ஊரக மட்டத்தில் மக்களுக்குள் சில இளைஞர்கள் சாதாரண துப்பாக்கிகளுடன் காவல் காத்தனர் என்பதுதான். புலிகள் அப்பாவி மக்களை படுகொலை செய்தும் அவர்களுக்கான பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும் இருக்காவிட்டால் ஊர்காவல் படை என்ற பிரிவு இராணுவத்தின் துணைக் குழுவாக தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் சில எதிர் விளைவுகள் உருவாவது போல சில தமிழ் கிராமங்களில் ஊர்காவல் படையினரால் விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அதை முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டுவதானது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் இராணுவத்தின் நேரடி நெறியாள்கையிலும், வழிநடத்தலிலும் செயல்பட்ட சாதாரண துப்பாக்கிதாரிகளை முஸ்லிம்களின் அமைப்பாக வியாக்கியானப்படுத்த முடியாது. அத்தோடு இலங்கையின் பாதுகாப்பு துறையில் ஊர்காவல் படை எனும் பிரிவு நிரந்தரமாக உள்ளது. அதில் சமூகங்களின் பெயர் கொண்டு அழைக்கப்படும் அமைப்புகள் எதுவுமில்லை. அரச பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவு நெறி தவறி செயல்பட்டதன் விளைவுகளை முஸ்லிம்களோடு வலிந்து சம்பந்தப்படுத்த எத்தனிப்பது கீழ்மையான முஸ்லிம் விரோத வக்கிர நிலையாகும்.

"அந்த தாக்குதலில் பெரும் படுகொலை நிகழ்ந்த பள்ளிவாசலின் சேதங்களை முஸ்லிம்கள் பேணி வருவதனை சிலர் விமர்சித்தாலும் அதன் பின்னாலுள்ள காரணங்களை புறந்தள்ள முடியாது."// அது என்ன புறந்தள்ள முடியாத காரணங்கள் ............?

புலிகள் மேற்கொண்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவத்தின் சேத வடுக்களை முஸ்லிம்கள் பேணி வருவதன் பின்னாலுள்ள நியாயங்கள் .....

புலிகள் ஒரு பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பைக் கொண்டிருந்த பயங்கரவாத இயக்கமாகும். அது இலங்கையின் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் விடுதலைக்காக போராடுவதாக பிரகடனம் செய்து கொண்டது. அவர்கள் பயன்படுத்திய "தமிழ் பேசும் " என்ற சொல்லாடலினுள் முஸ்லிம் மக்களும் உள்ளடக்கப்பட்டதாக சிலர் கவர்ச்சிகர அர்த்தங்களை எடுத்துரைத்தனர். ஆனால் புலிகள் முஸ்லிம்களை அந்த அர்த்தத்தில் நோக்கவில்லை. தமது இராணுவ உத்திகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலையிலும் முஸ்லிம்களை கையாள நினைத்தனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகம் என்பது சமரில் கையாள பயன்படுத்தும் கருவி. தமக்கு வேண்டிய தருணத்தில் அரவணைப்பது போல் பாசாங்கு செய்யவும், வேண்டாத தருணத்தில் படுகொலை செய்யவும், விரட்டி விடவும் செய்தனர். இந்த நடைமுறையானது புலிகளின் போராட்ட காலம் முழுவதும் தொடர்ந்தது.

இந்திய இராணுவத்தையும் அதனோடு இணைந்து செயல்பட்ட பிற இயக்கங்களையும் நாட்டை விட்டு வெளியேற்றியதும், ஜனாதிபதி பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட புலிகள் வடக்கில் உக்கிரமான யுத்தம் ஒன்றுக்கு ஆயத்தமாகினர். அதன் போது அவர்கள் புது வகையான உபாயம் ஒன்றினை மேற்கொண்டனர். தமது போராட்ட ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வசித்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றவும், தமது ஆளுகைக்கு உட்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்களை படுகொலை செய்யவும் தீர்மானித்தனர். அதன் மூலம் தமிழர்களை மட்டும் தாயகமாகக் கொண்ட தனிநாட்டை உருவாக்கலாம் என நினைத்தனர்.

அந்த முஸ்லிம் விரோத வெறித்தன செயல்பாட்டின் ஒரு வடிவமே காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். அதன் மூலம் புலிகள் தமது நிலைப்பாடு குறித்து தெளிவாக வெளியுலகத்துக்கு ஒரு சேதியை முன்வைத்தனர். முஸ்லிம்கள் எனப்படுவோர் தமிழர்கள் கிடையாது என்பதேயது. தமது போராட்டம் முஸ்லிம்களுக்குமானதல்ல என்பதும் இன்னொரு சேதியாகும். அந்த வரலாற்றுத் திருப்பத்தை நினைவூட்டும் அரசியல் சுவடுகளில் காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் முக்கிய ஆதாரமாகும்.

சிங்கள பெரும்பான்மையின் அடக்குமுறைக்குள்ளிருக்கும் சிறுபான்மை மக்களை விடுவிப்பதற்கான போராட்டம் என்ற கொள்கை விளக்கம் அளித்து வந்த புலிகள், அடக்குமுறைக்குள் சிக்கிய முஸ்லிம் சிறுபான்மையை கொன்று குவித்ததன் மூலம் அவர்கள் மக்களுக்காக போராடும் இயக்கம் அல்ல என்பது நிரூபணமான தருணமது. அவற்றின் மூலம் புலிகள் பயங்கரவாதிகள்தான் என்பது உறுதியானது. இவை போன்ற வரலாறுகளை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்தியம்பக் கூடிய நியாயங்களை காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் எனப்படுவோர் தமிழ் சமூகத்திலிருந்து அரசியல் ரீதியாக வேறுபட்ட தனித்துவமான சமூகம் என்பதற்குமான நியாயப்பாடுகளையும் உணர்த்துவதற்கான அரசியல் முக்கியத்துவத்தை காத்தான்குடி பள்ளிவாசல் சேதங்கள் கொண்டிருக்கின்றன.

"யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதன் பின்னர் எஞ்சியிருந்த காய வடுக்களை தமிழ் மக்கள் பல வருடங்களாக அதே தோற்றத்தில் வைத்திருந்தனர்". /// அன்று வடக்கில் அரசு இயந்திரம் என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் அன்றே யாழ் நூலகம் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும் என்பதே யதார்த்தம் .......இந்தநிலையில் உங்கள் முடிச்சு வியப்பைத்தருகின்றது?

அரச இயந்திரம் முற்றாக செயல்படாமல் முடங்கியிருநந்தது என நீண்ட காலப்பகுதியை உங்களது சௌகரியத்துக்கு கூறுவதாகவே இதனை எடுத்துக் கொள்வேன். நீங்கள் கூறுவது போல் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலமாக அரச நிருவாகம் முடங்கியிருந்ததென்பது தவறான வாதமாகும்.

யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது 1981-ல் ஆகும். அதன் பிறகான காலத்தில் அங்கு பல்வேறு தேர்தல்கள் இடம்பெற்றுள்ளது. 1990 ஆரம்பம் வரை யாழ்ப்பாணத்துக்கு கொழும்பில் இருந்து புகையிரத சேவை இடம்பெற்று வந்தது. அரசாங்க பாடசாலைகள் யாவும் இயங்கின. அரச அலுவலகங்கள் அனைத்திலும் பொதுப்பணிகள் நடந்தன. அரச ஊழியர்கள் பணிகளை ஒழுங்கு முறையில் செய்தார்களோ இல்லையோ மாதச் சம்பளத்தை தவறாமல் பெற்றனர். இவை யாவும் அரச இயந்திரம் யாழில் முடங்காமல் செயல்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்.

1983 கலவரத்துக்குப் பிறகான சூழலில் தமிழ் ஆயுதக் குழுக்கள் விரைவாக செயல்படத் தொடங்கிய போதிலும் யாழில் அரச நிருவாகங்கள் முறைப்படி இயங்கியது. வங்கிகள், தபால் நிலையங்கள் அனைத்தும் இயங்கின. புலிகளும் ஏனைய இயக்கங்களும் பல்வேறு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட செய்திகளிலும் யாழில் அரச நிருவாகம் இயங்கியது என்பதற்கான ஆதாரமுண்டு.

1983 ஜூலை கலவரத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு நாட்டில் இருந்து வெளியேறினர். அதனால் தமிழ் பிரதேசங்களுக்கான மக்கள் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் இருந்த போதிலும் அதிகாரிகளின் துணையுடன் அது கிரமமாக நடந்தது என்பதே உண்மை. ஆனபோதும் அரச அதிகாரிகளை தமிழ் ஆயுத இயக்கங்கள் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கையாள முற்பட்டனர். அதன் அடிப்படையிலேயே யாழில் சிவில் நிருவாகம் தொடர்ந்தது. அவர்கள் நினைத்திருந்தால் யாழ் நூலகத்தை புதுப்பொலிவுடன் நிர்மாணித்து பேணியிருக்க முடியும். 1984 காலத்தில் யாழ் நூலகம் சிறிதளவு புனரமைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தாக்குதல் சம்பவங்களால் அது மீண்டும் சேதமுற்றது. தமிழ் ஆயுத இயக்கம் ஒன்று யாழ் நூலக வளாகத்தினுள் முகாம் அமைத்திருந்ததும் இதற்கு காரணம் . எனவே யாழ் நூலகத்தின் சேத வடுக்களை பேணி அரசியல் செய்வதில் தமிழ் தரப்புகள் அக்கறை கொண்டிருந்தன என்பது உண்மை.

