கோமகன் : அதென்ன சாத்திரி ………. ?
சாத்திரி : அது என்னுடைய நண்பன் ஒருவனின் புனை பெயர்தான். திருகோணமலை குச்சவெளி கரையோர கிராமத்தை சேர்ந்தவன். சிறந்த மாலுமி. சிறந்த போராளி நிச்சயம் ஒரு சிறந்த சமையல்காரனாக இருப்பான் என்று சொல்வார்கள், அதே போல அவனும் சிறந்த சமையல்காரன். ஒரு கடல் விபத்தில் இறந்து போய் விட்டான். அந்த சம்பவமோ அவன் பெயர் விபரமோ வெளியே தெரிய வந்திருக்கவில்லை. அப்படிப் பலர் இருக்கிறார்கள். பின்னர் நான் எழுத தொடங்கியபோது அவனின் புனை பெயரை எனதாக்கிக் கொண்டேன்.
இன்னுமொரு காரணமும் உண்டு:
பொதுவாக எமது மக்கள் ஒரு செயலை அல்லது நிகழ்வை செய்ய முன்னர் ஊரிலுள்ள சாத்திரியார் ஒருவரிடம் போய் நல்ல நேரமோ ஆலோசனையோ கேட்கும் பழக்கமுள்ளது. அவர் வாயில் வந்த எதை சொன்னாலும் அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை மக்களிடமுண்டு. அதே போல கடுமையான என் கட்டுரைகள் வெளியாகும் போது சாத்திரியார் சொன்னா சரியாகத்தானிருக்கும் என்கிற மனோ நிலைக்கு மக்கள் பொருந்திப்போய் விடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருந்ததும் ஒரு காரணம்.
கோமகன் : எழுத்துப்பரப்பில் நீங்கள் ஒரு கலகக்காரராகவே அறியப்பட்டிருக்கின்றீர்கள். கலகம் செய்வதில் அவ்வளவு விருப்பமா என்ன ?
சாத்திரி : நான் கலகம் செய்ய வேண்டுமென்று நினைத்து வீதியில் வந்து கம்பு சுத்துவதில்லை. சிறிய வயதில் என் நண்பியொருத்தி பாடசாலை சீருடை போடவில்லையென சாதியின் பெயர் சொல்லி ஆசிரியை அடித்து பாடசாலையை விட்டு வெளியேற்றியதை பார்த்து தங்கையின் சீருடையைக் களவெடுத்து நண்பிக்கு கொடுத்து வீட்டில் அடி வாங்கியதிலிருந்து, 83-ல் தெற்கில் கலவரம் நடந்தபோது அதுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவனாக இருந்த நான் போராட போகவேண்டுமென்று முடிவெடுத்ததில் இருந்து, எல்லோரும் கண்டும் காணாமல் போகின்ற அசாதாரண சம்பவங்களை நின்று ஏன் என்று கேட்கிற அந்த உணர்வு எழுத்துகளிலும் வெளிப்பட்டிருக்கும். ஏன் எதுக்கு என்று கேட்கிற எல்லோருமே மனித வரலாற்றில் கலகக்காரர்களாகவே அறியப்பட்டிருகிறார்கள். அதன் வரிசையில் ஏதோ என்னால் முடிந்தது. அது கலகமாக மற்ரவர்களுக்கு தெரியலாம்!
கோமகன் : நீங்கள் ஒரு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. இது தொடர்பாக…………?
சாத்திரி : உண்மைதான். நானே சொல்லிக்கொண்டதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. காரணம், நெளிந்து போயிருக்கும் இலக்கியத்தை தட்டி நிமிர்த்துகிறேன் என்றோ, இலக்கியம் ஒரு பக்கமாகவே காய்ந்து கொண்டிருக்கே அப்பிடியே நெம்பிக் கிளப்பி மறுபக்கமும் காயப்போடுகிறேன் என்று சொல்லிக்கொண்டோ. தமிழைத் தண்ணியூற்றி வளர்கிறேன் என்று சொல்லிக்கொண்டோ எழத வரவில்லை. எனக்கு தோன்றியதை எழுதினேன். எழுதுவேன் … அதனால் தான் தட்டையான உருண்டையான மேடு பள்ள விமர்சனங்களை சிரித்துக்கொண்டே கடந்து விடுகிறேன்.
கோமகன் : இலக்கை நோக்கி செல்பவரைத்தான் இலக்கியவாதி என்று சொல்வார்கள். அனால் உங்கள் கருத்தின்படி பார்த்தால், இலக்கு இல்லாதவர் எப்படி எழுத்தாளராக முடியும் ?
சாத்திரி : அதனால் தான் சொன்னேன் எனக்கு எந்த இலக்குமில்லை. நான் இலக்கிய வாதியுமில்லை என்று. எனவே நான் எழுத்தாளனுமில்லை. கிறுக்கி விட்டுப்போகும் கிறுக்கன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
கோமகன் : யாழ் இணையத்தின் கருத்துக்களத்தின் நாங்கள் இருவரும் இணைந்திருந்தோம். இன்றும்கூட நீங்கள் அதில் மூத்த உறுப்பினராக இருக்கின்றீர்கள். அந்த வகையில் யாழ் இணையம் தொடர்பாக உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது ?
சாத்திரி : யாழ் களம் பலரைப்போலவே எனக்கும் கணனியில் தமிழை எழுதக் கற்றுக்கொண்ட இடம் மட்டுமல்ல கிறுக்கத் தொடங்கிய இடமும் கூட. வெளிநாடுகளில் எம்மவர்களின் சமூக அவலங்களை ‘ஐரோப்பிய அவலம்’ என்ற பெயரில் நான் எழுதி இயக்கிய நகைச்சுவை நாடகமாக்கியபோது பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்த இடம் மட்டுமல்ல நிறைய நட்புகளையும் பெற்றுக்கொடுத்த இடம்.
2009-ல் ஏற்பட்ட தமிழரின் தோல்வியானது பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு ஏமாற்றத்தையும் சோர்வையும் கொடுத்திருந்தது. பலர் அன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளமறுத்தார்கள். நான் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்ல முயன்றபோது முரண்பாடுகளே அதிகரித்தது. அந்த சோர்வு எனக்கும் வந்தபோது நானும் கொஞ்சம் கொஞ்சமாக யாழ் களத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதனை இன்றும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.
கோமகன் : ஆயுத எழுத்து நாவல் எழுதவேண்டிய முகாந்திரம் தான் என்ன?
சாத்திரி : பெரிய புரட்டிப்போடும் காரணம் எதுவுமில்லை. பொது வெளியில் அறியப்படாத எனக்குத் தெரிந்த சில விடயங்களை எழுதத் தோன்றியது. எனக்கும் நேரமிருந்தது, அவ்வளவு தான்.
கோமகன் : ஆயுத எழுத்து நாவல் ஏன் கேர்ணல் ஹரிஹரன் முன்நிலையில் வெளியீடு கண்டது?
சாத்திரி : ஹரிகரன் முன்னிலையில் வெளியிடஅவர் ஒன்றும் என் குலசாமியோ இனத்தலைவரோ அல்ல. நூல் விமர்சனத்துக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஏழுபேரை அழைத்திருந்தேன். அதில் இயக்குனர் வீ.சேகர் தீவிர தமிழ்தேசியவாதிகளின் அழுத்தத்தால் கலந்து கொள்ளவில்லை. திராவிட கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி ஹரி கரனுடன் ஒரே மேடையில் அமரமாட்டேன் என்று மறுத்து விட, தோழர் ஆதவன் தீட்சண்யா ,பத்திரிகையாளரும் இலங்கை பிரச்சனையில் நீண்ட அனுபவமும் கொண்ட பகவான் சிங், மனிதவுரிமை செயற்பாட்டாளர் அக்கினி சுப்பிமணியம், இலங்கை யுத்தத்தில் நேரடி அனுபவம் கொண்ட கருணாகரன் இவர்களோடு கேணல் ஹரிகரனும் கலந்து கொண்டிருந்தார்.
கோமகன் : உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் மற்றையவர்களைதவிர்த்து கேர்ணல் ஹரிகரன் இந்தியப்படை காலத்தில் உங்களுக்கு எதிர் முகாமில் நேரெதிரில் யுத்தகளத்தில் சந்தித்த ஒருவர். அவரை நிகழ்வுக்கு அழைத்தது தானே பலராலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப் பட்டது?
சாத்திரி : உண்மை. நான் அவரை விருந்தாளியாக அழைக்கவில்லை, விமர்சகராகவே அழைத்திருந்தேன். அடுத்து நேர்எதிரில் யுத்தம் செய்த இலங்கையரசோடும் இந்திய அரசோடும் தான் புலிகள் பலதடவை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவரை புலிகளுக்கு எந்த சிக்கலும் இருந்திருக்கவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு உள்ளே வரும்போது அது உள்ளே வருபவருக்கே இலாபமாக அமையும். புலிகளுக்கும் அதுதான் நடந்தது. உள்வீட்டு பிரச்சனை தொடக்கம் உலகப்பிரச்னை வரை உள்ளே வரும். மூன்றாம்நபரே இலபமடைகின்றனர். அதனால் தான் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நாங்களே மனம்திறந்த ஒரு கலந்துரையாடலை நடத்துவது மட்டுமல்ல அரசியல் வாதிகளின் தவறான வழிகாட்டல்களால் இலங்கையில் இந்தியப்படைகளால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒதுக்கொண்டிருந்ததோடு அதுபற்றி விரிவாகவும் பேசியிருந்தார். எனக்கு கிடைத்த வெற்றியாகவே நான் அதனை கருதுகிறேன். மற்றும்படி சிலரின் வெற்றுக்கூச்சல்களை நான் கவனத்திலெடுப்பதில்லை.
கோமகன் : ஆனால் ஜெயமோகன் போன்றோர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்கின்றார்களே?
சாத்திரி : யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட என் போன்றோர் நீண்ட காலமாகவும் சம்பத்தப்பட்ட இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் காலம் தாழ்த்தியாவது உண்மைகளை ஒத்துக்கொண்ட பின்னரும் ஜெமோ போன்றவர்கள் அடித்து சத்தியம் செய்வதுக்கான காரணம், அவர்களே இந்திய தேசியத்தை தோளில் தூக்கி சுமப்பது போலவொரு கற்பனையில் வாழ்கிறவர்கள். அவர்கள் உண்மையை ஒத்துக்கொண்டால் அந்த வினாடியே இந்திய தேசியம் சுக்குநூறாய் சிதறிவிடும். அது மட்டுமில்லை அவர் கற்பூரம் கொளுத்த தீபெட்டி, தீ குச்சு எடுத்துக்கொடுத்து விட்டு பய பக்தியோடு அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிக்கும் எங்கள் இலக்கியச் செம்புகளும் ஒரு காரணம்.
கோமகன் : ஆயுத எழுத்து நாவலில் நீங்கள் சொல்ல நினைத்தது அத்தனையும் சொல்லி முடித்து விட்டீர்களா?
சாத்திரி : இல்லை. முதலில் அது நாவலா இல்லையா என்பதை படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். அடுத்து, நான் சொல்ல நினைத்ததில் நாற்பது வீதம்தான் சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். முக்கியமாக, எல்லோராலும் ‘சகோதர படுகொலை’ என்று அழைக்கப்பட்ட டெலோ மீதான தாக்குதல். யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பன. இந்த இரண்டு தரப்புமே புலிகள் மீதான வசைபாடலையும் ஆதங்கத்தையுமே கொட்டித் தீர்த்தனரே தவிர யாரும் சரியான முறையில் அதனை பதிவு செய்திருக்கவில்லை. இவையிரண்டையும் நான் ஆயுத எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன் என்கிற திருப்தி எனக்குண்டு.