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் யாழ் நூலகம் புனரமைக்கப்பட்டதில் தமிழ் தரப்புகள் சிலவற்றுக்கு விருப்பம் இருக்கவில்லை என்பதும் உண்மை. அவர்கள் பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கியதும் உண்மை.

"வடுக்களை நீண்ட காலமாக பேணி நினைவில் வைப்பது ஒரு அரசியல். அது போலவே ஞாபகங்களில் இருந்து ஒரு வடுவை நீக்கம் செய்வதும் அரசியல்தான்". // ஒரு நாட்டில் போர் நடந்து முடிந்து பாதிப்படைந்த பகுதிகளை புனருத்தாரணம் செய்து மீள்கட்டுமானப்பணிகளை கோருகின்ற நாங்கள் வடுக்களை மட்டும் நீண்டகாலமாகப் பேணவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயமானது /அறமானது?

போரில் பாதிப்படைந்த பகுதிகளை புனருத்தாரணம் செய்வது ஒரு பொதுவான நடைமுறைதான். அழிவுகள் இடம்பெற்று சிதைவடைந்த பகுதிகளை அதே தோற்றத்துடன் நீண்ட காலம் வைத்திருக்க எண்ணுவது ஒரு வகையில் பிரச்சினைதான். அழிவுகளின் தடத்தை பேணுவதும் அல்லது புதுப் பொலிவை உருவாக்கி மறைத்து விடுவதும் வெவ்வேறு வகையான அரசியல் நோக்கங்களோடு சம்பந்தப்பட்டது.

ஆனால் அரசாங்கத்தின் வளங்களாக அறியப்படுகின்ற பொதுமக்களின் பாவனைக்கான இடங்களை இந்த விதமான அரசியல் விளையாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தின் பக்கமிருந்தும், மக்களின் பக்கமிருந்தும் வரும் அபிப்பிராயங்களுக்கு செவிமடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்தவகையில் யாழ் நூலகமானது அரசாங்கத்தின் பணியிடமாகும். அதனால் எல்லாக் காலத்திலும் அதனை ஒரு தரப்பு நினைப்பது போல் கையாள முடியாது போனது.

ஆனால் காத்தான்குடி பள்ளிவாசல் ஆனது அரசாங்க சொத்தல்ல. அந்த ஊர் முஸ்லிம் மக்களின் சொத்து. அதனை அம்மக்கள் நினைக்கும் விதத்தில் பேணுவதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. இது போல ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிப்புக்குள்ளான தேவாலயங்களும் கிறிஸ்தவ மக்களின் சொத்தாகும். அதை எவ்வாறு பேண வேண்டும் என்பதில் அம்மக்களுக்கு அக்கறை இருக்கும். அந்த தேவாலயங்களின் வடுக்களையும், சேதங்களையும் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று அவர்கள் எடுத்த தீர்மானத்திற்கு வலுவான பின்னணிக் காரணங்கள் இருக்க முடியும்.

வளைகுடா நாடுகளுக்கான முஸ்லீம்களது பொருளீட்டல் புலப்பெயர்வும் வஹாபிஸம் இலங்கையில் வேரூன்ற ஒருகாரணமாயிற்று என்பது தொடர்பாக .....?

வஹாபிஸம் என்பது மக்கள் விரோதமானதா அல்லது அதுவும் ஒரு சமூக சீர்திருத்த முறை சார்பான கருத்தியலா என்ற விடய தெளிவு இல்லாமல் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதா எனும் சந்தேகம் எனக்குண்டு. வஹாபிஸம் என்பது இஸ்லாமிய சமய சடங்குகளுக்குள் நிலவுகின்ற உள்ளக கருத்தியல்களில் உள்ள இஸ்லாமிய சிந்தனை மரபுகளில் ஒன்று. இது போல பல வகையான சிந்தனை மரபுகள் உள்ளன. இதனை இலங்கையில் வாழும் முஸ்லிம்களோடு பொத்தாம் பொதுவாக பொருத்தி ஒற்றையான ஒரு சடங்குச் சமூகமாக சித்தரிப்பதே இக் கேள்வியின் நோக்கமாக இருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் அரேபிய தொடர்பு என்பது எட்டாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. இலங்கையில் காலனித்துவ ஆதிக்கம் உருவான போது பண்பாட்டு ரீதியாகவும், கல்வி, பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஐந்நூறு ஆண்டு கால ஆதிக்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் சிதைவும், பின்னடைவும் ஏற்பட்டது.

இலங்கையில் ஐரோப்பிய ஆதிக்கத்தின் பிந்திய பகுதியில் எகிப்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒராபி பாஷாவின் வருகையோடுதான் மீண்டும் பண்பாட்டு தொடர்ச்சியும், கல்வியில் மறுமலர்ச்சியும் இங்கு முஸ்லிம்களுக்குள் துளிர்த்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக பல்வேறு அரேபிய முஸ்லிம் அறிஞர்களும், சமூக நலன்புரி அமைப்புகளும் இலங்கை முஸ்லிம்களோடு தொடர்புகளை உருவாக்கி பேணி வந்திருக்கின்றனர். இவைகளுக்குள் வஹாபிய சிந்தனை முகாம்களும் அடக்கம்.

அரேபிய சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததன் பிறகான காலங்களில் இந்திய முஸ்லிம்களுடனான தொடர்புகள் வலுப்பெற தொடங்கியது. குறிப்பாக தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தொடர்புகள் உருவாகியது. அது பொருளாதார அனுகூலங்களை ஏற்படுத்தாதது.

இலங்கை முஸ்லிம்களுக்குள் பல்வேறு இஸ்லாமிய சிந்தனை மரபுகளின் பின்னணிகளைக் கொண்ட அமைப்புகளின் தொடர்பானது சுதந்திரத்திற்கும் முந்திய வரலாறுகளைக் கொண்டது. இந்த சிந்தனை மரபுகள் சம்பந்தமான விடயங்கள் யாவும் சமய கல்வியுடன் தொடர்புடைய அறிஞர்கள் மூலமாகவும், கலாசாலைகள் மூலமாகவுமே இலங்கையில் பரவலடைந்தது.

வஹாபிய சிந்தனை மரபானது இறுக்கமான சீர்திருத்த நடைமுறைகளைக் கொண்டது. இது சவூதி அரேபியாவில் உருவானது. அங்கு இது போல இன்னும் பல சிந்தனை மரபுகள் உள்ள போதும் செல்வாக்கு மிக்கது. அங்குள்ள அரசின் துணையுடன் வளர்த்தெடுக்கப்பட்டது. அதனால் இலகுவாகப் பரவுவதற்கு ஏதுவாகியது.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜிய உறவானது ஆரம்பத்தில் இருந்தே தொடர்வதனால் இரு நாட்டு முஸ்லிம் மக்களுக்குமிடையிலான பரஸ்பர தொடர்பானது நெருக்கம் மிக்கது. இரு நாட்டு மக்களும் வெவ்வேறு இனம், மொழி ஆகிய பேதங்களைக் கொண்டிருந்தாலும் சமய ரீதியான உறவு வழியில் இறுக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கின்றனர். ஹஜ் போன்ற சமய நிகழ்வுகள் இங்குள்ள இஸ்லாமியரை சவூதியோடு நேரடியாகவே தொடர்பு படுத்துகிறது. இந்த வழிமுறையில் பல்வேறு நலத் திட்டங்களூடாக அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் இலங்கை மக்களுக்கு உதவுகின்றன. அவற்றுள் இஸ்லாமிய கல்விக்கான உதவிகளும் அடங்கும்.

சவூதி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் பல்வேறு வர்த்தக உறவுகள் தொடர்கின்றன. இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளில் சவூதியும் முக்கியமானது. இலங்கையின் இலட்சக் கணக்கான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நாடு. இவ்வாறான தொடர்பைக் கொண்ட ஒரு நாட்டின் பண்பாடானது இலங்கை போன்ற நாட்டில் வாழும் அதே சமய வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் வழியாக பெருகாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் வஹாபிய சிந்தனை மரபுக்கு மாற்றான பல்வேறு கருத்தியல்களும் இலங்கை இஸ்லாமியருக்குள் வளர்ச்சியடைந்துதான் இருக்கிறது.அண்மையில் காலமான ஈராக் நாட்டு இஸ்லாமிய அறிஞரான பேராசிரியர் தாஹா ஜாபிர் அல் அல்வாணி (Thaha Jabir Al Alwani) யின் கருத்தொன்று இங்கு சுட்டிக்காட்ட பட வேண்டியதாகும்.

"ஒரு சிந்தனை மரபின் பரவுதலானது ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குள் இடம்பெறும் போது அங்கு அதனை முழுவதுமாக எதிர்க்கும் குழுக்கள் அந்த பண்பாட்டை பின்பற்றும் மக்களுக்குள்ளேயே இருக்கக்கூடும். அச்சிந்தனை மரபை எதுவித விமர்சனமும் இன்றி முழுவதுமாக ஏற்று அடிமைகள் போல பின்பற்றும் கூட்டமும் இருக்கும். வேறு தேசத்திலிருந்து நுழைகின்ற சிந்தனை மரபொன்றின் சிறந்த அம்சங்களை ஏற்றுக்கொண்டு, தமது தேசத்திற்கு பாதகங்களை உருவாக்கக் கூடிய அம்சங்களை புறக்கணித்து விட்டு தமது பண்பாட்டோடு சேர்த்து மேலதிக செழுமையை உருவாக்கும் குழுக்களும் இருக்கும். இந்த வகையான குழுவே ஆக்கபூர்வமானது" என்கிறார்.