கோமகன் : ஆனால் நீங்கள் புலிப்பார்வையில் தான் ஆயுதஎழுத்தை முன்னெடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றதே ?
சாத்திரி : நான் என் கண்னால் தானே பார்க்க முடியும். அப்படியே எனக்கு இன்னொருவர் கண்தானம் செய்திருந்தாலும் என் மூளை மடிப்புகளில் இருந்தவை தானே வெளியே வரும்.
கோமகன் : அப்போ மீதி அறுபது வீதம் எப்போ உங்கள் எழுத்தில் வருமென எதிர்பார்க்கலாம் ?
சாத்திரி : அது தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் யுத்தங்களை சந்தித்து தோற்றுப்போன அத்தனை நாடுகளும் அத்தனை இனங்களும் அதிலிருந்து பாடங்களை கற்று பிழைகளை சரி செய்து தங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி வேகமாக முன்னேறியிருக்கின்றன. ஆனால் முப்பது வருடங்கள் கொடுமையான யுத்த அனுபவங்களை கொண்ட நம்மவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் மிக வேகமாக ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்றிருகிறார்கள். சாதியம், சீதனம், பெண்ணடிமை, வன்முறை, போதைப்பொருள் பாவனை என்று புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த அத்தனையையும் தோண்டியெடுத்து புளி போட்டு மினுக்கிப் பூசை செய்துகொண்டிருகிறார்கள். கடந்தகால அனுபவங்களோ எழுத்துக்களோ எம்மவர்களை வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு அற்றுப்போய் விட்டதால் அனுபவங்களை எழுதுவதால் பிரயோசனமில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன்.
கோமகன் : பாரிஸில் இடம்பெற்ற ஆயுத எழுத்து வெளியீட்டு நிகழ்வில் என்னதான் நடந்தது ?
சாத்திரி : பாரிஸில் தமிழ் இலக்கியத்தை ஏகபோக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகரும், எழுத்தாளரும், தலித்திய வேடம் போடும் கத்தோலிக்க வெள்ளாளருமான சோபாசக்தி என் நிகழ்வை குழப்ப சிலரோடு சேர்ந்து ஒரு முயற்சியை எடுத்தார். அந்த முயற்சி பற்றிய உரையாடல் பதிவு எனக்கு கிடைத்திருந்தது. இப்போதும் என்னிடமுள்ளது. அது எனக்கு தெரிந்து விட்டது என்றதும் முக நூலில் என்னை தடை செய்து விட்டு ஒடிவிட்டார். இப்போதும் எங்காவது கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி வகுப்பெடுதுக்கொண்டிருப்பர் என நினைக்கிறேன். ஆனாலும் நிகழ்வு நல்லபடியாகவே நடந்து முடிந்தது.
கோமகன் : சமகால இலக்கிய செல்நெறி குறித்து உங்கள் அவதானிப்புகள் தான் என்ன?
சாத்திரி : வளர்ந்து விட்ட நவீன தொழில் நுட்பம் நிறையப்பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவரவர் தாங்கள் நினைத்ததை உடனேயே எழுதிவிடலாம். அண்மையில் கூட ‘சாவு குருவி’ என்றொரு கதை படித்திருந்தேன். யாரோ சிந்துஜன் என்பவர் எழுதியிருந்தார். அதன் பாதிப்பிலிருந்து வெளியேற சிறிது நேரமெடுத்து. அப்படி வித்தியாசமான எழுத்து நடையோடு பலர் வருகிறார்கள். ஒரு நல்லது இருக்கும்போது ஒரு கெட்டது இல்லாமல் எப்படி? அது என்னவென்றால்: எழுத்தாளர் என சொல்லிக்கொள்ளும் சிலர் நீட்டி நிமிர்ந்து படுக்க முடியாமல் குப்புறவே படுத்திருப்பார்கள் என நினைகிறேன். ஏனென்றால் ஒரு கதையை அல்லது நாவலை எழுதி விட்டு நண்பர்கள் நாலுபேரை வைத்து மாறி மாறி முதுகு சொறிந்து கொண்டேயிருப்பது. முதுகு புண்ணாயிடாது……..?
கோமகன் : ஒரு பிரதிக்கு அழகியல் தேவையில்லை என்று எனக்கு முன்பு ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு உண்டு. அழகியல் இல்லை என்றால் அது ஒரு கட்டுரையாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதே ?
சாத்திரி : அழகியல் தேவையில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. முன்பு போல அதிக வர்ணிப்புகள் தேவையில்லை என்று தான் சொல்லியிருந்தேன். ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நடப்பது போன்றதொரு சிறுகதையை எழுதுவதானாளால் பாரிஸ் நகரம் அதன் சூழல் எப்படியிருக்கும் என்கிற விபரிப்பே பாதிக்கதையில் இருக்கும். சொல்லவந்த கதையின் விடயம் பாதியில்தான் வரும். இப்போ அதே பாரிஸ் நகரத்தில் கதை தொடங்குகிறது என்றதும் வாசகன் கூகிளில் பாரிஸ் நகரத்தை ஒரு வட்டமடித்துவிட்டு கதையை வாசிக்கத் தொடங்கி விடுவான்.
இன்னொரு உதாரணம்: “காலை கதிரவன் மெல்ல கண்விழிக்க, மெல்லப்படிந்திருந்த பனியை உதறி எழுந்த சேவலின் கொக்கரக்கோ கூவலும், குருவிகளின் பாடலும் ,யாரோ முற்றத்தை கூட்டும் விளக்குமாற்று ஈக்கின் கீறல் சத்தமும் என்னை கண் விழிக்க வைத்தது.” என்று எழுதுவதுக்கு பதிலாக : “காலை கண் விழித்தேன்.” என்று தொடக்கி சொல்ல வந்த விடயத்தை சொல்லி விடலாமென நினைப்பவன் நான். என் எல்லா கதைகளும் அப்படியே எழுதியிருக்கிறேன். என் எழுத்தின் குறை நிறை இரண்டுமே அதுவாகவுமிருக்கும்.
கோமகன் : இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்களில் உங்களை யாராவது பாதித்து இருக்கின்றார்களா?
சாத்திரி : இந்தக்கேள்வியை இரண்டு விதமாக எடுக்கலாம். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று விளங்காமல் தலையை சொறிய வைக்குமளவுக்கு மிக மோசமாக சிலர் பாதித்திருக்கிறார்கள். அவர்கள் காணமல் போய் விடுவார்கள் அல்லது திருத்திக் கொள்வார்கள். நன்றாக எழுதும் புதியவர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை சொல்லி நானே முதுகு சொறிந்து விடாமல் அவர்களாகவே வெற்றி பெறுவார்கள் என எண்ணுகின்றேன்.
கோமகன் : எழுத்துலகில் உங்கள் ஆசான் அல்லது நீங்கள் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்துக்களை?
சாத்திரி : டால்ஸ் டாய், மார்சிம் கார்க்கி ,வோல்தேயர்,மார்க் ட்வைன் என்று அடித்து விடத்தான் ஆசை. ஆனால் என்ன செய்ய? நான் அதிகம் படித்தது எஸ் போ வையும், செங்கை ஆழியன், மாத்தளை சோமு, சட்டநாதன் இவர்களோடு நிச்சயமாக கல்கி, சுஜாதாவை படிக்காமல் யாரும் இருக்க முடியாது.
கோமகன் : நீங்கள் எழுதிய திருமதி செல்வி சிறுகதையைக் கிழித்து தொங்கப்பட்டிருந்தார்கள். அப்படி என்னதான் வில்லங்கமாக அதில் எழுதினீர்கள்? ஏன் அப்படியொரு விமர்சனங்களை அது சந்திக்க வேண்டி வந்தது ?
சாத்திரி : ஒரு உண்மை சம்பவத்தை கதையாக்கியிருந்தேன். யுத்தம் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பந்தாடுகிறது என்பது தான் அந்தக் கதை. எப்போதும்போலக் கலாச்சாரக் காவலர்கள் கம்பு சுத்தினார்கள் அவ்வளவுதான். வழமைபோல அவர்கள் சுற்றிய சுற்றில் எனக்கு நல்ல காற்று வந்தது.
கோமகன் : நீங்கள் தயாரித்த ஐரோப்பிய அவலங்கள் நாடகத்தொடர் பல விமர்சனங்களையும் வெற்றியையும் உங்களுக்கு ஈட்டித்தந்தது. அதனை ஏன் உங்களால் தொடர முடியவில்லை?
சாத்திரி : ஐரோப்பிய அவலங்கள் நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது உண்மைதான். பதின்மூன்று நாடகங்கள் எழுதி இயக்கியிருந்தேன். அது என் நண்பர்களுடனான ஒரு கூட்டுத் தயாரிப்பு. பல்வேறு சிந்தனையும் திறமையும் உள்ள சிலர் இணையும்போது அப்படியான படைப்புகள் இலகுவாக கொடுக்கலாம். அந்த கூட்டிலிருந்து ஒருவர் பிரிந்து போகும்போது வருகின்ற சலிப்பு ஏமாற்றம் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. மீண்டும் புதிய நபர்களோடு அதை முயற்சி செய்ய முயலும்போது கால இடைவெளியும் சேர்ந்து முன்பைப் போல ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. அதோடு காணமல் போய்விடுகிறோம். இது பல வெற்றிகளை கொடுத்த சினிமா கூட்டணிகள் தொடக்கம் ஐரோப்பவில் எம்மவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘படலைக்கு படலை’ நாடகம் வரை பொருந்தும்.
கோமகன் : ஏறத்தாழ 2005/06 என எண்ணுகின்றேன். நீங்கள், சயந்தன், சபேசன், ரவி என நால்வர் கூட்டணி ஊடகத்துறையில் கோலாச்சியிருந்தீர்கள். பின்னர் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போனீர்கள். இந்தப் பிரிவுக்கு ஏதாவது காரணங்கள் இருந்ததா ?
சாத்திரி : ஊடகத் துறையில் நான்கோலேச்சினேன் என்று சொல்ல முடியாது. சில கட்டுரைகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது உண்மை. அதே நேரம் சாத்திரி என்றொரு நபரை பலரும் அடையாளம் கண்டு கொண்டனர். மற்றும்படி நாங்கள் சேர்ந்தோ பிரிந்தோ போகவில்லை. அவரவர் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.
கோமகன் : எப்படியான சர்ச்சைகளைக் கிளப்பியது ?
சாத்திரி : நிறைய கட்டுரைகள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதில் முக்கியமானது 21,05,2009 அன்று பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய பின் நான் அவருக்கு எழுதிய அஞ்சலிக்கட்டுரை தீவிர தமிழ்த்தேசிய வாதிகளையும் புலிகளில் பெயரால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியது. அடுத்ததாக புலிகளின் சொத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முரணில் பாரிஸில் புலிகளின் பொறுப்பாளர் சுட்டுக்கொல்லப் பட்டதை விபரமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவற்றால் ஏகப்பட்ட மிரட்டல்கள் அவதூறுகளை சந்தித்தேன். எல்லோருமே இப்போ காணாமல் போய் விட்டார்கள். நான் எழுதிக்கொண்டே தான் இருக்கிறேன்.