இலங்கை போன்ற சிறுபான்மை முஸ்லிம்களை கொண்ட நாடுகளுக்கு இதுவே பொருத்தமானதும் கூட. இப்படியான நடைமுறையில் இஸ்லாமிய சிந்தனை மரபுகள் இலங்கையில் செயல்படுத்தப்படக் கூடிய நிலை இருந்தாலும் இஸ்லாமிய வெறுப்புவாத பிரச்சாரங்கள் எல்லா முஸ்லிம்களையும் தீவிர அடிப்படைவாதிகளாகவே சித்தரிக்க முயல்கின்றன. அதற்கு வஹாபிஸத்தின் ஜனரஞ்சகமும் ஒரு காரணமாகிறது. அத்தோடு வஹாபிய சிந்தனைகளை எதுவித விமர்சனங்களுமின்றி அரேபிய அடிமைகள் போல ஏற்றுக்கொண்டு வாழ முயற்சிப்பவர்களும் காரணமாகின்றனர்.

வஹாபிஸம் சவூதியின் சிந்தனைச் சரக்காகும் என்பதை அறிவோம். இலங்கை முஸ்லிம்கள் பொருளீட்டலுக்காக சவூதி அரேபியாவுக்கு மட்டுமே சென்று கொண்டிருப்பதான தோற்றமும் இந்த கேள்வியில் தொனிக்கிறது. அல்லது அனைத்து வளைகுடா நாடுகளும் வஹாபிஸத்தை பொதுவான கருத்தியலாக அனுசரிக்கின்றன எனும் அர்த்தமும் உருவாக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் உள்ள எல்லா நாடுகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் பொருளீட்டலுக்காக செல்கின்றனர். அவர்கள் பணி புரியும் நாடுகளில் பொருளீட்டும் முஸ்லிம்கள் வழியாக சமய சிந்தனை மரபுகள் தருவிக்கப்பட வாய்ப்புகளில்லை. சமய சிந்தனை மரபுகளானவை கல்விப் புலமை கொண்ட அறிஞர்கள் வழியாகவும், கலாசாலைகள் வழியாகவும் மட்டுமே பரவ வாய்ப்பிருக்கிறது. மாறாக ஏழைத் தொழிலாளர்கள் வழியாக சமய சிந்தனை மரபுகள் பரவுதற்கு வாய்ப்புகளில்லை என்பதனால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகவும் தோற்றமளிக்கிறது.

இலங்கையில் உள்ள பிற சமூகங்களான தமிழர்களின் ஹிந்து சமய பண்பாடும், சிங்களவரின் பௌத்த சமய பண்பாடும் தென்னாசியாவின் பல்வேறு நாடுகளில் இருக்கிறது. தமிழர்களுக்கும் இந்திய தமிழ்நாடு தமிழர்களுக்கும் நீண்ட கால தொடர்பிருக்கிறது. அதேபோல இலங்கை பௌத்தர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாட்டு பௌத்தர்களுக்கும் சமய வழி தொடர்பிருக்கிறது. ஆனால் அது பண்பாடு வழியாக புனரமைக்கப்படாதது. ஆனால் அரேபிய நாடுகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்குமான தொடர்புகள் புனரமைப்புக்குட்படுபவையாக உள்ளது.

தமிழ்நாடானது சினிமா, இலக்கியம் போன்றவை வழியாக இலங்கைத் தமிழர்களை சுரண்டி தொடர்பை பேணுகின்றன. பௌத்த நாடுகள் இலங்கையோடும் சிங்கள மக்களோடும் தனித்துவமான நாடு என்ற வகையிலான தொடர்பை மட்டுமே பேணுகின்றன. இந்த வகை தொடர்பினால் முஸ்லிம்கள் போல இந்தச் சமூகங்கள் சமய, பொருளாதார அனுகூலங்களை பெறவில்லை. தமிழர்களை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது சுரண்டலுடன் கூடிய ஒரு வழிப்பாதை உறவுதான். இவை போன்ற காரணங்களால் முஸ்லிம்கள் மீது பிற சமூகத்தினருக்கு பொறாமையும், அச்சமும் ஏற்படக் கூடும்.

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் பொருளாதார பலம் மிக்கதாகவும், சமய வழியில் தொடர்புகளைப் பேணி உதவுபவையாகவும் உள்ளதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு அது சமய, பொருளாதார வாய்ப்பாக மாறியிருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் வஹாபிஸ கருத்தியலை முற்று முழுதாக முன்னெடுப்பதற்கான நிர்ப்பந்தங்களோடு அது இல்லை என்பதே உண்மை. ஆனால் இஸ்லாமிய விரோத மனநிலையை விதைக்க விரும்புபவர்கள் இதை மறுதலித்து மிகச் சிறிய அளவில் செயல்படும் கடும்போக்கு வஹாபிஸ கருத்தியலை அனைத்து முஸ்லிம்களினதும் நடவடிக்கைகளோடு தொடர்பு படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் எவ்வாறு ஜிகாத்தும் சர்வதேசப் பயங்கரவாத வலைப்பின்னலும் உருவாகிற்று?

இந்தக் கேள்வி இலங்கை முஸ்லிம்களை நோக்கி கேட்கப்படுவதாக அமைந்தால் அது உள்நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும். மேலும் இந்தக் கேள்விக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கக் கூடியது இலங்கை அரசாங்கமே. அதனால் இந்தக் கேள்வி இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட வேண்டியதாயினும் இதற்கான பதிலை நாமும் பல்வேறு தகவல்கள் வழியாக சிந்தித்து கண்டடைய முடியும்.

ஈஸ்டர் படுகொலைக்குப் பிறகு இலங்கையில் உருவாகியிருக்கும் முஸ்லிம் வெறுப்பு சூழலானது திடீரென பிறந்த ஒன்றல்ல. அது கடந்த மஹிந்த ஆட்சியின் நடுப்பகுதியில் திட்டமிட்டு உருவாக்கம் பெற்று படிப்படியாக நிறுவனமயப்பட்டதாகும்.

சமூக வலைதளங்களில் பரவலான அவதானத்தைப் பெற்றிருக்கும் தொழிற்சங்க பிரதானி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் கூறிய பேச்சொன்று முக்கியமான விடயம் என கருதுகிறேன். அதில் ஈஸ்டர் தின பயங்கரவாத செயல்களுக்குப் பின்னால் உள்ள ஒரு தனி நபர் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவர் எத்தனித்தார். வெவ்வேறு சமூகங்களிலும் தமக்கு வேண்டிய விதத்தில் மத விரோத வெறித்தனங்களைச் செய்யக் கூடிய குழுக்களின் மூலம் மக்களிடையே குரோதங்களை விதைத்து சமூகங்களைத் துண்டாடி விரிசலாக்கி விட்டு கடந்த அரசாங்கத்தின் மீது பழி போட ஒருவர் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

அவராகவே மக்களுக்குள் வன்செயலைத் தூண்டுவார். அவராகவே சமூகங்கள் மீது வெறுப்பை விதைப்பார். அவராகவே சமூக அமைதியைக் குலைப்பார். இறுதியில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டில் அமைதியை கொண்டு வர முடியும் என பிரச்சாரம் செய்வார் என்று 2019 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்த படி இருந்தது. மேற்படி குற்றச்சாட்டுகள் யாவும் முன்னாள் பாதுகாப்புக்கு பொறுப்பானவரை நோக்கியே முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் இலங்கையின் உள்நாட்டு அரசியலானது அரசியல் தீர்வு எனும் திசை நோக்கி செல்ல வேண்டிய அவசியப்பாடு இருந்தது. இலங்கையின் அப்போதைய சிறுபான்மை விரோத அரசாங்கமானது புலிகளை அழித்து விட்ட நிலையில் தீர்வு வழங்குவது அவசியமற்றது என நினைத்தது. அதனால் உள்நாட்டின் அமைதியான சூழலைச் சீர்குலைத்தால் மாத்திரமே தீர்வை விலக்கி வைத்து விட்டு மக்களின் கவனங்களையும் திசை திருப்பி வாழ்க்கைச் சுமை குறித்த விழிப்புணர்வையும் கலைத்து விட முடியும் என எண்ணியது. அந்த தந்திரோபாயத்தின் செயல் வடிவமாக கொண்டு வரப்பட்டதுதான் முஸ்லிம் வெறுப்பரசியல்.

அதற்கென மூன்று வகையான குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழு தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த குரு மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் கலவரங்களையும் தூண்டி விடுவதாக அமைக்கப்பட்டது. மற்றொரு குழு முஸ்லிம் சமுதாயத்துக்குள்ளிருந்து தீவிரவாதத்தை முன்னிறுத்தும் வகையாக உருவாக்கப்பட்டது. இன்னொரு குழு முஸ்லிம் வெறுப்பையும் ஹிந்து மத வெறியையும் தூண்டும் சாயல் கொண்டதாகவும் அமையப் பெற்றது. புலிகளின் அழிவுக்குப் பிறகு அரசியல் அரங்கில் பேசு பொருளற்றிருந்த தரப்பினர் அனைவருக்கும் இதன் மூலம் விடயதானம் கிடைத்தது. ஆனால் மக்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் நிர்மூலமாகியது.

அக்காலத்தில் ஹலால் பிரச்சினை, கிறீஸ்மேன் பிரச்சினை, பேருவலை கலவரம், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அழிப்பு என பல அட்டூழியங்களின் பின்னணியில் இந்தக் குழுக்களின் பங்களிப்புகள் இருந்தன. அதன் பிறகு ஏற்பட்ட ரணிலின் ஆட்சி காலத்தில் நிலமைகள் ஓரளவு சீரடைந்தன.

அந்த புதிய சூழலை சமூகங்களுக்கு இடையிலான நட்புக் காலமாக மாற்றி விட பல்வேறு சிவில் அமைப்புகளும் விரும்பின. கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவான சிங்கள மக்களுக்கு பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் களத்தில் நின்று உதவி புரிந்தன. அதன் மூலம் முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு நேயம் உருவானது. ரணில் அரசாங்கம் அமைவதற்குத் துணை நின்ற பௌத்த மத குரு மாதுலுவாவே சோபித தேரரின் இறப்பின் போது அவரது இறுதிக் கிரியையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை கூட சிங்கள மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்கும் காரியமாக அமைந்தது. இவை ரணில் அரசாங்க காலத்தின் பாராட்டுக்குரிய சகவாழ்வு அம்சமாகத் திகழ்ந்தது.

ஆனால் சிறுபான்மை வெறுப்பில் அரசியல் அதிகாரத்தை அடைய திட்டமிட்டிருந்தவர்களுக்கு அந்தச் சூழல் அசௌகரியங்களை தரவல்லதாகவே இருந்தது. அதனால் திகன கலவரத்தை உருவாக்கி சமநிலைகள் குலைக்கப்பட்டது. அதன் பின்னர் கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டதான சம்பவங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட போது பெரும்பான்மை சமூகம் மீண்டும் உலகளவில் குற்றவாளிகளாக நோக்கப்பட்டனர். அந்த அவப் பெயரைத் துடைக்க வேண்டிய தருணத்தை முஸ்லிம் வெறுப்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சிறுபான்மை சமூகங்களோடு நல்லுறவுடன் நடந்து கொள்வது போன்ற ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். 2019 ன் ஜனாதிபதி வேட்பாளராக தான் வருவதை பெரும்பான்மை சமூகம் தீவிரமாக ஆதரிக்க வேண்டுமென்றால் தான் ஒரு மீட்பர் போன்ற தோற்றம் உருவாக்கப்பட வேண்டும் எனும் தேவையும் எழுந்தது. அது போலவே தன்னை ஆதரித்து வாக்களிக்காமல் விலகிச் செயல்படக் கூடிய முஸ்லிம் சமூகத்தை புதிய வெறுப்புச் சூழல் ஒன்றுக்குள் சிக்க வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனும் தேவையும் இருந்திருக்கக் கூடும். அந்த நோக்கங்களின் அறுவடைதான் ஈஸ்டர் படுகொலை என்பது போன்றதொரு மறைமுக வியாக்கியானத்தைத் தருவதாகவே குறிப்பிட்ட தொழிற்சங்க தலைவரின் உரை அமைந்திருந்தது.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெருமளவு பணமும், வேறு உதவிகளும் உள்நாட்டில் வைத்து பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டதற்கு சான்றுகள் இருப்பதாக தனது உரையில் தொழிற்சங்க பிரதானி கூறினார். இதனை முந்திய கால நிலவரங்களின் பின்னணியோடு உணரவும் முடியும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த வகையில் ஊர்ஜிதமானவை என்பதை உளவுத்துறைகள்தான் நிரூபிக்க வேண்டும். அண்மைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதுவும் சந்தேகமே. ஆனாலும் இந்தக் கொடுஞ் செயலின் தன்மைகளை நோக்கும் போது உள்ளூர் அரசியல் தேவை ஒன்றுக்கான திட்டம் திரை மறைவில் இருந்திருக்காது என நம்ப இயலவில்லை. இந்த விதமான ஊகங்களை பலரும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக பேசி வரும் போது இன்னொரு புறம் முஸ்லிம்களுக்கு எதிரான குரல்கள் தீவிரமடையவும் செய்தது.

ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் குறித்து பயங்கரவாதத்திற்கு சாய்வான ஒரு மொத்தத்துவ புரிதலை உருவாக்குவதில் சில தரப்புகள் ஈடுபட்டன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதற்காக செயல்படுபவர்கள் உள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு குறித்த மேலைத்தேய ஊடகக் கருத்துக்கள் வழியாக சிந்திப்பவர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் பெருவாரியான அரசியல் விழிப்புணர்வு குறித்த தெளிவற்றவர்கள்.

பிரான்ஸ் நாட்டு அரசியல் ஆய்வாளரான ஒலிவியர் ரோய் ( Olivier Roy) எழுதிய Who Are The New Jihadis எனும் கட்டுரை சில வருடங்களுக்கு முன்னர் The Guardian பத்திரிகையில் வெளிவந்தது. அதனை

" மறுத்தோடி " இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்திருந்தேன். அதில் அவர் இஸ்லாமிய ஜிஹாதிகள் மேலை நாடுகளில் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்திருந்தார். அதில் குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாத இழி செயலுக்கான முன் தயார்படுத்தல்கள் போன்ற எதனையும் இலங்கையில் அவதானிக்க முடியவில்லை.

இன்று பெரும்பாலான தமிழ், சிங்கள ஊடகங்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப எத்தனிக்கின்றன. இந்த முயற்சிக்குள் மறைமுகமான முஸ்லிம் வெறுப்பு செயல்படுவதையும் மறுக்க முடியாது.

ஈஸ்டர் படுகொலையில் பெரும்பாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாகவும் இருப்பதனால் இந்த வெறுப்பு உருவாகியிருக்குமா என்றால் இதுவே ஒரு முக்கிய காரணமாய் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. அப்படியானால் படுகொலை நடத்திய பயங்கரவாதிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் விமர்சிப்பதாக மேற்குறித்தவர்களின் குற்றச்சாட்டுகள் அமைந்திருக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளியாக்குவதிலும் அவர்களை இனி பயங்கரவாதிகளாகவே கையாள வேண்டும் எனும் பெருவிருப்பத்திலும் பலர் செயல்பட எத்தனிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தவல்லது.

இங்கு சில விடயங்கள் கோடிட்டு காட்டப்பட வேண்டியுள்ளது. அதாவது ஈஸ்டர் படுகொலை இடம்பெற்ற சில மணித்துளிகளிலேயே இலங்கை முழுவதிலுமிருக்கும் முஸ்லிம்கள் அச்சம்பவத்தை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது முக்கியமாகும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்திருந்தும் அதற்கு முஸ்லிம்கள் காட்டிய பதில் நடவடிக்கைகள் சிந்திக்க வேண்டியவை.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் காயமடைந்தவர்களுக்காக இரத்த தான பணிகளை முன்வந்து முன்னெடுத்தவர்கள் முஸ்லிம்களே. பயங்கரவாதிகளின் கொடுஞ் செயலை அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பகிரங்கமாக கண்டித்தனர். இஸ்லாமிய மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புகள், கழகங்கள் என அனைத்து முஸ்லிம் தரப்புகளும் சில மணி நேரத்திற்குள் தமது எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் பதிவு செய்தன. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முஸ்லிம்களின் கண்டனங்களும் எதிர் விமர்சனங்களும் எண்ணிலடங்காமல் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள், தாம் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதை வலியுறுத்தினர். அது மட்டுமல்லாது சம்பவம் இடம்பெற்ற ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நாட்டின் பல பகுதிகளிலும் பதுங்கியிருந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்களை முஸ்லிம் மக்களே பாதுகாப்பு தரப்பிடம் தகவல்களை வழங்கியதன் மூலம் கைது செய்யவும், தேடி அழிக்கவும் முடிந்தது. அத்துடன் அவர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் முஸ்லிம் மக்களே கண்டுபிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்கள் தமக்கு பயங்கரவாத செயல்களில் உடன்பாடில்லை என்பதை உலகறியச் செய்தனர். ஆனாலும், இந்த விடயங்கள் யாவற்றையும் மறைத்து முஸ்லிம்கள் மீது பயங்கரவாத ஒப்பனைகளை அணிவிக்க ஒரு தரப்பு முயன்றது. அதற்கென எழுத்தாளர்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை பலர் விறுவிறுப்புடன் செயல்பட்டார்கள்.

இன்று முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனையும் அந்தத் தரப்பினருக்கு அதற்கான எந்தவித அருகதையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் யாவரும் இலங்கையில் ஏற்கனவே தமிழ் ஆயுததாரிகளால் நிகழ்த்தப்பட்ட மனிதகுல அழிவுகளின் போது மௌனம் காத்தவர்கள்தான். இலங்கையில் பல்லாயிரம் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட போது மௌனமாக இருந்து சந்தோசம் அடைந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக காண்பிக்க முண்டியடிப்பது இழிவானது.

புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தமிழர்களின் பக்கமிருந்து அதனை மனிதாபிமான அடிப்படையில் வெகுஜனங்கள் கண்டித்திருக்கவில்லை. பள்ளிவாசல்களுக்குள் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை புலிகள் படுகொலை செய்த போது தமிழர் பக்கமிருந்து சில மனிதாபிமான ஊடகவியலாளர்களையும், சில எழுத்தாளர்களையும் தவிர வேறு எவரும் பரிதவிக்கவில்லை. ஒப்பற்ற மௌனமே அந்த சமூகத்தின் பக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி மௌனமாய் இருந்திருப்பார்கள் என்றுதான் முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டனர். அதனால் முஸ்லிம்களின் கண்டனங்கள் யாவும் அப்போது புலிகளை நோக்கியதாகவே இருந்தது. ஆனால் ஈஸ்டரின் பின்னர் நடந்தது அது போல இல்லை.

ஆனால் அன்று முஸ்லிம்கள் சிந்தித்தது போல தமிழர்கள் இன்று சிந்தித்தார்களா எனும் கேள்வி முக்கியமானது. அது போலவே தமிழர்கள் அன்று மௌனமாய் இருந்தது போல இன்று முஸ்லிம்கள் மௌனமாய் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதும் முக்கியமானது.