கோமகன் : பிரான்சிலும் சரி வேறு எந்த இடங்களிலும் சரி, சாத்திரி குழுமம் ஷோபாசக்தி குழுமம் என்று இலக்கியப்பரப்பு பிரிந்து போய் இருப்பதாக சொல்கின்றார்களே……. இது உண்மையா ? உண்மையானால் ஏன் இப்படியான ஒரு நிலை வந்தது ?
சாத்திரி : மற்றையவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு குழு என்று எதுவும் கிடையாது. என்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. எப்போதும் தனியாகவே தான் இயங்கிக்கொண்டிருகிறேன். மற்றும்படி எப்போதும்போல ஒரு நண்பர் கூட்டம் என்னோடிருக்கும்.
கோமகன் : ஒருமுறை ஷோபாசக்தி என்னிடம் உங்களைப்பற்றி காட்டமான முறைப்பாடுகள் செய்து கொண்டிருந்த பொழுது, அவரை உங்களுடன் பொதுவிவாதத்திற்கு அழைப்பு விடுத்தேன். அப்பொழுது சயந்தன் உடன் இருந்தார். அது இற்ரை வரை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக …………..?
சாத்திரி : நான் எப்போதும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராகவே உள்ளேன். முகநூலிலேயே கருத்தாட முடியாமல் தடை செய்துவிட்டு போன ஒருவரோடு எப்படி பகிரங்கமாக விவாதிக்க முடியும்? ஓடுபவரை கலைத்துப்பிடித்து விவாதிக்க முடியாதே…………!
கோமகன் : லண்டனில் இடம்பெற்ற 40 ஆவது புலம்பெயர் இலக்கியசந்திப்பில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தது?
சாத்திரி : முதன் முதலாக பொதுவெளியில் கலந்துகொண்ட ஒரு கூட்டம் என்பதை தவிர புதுமையான அனுபவங்கள் ஏதுமில்லை. ‘ஒழித்திருந்து எழுதுகிறவன்’ என்று நீண்ட காலமாகவே ஒரு அவப்பெயர் இருந்தது. அதையும் கழுவித் துடைக்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன்.
கோமகன் : அந்தப் புலம்பெயர் இலக்கியசந்திப்பில் என்ன காரணத்துக்காக ‘இலக்கியப் பிதாமகர்கள் ‘என்று சொல்லிக்கொள்வோர்கள் உங்களை மறுதலிப்பு செய்ய வேண்டிவந்தது ?
சாத்திரி : என் எழுத்துக்களைத் தவிர வேறென்ன காரணம் இருக்கக் கூடும்? சுற்றி நின்று மன்னிப்புக் கேள் என கூச்சல் போட்டார்கள். நான் எப்போதும்போல கூச்சல்களை கவனதிலெடுக்கவில்லை.
கோமகன் : இந்தப் புலம்பெயர் இலக்கிய சந்திப்புகள் ஏறத்தாழ 49 பாகங்களாக உலகில் பல இடங்களில் நடந்து இருக்கிறது. இந்த சந்திப்புகள் எழுத்துப் பரப்பில் ஏதாவது மாற்றங்களை/ அல்லது புதிய கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறதா ?
சாத்திரி : உண்மையில் இந்த புலம்பெயர் இலக்கிய சந்திப்பானது பரந்துபட்ட அனைவருக்குமான ஒரு சந்திப்பு அல்ல. இது ஒரு குழுச்சந்திப்பு. குறிப்பிட்ட ஒரு சிலரே எல்லா நாடுகளிலும் ஓன்று கூடுவார்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே எல்லாம் நடக்கும் ஓன்று மட்டும் நிச்சயாமாகச் சொல்வேன், இந்த இலக்கிய சந்திப்பானது மாறி மாறி முதுகு சொறிதலையும் .புதிய புதிய முரண்களையுமே இதுவரை வளர்த்துள்ளது . ஒரு படைப்பாளியோ படைப்போ சரியான முறையில் அறிமுகப்படுதவோ கௌரவிக்கப் படவோ இல்லை. எறியப்படும் மீன்கழிவுக்காக சந்தையோரத்தில் அடிபடும் நாய்களைப்போலவே ஒவ்வொரு சந்திப்பும் முடிந்திருக்கிறது.
கோமகன் : போர் முடிந்து 11 வருடங்களை கடக்கப்போகின்றோம். இன்றும் கூட ‘இடர்காலங்ளில் மட்டும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை உயர்த்துகின்றோம்.‘ என்று கூறியவாறு ஒரு பகுதியினர் தாயகத்தில் அலைகின்றார்கள். அதற்கு டயபோராஸ் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றார்கள். இவ்வளவு காலம் சென்றும் தாயகத்தில் ஒரு நிலையான பொருண்மியப் பொறிமுறையை ஏன் செயல்படுத்த முடியாதுள்ளது ?
சாத்திரி : இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் ‘நேசக்கரம்’ என்கிற உதவி அமைப்பு ஒன்றோடு சேர்ந்து இயங்கிய அனுபவத்தின் அடிப்படையில் சிலவிடயங்களைச் சொல்கிறேன்: யுத்தம் முடிவடைந்து முகாம்களில் இருக்கிறவர்களுக்கு பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகள் என்பது முக்கியமே. ஆனால், மோசமாகக் காயமடைந்த மாற்று திறனாளிகளைத் தவிர்த்து மற்றையவர்களுக்கு அன்றாடத் தேவைகளைச் தொடர்ச்சியாகக் கொடுப்பது அந்த மக்களையே சோம்பேறிகளாக்குவதாகவே இருக்கும். அதே நேரம் உதவி கொடுப்பவர்களுக்கு பெறுபவர்களுக்குமிடையில் உள்ள இடைத் தரகர்களின் மோசடிகளும் நிறையவே நடக்கின்றது. எனக்குச் சொந்த அனுபவம் கூட இதில் உண்டு.
புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதிபலம் இருந்தும் நிலையான பொருண்மிய பொறி முறை உருவாகாமல் போனதன் முழுக்காரணமும் இடைத் தரகர்களால் தொடர்ச்சியாக உதவி கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதும். அதையும் மீறி நேரடியாகவே பொருண்மிய திட்டங்களோடு சென்றவர்களுக்கு அங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததுமே முக்கிய காரணம். அப்படி திட்டங்களோடு சென்றவர்களிடம் அதனை நிறைவேற்ற அதிகளவு கையூட்டு கேட்டதால் மனம் நொந்துபோய் திரும்பி வந்த பலரை எனக்கும் தெரியும்.
கோமகன் : தமிழகத்தில் உங்களுக்கு நிறையவே இடதுசாரி நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அனால் நீங்கள் ஈழம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகள் பற்றியோ அவர்கள் வைக்கின்ற கடும் விமர்சனங்களுக்கு பதில்களை சொல்லாது இந்த நேர்காணலின் உடாகக் கடந்து செல்வதாகச் சொல்கின்றேன் ……….?
சாத்திரி : தமிழகத்தில் எனக்கு நிறைய இடதுசாரி நண்பர்கள் இருப்பதும் அவர்கள் ஈழம் புலிகள் பற்றி விமர்சனங்கள் வைப்பதும் உண்மை. அவர்களின் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. காரணம், ஈழப்போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆயுதப்போராட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே இலங்கைத் தீவை பிரிக்கும் ஈழவிடுதலைப்போரட்டதுக்கு தங்கள் ஆதரவில்லை. சமஸ்டி முறையிலான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொள்ள இந்திய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்த ஈழ ஆயுதக்குழுவுக்கும் எமது ஆதரவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்து விட்டிருந்தனர்.
ஈழ விடுதலை அமைப்புக்கள் புலிகள் உட்பட தங்களை சோஷலிச அமைப்புகள் என்று கூறிக்கொண்டாலும் தீவிர இடதுசாரி கொள்கைகளோடு இயங்கிய E.P.R.L.F மற்றும் .E.R.O.S அமைப்புகளுக்கு கூட அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனாலும் சி.மகேந்திரன் போன்றோர் தங்கள் தனிப்பட்ட ஆதரவினைக் கொடுத்திருந்தார்கள் என்பதனையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஆகவே ஈழம், புலிகள் அமைப்புக்கு ஆதரவில்லாதவர்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களோடு எனக்கு நட்பு இருக்கின்றதென்றால் நிச்சயமாக அது கட்சி கொள்கை சாராத தனிப்பட்ட நட்புகளே. அதானால் தான் நானும் கட்சி அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.
கோமகன் : அனால், முன்னர் ஈழ விடுதலையையும் புலிகளையும் தீவிரமாக ஆதரித்த தி மு க கட்சியை சேர்ந்தவர்கள் கூட புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் கடும் விமர்சனங்களை வைக்கிறார்களே….. அவற்றுக்கு கூட நீங்கள் எந்தவிதமான பதிலையும் தரத் தயாராக இல்லை என்ற மாதிரியல்லவா சொல்கின்றார்கள் ?
சாத்திரி : உண்மையும் அதுதான். இப்போ சமூகவலைத்தளங்களில் அப்படி எழுதுபவர்கள் எல்லோருமே இளைய தலைமுறையினர். அவர்களுக்கு தி மு க கட்சிக்கும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் இருந்த தொடர்புகள் மற்றும் நெருக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுக்கு பல ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம். உதாரணத்துக்கு ஓன்று மட்டும்:
ஈழத்தில் இந்தியப்படை காலம் புலிகள் அமைப்பானது அதன் தலைவர் உட்பட இந்தியப்படைகளால் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நேரம். வெளியே இருந்து தரை வழியாக எந்தப் பொருளும் உள்ளே போகமுடியாத இறுக்கமான நிலைமை. துப்பாக்கி சத்தங்களால் அந்தப் பகுதி விலங்குகளும் பறவைகளும் கூட அந்த இடத்தை விட்டு வெளியேறிய நிலையில் மிகுதியிருந்த விலங்குகளும் புலிகள் அமைப்பால் வேட்டையாடி முடிந்த நிலை. உணவுக்கு பெரும் தட்டுப்பாடு.
கையிருப்பில் இருந்த அரிசியை வைத்து அதில் இலைகளைப் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தவாறே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அரிசியும் முடிந்து போகும் நிலை வந்ததும் உடனடியாக அரிசி அனுப்பும்படி தமிழகத்துக்கு செய்தி அனுப்பப் பட்டிருந்தது. தமிழகத்தில் புலிகளின் வழங்கல் பிரிவுக்கு அப்போ கிருபன் என்பவர் பொறுப்பாக இருந்தார் (இவர் பின்னர் மாத்தையா பிரச்சனையில் புலிகளால் கொல்லப்பட்டார்.)
கிருபன் வேதாரணியம் பகுதியிலேயே இருந்து இயங்கிக்கொண்டிருந்தார். அப்போ அவரிடம் கையில் பணமும் இருக்கவில்லை. தகவல் கிடைத்ததும், ஆறுகாட்டுத்துறை பகுதில் புலிகள் ஆதரவாளர் ஒருவரிடம் போய் விடயத்தை சொல்லி உதவி கேட்டார். அவர் ஒரு தி மு க உறுப்பினர் என்பதால் உடனே ஒரு கடிதத்தை எழுதி கிருபனிடம் கொடுத்து அதனை கொண்டுபோய் தி மு க முக்கிய புள்ளி ஒருவரிடம் கொடுக்கும் படியும் அவர் வேண்டிய உதவிகள் செய்வார் என சொல்லி அனுப்பி வைத்தார்.
கிருபனின் கடிதத்தை படித்த அந்த முக்கிய தி மு க உறுப்பினர் கிருபனுக்கு வேண்டிய அரிசி மூட்டைகளை கொடுத்தனுப்பி விட்டிருந்தார். கிருபன் போன பின்னர்தான் “வெறும் அரிசியை கொண்டுபோய் பையன்கள் என்ன பண்ணுவாங்கள்?” என யோசித்தவர் மீண்டும் கிருபனை தொடர்பு கொண்டவர்,
“தம்பி வெறும் சோற்றை மட்டும் தின்று விட்டு சண்டை பிடிக்க முடியுமா ? வந்து மீதி பொருளையும் எடுத்துப்போங்க………….” என செல்லமாய் கடிந்தபடியே பருப்பு,பயறு,கடலை என அனுப்பி வைத்தார். அவை வன்னிக்கு போய் சேர்ந்ததும் பொருட்களை பார்வையிட்ட பிரபாகரன்,
“அரிசி கேட்டால் பருப்பும் சேர்த்து அனுப்பியிருக்கிறாங்கள்”. என்று சொல்லி சிரித்த படியே உடனடியாக அனைத்து அணிகளுக்கும் பிரித்து அனுப்புமாறு கட்டளையிட்டார்.
இந்த சம்பவத்தை பின்னைய காலங்களில் கடற்புலித் தளபதி சூசை, பொட்டம்மான் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்திருந்தனர். ஆனால் பொருட்களை கொடுத்துதவிய அந்த நபர் யாரென பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாது. அவர் வேறு யாருமல்ல தஞ்சையை சேர்ந்த கோ. சி . மணி அவர்கள். அடுத்தது, அப்படி அவர்கள் எழுதுவதுக்கு முழுக்காரணமும் நாம் தமிழர் கட்சியுடனான கருத்து மோதல்களே தவிர ஈழத் தமிழர்கள் அல்ல. அவர்கள் புலிகளின் பெயரால் இறந்து விட்ட கலைஞரை திட்ட, இவர்கள் இவர்கள் பதிலுக்கு இறந்து விட்ட பிரபாகரனையும் இல்லாத புலிகள் அமைப்பையும் திட்டுகிறார்கள். இரண்டுமே ஒருவித முட்டாள்தனம் என்பதால் அதை கடந்து போய் விடுவதே நல்லது.
அடுத்து நான் முக்கியமான இன்னொரு விடயத்தையும் சொல்லியே ஆக வேண்டும்: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அதன் முழுப்பழியும் தி மு க வின் மீதே விழுந்தது. சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த ஜெயலலிதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போன்றதொரு சந்தர்ப்பம் அப்பொழுது கிடைத்தது. திமுக வினர் கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டனர். காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் அடித்து உதைக்கப்பட்டு அவர்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டது. எது வித எதிர்பார்ப்புகளுமின்றி தமிழன் என்கிற உணர்வால் மட்டுமே உதவியவர்கள் உதைபடும்போது எம்மால் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆகவே அவர்கள் இப்போ திட்டும் போதும் கை கட்டியிருப்பதை தவிர வழியில்லை.
அதே நேரம், பெங்களூர் மட்டுமில்லை கர்நாடகத்தின் கடைக்கோடியிலிருந்த ஹுப்ளி , பெல்கம் நகரங்களில் வாழ்ந்த தமிழர்கள் கூட தாக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள். உயிர் தப்பினால் போதுமென்று தமிழ்நாட்டுக்கும் மும்பைக்கும் குடிபெயர்ந்த குடும்பங்கள் ஏராளம். அவர்கள் ஈழம், புலிகள், பிரபாகரன் என்கிற பெயர்களே கேள்விப்படாதவர்கள். அவர்கள் தாக்கப்பட்டத்துக்கு தமிழர் என்கிற காரணத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்? அவர்களுக்கெல்லாம் எம்மால் என்ன செய்ய முடிந்தது?
கோமகன் : அனால், ஈழத்தின் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது மத்தியில் காங்கிரசோடு கூட்டு வைத்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்த முடியவில்லை என்பது தானே இன்றுவரை அவர் மீதுள்ள குற்றச்சாட்டாகப் பார்க்கின்றேன். கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியுமா என்ன ?
சாத்திரி : நிச்சயமாக இல்லை. இன்றுவரை கலைஞரை திட்டித்தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இறுதி யுத்தம் நடந்தபோது தமிழர்கள் அனைவருமே, நான் உட்பட வெறும் உணர்வுகளால் மட்டுமே நிரம்பியிருந்தோம். ஏதாவதொரு அதிசயம் நடந்து விடாதா என அனைவருமே ஏங்கியிருந்த நேரம் அது. அப்பொழுது யுத்தத்தை நிறுத்த உண்ணாவிரதமிருந்த கலைஞர் மீது எனக்கு கூட கோபம் இருந்தது. ஆனால், இந்திய தேசம் என்பது 29 மாநிலங்களையும் 07 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு துணைக்கண்டம். அதில் ஒரேயொரு மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சரால், அது யாராகவிருந்தாலும் தனது அதிகாரங்களை தாண்டி அடுத்த நாட்டில் நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அவரது அதிகாரம் எல்லாம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். மத்திய அரசுக்கு கடிதமெழுதலாம். அறிக்கை விடலாம். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.
ஈழத் தமிழர் விடயத்தில் காலங் காலமாக அனைத்து தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இதைத்தான் செய்தார்கள், இனிமேலும் இதைத்தான் செய்ய முடியும். அது மட்டுமல்ல; மத்தியில் ஆட்சியிலிருந் காங்கிரசே நினைத்திருந்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் உலககின் முக்கிய 32 நாடுகள் இணைந்து இலங்கைத்தீவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து 2001 ம் ஆண்டிலிருந்தே மிக நுணுக்கமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள். பேச்சு வார்த்தை தொடங்கும் போதே பிரிக்காத இலங்கைக்குள் ஒரு தீர்வை புலிகளின் சம்மதத்தோடு ஏற்படுத்துவது. அவர்கள் மறுத்தால் ஒட்டுமொத்தமாக அவர்களை அழித்து ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது என்கிற திட்டம் மேற்குலகால் முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலென்ன பா ஜ க ஆட்சியிலிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.