இந்த இரண்டு விதமான நடத்தைகளின் கோலத்தை வரலாற்றின் பின்னோக்கிய பரிசீலனைக்கு உட்படுத்திச் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது அன்று தமிழ் சமூகம் அரசியல் அபிலாஷை என்ற பெயரில் பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்து அழிவுகளை தன்னகத்தே அரவணைத்துக் கொண்டதேயொழிய தீர்வுகளைக் கண்டடையவில்லை. முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதத்தை வெறுத்து எதிர்க்குரல் எழுப்புவதன் மூலம் தமது எதிர்காலத்துக்கான அமைதியை வேண்டி நிற்கிறார்கள். வீராப்புடன் நின்று அழிவதை விட தலை தாழ்ந்து மன்னிப்பு கேட்பது தவறாகாது என்றும் கருதினர்.

இத்தனைக்கும் இந்நாசகார சூழ்ச்சிக்குள் தமது சமூகம் சிக்க வைக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு சமூகமானது செய்யாத குற்றம் ஒன்றுக்காக மன்னிப்புக் கேட்டு மண்டியிடுவதைப் போன்றதொரு இழிவான நிலைமையை அனுபவிக்க முடிந்தமை பேரவலம். அப்படியானதொரு அடக்குமுறை அழுத்தத்தைச் சுமந்துதான் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் இன்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு புறம் ஜிஹாத் பற்றிய பழங்கதைகளும் இன்றைய இலங்கைச் சூழலில் நிலவும் இறுக்கத்திற்கு முன்னோடியாக அமைந்து விட்டன.

எண்பதுகளில் தமிழ் பிரிவினைப் போராட்டம் உக்கிரமடைந்த போது அதை பல்வேறு வழிகளிலும் முடக்க இலங்கையின் பாதுகாப்புத்துறை முயற்சிகளை மேற்கொண்டது. இராணுவத்திற்கு புறம்பாக துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி தமிழ் பிரிவினைவாதத்தை தகர்க்க நினைத்தது. இதற்கென மூன்று சமூகங்களுக்குள்ளும் இருந்து தனியான துணை இராணுவக் குழுக்களை உருவாக்கியது. சிங்கள எல்லைக் கிராமங்களை பாதுகாத்தல், முஸ்லிம் கிராமங்களை பாதுகாத்தல் எனும் காரணங்களுக்காக ஊர்காவல் படைகளை உருவாக்கியது. புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவை உருவாக்கப்பட்டன. இது போலவே புலிகளினால் அச்சுறுத்தப்பட்ட மாற்று இயக்கங்களை ஒருங்கிணைத்து வேறு துணை இராணுவக் குழுக்களையும் உருவாக்கியது. இவை மக்களைப் பாதுகாத்தனவா என்பதை விட அரசின் உள்ளடி நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அதிகம் உதவின என்பதே உண்மை.

இவை மூலம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளூர் பிணக்குகளும், துவேஷங்களும், பழிவாங்கல்களும் தூண்டி விடப்பட்டன. இந்த துணை இராணுவக் குழுக்களுக்கு அரசே ஊதியம் வழங்கியது. ஆனாவ் இவற்றின் நாசச் செயல்களுக்கு பாதுகாப்புத்துறை பொறுப்பேற்பதில்லை என்பது முக்கியமான சேதி. இது போன்ற துணை இராணுவக் குழுக்களில் செயல்பட்ட முஸ்லிம்களை தமிழ் மக்கள் அரசின் கூலிப்படை என பார்க்காமல் முஸ்லிம் தீவிரவாதிகள் என நோக்கும் படியான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

முஸ்லிம் கிராமங்களில் செயல்பட்ட ஊர்காவல் படையினர் தம்மை வழிநடத்துவது அரசுதான் என்று தெரிந்திருந்தாலும் ஜிஹாத் போராளி போல பெருமைப்பட்டுக் கொண்டனர். அப்போது பலஸ்தீன போராட்டமும், ஆப்கானிஸ்தான் போராளிகளின் போராட்டமும் முஸ்லிம்களுக்குள் கவர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது. அங்கிருந்த ஜிஹாத் போராளிகள் போல அவர்கள் தம்மை கற்பனை செய்து கொண்டதும் ஒரு காரணம். அதேநேரம் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்களை அச்சுறுத்தியதும் தமிழர்கள் மீது எதிர்ப்பு மனநிலை உருவாக காரணமாயிருக்கலாம். அதுவே முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு தீவிரவாத இயக்கம் செயல்படுவது போன்ற அவதூறு பிரச்சாரங்களுக்கும் காரணமாயிற்று.

காலப்போக்கில் புலிகளின் அழிவோடு இவை யாவும் முடிவுக்கு வந்திருந்தாலும் தற்போதைய முஸ்லிம் வெறுப்பு அரசியல் சூழலில், குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு முஸ்லிம்களுக்குள் ஜிஹாத் எனும் தீவிரவாத அமைப்பு இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பாகி விட்டது. இந்த வாய்ப்பை தமிழர்களும், சிங்களவர்களும் தமக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவே பார்க்கின்றனர்

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் இலங்கையின் உள்நாட்டு அரசியலானது அரசியல் தீர்வு எனும் திசை நோக்கி செல்ல வேண்டிய அவசியப்பாடு இருந்தது.// விடுதலைப்புலிகள் மீது உங்களைப் போல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் , ஒரு இனத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்தை 'நீங்கள் எப்படி புலிகளின் பயங்கரவாதம்' என்று சிங்கள அரசு சொல்வது போல் சொல்ல முடியும்? 

புலிகளின் பயங்கரவாதம் ஒரு இனத்துக்கான போராட்டமா?

என்று இந்த கேள்வியை திருத்தி புதிய விவாதம் ஒன்றை உருவாக்கலாம். ஆயினும் உங்கள் கேள்விக்கான பதில் கூறுவதை முதல் தெரிவாக கொள்கிறேன்.

தமிழ் இன விடுதலைப் போராட்டம் என்ற பதத்தினால் சுட்டப்படுகின்ற அபிலாஷைக்குட்பட்ட விடயங்கள் கூட பல்வேறு முனைகள் வழியான விவாத நியாயங்களோடு முட்டி மோத வேண்டியவை. அதை தவிர்த்து தமிழ் சமூகத்துக்கு நியாயமான விடுதலை ஒன்று அவசியம்தான் என உணரும் நிலையிலிருந்து தமிழ் ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை நோக்கினால் கூட அது விசனத்துக்குரியவை போலவே தோற்றமளிப்பவை.

ஆரம்பம் முதலே போராட எத்தனித்தவர்களுக்குள் விடுதலைக்கான நியாயங்கள் குறித்து தெளிவான பார்வைகள் இருந்ததா என்பது சந்தேகமே. போராட்டத்துக்குத் துணையான சித்தாந்த வெளிச்சம் தமிழ் விடுதலை உணர்வுக்கு கிடைத்ததா என்பதும் நிச்சயமில்லை. ஏனெனில் இயக்கங்களின் தலைவர்களுக்கு வெவ்வேறு நாடுகளோடு சுயாதீனமான அரசியல் உறவை பேண வேண்டிய பொறுப்பில்லாமல் கைப்பாவைகளாக செயல்படுவதற்கு இருந்த ஆர்வத்தினால் சுதேச சமூக விடுதலை வேட்கையை உருவாக்கி தேசமாக திரள்வதற்கான எண்ணத்தை விதைப்பதற்கான தடங்கல்கள் இருந்தது.

அதனால் பல்வேறு குழுக்கள் உருவாக காரணமாயிற்று. அண்டை நாட்டின் கைக்கூலிகள், மேலை நாடுகளின் கைக்கூலிகள் என்னும் சர்வதேசப் பொறிக்குள் தமிழ் இயக்கங்கள் ஆரம்பத்திலேயே சிக்கிக் கொண்டதனால் முரண்பட்ட போராட்ட உபாயங்களும், பழியுணர்ச்சி மிக்க போட்டியும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் தமிழினத்தின் விடுதலையை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பை புலிகள் ஏகபோகமாக ஆக்கிக் கொண்டனர். அதன் பிறகான கால் நூற்றாண்டு கால போராட்ட அரசியலின் பல்வேறு நெருகடிகளிலிருந்தும் மக்களையும் மண்ணையும் காப்பாற்றத் தவறி புலிகள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அவர்களுக்கான அழிவை உறுதி செய்தது. அந்தப் பாதையை இரு உலக அனுபவங்களுடன் பொருத்தி ஒப்பீடு செய்யு முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு நேபாளத்தில் " பிரச்சண்டா " ஆளும் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையே உருவான முரண்பாட்டினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல நேபாளத்தில் அதிகாரச் சீர்திருத்தங்களுக்காக ஆயுத வழியில் போராடிய முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர். புஸ்பகமல் தல் என்ற இயற் பெயர் கொண்ட அவர், தான் ஏற்ற விடுதலைப் போராட்டத்தின் கடுமையான செயல்பாட்டின் காரணமாக " பிரச்சண்டா " (கடுமையாளன்) எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து நூற்றுக் கணக்கான கிலோ மீற்றர் தூரங்களுக்கு அப்பாலுள்ள கிராமத்தில் பிறந்தவர்.நேபாள மக்களின் வறுமைக்கான காரணங்களை அறிந்த அவர் அங்கு நிலவிய ஆட்சிக்கு எதிராகப் போராட முடிவெடுத்தார். மறைமுக அரசியலில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் 1981 ல் இணைந்தார். மாவோவாத வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். நிலப் பிரபுத்துவம், தொழில் துறையில் அந்நிய முதலீடு என்பவற்றுக்கு எதிரான சீர்திருத்த முழக்கங்களை அவர் முன்வைத்தார். 1989 காலப்பகுதியில் கட்சியின் தலைமைப் பதவியான செயலாளர் நாயகம் எனும் நிலையை அடைந்தார்.

ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டம் ஒரு கட்டத்தில் நியாயமான தீர்வு நோக்கி நகர்ந்த போது யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஜனநாயக வழிக்குத் திரும்பினார். இந்தியா, சீனா போன்ற அண்டை நாடுகளுடன் அவரது தொடர்புகள் நல்ல நிலையில் இருந்ததினால் தனது போராட்டத்தை பயனுள்ள காரியமாக மாற்றிக் கொள்ளும் ராஜதந்திரியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

மக்களுக்கான போராட்டம் என்பது யுத்தம் மட்டுமே செய்து கொண்டிருப்பதல்ல. சரியான தருணங்களில் மக்களின் நலன் சார்பாக சாமர்த்தியமான முடிவுகள் எடுப்பதன் மூலமும் அண்டை நாடுகளுடன் நியாயமாக நடந்து கொள்வதன் மூலமும் நாட்டு மக்களின் வாழ்வை சிறப்பாக்கலாம் என்பதுதான் பிரச்சண்டாவின் போராட்ட வாழ்க்கையிலிருந்து நாம் காணும் உண்மையாகும்.

அதேபோல அண்மித்த காலத்தில் நாம் கண்ட இன்னொரு அரசியல் விடுதலைக்கான முன்னுதாரணமாக கிழக்கு திமோரைக் குறிப்பிடலாம். இந்தோநேசியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் இச்சிறிய பிரதேசம் பதினாறாம் நூற்றாண்டில் போத்துக்கீய ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. பதினொரு லட்சம் மக்களைக் கொண்ட இந்நாடு போத்துக்கீய திமோர் என்றே அழைக்கப்பட்டு வந்தது. போத்துக்கீய மொழிதான் அங்கு பேசப்படுகிறது. உள்நாட்டில் சுயாட்சி கோரிப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் திமோர் புரட்சிகர விடுதலை முன்னணி 1975 ல் ஒருதலைப்பட்சமாகத் தமது சுதந்திரத்தை அறிவித்தது. அப்போது அந்நாட்டுக்குள் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்ட குழுக்கள் பல இருந்தன.

இது இடம்பெற்று சரியாக ஒன்பது நாட்களின் பின்னர் இந்தோநேசிய அரச இராணுவம் மேற்கின் துணையுடன் கிழக்கு திமோரை ஆக்கிரமித்துத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அத்தோடு கிழக்கு திமோரை இந்தோநேசியாவின் இருபத்தேழாவது மாகாணமாகவும் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு திமோரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. பிரிவினைவாத இயக்கமான FRETILIN தனது போராட்டங்களை பல்வேறு முனைகளிலும் தொடர்ந்தது.

Xanana Gusmao போராட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தக் காலப் பகுதியில் இந்தோநேசிய இராணுவத்தால் கடுமையான வன்முறைகளும் இன அழிப்புகளும் இடம்பெற்றன. ஆனாலும்

FRETILIN ன் போராட்டங்கள் ஓயாமல் தொடர்ந்தது. அவுஸ்திரேலியா, போத்துக்கல் போன்ற நாடுகள் போராளிகளின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தன.

இந்தோநேசியாவின் ஆதிக்கத்தை ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டது. சுஹாட்டோ இந்தோநேசிய உள் விவகார அரசியலில் செல்வாக்குச் சரிந்து பதவி விலகிய வேளையின் போது அண்டை நாடுகளும் போத்துக்கல்லும் தமது பலப் பிரயோகங்களையும் காண்பிக்க கிழக்கு திமோருக்கு விடிவு காலம் கனிந்தது.

1999 ல் இந்தோநேசியாவுக்கும் போத்துக்கல்லுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சில வருடங்களில் அங்கு ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் கிழக்கு திமோர் மக்களின் சுய நிர்ணய உரிமை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் அங்குள்ள மக்கள் வெற்றி பெறவே சுதந்திர நாடு உருவானது. இருபத்தைந்து வருட ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை வகித்த Xanana Gusmao நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மேற் சொன்ன இரண்டு போராட்டங்களும் வெவ்வேறானவை என்ற போதும் சாதகமான முடிவுகளை நோக்கி நகர்ந்தவை. இவற்றின் தலைவர்களின் அணுகுமுறைகள் உலக நாடுகள் சார்ந்தும் உள்நாட்டு மக்கள் சார்ந்தும் நேர்மையாக அணுகப்பட்டவை. இரண்டு போராட்டங்களிலும் உள்ளக அரசியல் முரண்பாடுகள் எதிர் நிறுவன வன்முறை நிலைப்பாடுகளாக வடிவம் கொள்ளவில்லை. இரண்டு சூழலிலும் போராட்ட பூமியின் எல்லைக்குள்ளிருந்த பொது மக்கள் படுகொலையாக்கப்படவோ அல்லது கேடயங்களாகவோ பயன்படுத்தப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டக் காரர்களுக்கு அண்டை நாடுகளோடு நல்ல உறவு இருந்தது.

இவை யாவும் நமது அனுபவங்களில் விடப்பட்ட அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டியபடி இருப்பதை உணரலாம். இது போன்ற சந்தர்ப்பம் 1987 ல் எமக்கும் ஏற்பட்டது. ஆனால் அதனை புறந்தள்ளி அழிவுப் பாதையை தேர்ந்தெடுத்தவர்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் இயக்கத்திடம் மக்களின் விடுதலைக்கான நேர்மையான உபாயங்கள் இருக்கவில்லை. ஆனால் பயங்கரவாதிகளுக்கான அத்தனை தகுதிகளும் இருந்தன.

அண்மைக்கால உலக போராட்ட வரலாறுகளை நாம் நோக்கும் போது சில விடயங்கள் முக்கியமானதாக புலப்படும். அது போராட்டத் தலைமைகளின் ஆளுமை பற்றியதாகும். அநேகமாக கடந்த நூற்றாண்டில் கெரில்லா போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்கள் பெரும்பாலும் உலக அரசியல் நிலவரங்களையும், அரசியல் ராஜதந்திரங்களையும் நுட்பமாக அணுகும் வல்லமை பெற்றவர்களாகவும் கல்வி அறிவில் மேம்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். தேர்தல் ஜனநாயக அரசியல் தலைவர்களை விடவும் கெரில்லா தலைவர்களுக்கு இவை இன்றியமையாததாகும். அரசுகளின் ராஜதந்திரக் கணக்குகளையும், போர்க்களத்தின் வியூகங்களையும் ஒற்றை மனிதனாக இருந்து கணிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் அசாத்தியமான ஆளுமைத் திறன் வேண்டும். அந்த திறன் வாய்க்கப் பெற்ற தலைவர்களே கடந்த நூற்றாண்டில் பல்வேறு விடுதலைப் போராட்டங்களையும் முன்னெடுத்து மக்களுக்கான விடிவுகளைக் கண்டிருக்கின்றனர். அவர்களில் பிரபாகரன் பெயரை உள்ளடக்கவே முடியாது.

பிரபாகரனின் போராட்ட வாழ்வு என்பது அசட்டு உத்வேகத்தினால் உருவாக்கம் பெற்றதாகும். தமிழரசுக் கட்சியின் தேர்தல் கோஷங்களில் உணர்ச்சி வயப்பட்டு வாழ்வைத் தொலைத்த பல்லாயிரம் இளைஞர்களின் தளபதியாகவே பிரபாகரன் தென்படுகிறார். அவர் அரசியல் அடிப்படைகளையோ அல்லது போராட்ட அரசியலையோ துறை ரீதியாக கற்றுத் தேறியவருமில்லை. அது போல அனுபவ ரீதியாக பயின்றவருமில்லை. உலக விபரம் புரியாத பராயத்தில் ஏற்பட்ட உணர்ச்சியேற்றத்தில் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்று விட்டு காட்டுக்குள் தலைமறைவானதில் இருந்து ரகசிய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதனையே தனது போராட்ட வாழ்வாக ஆக்கிக் கொண்டார்.

அரச நெருக்குவாரங்களுக்கு அஞ்சிப் பதுங்கத் தொடங்கிய வாழ்வு காலப்போக்கில் மெதுவாக போராளிப் பரிமாணம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து குற்றங்களை இலகுவாகச் செய்யவும், மனித குலத்திற்கு எதிரான தண்டனைகளை வழங்கவுமான அற நியாயங்களை பிரபாகரன் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார். அந்த விகார நிலைக்கு இன விடுதலையின் பெயரால் பாவ விமோசனம் பெற்றுக் கொள்வதற்கான தந்திரங்களை வகுத்தார். இந்த அடிப்படையில் மெருகேறிய பிரபாகரனின் விடுதலைப் போராட்டமானது இலக்குகளற்ற பாதையில் பயணமானது.

நாளடைவில் தமிழின விடுதலைக்காக தமது வாழ்வை போராட்ட நெருக்கடிகளில் செலவிட்ட மாற்று இயக்கங்களின் தலைவர்களையும், அந்த இயக்கங்களின் பிடியில் சிக்கியிருந்த போராளிகளையும் கொன்று குவிப்பதற்கான முடிவை பிரபாகரன் எடுத்த போது அவரது இன விடுதலைப் போராளி எனும் வேஷம் கலைந்து பயங்கரவாதிக்கான நிஜத் தோற்றம் மேலெழுந்தது.