கோமகன் : சரி ஒரு கேள்வி உங்களிடம் கேட்கவேண்டும் என எண்ணுகின்றேன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்று ஆவணப்படம் என்று சொல்லப்படும் ‘மேதகு’ பார்த்து விட்டீர்களா? அது பற்றி உங்கள் கருத்து என்ன?
சாத்திரி : இதுதான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று எடுத்தவரே சொல்லக் கூடாது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால், ஈழத் தமிழர் பற்றியோ அவர்கள் போராட்ட வரலாறு பற்றியோ ஒரு இந்தியரால், ஏன் அவர் தமிழ் நாட்டுக்காரராக இருந்தாலும் சரி ஒரு போதும் இரத்தமும் சதையுமாக உணர்வோடு கலந்து ஒரு திரைப்படத்தை எந்தக்காலத்திலும் எடுக்க முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். கடந்த காலங்களில் ஈழம் பற்றி வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் அதனை நிரூபித்திருக்கின்றது. அடுத்தது அந்தப் படத்தைப் பார்த்துத்தான் பிரபாகரனின் வரலாற்றை தெரிந்து அளவுக்கு வரலாறு பற்றிய வறட்சி எனக்கில்லை .
கோமகன் : நீங்கள் சொல்வது போல உணர்வோடு கலந்த வரலாற்றை ஈழத் திரைப்பட இயக்குனர்களால் எடுக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?
சாத்திரி : அதுக்கான சூழல் நிச்சயமாக ஆங்கில்லை. ஆனால், அப்படியொரு வரலாற்றை படமாக்கும் வசதியும் வளங்களும் புலிகள் காலதில் அவர்களிடமிருந்தது. இனிவரும் காலங்களில் அதுக்கான சாத் தியங்கள் குறைவே .
கோமகன்: நீங்கள் சொல்கின்ற வசதியும் வளங்களும் அதுக்கான சூழலும் புலம் பெயர் தமிழர்களிடம் ஏராளமாக இருக்கின்றதே, அவர்கள் நினைதால் செய்யலாமே?
சாத்திரி: இந்தக் கேள்விக்கு சத்தகமாக சிரிப்பதை தவிர என்னிடம் வேறு பதிலில்லை நன்றி வணக்கம் .
கோமகன் : இப்பொழுது வந்திருக்கின்ற கோரோனோ காலத்து உலக ரீதியிலான ஓய்வுகள் என்ன விதமான படிப்பினைகளை சனங்களுக்கு கொடுத்திருக்கின்றது ? மீண்டும் ஒருமுறை உலக ஒழுங்குகள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா ?
சாத்திரி : கொரோனா காலம் பொதுவாக சனங்களுக்கு என்ன படிப்பினை கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஐரோப்பாவாழ் தமிழர்களுக்கு எனக்கு உட்பட வாழ்க்கை வெறுத்து விட்டது. ஊரில் போயிருக்கலாம் என்கிற ஒரு உந்துதல் எல்லோருக்குள்ளும் வந்துவிட்டது. மற்றபடி உலக ஒழுங்கு என்று பார்த்தால் உலகம் முழுவதுமே இதோடு சிறு தொழிலாளிகள் காணமல் போகும் அபாயம் ஒன்று உண்டு. இனி வருங்காலத்தில் நடுத்ததர வர்க்கமும் காணாமல் போய் ஏழை பணக்காரன் என்று இரண்டு வர்க்கம் மட்டுமே இருக்கும் சாத்தியமே அதிகம். உலக வல்லரசு என்று மார் தட்டிக்கொண்டிருந்த நாடுகளுல்லாம் உலக வைரஸ் நாடுகளாகி விட்டன இந்த வல்லரசு ஒழுங்கும் மாறலாம்.
கோமகன் : ஒரு போராளி என்ற வகையில் மௌனிக்கப்பட்ட யுத்தம் எங்கள் சனத்தை மாற்றியிருக்கின்றதா? அதில் இருந்து ஏதாவது படிப்பினைகளை பெற்று இருக்கின்றார்களா?
சாத்திரி: யுத்தம் இல்லை. குண்டுச் சத்தம் ஓய்ந்திருக்கின்றது. அச்சம் இல்லை. உயிர் உடமை இழப்புகள் இல்லை. பொருளாதார தடையில்லை. தங்கு தடையில்லாத போக்குவரத்து எல்லாப் பொருள்களும் எல்லா இடமும் கிடைக்கின்றது. ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகி விட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள். நிருவாக சீர்கேடு. இவை எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை. அனைத்துமே உள்ளுரில் இருப்பவர்களால் தான் நடகின்றது. எல்லாவற்றுக்குமே எல்லோருமே இசைந்து வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். இவைகளையே மக்கள் பெற்ற படிப்பினையாக பார்கிறேன்.
சாத்திரி பற்றிய சிறுகுறிப்பு :
புலம்பெயர் தமிழ் எழுத்துப்பரப்பில் கலகக்காரராகவே தன்னை முன்நிறுத்தியவர் சாத்திரி . இவருடைய அதிரடி எழுத்துக்களுக்காகவே இவர் பலத்த விமர்சனங்களையும் பெரும் வாசகர் வட்டத்தையும் கொண்டவர். இதுவரையில் ஆயுத எழுத்து என்ற நாவலையும் ஐரோப்பிய அவலங்கள் என்ற சிறுகதை தொகுப்பையும் அன்று சிந்திய இரத்தம் என்ற கட்டுரைத்தொகுப்பையும் இலக்கியப்பெருவெளிக்கு தந்திருக்கின்றார்.
02 ஆடி 2021
கோமகன்-பிரான்ஸ்
Comments
Post a Comment