ஒரு தேசத்தின் அரசியல் சூழல் என்பது பன்மைத்துவமான கருத்தியல் அம்சங்களைக் கொண்டது. இன விடுதலை என்ற இலக்கிற்காக ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு உபாயங்களையும் அணுகுமுறைகளையும் கைக்கொள்ளக் கூடும். அது அரசாங்கத்திற்கு சவாலான நெருக்கடிகளாகவே இருக்கும். ஆனால் அவை எல்லாவற்றையும் சிதைத்து அழித்து விட்டு ஒரேயொரு போராட்ட முகாமாக உருவாவதனை அரசு கையாள்வதற்கு இலகுவாகவே இருக்கும். அந்த வகையில் தமிழின விடுதலைப் போராட்டத்தை சிதைத்ததில் பிரபாகரனுக்கு பெரும் பங்குண்டு. தான் மட்டுமே போராட்டக் களத்தில் நிஜமான போராளியாக நிற்க வேண்டுமென அவர் சிந்தித்திருப்பாராக இருந்திருந்தால் அது முட்டாள்தனமான யோசனை என்பதை இறுதிப் போரின் போது நிச்சயம் உணர்ந்திருப்பார்.

தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் இந்திய அனுசரணையை நம்பி இலங்கையில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பித்ததில் ஒரு அரசியல் நியாயம் இருந்ததாக எடுத்துக்கொண்டால் அதன் உச்சப் பயன் 1987 அமைதி ஒப்பந்தமும், அதனோடு சாத்தியமான மாகாண சபை முறையும்தான். அதனை முன்கூட்டியே ஒரு தீர்வாகக் கணித்துச் செயல்பட்ட ஸ்ரீ சபாரத்னம், பத்மநாபா போன்ற விடுதலை இயக்கத் தலைவர்களை கொன்று அவர்களின் இயக்கங்களையும் தடை செய்து வடக்கு கிழக்கில் சகோதரப் படுகொலைகளை அரங்கேற்றியதன் மூலம் தன்னிடம் சாத்தியமான தீர்வு குறித்துச் சிந்திப்பதற்கான ஆற்றல் இல்லை என்பதை நிரூபித்த பிரபாகரன் கொலைகளின் கலைஞனாக அரசியல் அரங்கில் அம்பலமானார்.

1987 காலத்தில் போரினால் கொல்லப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். சொத்து இழப்புக்களும் குறைவாகும். அப்போது வடக்கு, கிழக்கு சிறுபான்மையினருக்கு மாகாண சபை என்பது முக்கியமான தீர்வுதான். அதில் போதியளவு அதிகாரங்கள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டாலும் அதை ஜனநாயக வழியில் சாத்தியப்படுத்துவதற்கான அரசியல் பண்பாடொன்றை சிறுபான்மையினர் கட்டியெழுப்பியிருக்க முடியும். சிங்கள தேசத்துடனான நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம் அதை அடைந்திருக்க முடியும். வடக்கு, கிழக்கின் நீண்ட கால பாதுகாப்புக்கு இந்திய இராணுவத்தின் ஒத்தாசைகளையும் பெற்றிருக்க முடியும். இவை எல்லாவற்றையும் நாசம் செய்தவர் பிரபாகரன். இதன் மூலம் மக்களுக்கான சாத்தியமான தீர்வில் நாட்டம் இல்லாமல் பயங்கரவாத அணுகுமுறையில் தனக்கிருக்கும் மோகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தினார் பிரபாகரன். ஏனெனில் அதன் பிறகான 22 வருடங்களிலும் தமிழ் மக்களுக்கு அழிவுகளையும், உயிரிழப்புகளையும் மட்டுமே பிரபாகரனால் வழங்க முடிந்தது.

ஆனால் 1987 ல் சாத்தியமான மாகாண சபை நடைமுறை இன்றும் அமுலில் இருக்கிறது. அதை அதிகாரமற்றதாக சிதைப்பதற்கு சிங்கள பேரினவாதம் முயல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியவர் பிரபாகரன்தான்.

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மீண்டுமொரு இரத்தக்களரிக்குள் நாட்டை தள்ளி விட்டதன் மூலம் சமாதானத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய பிரபாகரன் மாகாண சபை முறை இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக பல்வேறு பழி தீர்க்கும் தாக்குதல்களை மேற்கொண்டார். அதன் மூலம் இந்திய அரசோடும் நேரடியான மோதலை உருவாக்கினார். இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதை தென்னிலங்கை கடும்போக்கு சிங்கள அமைப்புகள் விரும்பவில்லை. அத்தோடு ஜே.ஆர். அரசாங்கத்திற்குள் இருந்த மாற்றுத்தரப்பினரும் விரும்பியிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மாகாண சபை முறையை ஏதாவது வகையில் சீர்குலைக்கவே எண்ணினர். அந்த எண்ணத்திற்கு வடக்கு, கிழக்கில் ஒத்தாசையாக பிரபாகரன் இயங்கினார். அவர் எண்ணப்படி வடக்கு, கிழக்கில் மாகாண சபை முறை அன்று உருவாகாமல் விட்டிருந்தால் இன்று சிறுபான்மையினருக்கு எதுவுமே இல்லாமல் போயிருக்கும். அதனால் அரசியல் தூர நோக்கற்ற அழிவுச் சக்தியின் பிரதிநிதியாகவே பிரபாகரன் செயல்பட்டார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அவரது புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தலாம்.

இந்த நிலையில், "நிரந்தர யுத்தத்தை விட தற்காலிக சமாதானம் மேலானது " எனும் கோஷத்துடன் மாகாண சபை முறையை ஆதரித்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய போராட்டத் தலைவரான பத்மநாபாவின் வார்த்தைகளும், அரசியல் அணுகுமுறைகளும் ஓரளவு விடுதலைக்கான அர்த்தத்தை உணர்த்தி நின்றதாகவே எண்ண முடியும்.

தமிழ் பிரிவினைவாத போராட்டத்தின் எந்தவொரு காலகட்டத்திலும் புலிகள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்ட அமைப்பாகக் கருதுவதற்குரிய எடுத்துக்காட்டுகள் கிடையாது. உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எப்போதும் அரசுகளை நோக்கியதாகவே இருக்கின்றமையால் விடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள் காலத்துக்கேற்ற வகையில் போராட்ட உபாயங்களை மாற்ற வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது. இதனை சிந்தித்து கையாளத் தெரியாத அளவிற்கு நாசகாரச் செயல்களின் பக்கம் மட்டுமே கவனம் கொண்டிருந்த அமைப்பு பிரபாகரனின் புலிகள் இயக்கமாகும்.

பிரபாகரனும், புலிகள் இயக்கமும் மட்டுமே தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை குறித்து அக்கறை கொண்டிருந்ததாக பரப்பப்படும் கதைகள் அரசியல் பன்முகத் தன்மைக்கு எதிரானவை. அமிர்தலிங்கம் முதல் டக்ளஸ் வரையான எல்லா மிதவாத அரசியல்வாதிகளும் தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர்கள்தான். சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் சமாதான தீர்வு குறித்த ஆவணத்தை வரைவதில் நீலன் திருச்செல்வம் பெரும் பங்காற்றினார். இவர் போல தமிழ் சமூகத்தின் மீட்சிக்காக சிந்தித்த எத்தனையோ தலைவர்களை கொன்றொழிப்பதில் தீவிரம் காட்டிய பிரபாகரனும், புலிகளும் தமிழ் சமூகத்திற்கு எதுவித தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்காமல், போர் வெற்றியையும் ஈட்ட முடியாமல் பெரும் அழிவுகளையும், அரசியல் பின்னடைவையும் மட்டுமே வழங்கி விட்டு மாண்டு போனமையானது பயங்கரவாதத்தின் முடிவு என்பதாகவே அர்த்தப்படுத்தக் கூடியதாகும்.

புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலங்காலமாக வாழ்ந்த நிராயுதபாணிகளான பிறிதொரு சமூகமான முஸ்லிம்களை தமது வாழ்விடங்களிலிருந்து துரத்தியதும், கொன்றொழித்ததும் புலிகளின் பயங்கரவாத நிலைப்பாடேயன்றி வேறில்லை.

போராட்டத்தில் யார் எதிரி, யார் நண்பன் என்ற வரையறை எதுவும் இல்லாமல் செயல்பட்ட புலிகள் அப்பாவி சிங்கள மக்களை பிரதான இலக்காக வைத்து பல்வேறு அழிவுகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களையெல்லாம் குண்டுவெடிப்புகள் மூலம் கொலைக்களமாக மாற்றிய புலிகளின் திட்டங்கள் பயங்கரவாத உபாயங்களன்றி வேறில்லை. 1995 ஜயசிகுறு இராணுவ நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்னடைவை சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த புலிகள், தமது காவலுக்கு பல்லாயிரம் அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு நகர்ந்தனர். அது கூட பயங்கரவாத செயல்பாடுதான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அண்டை நாட்டு தலைவரான ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் சர்வதேச அளவில் தமது பயங்கரவாத செயல்பாடுகளை விஸ்தரித்த புலிகள், உலக அரங்கில் கடுமையான கெடுபிடிகளுக்கு உள்ளாகினர். பல்வேறு நாடுகளும் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி தடை செய்தன.

இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் அப்பாவி பொதுமக்களை போர்க்களத்தில் மனித கேடயங்களாக பாவித்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கான கடைசி முயற்சிகளையும் மேற்கொண்ட புலிகளை வரலாறானது விடுதலைப் போராளிகள் என்ற அடைமொழி கொண்டு அழைக்க விரும்பாது என்பதே உண்மை.

இறுதியாக, தமிழ் மொழியைப் பேசுகின்ற எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் முடிவடைந்து 10 வருடங்களை கடந்து விட்டோம். இந்தப் போர் எங்களை மாற்றியமைத்து இருக்கின்றதா? ஆம் என்றால் எப்படியாக? இல்லையென்றால் எந்தவிதத்தில் ?

போர்ச் சூழல் எவ்வாறு உருவானது, போரை தொடுத்தவர்கள் யார், போரின் நேரடியான பங்குதாரர்கள் யார், போருக்கு நீண்ட காலமாக ஆதரவு வழங்கியவர்கள் யார், போரை எதிர்த்து நின்றவர்கள் யார், செய்வதறியாது போர் வாழ்வினுள் சிதைந்தவர்கள் யார், போர் மூலம் அதிகார நிறுவனத்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் யார் போன்ற விடயங்களில் தெளிவான புரிதலைப் பெறாமல் இதற்கு பதிலளிப்பது சிரமமாகும்.

தமிழ் பிரிவினைவாதம் என்பதன் தோற்றமும் அதன் இறுதி நிலையும் பற்றிய விரிவான பார்வை இல்லாமல் போர் கட்டவிழ்க்கப்பட்ட ஒன்றா அல்லது தவிர்க்க முடியாமல் உருவானதா என்ற கருத்துகளுக்கு பதில் தேட முடியாது.

சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கையின் அரசியல் சூழலில் உருவான தமிழ் அரசியல் நெருக்கடியானது ஆரம்பத்தில் பிரிவினைவாதமாக உருப்பெற்றிருக்கவில்லை. வளங்கள் மீதான பங்கிடுதலில் ஏற்பட்ட பாரபட்சங்களும் அதனை நிறைவேற்றுவதற்கு தடையான அதிகாரத்திலும் உருவான நிருவாகச் சிக்கல்களே அரசியல் பிரச்சினைகளாக எழுந்தன. சுதந்திரத்திற்கு முந்திய இலங்கையின் அரச நிருவாக சேவைகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தவர்களே நிறைந்திருந்தனர். சிங்களவர்களின் வீதத்தோடு ஒப்பிடுகையில் இது அதிகமாகும். சுதந்திரத்திற்குப் பிறகான காலங்களில் இது சீர்படுத்தப்பட்ட போது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக போராட்டங்கள் தொடங்கின. ஆரம்பத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை, மொழிப் பிரச்சினை, இட ஒதுக்கீடு என முன்னெடுக்கப்பட்ட பிரச்சினைகள் காலப்போக்கில் தனிநாட்டுக் கோரிக்கையாக வளர்த்தெடுக்கப்பட்டு வன்முறை வடிவம் பெற்றது. அதன் பிறகு கெரில்லா போர், மரபு ரீதியான போர் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்ட பிரிவினைவாதம் இறுதியாக 2009-ல் மாபெரும் அழிவுடன் முடிவுற்றது.

அந்தப் போர் எவ்வாறு உருவாக்கம் பெற்றது. அதன் பின்னால் இருந்த மறைவான அரசியல் நோக்கங்கள் என்ன என்பதையெல்லாம் தமிழர்கள் சிந்திக்கத் தவறினர். கடந்த நூற்றாண்டில் உலகமெல்லாம் தொடங்கிய விடுதலைப் போராட்டங்களில் பெரும்பாலானவை தீர்வுகளுடன் நிறைவு பெற்றாலும் தமிழ் பிரிவினைவாதம் அழிவுகளுடன் முடிவுற்றதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். உண்மையில் 1987 ல் தமிழ் பிரிவினைவாதப் போர் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகான யுத்தம் தமிழ் மக்களை நிரந்தரமான அழிவுக்கும், பின்னடைவுக்கும் இட்டுச் செல்வதற்கான யுத்தமே என்பதை எங்களைப் போன்ற தரப்பினர் கூறிய போது பலரும் அதை ஏற்கவில்லை. 2009 ற்கு பிறகுதான் அது புரிந்தது.

தமிழர்கள் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளில் இருந்து இதுவரைக்கும் பாடங்களைக் கற்றிருக்கிறார்களா எனும் கேள்வி மிக முக்கியமானது. அவர்கள் 1980 களுக்கு பிறகு ஏதாவது காலகட்டத்தில் பாடங்களைக் கற்றிருந்தால் இன்றுள்ளதைப் போன்றதொரு நாசமான நிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை. 1987-ல் கிடைத்த தீர்வின் கணிசமான பகுதியைத்தான் நாம் இன்றும் கூட அனுபவிக்க முடிகிறது. இதை முறையான ஜனநாயக அரசியல் போராட்டங்களூடாக வளர்த்தெடுக்காமல் நிரந்தர யுத்தத்தை தெரிவு செய்ததே தமிழர்களின் மிகப்பெரும் தவறாகும். அரசியல் வரலாற்றின் முக்கியமான தருணங்களில் தமிழ் தலைமைகள் விடுகின்ற தவறுகளால் இங்கு நிரந்தர அமைதி பாதிப்படைந்தது உண்மை. தமிழ் மக்களை வழிநடத்திய தலைமைகள் மக்களின் மனங்களில் நியாயமான அபிலாஷைகளை விதைக்காமல் இனவிரிசலையும் அவநம்பிக்கைகளையும், அதீத கனவுகளையும் குரூர அரசியல் ஆசையாக விதைத்ததின் விளைவே இங்கு அமைதி திரும்பாமல் போனதற்கு காரணமாயிற்று. இந்த வெகுஜன உளவியல் இன்றுவரை தொடர்வதுதான் கொடுமையானது.

தமிழ் பிரிவினைவாதமானது முதலில் சிங்கள அதிகார வர்க்கத்தை எதிரியாக நோக்கியது. பிறகு சிங்கள பொதுமக்களையும் எதிரியாக உருவகித்துக் கொண்டது. இதனால் போராட்ட நியாயங்கள் மாசுபட்டன. பின்னர் முஸ்லிம்சிறுபான்மையினரையும் தமது அக்கறைகளுக்குள் இருந்து வெளியேற்றியதன் மூலம் 'ஒடுக்கப்படும் சமூகம் ஒன்றின் போராட்டம்' எனும் அந்தஸ்தை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று வெறுப்புடன் அணுகும் நிலை தோன்றியது என்பதே உண்மை.

இறுதிப் போருக்குப் பிறகு சிறுபான்மைச் சமூகங்கள் ஒருங்கிணைந்து தமக்கான அரசியலை முன்னெடுப்பதே பாதுகாப்பானது என்ற நிலை இருந்தும் அதை நிகழ விடாமல் தடுப்பதற்கான அரசியல் திட்டங்களை அதிகார வர்க்கம் அமுல்படுத்தி வருகிறது.

இந்த அடிப்படையில் நோக்கினால்:

// எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் // என்ற வார்த்தையானது நியாயமற்ற அர்த்தங்களைக் கொண்டதாகவே அமையக் கூடும்.

முஸ்லிம் மக்கள் போரை எக்காலத்திலும் விரும்பியிருக்கவில்லை. அதேநேரம் எந்தவொரு இனக்குழுவோடும் அரசியல் ரீதியாகப் பகையையும், வெறுப்பையும் கொண்டிருக்கவுமில்லை என்பதே உண்மை. அதனால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அத்துமீறல்களை தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தின் யுத்தத்தோடு ஒன்றாக நிரல்படுத்தி அர்த்தம் கற்பித்து விட முடியாது.

ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் என்பது அவர்களின் பெரும்பாலான தரப்பினரால் விரும்பி ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு சிங்கள அரசோ அல்லது இராணுவமோ தமிழர்கள் மீதான போரை தாமாகவே கட்டவிழ்த்து விட்டதாக உறுதியாக கூறவும் முடியாது. அது நீண்ட விவாதத்துக்குரிய விடயமாகும்.

இலங்கையில் சிறுபான்மைகள் என்ற அடிப்படையில் தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படுவதன் ஊடாகவே ஆக்கபூர்வமான வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது வெளிப்படை. இது போர் காலத்திலும் தமிழ் ஆயுதக்குழுக்களின் அதிகார மமதையினால் தவற விடப்பட்டது. இன்று போருக்கு பிந்திய சூழலிலும் மிதவாத அரசியலின் சமூக விரோத சூழ்ச்சிகளினால் தவிர்க்கப்படுகிறது. சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது ஏதோவொரு வகையில் தேர்தல் அரசியலுக்கு பயன்படும் காரணியாக இருப்பதனால் இதனை சரி செய்வதற்கு அரசியல்வாதிகள் முயற்சிப்பதில்லை.

தமிழ் அரசியல் தரப்புகள் எப்போதும் முஸ்லிம்களை மனம் திறந்த நிலையில் அனுசரித்த வரலாறுகளில்லை. வளங்களை சமூகங்களுக்கு இடையில் பங்கிடுவதில் சிங்களவர்களைப் போல தமிழர்களும் பாரபட்சம் காட்டுவதாக முஸ்லிம்களுக்குள் அதிருப்தியுண்டு. அதேபோல முஸ்லிம்கள் மீது விசுவாசம் கொள்வதில் தமிழர்களுக்கு சந்தேகங்களுமுண்டு. இவையனைத்தும் அரசியல் நோக்கங்களால் உருவாக்கி வளர்க்கப்படுபவை. இவைகளைக் கடந்துதான் நமக்கான எதிர்காலம் இருக்கிறது.


கோமகன் -பிரான்ஸ் 




Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம